
பாலிவுட்டில் பகத் பாசில்!
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும், பகத் பாசில் தமிழில், விக்ரம் மற்றும் மாமன்னன் படங்கள் மூலம் புகழ்பெற்றவர். தற்போது, தெலுங்கில் புஷ்பா படத்தை அடுத்து, அதன் இரண்டாம் பாகத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்; இதையடுத்து, ஹிந்தியில் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க போகிறார், பகத் பாசில்.
தென்னிந்தியாவில் பிரபலமான நடிகராக இருப்பதால், அவரது மார்க்கெட்டை கருத்தில் கொண்டு, இந்த ஹிந்தி படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
— சினிமா பொன்னையா
சிங்கிளாக விசிட் அடிக்கும், த்ரிஷா!
இரண்டாம் சுற்றில், அரை டஜன் படங்களில் நடித்து வரும், த்ரிஷா, தன் அம்மா இல்லாமல் உதவியாளரை மட்டும் அழைத்துக் கொண்டு ஆந்திரா, கேரளா என்று படப்பிடிப்பு தளங்களுக்கு, 'விசிட்' அடித்து வருகிறார்.
'முன்பெல்லாம் உலகம் தெரியாமல் இருந்தேன். அதனால், அம்மாவின் துணை தேவைப்பட்டது. இப்போது, 'மெச்சூரிட்டி' வந்து விட்டது. யாரை எப்படி, 'டீல்' பண்ண வேண்டும். யாரை எங்கு வைக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும்.
'என்னை பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு பக்குவம் பெற்று விட்டேன். அதனால் தான் இப்போது அம்மாவின் துணை அவசியப்படவில்லை...' என்கிறார், த்ரிஷா.
— எலீசா
அக்கா வேடத்தில் நயன்தாரா!
சமீபகாலமாக, நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வெளியான படங்கள் தோல்வி அடைந்து வருகின்றன. தற்போது, நடிகை கீது மோகன்தாஸ் இயக்கும், டாக்ஸிக் என்ற படத்தில், கேஜிஎப் பட நாயகன், யஷ்சுக்கு அக்காவாக நடிக்கிறார், நயன்தாரா.
'அக்கா வேடமாக இருந்தாலும், இந்த படத்தில் இதுதான் திருப்புமுனையை கொடுக்கக் கூடிய கதாபாத்திரம். என் சினிமா மார்க்கெட்டிலும் அடுத்தபடியாக இந்த படம் தான் புதிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது. அப்படி யாருமே எதிர்பார்க்காத ஒரு மாறுபட்ட அக்கா வேடத்தில் நடிக்கிறேன்...' என்கிறார், நயன்தாரா.
— எலீசா
மீண்டும் சினிமாவில் கல்லெறியும் ரோஜா!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்த, ரோஜா, அரசியலில் ஈடுபட்டு, அமைச்சரான பிறகு, சினிமா பக்கம் வராமல் இருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அவர் இடம்பெற்றிருந்த ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.
இதையடுத்து, மீண்டும் தன்னை பரபரப்பு வளையத்துக்குள் வைத்துக் கொள்ள, சினிமாவில், 'என்ட்ரி' கொடுக்கப் போகிறார், ரோஜா. முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க கல்லெறிந்து வரும், ரோஜா, சமூகத்துக்கு, 'மெசேஜ்' சொல்லும் கதாபாத்திரங்களில் நடிக்க, தான் ஆர்வமாக இருப்பதாகவும் கூறுகிறார்.
சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
தளபதி நடிகருடன் ஒரு பாட்டுக்கு நடனமாடிய, மூனுஷாவை தங்களுடனும் குத்தாட்டம் போடுவதற்கு சில, 'ஹீரோ'கள் அழைப்பு விடுத்தனர். ஆனால், அவரோ, 'தளபதி எனக்கு எப்போதுமே ரொம்ப ஸ்பெஷல். அதனால் தான், அவர் அழைத்து என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால், அதையே காரணம் காட்டி மற்றவர்களும் அழைத்தால் அதை ஏற்க முடியாது...' என்று சொல்லி, அவர்களின் அழைப்பை நிராகரித்து விட்டார்.
இதனால், கொதிப்படைந்த மேற்படி நடிகர்கள், 'அப்படி என்றால் இனிமேல் எங்களது படங்களில் எக்காலத்திலும் நடிக்க வாய்ப்பு தரமாட்டோம். தளபதி படத்தில் மட்டுமே இன்னும் எத்தனை காலத்துக்கு நீங்கள் நடிப்பீர்கள் என்று பார்க்கலாம்...' என, மூனுஷாவுக்கு செம, 'ஷாக்' கொடுத்து விட்டனர்.
சினி துளிகள்!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா, சில ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, மீண்டும் தமிழில், மெய்யழகன் என்ற படத்தில், கார்த்தியுடன் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும், ஸ்ரேயா தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு அதிரடி நடனம் ஆடுகிறார்.
பிரசாந்த் நடித்து வெளியான, அந்தகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், சிம்ரன்; அடுத்தபடியாக, லோகேஷ் குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!