
விடிந்தபோதே தலைவலிப்பதாக உணர்ந்தாள், யசோதா.
இன்றுடன், அவள் கணவர் மறைந்து, எட்டு மாதங்கள் ஆகி விட்டன. ஆனால், எட்டு யுகங்கள் கடந்த மாதிரி இருந்தது. அவ்வளவு களைப்பு, பாரம். கூடவே, புதிதாக சேர்ந்து கொண்ட மனச் சுமைகள்!
எழுந்து, காலை வேலைகளை முடித்து, அடுப்படிக்குப் போனாள். மருமகள்களான கிருத்திகாவும், தேவியும் பரபரப்பாக இருந்தனர்.
தன் வழக்கமான, 'கணீர்' குரலில், கட்டளை இடுவதைப் போல சொல்லிக் கொண்டிருந்தாள், கிருத்திகா.
''தேவி... பீன்ஸ் பொரியலுக்கு தேங்காயை நல்லா துருவி போடு. மிக்ஸியில ஓட்டி போடும்போது, செதில் செதிலா இருக்கு. குழந்தைகள் சாப்பிடாம அப்படியே திருப்பி கொண்டு வர்றாங்க. வெண்டைக்காய் மசாலா செய்யும்போது, தக்காளிய அரைச்சு போடு... அப்பதான் ஒழுங்கா சாப்பிடுவாங்க...
''இன்னிக்கு பனீர் செய்யணும்... பாலை காய்ச்சி மட்டும் வெச்சிடு; பனீர் நான் பண்றேன்,'' என்றவள், சமையல் அறைக்குள் நுழைந்த யசோதாவைப் பார்த்து, ''அத்தை வாங்க... காபி எடுத்துக்குங்க,'' என்று, காபி கப்பை நீட்டினாள்.
''கிருத்தி... இன்னைக்கு நான் வெந்தய தோசை செய்யட்டுமா? உன் கணவன் கிரிக்கு ரொம்பப் பிடிக்கும்,'' என்றாள், யசோதா மெல்ல!
''இல்ல அத்தே... ராத்திரிக்கு பீட்ரூட் சப்பாத்தியும், பனீர் மசாலாவும்ன்னு தேவிகிட்ட மெனு சொல்லிட்டேன். அப்புறம் பாத்துக்கலாம்.''
''சரி... நான் வேணா இன்னிக்கு முறுக்கு பிழியட்டுமா?''
''அட! ஏன் அத்தே எண்ணெய் சட்டிக்கிட்ட நின்னு கஷ்டப்படணும். இது நீங்க, 'ரெஸ்ட்' எடுக்குற காலம். நிறைய உழைச்சுட்டீங்க... போய் ஹாயா உக்காந்து பசங்க கூட பேசி சிரிச்சு சந்தோஷமாய் இருங்க. தேவி... அந்த பூண்டு பேஸ்ட் எடு.''
மவுனமாக திரும்பி வந்தாள், யசோதா.
ஹாலில், புத்தகங்கள், நோட்டுகளை விரித்து வைத்து, எழுதிக் கொண்டிருந்தனர், குழந்தைகள்.
''விஜி... இந்த கணக்கை கொஞ்சம் சொல்லிக் கொடுடி.''
''போடா... நானே கால்குலஸ் புரியாம தடுமாறிக்கிட்டு இருக்கேன்.''
''நாலாவது படிச்சு முடிச்சு தானே அஞ்சாவதுக்கு வந்திருக்கே... அப்ப, என் பாடம் தெரியும் தானே... சொல்லிக் கொடுடி!''
''எனக்கும் நாளைக்கு கணக்கு பரீட்சை இருக்குடா... என் நேரத்தை வீணாக்க முடியாது.''
குழந்தைகளை நெருங்கினாள், யசோதா.
''கண்ணுகளா... பாட்டியும் அந்தக் காலத்து பி.எஸ்.சி., தான்; நான் சொல்லித் தரட்டுமா?'' என்று கேட்டாள்.
இருவரும், 'களுக்'கென சிரித்தனர்.
'என்ன பாட்டி, 'ஜோக்' அடிக்கிறியா? எங்க சிலபஸே வேற... 'இன்டர்நேஷனல் கரிகுலம்' இது. உனக்கு எங்க கணக்கு கேள்வியே புரியாது; அப்புறம் எப்படி தீர்வு கிடைக்கும்?' என்று கேட்டு, ஒருவரை ஒருவர் பார்த்து, மறுபடியும் சிரித்தனர்.
அங்கிருந்து அமைதியாக தோட்டத்திற்குப் போய் நின்றாள், யசோதா.
எட்டு மாதங்களுக்கு முன்வரை இருந்த வாழ்க்கையா இது! இல்லை; தலைகுப்புற விழுந்து விட்டது, அவளது காலம். வீட்டிற்கு அவள் தானே மகாராணியாக இருந்தாள்... கணவர் மூர்த்தி, அவள் பேச்சை தட்டவே மாட்டார்.
சமையல் அவள் செய்வது தான்; உடைகள், அவள் விருப்பம் தான். திரைப்படம், கடற்கரை, ஹோட்டல் என்று, அவள் எங்கே போக நினைக்கிறாளோ, அது தான் நடக்கும்.
வீடு கட்டும்போது கூட, எந்த அறை, எந்த திசை நோக்கி இருக்க வேண்டும், பெயின்ட்டுகளின் நிறம் என்ன, எந்த வடிவ சோபாக்கள் வாங்குவது, எந்த இடத்தில், 'டிவி' வைப்பது என்று, எல்லாமே அவள் சொல்வது தான் நடக்கும்.
இன்றோ, அவள் பேச்சைக் கேட்க, ஒரு செவி கூட இல்லை. மகனுக்கு அலுவலக பிரச்னைகளை சமாளிப்பதே, நாள் முழுக்க சாதனையாக இருக்கிறது. கனடாவில் இருக்கிறாள், மகள்; 10 நாட்களுக்கு ஒரு தடவை பேசுவது கூட அதிசயம். மருமகள் நல்ல குணம் தான்; ஆனால், ஆதிக்க மனோபாவம்!
கணவரின் குரல் காதுகளிலேயே ஒலிக்கிறது...
'யசோ... நீ வந்து கொஞ்சம் எனக்கு, 'டிரஸ்' எடுத்துக் கொடேன். இன்னைக்கு, 'ஸ்பெஷல் மீட்டிங்' அலுவலகத்தில்... நான் தான், 'வெல்கம் அட்ரஸ்' சொல்லணும். நல்ல, 'பிரைட் காம்பினேஷன்' வேணும். உனக்கு தான் இதெல்லாம் தெரியும்...'
'அய்யோ... இந்த நினைவுகளை யாராவது அழித்து விடுங்களேன்...' என்று கத்த வேண்டும் போலிருந்தது.
அதெல்லாம், இறந்த காலம்; முடிந்து போன வாழ்க்கை. இன்று, அவள் கிழவி; அறுபத்தைந்து வயதுக்குள் அனைத்தும் முடிந்து போய் விட்டன. இன்று அவள், நாற்காலி அல்லது மேஜை போல போட்ட இடத்தில் கிடக்க வேண்டியவள். அதை நினைக்கும் போதே உள்ளம் கலங்கியது. அதைவிட, வேறு ஒரு எண்ணம் தோன்றி, உடலை நடுங்க வைத்தது.
அவள் குடும்பத்தில் எல்லாருக்கும் நல்ல உடல்வாகு; 85 வயதுக்கு குறைவாக யாரும் மறைந்ததில்லை.
'நானும் அப்படி வாழ நேருமா... ஐயோ... இன்னும் 20 ஆண்டுகளா... இந்த அவமானங்களை, ஒதுக்கி வைத்தலை, தனிமையை இன்னும் 20 ஆண்டுகள் எப்படி சகித்து வாழ முடியும்... எதிர்காலத்தை நினைக்கும் போது, தொண்டையில் விஷம் இறங்குவதைப் போல இருக்கிறதே... என்ன செய்யப் போகிறேன்...' என மனதுக்குள் புலம்பினாள், யசோதா.
''அம்மா... உனக்கொரு ஹாப்பி நியூஸ்,'' என்றபடி வந்தான், கிரி.
''என்னப்பா?''
''யு டியூப் பாக்கறே இல்ல... அதில, கோகுலம்னு ஒரு சேனல் இருக்கு. பழைய பள்ளி நண்பர்களை கண்டுபிடிச்சு, 'கெட் டு கெதர்' நடத்துறாங்க. அதில, உன் கல்லுாரித் தோழி யாரோ, 'அப்ளை' பண்ணியிருக்காங்க போல...
''உங்க, தெரசா கலைக்கல்லுாரி உங்க, 'பாட்ச்' தோழிகள கண்டுபிடிக்கிறாங்க... உனக்காக தேடும் போது, எப்படியோ என் 'கான்டாக்ட்' நம்பரை கண்டுபிடிச்சுட்டாங்க. நாளைக்கு போறோம்... தயாரா இரு. தோழிகள்ல யார் யார் வர்றாங்களோன்னு நினைச்சு, ஜாலியா கற்பனை பண்ணிகிட்டு இரு,'' என்று, சிறு புன்னகை கூட இல்லாமல் சொல்லி விட்டுப் போனான்.
உண்மையில் அவளுக்கு இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.
சொன்னது தான் சொன்னான்... கொஞ்சம் சிரித்த முகத்தோடு, பக்கத்தில் ஒரு நிமிடம் உட்கார்ந்து பேசியிருந்தால், அப்படியே குளிர்ந்து போயிருப்பாள். மருமகள் கிருத்திகாவும் இதே போல தான்; வயதானவள் என்றால், அவளுக்கு உணர்ச்சிகள் இருக்காதா, மனம் இல்லையா... 'எல்லாம் முடிந்து விட்டது உனக்கு...' என்று சொல்லாமல் சொல்வது, எவ்வளவு கொடுமை!
கடற்கரையை ஒட்டிய, 'ரிசார்ட்'டில் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யசோதாவை இறக்கி விட்டு, வழக்கம்போல மொபைல் போனை காதில் வைத்துக் கொண்டு போய் விட்டான், கிரி.
தோழியரில் நிறைய பேர் வந்திருந்தனர்.
காலம் வரைந்த கோடுகள், மூப்பு கொடுத்த நரைகள், வயது கொடுத்த மூட்டுவலி, தோள்பட்டை வலி என்று பேச்சில் 90 சதவிகிதம் புலம்பலாகவே இருந்தது.
ஆனால், ஷோபா...
அவள் வித்தியாசமாக இருந்தாள்.
உடல் கச்சிதமாக இருந்தது. சிரிப்பில் கம்பீரம், பேச்சில் மென்மை, நிமிர்ந்து நிற்கும் தோள்கள்... அழகான, 'டோலா சில்க்' புடவையில், ரோஸ் வர்ண ரோசா போல இருந்தாள்.
''ஓ யசோ... எப்படிடா இருக்கே... நீ தானே எனக்கு, 'கிராப்ட் தியரி' சொல்லிக் கொடுத்தே?'' என்று கேட்டு, புன்சிரிப்புடன் வந்து அணைத்துக் கொண்டாள்.
''என்ன யசோ... என்ன ஆச்சு உனக்கு? தலைமுடி கொட்டி, இளைச்சு, முகம் சோர்வா... என்னடா உடம்பில் ஒண்ணும் பிரச்னை இல்லையே?'' என்று கேட்டாள்.
''மனசுல தான் ஆயிரம் பாரம் ஷோபா,'' என, சொல்லும் போதே குரல் கம்மியது.
''ஏன்டா... கிரி நல்ல பையன் தானே... உன் கணவர் போன பின், தன் கூடத் தானே அழைச்சுட்டுப் போயிருக்கான்? கிருத்திகாவும் நல்ல பெண் என்று சொன்னானே,'' என்று கேள்வியாக நிறுத்தினாள்.
''ஆமாம் ஷோபா... ஆனால் எனக்கு,'' என்றவள், பாதியிலேயே நிறுத்தினாள். தொண்டையில் வார்த்தைகள் அடைத்துக் கொண்டன.
யசோதாவின் தோளில் கை வைத்து, மென்மையாக அணைத்துக் கொண்டாள், ஷோபா. அவள் உடலில் மெல்லிய ஜவ்வாது மணத்தது. சுவாசத்தில் ஏலக்காயின் நறுமணம். கூந்தலில், லேசான வெந்தய சீயக்காயின் வாசனை.
'வாழ்வை இன்னும் ரசிக்கிறாளா ஷோபா... கணவர் மறைந்த பிறகுமா... எப்படி...' மனதுக்குள் எழுந்த கேள்வியை கேட்டே விட்டாள்...
''நீ அப்படியே இருக்கிறாயே, எப்படி ஷோபா? நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயது, ஒரே வாழ்க்கை பின்னணி. ஆனால், என்னால் மட்டும் இலகுவாக இருக்க முடியவில்லையே... என்ன மாயம் இது?''
மென்மையாக புன்னகைத்த ஷோபா, ''சொல்றேன் யசோ... என் உறவினப் பெண், மனோதத்துவம் படித்தவள். அவ, எங்க வீட்டுப் பெண்கள் எல்லாருக்கும் மூணு விஷயங்கள அடிக்கடி சொல்வாள். அதை, அப்படியே நான் கடைப்பிடிக்கிறேன்; அதனால் தான், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.''
இடைமறித்து, ''அது என்ன மூணு விஷயங்கள்?'' என்று கேட்டாள், யசோதா.
''முதல் விஷயம், கடந்து போன பழைய காலத்தை பற்றி நினைத்துக் கொண்டே இருக்காதே என்பது! அப்போ அப்படி இருந்தோம், அன்னைக்கு ஆஹான்னு இருந்தோம்ன்னு நினைச்சு நினைச்சு வருத்தப்படுவது, ஒரு பயனும் இல்லாத வெத்து சோகம் அது...
''அடுத்தது, எதிர்காலம் பற்றி யோசித்து, கவலைப்படுவது. பெரும்பாலான சம்பவங்கள், நிகழ்வுகள், காரியங்கள் நம்ம கையில இல்லை என்பது தான் நிஜம். எதுவும் நடக்கட்டுமே, பாத்துக் கொள்ளலாம் என்பதே சரியான அணுகுமுறை...
''அதனால, இறந்தகாலம், எதிர்காலம் ரெண்டையும் பத்தி யோசிச்சு, மண்டையைக் குழப்பிக் கொள்ளாமல் இருந்தாலே போதும். அடுத்தது தான் முக்கியமான அறிவுரை,'' என்ற போது, கூர்ந்து கவனித்தாள், யசோதா.
''நம் சந்தோஷம், அடுத்தவரிடமிருந்து வருகிறது என்று நினைப்பது. அந்த எண்ணம் இருந்தால், மாற்றிக் கொள்வது தான் சரி. 'மகன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பேசக் கூடாதா, மருமகள் அன்பாக துக்கம் பற்றி கேட்கக் கூடாதா, பேரக் குழந்தைகள் பாட்டி, பாட்டின்னு தலையில் துாக்கி வைத்து ஆடக் கூடாதா...' என்று எவ்வளவு எதிர்பார்ப்புகள் நமக்கு!
''இதை எல்லாம் அவர்கள் செய்தால், நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று, குழந்தைத்தனமாக ஏற்படும் ஆசை. நம்மை சுற்றியுள்ளவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் யசோதா... இது, 'பாஸ்ட்' யுகம்; ஆயிரம் சவால்கள் அவர்களுக்கு!
''கிண்டர் கார்டன் முதலே ஆரம்பித்து விடும் பிரஷர்கள்... நம் காலம் போல, மாலைப் பொழுதுகள் அவர்களுக்கு இணக்கமாக இல்லை. ஹோம் ஒர்க், கிரிக்கெட், மாத்ஸ் ஒலிம்பியாட் என்று ஆயிரம், 'கமிட்மென்ட்'கள்.
''வேலை பார்க்கும் அம்மாக்களுக்கு, 'ஒர்க் ப்ரம் ஹோம்' என்று புதுச் சிறையில், பழைய மொந்தை வேலைகள். அப்பாக்களுக்கு, நாலு ஆண்டுக்கு புது கம்பெனி மாற வேண்டிய நிர்ப்பந்தம். இதில், நாம் தானே அவங்களுக்கு அனுசரணையாக இருக்கணும்,'' என்ற போது, யசோதாவுக்கு பேச்சே வரவில்லை.
''என் கணவர் மறைந்த போது, தங்களுடன் வந்து இருக்கும்படி மகன்கள் கூப்பிட்டனர். நான் யோசித்து, இரு மகன்களும் பக்கத்தில் இருக்கும் வகையில், ஒரு சிறிய வீட்டை வாங்கினேன். லில்லின்னு ஒரு உதவியாளர் எனக்கு எல்லாமாக இருக்கிறாள்.
''பேரன், பேத்திகள், மருமகள்கள், மகன்கள்ன்னு வருவாங்க, போவாங்க. வாழ்க்கை எல்லாருக்குமே சுலபமாக இருக்கிறது. கூடவே, இருப்பது ஒண்ணும் தவறில்லை; ஆனால், அப்போது எதிர்பார்ப்பு என்ற நெருப்புக்கட்டை ஒன்றை வைத்துக் கொண்டு, எல்லாரையும் அச்சுறுத்திக் கொண்டிருப்போம்.
''மனதை மாற்றிக் கொண்டால் போதும் யசோதா... ஆயிரம் அன்புச் சுடர்கள் கையில் அகல் விளக்காய் ஒளி ஏற்றும். சாரி... ரொம்ப பேசிவிட்டேன்,'' எனக் கூறி முடித்தாள், ஷோபா.
''இல்ல ஷோபா... அன்புக்கு, எப்போதும் ஆயிரம் மதிப்பெண் தான். அந்த மூன்று கட்டளைகளை நான் இப்போதே மனமார ஏற்றுக் கொள்கிறேன்,'' என்று கூறி, மனம் விட்டு புன்னகைத்தாள், யசோதா!
வி. உஷா