
முன்கதைச் சுருக்கம்: தீபாவின் அம்மா, மஞ்சுளாவை சந்திக்க, ஆராதனா, வருண் மற்றும் அவர்களது அம்மா மூவரும், தீபா வீட்டுக்கு சென்றனர். தீபா வீட்டில் இருக்கமாட்டாள் என நினைத்து சென்றவர்களுக்கு, தீபா வீட்டில் இருந்தது சற்று அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும், அவளை எதிர்கொண்டு, வீட்டிற்குள் சென்றனர்.
வந்தவர்களிடம் சகஜமாக பேசி, பிறந்த நாளான அன்று வீட்டிற்கு வந்திருப்பதற்காக, புடவை ஒன்றை ஆராதனாவின் அம்மாவுக்கு பரிசளித்தாள், மஞ்சுளா.
மும்பையில், தீபாவின் காதலன் திலகன் தனக்கு கொடுக்கப்பட்ட, புராஜெக்ட் வேலையை சிறப்பாக செய்து முடித்தான்.
அவனுடன் பணி புரியும் சாதனா, ஆபிஸ் நேரம் முடிந்ததும், திலகனை அழைத்து, சற்று, ரிலாக்ஸ் செய்து கொள்ள, 'பீர்' அருந்தலாம் என்றதும், அரை மனதுடன் ஒப்புக் கொண்டு, அவளுடன், அவள் வீட்டிற்கு, சென்றான் திலகன்.
சாதனாவின் குடியிருப்பு ஒரு பழைய கட்டடத்தில், மூன்றாவது மாடியில் இருந்தது. லிப்ட் இல்லை. படிகள் ஏறி. முழங்கால்கள் களைத்தன.
'வெல்கம், வெல்கம்...' என்று சொல்லிய படியே கதவைத் திறந்தாள், சாதனா. சிறு ஹால், ஒற்றைப் படுக்கையறை, கிச்சன் என்று வீடு கச்சிதமாக இருந்தது. சுவரில் சில ஹிந்தி நடிகர்களின், 'ப்ளோ அப்'கள் ஓட்டப்பட்டிருந்தன.
ரெண்டு நிமிஷம்...' என்று சொல்லி, படுக்கையறையில் நுழைந்து, கதவைச் சாத்திக்கொண்டாள், சாதனா. வெளியே வந்தபோது, மாற்றுடையில் இருந்தாள். முகப்பருக்களை ரப்பர் வைத்து அழித்து விட்டால், இவளும் அழகாக தோன்றுவாள் என்று நினைத்தான், திலகன்.
'பீர் போதுமா, வேறு ஏதாவது, 'ஹாட்'டாக வேண்டுமா?' என்றாள்.
'பீர் போதும்.' என்றான். திலகன். இருவர் அமரும் சிறு சோபாவில், திலகன் அமர்ந்திருக்க, சில்லென்ற பீர் டின்களோடு வந்து, அவனை ஒட்டி அமர்ந்தாள், சாதனா. தொலைக்காட்சியை இயக்கி, அதன் ஒலியை அடக்கினாள். பீர் டின்கள் திறக்கப்பட்டன.
மவுனமான திரைப்பாடல்களில் திரை நட்சத்திரங்கள் பின்னணியில் இயங்க... ஆங்கிலமும், கொச்சைத் தமிழும் கலந்து அவள் தன் கல்லூரி அனுபவங்கள் துவங்கி, ஏதேதோ பேசியவள், திடீரென்று திலகனிடம், 'உனக்கு, 'கேர்ள் ப்ரெண்ட்' இருக்குதா?' என்று. மூன்றாவது டின் பீரைத் திறந்து கொண்டே கேட்டாள், சாதனா.
இருக்கிறாள் என்றால், இந்த நெருக்கம் இல்லாமல் போய் விடுமோ என்ற அல்ப அச்சம். காதலி தீபா பற்றிச் சொல்ல ஏனோ ஒரு தயக்கம் தடுத்தது. தான் யாரிடமும் பிணைத்துக் கொள்ளவில்லை என்றும், புதிய நட்புக்கு தயாராக இருப்பது போலவும் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. திலகனுக்கு.
'இருந்தா... இப்ப, 'பிரேக் அப்' ஆயிருச்சு,' என்று மனதார பொய் சொன்னான், திலகன்.
'நிமிஷா மேல உனக்கு ஒரு மயக்கம் உண்டு தானே?' என்றாள். சாதனா.
அந்தக் கேள்வியை, எதிர்பார்க்கவில்லை. திலகன்.
'அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. எனக்கு நீயும், நிமிஷாவும் ஒண்ணுதான்.'
ரியலி?' என்று அவன் தொடையில் கைவைத்து அழுந்தினாள். போதையில் சாதனாவின் துணிச்சல் கூடுவதை உணர்ந்தான், திலகள்.
'ஆனா, நிமிஷாவுக்கு, 'ஹெல்ப்' பண்றே. என்னை நீ மதிக்கறதில்ல, திலக்.”
“சாது. மதிக்காம தான் நீ கூப்பிட்டதும், உன்கூட வந்திருக்கேளா?”
'ரியலி?' என்று கண்களை உருட்டியபடி கேட்டவன்,
'நாம பார்ட்னர்ஸா இருந்தா எப்படி இருக்கும்?'
'என்ன சொல்ற... எனக்கு புரியல.'
“எத்தனை நாள் மத்தவங்களுக்கு உழைச்சுப் போடறது. இங்க, 'மேனேஜ்மென்ட் டெக்னிக்ஸ்' எல்லாம். 'சின்சியரா' கத்துப்போம். ஒரு வருஷத்துக்கு பிறகு, நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு. 'ஸ்டார்ட்-அப்' கம்பெனி ஆரம்பிக்கலாம். என்கூட பார்ட்னரா நீயும் சேருவியா?'
“சாதனா... மூணு பேர்ல ஒருத்தர் நான், 'செலக்ட்' ஆவோம்ன்னு சொன்னாரே, ஜி.எம்..?'
“அது பொய், அப்பதான் சின்சியரா இருப்போம்ன்னு நெனச்சு. 'மேனேஜ்மென்ட்'ல சொல்வாங்க, திலக்.
“சாதனா, 'பார்ட்னர்ஷிப்' நல்ல ஐடியா தான். ஆனா, இன்னும் ஒரு வருவும் இருக்கே முடிவு எடுக்க. பீர் உள்ள போனாத்தான் சொல்ல முடியும்ன்னு சொன்னது இது தானா?” என்று கேட்டான், திலகன்.
'நோ, மேன்,' என்று, அப்படியே அவன் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டவள், 'பிசினஸ்ல மட்டும் பார்ட்னராகணும்ன்னு நெனச்சு உன்னைக் கூப்புடல, திலக்.'
அவளுடைய இளமை, தனிமை, போதை எல்லாமாக சேர்ந்து தாக்க தவித்தான், திலகன். மெல்ல அவள் இடுப்பில் அவன் கைவைத்த நேரம் அவனுடைய மொபைல் போன் அவற ஆரம்பித்தது. திடுக்கிட்டு கையை எடுத்து விட்டான்.
அழைப்பு, நிமிஷாவிடமிருந்து வந்தது. எடுக்காமல் தவிர்க்க முடியாது.
“ஹலோ,” என்றான். நடுங்கும் குரலில், திலகன்.
'எங்க இருக்கே, திலக்?' என்று, கேட்டாள். நிமிஷா.
சாதனாவும் எழுந்து அமர்ந்தாள். அவனிடமிருந்து மொபைலை பிடுங்கினாள்.
“என் வீட்டுக்கு வந்திருக்கான். ரெண்டு பேரும் பீரடிச்சிட்டிருக்கோம். ஸோ வாட்?' என்றான், சற்றே கோபமாக, சாதனா.
'ஹே, கூல், கூல்... கூப்பிட்டிருந்தா நானும் வந்திருப்பேன். இல்ல?' என்றாள். போனை, சாதனாவிடமிருந்து பறித்து, 'ஸாரி, டியர். நீ. எம்.டி., யைப் பார்க்கப் போயிட்டே. அதான்.” என்று இழுத்தான், திலகன்.
'இட்ஸ் ஒ.கே., உன் ரூமுக்குப் போயிருந்தேன். ஆளைக் காணோமே என்று கூப்புட்டேன். குட்நைட்,' என்ற. நிமிஷாவின் மொபைல் போன், 'கட்' ஆனது.
'போனை சைலன்ட்ல போடு,' என்று, சாதனா சொன்னபோது, மெல்ல எழுந்து, ''அம்மா, 'கால்' பண்ணுவாங்க. நான் போகணும்,' என்றான், திலகன்,
'ஏய், இருப்பா. காலைல போலாம். இன்னும் பேச வேண்டியிருக்கு,' என்றாள். சாதனா.
இதைவிட வெளிப்படையாக ஒரு பெண் அழைப்பு விடுக்க முடியாது என்று புரிந்தது. ஆனால், தெளிந்திருந்தான் திலகன்.
'இல்ல சாதனா. 'ஸ்டார்ட்-அப்' கம்பெனி பத்தி இன்னொரு நாள், சிரியஸாப் பேசுவோம்.' என்று ஷூக்களை அணியலானான், திலக்.
'டின்னர்? சாப்பிட வேணாமா?'
'பசியில்ல, இன்னொரு நாள் சாப்பிடலாம்.'
அச்சிட முடியாத சில சொற்களால், நிமிஷாவை திட்டினாள், சாதனா.
'குட் நைட்!' என்று கூறி, அவசரமாக அங்கிருந்து வெளியேறினான், திலகன்.
அந்தக் கல்லூரி வாயிலருகே
ஆட்டோவிலிருந்து இறங்கினாள். தீபா. அவள், நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது.
இன்று, சீப் எடிட்டரே, தீபாவை பார்த்து பேசியிருந்தார்...
'அடுத்தது களத்துக்குப்போய், 'ரிப்போர்ட் பண்ற வேலை. செய்யறீங்களா?' எனக் கேட்டார்.
“சந்தோஷமா, சார்,' என்றாள், தீபா.
'இன்னும் ரெண்டு, மூணு மாசத்துல காலேஜ்ஸ, புது, 'அட்மிஷன்' ஆரம்பிச்சிரும். பொதுவா ஒவ்வொரு வருஷமும், ராகிங்'ல மாட்டி, ஒரு பையனாச்சும் காயப்படறான். பயந்த சுபாவம் இருக்கறவன் தற்கொலையே பண்ணிக்கறான். நியூஸ் பாத்திருப்பிங்க, தீபா,” என்றார், எடிட்டர்.
அவள் அதிகம் செய்திகள் படித்ததில்லை என்று சொல்லிக் கொள்ளாமல் 'ஆமா, சார்,' என்று ஆமோதித்தாள்.
'காலேஜ்லே படிக்கும் போது, உங்க அனுபவம் எப்படி?” என்று கேட்டார்.
'நான் படிச்ச காலேஜ்க்கு நெறைய நன்கொடை குடுத்திருந்தாரு, எங்கப்பா. சமூகத்துல அவருக்கு செல்வாக்கும் இருந்தது. அதனால, என்கூட எப்பவும் ஒரு லெக்சரரோ, காலேஜ் ஸ்டாப்போ முதல் செமஸ்டர் முடியற வரைக்கும் இருந்தாங்க. 'ராகிங்' கொடுமையை நான் நேரடியா அனுபவிக்கவே இல்ல,” என்றான், தீபா.
“ரைட். அப்ப நீங்க கல்லுாரிகளுக்கு போய், அங்க இருக்கற சீனியர் மாணவர்களை சந்திச்சு இதுபத்திப் பேசுங்க. எந்த மாதிரி, 'ராகிங்' இருக்கும், சட்டம் என்ன பாதுகாப்பு கொடுக்குதுன்னு விரிவா ஒரு கட்டுரை எழுதுங்க தீபா,' என்றார். எடிட்டர்.
“சரி, சார்,' என்றாள்.
எடிட்டர் கொடுத்துள்ள பொறுப்பு பற்றி, உதவி ஆசிரியர், நாதப்ரியனிடம் சொன்னாள், தீபா.
'போன்ல கேமரா இருக்கில்ல? முக்கியமானதை போன்லயே போட்டோ எடுத்துக்குங்க. களத்துக்குப் போறப்ப, உங்களுக்கு சின்னச் சின்ன செலவுகள் இருக்கும். ஆட்டோ கார்ஜ், நொறுக்குத்தீனி, விஷயத்தை கறக்க அங்க யாருக்காச்சும் வெட்ட வேண்டிய சில்லரை ஆகியவற்றையெல்லாம் குறிச்சு வெச்சுக்கிட்டு எழுதிக் கொடுங்க, நியாயமான செலவை பத்திரிகை ஏத்துக்கும்,' என்றார். நாதப்ரியன்.
அவள் வாழ்ந்த வாழ்வென்ன, ஆட்டோ
செலவையெல்லாம் இன்னொருத்தரிடம் கேட்டுப் பெறுவதா? தீபாவுக்கு வேடிக்கையாக இருந்தது. இருந்தாலும், தலையசைத்து வைத்தாள்.
இதோ, நகரத்தின் பிரபலமான கல்லூரிக்கு வந்தாயிற்று.
விரிந்திருந்த கேட்டை தாண்டி உள்ளே நுழைந்ததும், அதிர்ந்தாள், தீபா.
மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட புற்றிலிருந்து பிய்த்துக் கொண்டு வெளிவரும் எறும்புகள் போல் ஆண்கள், பெண்கள் என்று மாணவர்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.
'இத்தனை மாணவர்களா இங்கே படிக்கின்றனர்?' என்று நினைத்தவள், அங்கு கட்டப்பட்டிருந்த, 'கல்லுாரிகள் கலைச்சங்கமம்' என்ற பேவரை கவனித்தாள்.
பிரின்சிபால் அறை நோக்கி நடந்தாள். ஐம்பது வயதிருக்கும் பிரின்சிபாலுக்கு. சரிகை வைத்த பட்டுப்புடவை கட்டி, கொண்டை போட்டு, 'லிப்ஸ்டிக்' உதடுகளை விரித்து, புன்னகை செய்தாள். தன்னை அறிமுகம் செய்து கொண்டாள், தீபா.
'ஓ... இன்னைக்கு, 'ஸ்டூடன்ட்ஸ்' எல்லாம், 'பிசியா' இருப்பாங்களே! ஆனா, ஒரு நல்ல விஷயம். மத்த காலேஜ்லேயிருந்தும் பசங்க வந்திருக்காங்க. ஒரே இடத்துல நிறைய பேரை சந்திச்சு நீங்க பேச முடியும்,' என்றவர், ஒரு சீனியர் மாணவியை அழைத்து, தீபாவை ஒப்படைத்தாள், பிரின்சிபால்...
'பூர்ணா, இவங்களுக்கு, 'ஹெல்ப்' பண்ணு,' என்றான், பிரின்சிபால்.
அங்கே தலையாட்டினாலும், தீபா வந்திருப்பதன் நோக்கம் அறிந்ததும் தயங்கினாள், பூர்ணா.
அப்போது, அங்கு, கடந்து போன ஒரு பையனை நிறுத்தினாள்.
'வீரா, இவங்க, 'ராகிங்' பத்தி பத்திரிகைல எழுத வந்திருக்காங்க. கூட்டிட்டுப்போயேன்,' என்றாள், பூர்ணா.
வீரா ஒல்லியாக உயரமாக இருந்தான். உதட்டுச் சுழிப்பில் மெல்லிய வில்லத்தனம் இருந்தது.
'ராகிங் பத்தி என்ன தெரியனும் உங்களுக்கு?' என்று, தீபாவிடம் கேட்டான், வீரா,
'புதுசா வர்ற மாணவர்களை யார், யார் எப்படியெப்படி, 'ட்ரீட்' பண்ணுவீங்க உங்க அனுபவம், இன்னும் சில பேரோட அனுபவம் எல்லாம் வேணும்,' என்றான்.
'பூர்ணா, நம்ம ப்ரெண்ட்ஸையும் கூட்டிட்டு வாயேன்,' என்றான், வீரா.
சுற்றிலும் பார்வையை ஒட்டினாள், தீபா. குறுக்கும் நெடுக்குமாக மாணவர்கள் விரைந்து கொண்டிருந்தனர்.
பல கல்லுாரிகளிலிருந்து மாணவர்கள் வந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகள் அள்ளிச் செல்லும் இப்படியொரு சங்கமத்தில் தானே, திலகனை முதன் முதலில் சந்தித்தேன்...' அந்த நினைவு வந்ததும் அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.
உடனே, திலகனுடன் பேச வேண்டும் என்று தோன்றியது. போன் செய்தாள். தீபா. ஆச்சரியமாக எடுத்தான்.
'திலக். எப்ப பண்ணாலும், போனே எடுக்க மாட்டேங்கற?” என. கேட்டாள்.
'தீபா... இப்படி குற்றப்பத்திரிகை படிக்கத்தான் போன் பண்ணியா?' என்றான், திலகன்.
அதிர்ந்தாள், தீபா. இனிமையான நினைவுகளை அவனுடன் அரை போடலாம் என்று நினைத்தால், இப்படி பொசுக்கென்று அதற்கு நெருப்பு வைத்து விட்டானே!
அவள் கண்கள் ஈரமாயின.
'நான் சும்மா இல்ல, தீபா. பிசியா இருக்கேன். ஏதாவது முக்கியமா இருந்தா மட்டும் சொல்லு, என்றான்.
'கெட்லாஸ்ட்,' என்று தொடர்பைத் துண்டித்தாள், தீபா.
'போலாமா, மிஸ்?' என்று தோளருகே குரல் கேட்டதும், திடுக்கிட்டு திரும்பினாள்,
அவள் உடல் மெலிதாக நடுங்க துவங்கியது. வீராவுடன் இன்னும் இரண்டு மாணவர்களும், பூர்ணாவும் தின்றிருந்தனர்.
'இவங்க எல்லாம், 'சீனியர்ஸ்!' இந்த வருஷத்தோட காலேஜை விட்டுப் போறாங்க,' என்றான், வீரா.
'அக்கா, இங்க ஒரே சத்தமா இருக்கு. தொந்தரவு இல்லாம பேசணும்ன்னா, நாம பக்கத்துல, 'ஹாஸ்டல் கேம்பஸ்'க்கு போயிடுவோம்.' என்றாள். பூர்ணா,
கல்லுாரியுடன் கோபித்துக் கொண்டது போல் சற்றுத் தள்ளி எதிர் திசை பார்த்து இருந்தது, கல்லுாரி விடுதி, மரங்களும், அவற்றில் குடியிருந்த பட்சிகளும் தவிர அங்கு யாரும் இல்லை.
'சீக்கிரம் வாங்கடா...' என்று யாரிடமோ போனில் பேசினான், வீரா.
எங்கிருந்தோ இன்னும், இரண்டு மாணவர்கள் பைக்கில் வந்து சேர்ந்து கொண்டனர்.
அவர்களிடமிருந்து மெலிதான மது வாசம் வந்தது.
அவளை விட உயரமான மாணவர்கள் புடை சூழ அங்கே நுழைந்தபோது, தீபாவுக்கு சற்று அச்சமாக இருந்தது.
“வாட்ச்மேன், வார்டன் யாரும் இல்லியா?' என்றாள், தீபா.
'கலைநிகழ்ச்சி நடக்குதில்ல? அங்க போயிட்டாங்க,' என்றான் அவர்களில், ஒரு மாணவன்.
'இப்படியே, கேட்சிட்ட நின்னு பேசுவோமே.' என்றாள், தீபா.
'இல்லக்கா, அதோ அந்த மரத்துகிட்ட போயிடலாம்,' என்று சொன்னான், வீரா.
எல்லாரும் மரத்தடிக்கு போனதும், அவர்கள் அவளை சூழ்ந்து நின்றனர்.
'ராகிங் எப்படி பண்ணுவோம்ன்னு கேட்டீங்க இல்ல? இப்ப நீங்க தான் புதுஸ்டூடன்ட்னு வெச்சுப்போம். 'ராகிங்' ஆரம்பிப்போமா?' என்றபடி பைக்கில் வந்த பையன் இன்னும் நெருக்கத்தில் வந்தான்.
'எனக்கு பாக்கக் கஷ்டமா இருக்கும். நான் கண்ணை மூடிக்கறேன்பா.' என்று சற்று தள்ளி திரும்பி நின்றாள் பூர்ணா.
தீபாவின் எலும்புகள் உள்ளே நடுங்கின.
தொடரும்.
- சுபா

