/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நோபல் பரிசு - சுவாரஸ்யமான தகவல்கள்!
/
நோபல் பரிசு - சுவாரஸ்யமான தகவல்கள்!
PUBLISHED ON : டிச 08, 2024

டிச., 10 - நோபல் பரிசு வழங்கும் நாள்
நோபல் பரிசு பெற்றவர்களின் சராசரி வயது, 59 முதல், 60 வரை. நோபல் பரிசைப் பெற்ற பெரும்பாலோரின் பிறந்த தேதி, மே 21 மற்றும் பிப்ரவரி 28 என்று இருப்பது, ஆச்சரியம் அளிக்கிறது. மேலும், நோபல் பரிசை பெற்றவர்களில், 60 சதவீதம் பேர், ஆசிரியர்களாக இருந்தவர்கள்.
* இதுவரை நோபல் பரிசு பெற்றவர்களின் சராசரி வயது, 60. இந்நிலையில், மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர், அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாய். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியதற்காக, அவருக்கு. 2014-ல், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது, அவருக்கு வயது, 17.
இவரைத் தவிர, 1915-ல், இயற்பியலாளர், லாரென்ஸ் ப்ராக், தன், 25வது வயதில், 'எக்ஸ்-ரே'களைப் பயன்படுத்தி, படிகங்களின் வடிவங்களைக் கண்டறிந்ததற்காக, அவரது தந்தையுடன் இயற்பியலுக்கான பரிசைப் பகிர்ந்து கொண்டார்.
மிக அதிக வயதில் நோபல் பரிசு பெற்றவர், அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர், ஜான் குட்இனப். ரீசார்ஜ் செய்யக் கூடிய லித்தியம் பாட்டரிகளை வடிவமைத்ததற்காக, 2019ல், வேதியியலுக்கான நோபல் பரிசு வென்றார். அப்போது அவருக்கு வயது, 97
* குட்டி நாடு, இஸ்ரேல். அதன் ஜனத்தொகையே, இரண்டு கோடிகளுக்குள் தான் இருக்கும். இதுவரை, 900க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டினர், நோபல் பரிசை பெற்றுள்ளனர். அதில், 200க்கும் மேற்பட்டோர், இஸ்ரேல் நாட்டுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பு உடையவர்கள்
* உலக இஸ்லாமிய மக்களில், ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் மூன்று இஸ்லாமிய அமைப்பினர், நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். அதில், அமைதிக்கான பரிசை அதிகமானோர் பெற்றுள்ளனர்
* உலகிலேயே அதிக எண்ணிக்கையில் நோபல் பரிசு பெற்றவர்களை உருவாக்கிய கல்விக்கூடம், ஹார்வர்டு பல்கலைக்கழகம். இங்கு படித்தவர்களில், இதுவரை மொத்தம், 161 பேர், நோபல் பரிசு பெற்றிருக்கின்றனர்
* இதுவரை ஒன்பது விஞ்ஞானிகள், ஈக்கள் குறித்த ஆய்விற்காக, நோபல் பரிசு பெற்றிருக்கின்றனர். பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக் மற்றும் டயர்கள் உற்பத்தி செய்யும் போது, உப பொருளாக மாசு விளைவிக்கும் ஒரு வேதிப்பொருள் உண்டாகிறது.
இதனால், மனிதர்களுக்கு புற்று நோய், சர்க்கரை நோய், பார்க்கின்சன் எனும் நடுக்கு நோய் மற்றும் பல கோளாறுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. மேலும், அது கர்ப்பப்பையையும் பாதிப்பதாக, எலிகள் மற்றும் குரங்குகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் தெரிய வந்துள்ளது. அது எவ்வாறு நிகழ்கிறது என்பதை, பழ ஈக்கள் மீது செய்யப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது
* நாஜிக்களுக்கு பயந்து, அமிலத்தில் கரைக்கப்பட்ட நோபல் பதக்கங்கள், இரண்டாம் உலகப்போர் நடந்த காலம் முழுவதும், ஆய்வகத்தில் அப்படியே இருந்தது. பிறகு, 1950-ல், அதிலிருந்த தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு, ஸ்வீடன் நாட்டில் நோபல் பரிசு வழங்கும் அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டும் பதக்கங்கள் செய்யப்பட்டு, அவை, ஜெர்மன் நாட்டின், மேக்ஸ் வான் லாவ் மற்றும் ஜேம்ஸ் ப்ராங் ஆகியோருக்கு வழங்கப்பட்டன
* அமைதிக்கான நோபல் பரிசு உருவாக்கப்பட்டதில் இருந்து, நான்கு அமெரிக்க ஜனாதிபதிகள் மற்றும் ஒரு துணை ஜனாதிபதி, இந்த விருதைப் பெற்றுள்ளனர். அவர்கள், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான, தியோடர் ரூஸ்வெல்ட், உட்ரோ வில்சன், ஜிம்மி கார்ட்டர், பராக் ஒபாமா மற்றும் துணை ஜனாதிபதி, அல்கோர்
* பொதுவாக, நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பிரமாண்டமான மேடையில் வைத்து, டிச., 10ம் தேதி வழங்குவர். ஆனால், 2020ல், 'கொரோனா' தொற்று காரணமாக, நோபல் பரிசு பெற்றவர்களின் வசிப்பிடத்திற்கும், அவர்கள் பணியாற்றிய இடங்களுக்கும் சென்று வழங்கப்பட்டது. அதன்படி, இலக்கிய துறையின் நோபல் பரிசு, லுாயிஸ் க்ளுக்கிற்கு, அவர் இருந்த, கேம்பிரிட்ஜ் தோட்டத்தில் வைத்து, முதன்முதலாக வழங்கினர்
* உலகில் ஒருவர், நோபல் பரிசு பெறுவதே மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் போது, ஒரு குடும்பமே நோபல் பரிசு பெற்றுள்ளது பெரிய சாதனை. அவ்வாறு, குடும்ப உறுப்பினர்கள் பலரும், நோபல் பரிசு பெற்ற அபூர்வ குடும்பம், பியரி -- மேரி கியூரி
* அமெரிக்காவின் சமூக அறிஞர், ஜேன் ஆடம்ஸ் எனும் பெண்மணி. இவர், உலக அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான பெண்கள் கூட்டமைப்பின் தலைவராக செயலாற்றி, உலக அமைதிக்காக பாடுபட்டார். இவருக்கு, 1931ம் ஆண்டிற்கான அமைதி நோபல் பரிசு, அமெரிக்காவின் நிக்கோலஸ் முரே பட்லர் உடன் இணைந்து அறிவிக்கப்பட்டது.
இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது பற்றிய தகவல், அவர், அறுவை சிகிச்சை ஒன்றுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் தெரிவிக்கப் பட்டது.
சுவீடன் நாட்டில், செல்வ குடும்பத்தில் பிறந்தவர், ஆல்பிரட் நோபல்.
அறிவியலாளரான இவர், வேதியியல் துறையில் ஆர்வமுள்ளவர். மேலும்,
கண்டுபிடிப்பாளர், பொறியாளர் மற்றும் தொழிலதிபர் என, பன்முகம் கொண்டவர்.
'டைனமைட்' வெடிமருந்தை கண்டுபிடித்தவர், இவர் தான்.பல்வேறு துறைகளில் சாதனை
புரிந்தவர்களுக்கு பரிசு வழங்கி, ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக, 1901
முதல், இவரது பெயராலேயே, பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இவரது ஏராளமான
சொத்துக்களை இதற்காக பயன்படுத்தவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- ஞானதேவ் ராஜ்