/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஞானானந்தம் - விளையாட்டாக ஒரு பொய்!
/
ஞானானந்தம் - விளையாட்டாக ஒரு பொய்!
PUBLISHED ON : செப் 22, 2024

ஆயர்பாடியில், கண்ணனுடைய விளையாட்டுத்தனங்கள் ஏராளமானவை. குழந்தை கண்ணன் வெண்ணெய் திருடியும், தயிர் குடங்களை உடைத்தும் விளையாடியது, அருமையான ரசானுபவம்.
பிறருக்கு தீங்கிழைக்கும் உண்மையை விட, ஒருவருக்கு நன்மை கிடைக்கும் எனில், ஆயிரம் பொய்களை கூட கூறலாம் என்பர், பெரியோர்.
ஒருநாள், கண்ணன் அப்படி திருடி விட்டு ஓடிய போது, அவனைத் துரத்தி வந்தனர், கோகுலத்துப் பெண்கள். தப்ப வழியில்லாமல் தவித்தான், கண்ணன்.
ததி பாண்டன் என்று ஒருவன். அது, அவனுடைய நிஜமான பெயரா, தயிர் பானையில் கண்ணனை ஒளிந்து கொள்ள இடமளித்ததற்காக வழங்கப்பட்ட பெயரா என்று தெரியவில்லை. ததி என்றால் தயிர்.
கோகுலத்துப் பெண்களிடம் அகப்படாமல் ஓடிவந்த கண்ணன், அந்த ததி பாண்டன் வீட்டுக்குள் புகுந்து விட்டான். ஒரு பெரிய தயிர் பானைக்குள் உட்கார்ந்து கொள்ளும்படி, கண்ணனுக்கு யோசனை சொன்னான், ததி பாண்டன்.
அப்படியே, பானைக்குள் இறங்கி உட்கார, அந்த பானையை மூடி, அதன் மீது, ஏறி அமர்ந்து கொண்டான், ததி பாண்டன்.
கண்ணனை தேடி வந்த பெண்களிடம், 'கண்ணனா, அவன் இங்கே வரவே இல்லையே...' என்று பொய் சொன்னான். அதை உண்மை என்று நம்பிய பெண்கள், வெளியே போய் விட்டனர். பானை மீதிருந்து இறங்காமல், அதன் மேலேயே அமர்ந்திருந்தான், ததி பாண்டன்.
'ததிபாண்டா கீழே இறங்கு; எனக்கு மூச்சு முட்டுகிறது...' என்று, பானைக்குள்ளிருந்து சொன்னான், கண்ணன்.
'எனக்கும், நீ ஒளிந்து கொள்ள இடம் தந்து உதவிய இந்த தயிர் பானைக்கும், மோட்சம் தருவதாக ஒப்புக்கொண்டால், நான் உன்னை வெளியே விடுவேன்...' என்றான், ததி பாண்டன்.
வேறு வழியில்லாமல், கண்ணன் அவனுக்கு வாக்குறுதி தந்தான். கள்ளங்கபடம் இல்லாத அந்த ஆயர்குல மக்கள் எல்லாருக்கும், கண்ணன் பரம்பொருள் என்ற விஷயம் தெரிந்திருக்கிறது. அதனால் தான், தான் சொன்ன பொய்க்கு பரிசாக, மோட்சத்தையே கேட்டான், ததி பாண்டன்.
எப்படிப்பட்ட பொய் இது! குற்றமில்லாத, யாருக்கும் தீமை தராத பொய். இதைத் தான், 'புரை தீர்ந்த பொய்...' என்பார், திருவள்ளுவர்.
பகவான் கிருஷ்ணனின் ஆயர்பாடி விளையாட்டுகளுக்கு உதவுவதற்காக மட்டுமே சொல்லப்பட்ட, நல்ல பொய் இது.
பி. என். பி.