
அதிரசம்!
தேவையான பொருட்கள்:
ஈர அரிசி மாவு - இரண்டரை ஆழாக்கு, ஒரு கிலோ அரிசிக்கு ஒன்றேகால் கிலோ வெல்லம் தேவை. மாவானால் ஈரத்தால் அதிகம் கனக்கும். இதற்கு, 300 கிராம் பாகு வெல்லம் போதுமானது. ஏலக்காய்த்துாள், நெய் - ஒரு தேக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு, எள் - மேலே துாவ விருப்பமான அளவு.
செய்முறை: வெல்லத்துருவல் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, கரைந்ததும் வடிகட்டவும். பிறகு இளம் முத்துப் பதம் வந்ததும் இறக்கி வைத்து, ஏலக்காய்த்துாள், சலித்த ஈர அரிசி மாவு சேர்த்துக் கொண்டே கிளற வேண்டும்.
நன்றாகப் பிசைந்து, கைப்பொறுக்கும் சூட்டில் நெய் பூசிய ஒரு பாத்திரம் அல்லது டப்பாவில் மாற்றி மூடி வைக்கவும். மேலே சிறிதளவு நெய் விடலாம். மறுநாள் தேவைப்பட்டால், இறுகியிருந்தால் சிறிது பால் தெளித்து பிசையவும்.
ஒவ்வொன்றாகத் தட்டி, சூடான எண்ணெயில் தனித்தனியாக போட்டு பொரித்து எடுக்கவும். தட்டும்போதே, சிறிது எள்ளை இருபுறமும் துாவி அழுத்தி, தட்டிவிட்டுப் பொரிக்கலாம்.
பாதுஷா!
தேவையான பொருட்கள்: மைதா மாவு -- கால் கிலோ, பால்கோவா -- சிறிதளவு, வெண்ணெய் -- ஒரு தேக்கரண்டி, சர்க்கரை -- 400 கிராம், உப்பு, சமையல் சோடா -- தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவுடன் வெண்ணெய், உப்பு, சமையல் சோடா, தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து, சிறு, சிறு உருண்டைகளாக்கவும். அதன் நடுவே, சிறிதளவு சர்க்கரை, பால்கோவாவை வைத்து, கனமாகத் தட்டவும்.
வாணலியில் எண்ணெயை காயவைத்து, பாதுஷாக்களை போட்டு பொரித்தெடுக்கவும்.
சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு, கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சி இறக்கவும். இதில் பொரித்த பாதுஷாக்களை போட்டு ஊறவைத்து எடுக்கவும்.
அசோகா அல்வா!
தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு -- அரை கப், சர்க்கரை - - ஒரு கப், ஏலக்காய்த்துாள் -- கால் டீஸ்பூன், சிவப்பு நிற புட் கலர் - - சிறிதளவு, கோதுமை மாவு -- ஒரு தேக்கரண்டி, நெய் - - தேவையான அளவு, உடைத்த முந்திரி -- 5 மேஜைக்கரண்டி.
செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வறுத்தெடுக்கவும். குக்கரில் பாசிப்பருப்புடன், தேவையான அளவு தண்ணீர் விட்டு குழைவாக வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் நன்கு மசிக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில், இரண்டு தேக்கரண்டி நெய்விட்டு, முந்திரியை வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே நெய்யில் கோதுமை மாவை சேர்த்து நன்கு வறுக்கவும். அதனுடன் மசித்த பருப்பு, சர்க்கரை, புட் கலர், ஏலக்காய்த்துாள் சேர்த்து கிளறவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து, இடையிடையே தேவையான அளவு நெய்விட்டு, கைவிடாமல் கிளறவும். கலவை நன்கு சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். வறுத்த முந்திரியை மேலே துாவி அலங்கரித்து பரிமாறவும்.
பொட்டுக்கடலை பட்டர் முறுக்கு!
தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு - 2 கப், பொட்டுக்கடலை - 1 கப், பெருங்காயத்துாள் - ஒரு சிட்டிகை, வெண்ணெய் - 2 மேஜை கரண்டி, எள் - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பொட்டுக் கடலையை வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்து சலித்துக் கொள்ளவும்.
இத்துடன் அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயம், சீரகம், எள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். பின், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, மாவு பதத்திற்கு பிசையவும். இம்மாவை முறுக்கு நாழியில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
கார்ன்ப்ளேக்ஸ் மிக்சர்!
தேவையான பொருட்கள்: கார்ன்ப்ளேக்ஸ் - -1 கப், அவல் - - அரை கப், வேர்க்கடலை - கால் கப், பொட்டுக்கடலை - 2 மேஜைக் கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, சிவப்பு மிளகாய்த்துாள் - - 1 தேக்கரண்டி, சர்க்கரை -- ஒரு சிட்டிகை, உப்பு -- ஒரு சிட்டிகை, வறுத்த பாதாம் -- 7, பெருங்காயத்துாள் - - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 தேக்கரண்டி.
செய்முறை: கார்ன்ப்ளேக்சை முதலில் லேசாக பொரித்தெடுக்கவும். ரெடிமேடாக வறுத்த கார்ன்ப்ளேக்சையும் பயன்படுத்தலாம்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் அவலை வறுத்து, கார்ன்ப்ளேக்சோடு சேர்க்கவும். இதே எண்ணெயில் பொட்டுக்கடலை, வேர்க்கடலையை சேர்த்து வறுத்து, கார்ன்ப்ளேக்சுடன் சேர்க்கவும்.
தனியாக ஒரு கடாயில் கறிவேப்பிலை, பெருங்காயத்துாள், சிவப்பு மிளகாய்துாள், உப்பு, சர்க்கரை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கி, கார்ன்ப்ளேக்ஸ் கலவையோடு சேர்த்துக் கலக்கவும். இதன் மேல் லேசாக பொடித்த, கருப்பு ராக் சால்ட்டையும் சேர்க்கலாம். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு, தேவையான போது எடுத்து சாப்பிடலாம்.
தீபாவளி லேகியம்!
தேவையானவை: அரிசி திப்பிலி - 200 கிராம், கண்டதிப்பிலி - 25 கிராம், கொரகொரப்பாக அரைத்த தனியா - 100 கிராம், தோல் நீக்கிய மாங்காய் இஞ்சி அல்லது இஞ்சி - 100 கிராம், பொடித்த வெல்லம் - அரை கிலோ, நெய் - கால் கிலோ, சுக்குப்பொடி - 25 கிராம், மிளகு - இரண்டு தேக்கரண்டி.
செய்முறை: அரிசி திப்பிலியை மண் போக நன்றாக தண்ணீரில் அலசி உலர்த்தி, பவுடராக்கி கொள்ளவும். தோல் நீக்கிய இஞ்சியை பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு மிளகு சேர்த்து விழுதாக அரைத்து, தனியாக வைக்கவும்.அடி கனமான வாணலியில், பொடித்த வெல்லத்தை போட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு மரக்கரண்டியால் கிளறி, இறக்கி, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைக்கவும். பின்னர் அதனுடன் அரைத்த இஞ்சி விழுது, திப்பிலிப் பொடி, தனியா, சுக்குப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி, கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.கலவை நன்கு கெட்டியாகி, லேகிய பதம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும். பின்னர் சுத்தமான பாட்டிலில் அடைத்து, தேவையான போது, நெல்லிக்காயளவு உருண்டையாக எடுத்து சாப்பிடவும்.