
பலகாரங்கள் செய்வதற்கு அரிசி மாவு மற்றும் இதர மாவு வகைகளை மெஷின் அல்லது மிக்ஸியில் அரைத்ததுமே பயன்படுத்தாமல், நன்றாக சூடு ஆறியதும் உபயோகிக்கவும்.
* பலகாரம் செய்ய எந்த மாவை உபயோகிப்பதாக இருந்தாலும், அதை சலித்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
* உளுந்து மாவில் செய்யப்படும் கார வகைகளுக்கு, முழு உளுந்தம் பருப்பை வாணலியில் போட்டு அடுப்பை மெல்லிய தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். பின்னர், மிக்ஸியில் நைசாகப் பொடித்து பயன்படுத்தவும்.
* கார ஓமப் பொடிக்கு, சிகப்பு மிளகாய் வற்றலை நைசாக மிக்ஸியில் அரைத்து உபயோகிக்க வேண்டும். மிளகாய்ப் பொடி நன்றாக அரைபடாவிட்டால் பிழியும்போது அச்சு துளைகளில் அடைத்து, பிழிய வராது.
* அரிசி மாவில் செய்யப்படும் கார வகைகளுக்கு, சாதாரண அரிசி மாவை தவிர்த்து, பதப்படுத்தப்பட்ட அரிசி மாவை பயன்படுத்துங்கள்.
* புதிதாக வாங்கிய எண்ணெயில் பலகாரங்களைச் செய்தால், பலகாரங்களின் கரகரப்பு, நன்றாக இருப்பதுடன், அவை நாள்பட பழைய வாசனை வராமல் இருக்கும்.
* மைதா மாவு, கடலை மாவு போன்றவற்றை உபயோகித்து செய்யும் கார வகைகளுக்கு புதிதான மாவையே பயன்படுத்த வேண்டும்.
* காராச்சேவு செய்யும் போது, மாவை சற்று கெட்டியாகப் பிசைந்து கொள்வது அவசியம்.
* ரிப்பன் பக்கோடாவிற்கு, இரண்டு கப் கடலைமாவுக்கு, ஒரு கப் அரிசி மாவு சேர்த்து செய்வது சரியான விகிதம். ரிப்பன் பக்கோடாவை நன்றாக சிவக்க வேகவைத்து எடுப்பது நல்லது.
* மகிழம்பூ, தேன்குழல் போன்ற பலகாரங்களுக்கு உபயோகிக்கும் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து, நைசாக அரைத்து, பின்னர் சலித்து வைத்துக் கொள்ளவும்.
* எண்ணெயில் பொரித்து எடுத்தவுடன் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வடிக்க, வடிகட்டி அல்லது டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்தலாம்.
* பலகாரங்களை எடுத்து வைக்க காற்றுப் புகாத சம்படங்கள் போன்றவற்றையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு பலகாரங்கள் சுட ஆரம்பிக்கவும்.
* எண்ணெயுடன் சிறிதளவு நெய் சேர்த்து பலகாரங்களை பொரித்தெடுத்தால் வாசனையும், சுவையும் கூடும்.
* மகிழம்பூ, தேன்குழல் செய்ய, இரண்டு கப் அரிசி மாவு, முக்கால் கப் பயத்தம் பருப்பு, முக்கால் கப் நெய், கால் கப் கடலைப்பருப்பு என்ற அளவு சரியாக இருக்கும். இதை பெருங்காயத்துாள் மற்றும் எள் சேர்த்து செய்யலாம்.
* தட்டை செய்யும்போது, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒவ்வொரு உருண்டையும் மஸ்லின் துணியின் மீது வைத்து தட்டைகளாகத் தட்டினால், மாவிலுள்ள ஈரத்தை துணி இழுத்துக் கொள்ளும். பின்னர், எண்ணெயில் போட்டு வேகவைத்து எடுத்தால், தட்டை மொறுமொறுப்பாக இருக்கும்.
* வாய் அகலமான இரும்பு வாணலி அல்லது அடிகனமான வாணலியை பலகாரங்களைப் பொரிக்க உபயோகிக்கவும்.