
ஆக., 20 - காயத்ரி ஜபம்
நம் கண்ணுக்கு தினமும் வானில் உதிக்கும் சூரியன் தெரிகிறது. உலகையே இயக்கும் மாபெரும் சக்தி அது என்பதை, ஆன்மிகம் மற்றும் அறிவியல் நூல்கள் மூலம் அறிந்திருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒளிந்திருக்கும் சக்தி தான், புதிய சூரியன்.
இந்த புதிய சக்திக்கு, புத்தி என்று பெயர். இந்த புத்தியை வலுப்படுத்தும் சக்தி தான், காயத்ரி மந்திரம். காயத்ரி மந்திரத்திற்கான விளக்கத்தைப் புரிந்து கொள்வது அரிது. எனவே எவ்வளவு எளிதில் தர முடியுமோ, அந்தளவுக்கு இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது.
காயத்ரி என்றால் என்ன? அது தெய்வமா என்ற கேள்வி எழும்.
முருகனுக்கு ஆறுமுகம், சிவனுக்கு ஐந்து முகம், துர்க்கைக்கு எட்டு முகம்... இதுபோல், ஐந்து முகங்களை கொண்ட பெண் சக்தி தான் காயத்ரி என, எண்ண வேண்டாம்.
உண்மையில், காயத்ரி என்பது தெய்வமே அல்ல. அது நான்கு வேதங்களின் சாரத்தைப் பிழித்தெடுத்த ஒரு மந்திரம். இந்த மந்திரத்தால், நம் புத்திசாலித்தனத்தை ஒளிரச் செய்ய முடியும். ஒளிரும் புத்திசாலித்தனத்திற்கு இன்னொரு பெயரே, புதிய சூரியன்.
மனிதர்களின் முகம் ஒவ்வொரு மாதிரியாக, ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ளும் பொருட்டு, பிரம்மனால், படைக்கப்படுகிறது. ஆனால், புத்தி என்பதை ஒரே மாதிரியாகத் தான் எல்லாருக்கும் வைக்கிறார். அந்த புத்தியை சக்தி உள்ளதாக்கும் அல்லது ஒளிரச் செய்யும் வழிமறை தான், காயத்ரி மந்திரம்.
இன்னும் எளிமையாக சொன்னால், களிமண்ணில் பானை, பூனை என, பல வடிவங்களை உருவாக்கலாம். ஆனால், மூலப்பொருள் ஒன்று தான்.
பசுக்கள் கருப்பாக, வெள்ளையாக, இன்னும் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால், அவை தரும் பால் ஒன்று தான். நகைகள் பலவிதம். ஆனால், அதற்கு அடிப்படையான தங்கம் ஒன்று தான். ஏன், மனிதர்களின் முகம் தான் வேறு வேறு. ஆனால், ரத்தம் எல்லாருக்கும் சிவப்பு தான்.
ஆக, உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும், பொதுத் தன்மை இருக்கிறது. இந்த பொது நிலையைப் புரிந்து கொண்டால், நாம் எல்லாரும் ஒன்று தான், நம்மில் உயர்வு - தாழ்வு இல்லை என்ற எண்ணம் நம் மனதுக்குள் பிறக்கும். இந்த எண்ணத்தை வளரச் செய்யும் சக்தியே, காயத்ரி மந்திரம்.
ஓம் புர் புவர்ஸுவ என துவங்கும் காயத்ரி மந்திரத்தின் பொருள் இதுதான்:
இந்த உலகைப் படைத்தவரே! உன்னுடைய உன்னத மகிமையை நாங்கள் வணங்குகிறோம். உன் ஒளிமயமான சக்தி, எங்கள் புத்தியை ஒளிரச் செய்யட்டும். எங்கள் அறியாமையை அழிக்கட்டும், எங்கள் உள்ளங்களை சுத்தமாக்கட்டும். கல்வி மட்டுமல்லாமல் வாழ்வைப் புரிந்து கொள்ளும் புதிய அறிவான ஞானத்தை எங்களுக்கு அருளட்டும்.
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள், இந்தப் பொருளை திரும்பத் திரும்ப வாசித்தாலே போதும். நல்ல புத்தியுடன் வாழ்ந்து, நலம் பெறுவோம்.
தி. செல்லப்பா

