
* எந்த ஸ்வீட் செய்தாலும், சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால், இனிப்பு துாக்கலாக இருக்கும்.
* கேசரி செய்யும் போது, மூன்று மேஜைக் கரண்டி தேங்காய்ப்பால் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும்.
* போளி தட்டும் போது, வாழை இலையின் பின்பக்கமாகத் தட்டினால், இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.
* தீபாவளி பண்டிகைக்கு, வித்தியாசமான, ஆனால், சுவையான ஜவ்வரிசி காராபூந்தி செய்யலாம். ஜவ்வரிசியை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதனுடன் சிறிது மிளகாய் துாள், பெருங்காயத்துாள், தேவையான அளவு உப்பு, மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த சுவை அருமையாக இருக்கும்.
* பக்கோடா தயாரிக்கும் முன், பேசினில் நெய், சமையல் சோடா சேர்த்து விரல்களால் நன்றாக நுரைக்க தேய்க்கவும். அதன்பின், கடலைமாவு, பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து கலந்து எண்ணெயில் உதிர்த்துப் போட்டால், பக்கோடா கரகரப்பாக இருக்கும்.
* 'நான் - ஸ்டிக்' தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, சுகியனை போட்டு மூடி சிம்மில் வைக்கவும். வெந்ததும் திருப்பிப் போடுங்கள். சுவையில் சிறிதும் குறையாத, எண்ணெயில்லாத சுகியம் ரெடி.
* ஒரு கிலோ பச்சரிசியுடன், 100 கிராம் உளுந்து சேர்த்து வறுத்து, அதனுடன், 100 கிராம் பொட்டுக்கடலை சேர்த்து மிஷினில் அரைத்து வைத்து விட்டால், தேவைப்படும் போது, சீரகம் போட்டு தேன் குழல் செய்யலாம்; சுவையும் கூடும், நேரமும் மிச்சம்.
* ரவா, மைதா, சர்க்கரை இம்மூன்றையும் சமமான அளவில் எடுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைக்கவும். குழிக்கரண்டியில் மாவை எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு எடுத்தால், வித்தியாசமான ரவை பணியாரம் தயார்.
* காராபூந்தியில் காரம் அதிகமானால், மாவுடன் உப்பு, சிறிது எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்க்கலாம்.
* லட்டு பிடிக்கும் போது, ஜீராவில், 100 கிராம் நெய் சேர்த்தால், நெய்யில் செய்தது போல் ருசிக்கும்.
* கலங்கலாக இருக்கும் சுட்ட எண்ணெயில், உருளைக்கிழங்கை நான்கைந்து வில்லைகளாக நறுக்கிப் போட்டு பொரித்து எடுத்தால், எண்ணெய் துாய்மையாகி, மீண்டும் உபயோகிக்க முடியும்.
* ஜாமூன், பாதுஷா போன்றவை செய்யும்போது, மீதமாகும் ஜீராவை பாயசத்துடன் சேர்க்க, கமகம மணத்துடன் இருக்கும். ஏலக்காய் சேர்க்கவே வேண்டாம்.
* பச்சரிசி - நான்கு ஆழாக்கு, பாசிப்பருப்பு - இரண்டு ஆழாக்கு எடுத்து வெறும் வாணலியில் வறுத்து, இரண்டும் கலந்து அரைத்து வைத்துக்கொள்ள, காராசேவ், ரிப்பன், தேன்குழல், பக்கோடா, பஜ்ஜி என, எதுவேண்டுமானாலும் செய்யலாம். மாவை கரைத்து, சீரகம், மிளகு, பெருங்காயத்துாள், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தோசையும் வார்க்கலாம்.
* குலாப் ஜாமூன் பொரித்த எண்ணெயில் சிறு சிறு துண்டுகளாக பிரட்டைப் பொரித்து எடுத்து, பரிமாறும் கிண்ணங்களில் பிரட் துண்டுகளை போட்டு, அதன் மேல், ஜாமூன்களை வைத்து கொடுக்க, அதிகபடியான ஜீராவை பிரட் உறிஞ்சிக் கொள்ளும். அந்த பிரட் துண்டுகளை தனியாகவே சாப்பிடலாம்.
- எம்.சித்ரலேகா