sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தீபாராதனா! (6)

/

தீபாராதனா! (6)

தீபாராதனா! (6)

தீபாராதனா! (6)


PUBLISHED ON : நவ 09, 2025

Google News

PUBLISHED ON : நவ 09, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: தீ பாவின் அப்பா, திடீரென இறந்துவிட, தீபாவும், அவள் அம்மா மஞ்சுளாவும் நிலைக்குலைந்து போயினர். அப்பாவின் முகத்தை கடைசியாக பார்ப்பதற்காக, ஆராதனா என்ற பெண்ணும், அவள் தம்பி வருணும் அங்கு வர, ஆத்திரமடைந்தாள், தீபா.

ஆராதனா மற்றும் வருண் பற்றியும், அவர்களுக்கும், ஞானசேகரனுக்கும் என்ன சம்பந்தம் என, அங்கிருந்த பலரும் பலவிதமாக பேசினர்.

ஞானசேகரன் கம்பெனியின் ஜெனரல் மேனேஜரான முத்துராமனிடம், தன் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பதற்காக, அவரை வீட்டிற்கு வர சொன்னாள், தீபா.

தன்னிடம் கூட கூறாமல், யாருடைய பேச்சையோ கேட்டு சட்டத்துக்கு புறம்பாக, போதை பொருளை கடத்த முயன்று, கஸ்டம்சில் சிக்கிக்கொண்ட தகவலை தெரிவித்தார், முத்துராமன்.


முத்துராமன் கைக்குட்டையால், முகம் துடைத்தார்.

''சொல்லுங்க அங்கிள்,'' என, பொறுமையின்றி துாண்டினாள், தீபா.

''போன வருஷ ஆயுதபூஜை நினைவிருக்காம்மா?'' என்று, மஞ்சுளாவைப் பார்த்து மெல்லக் கேட்டார்.

''நல்லா நினைவிருக்கு. 'நாம புதுசா, 'லெதர் ஜாக்கெட் இம்போர்ட்' பண்ணப்போறோம்ன்னு சொன்னாரு. அன்னிக்கு பூஜை போட்டு, விளக்கேத்தி வெச்சதே நான்தான? ஐயோ, அந்த, 'ஜெர்கின்ஸ், ஜாக்கெட்ல'யா இந்தக் கடத்தல் நடந்திருக்கு?'' என்றாள், மஞ்சுளா, கசப்பாக.

''ஆமாம்மா. கிட்டத்தட்ட ஒன்பது மாசமா கம்பெனி ஊழியர்களுக்கே தெரியாம, கள்ளத்தனமா இந்த வேலை நடந்திருக்கு. ரெண்டு, 'ட்ரிப்' சிக்கலில்லாம போயிருக்கு. ஆனா, அந்தப் பாவி, 'ப்ராமிஸ்' பண்ண பணம் மட்டும் அப்பா கைக்கு வரல. கேட்டிருக்காரு. 'அடுத்த, 'ட்ரிப்' இறக்குமதியாகற சரக்கை லோக்கலா வித்து அதைப் போல மூணு பங்கு பணம் எடுத்துக்கலாம்'ன்னு இன்னொரு கொக்கி போட்டு, அப்பாவை அவன் நம்ப வெச்சிட்டான். சார் கோடிக்கணக்குல பணத்தை வெளிநாட்டு கணக்குக்கு, 'டிரான்ஸ்பர்' பண்ணச் சொன்னபோது கூட அதுக்குப் பின்னால இப்படியொரு சதி இருக்கும்ன்னு எனக்குத் தெரியாது.''

தன் நகங்களைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தாள், தீபா.

''இந்த தடவை வெளிநாட்டுலேயே நம்ம கன்டெய்னர், கஸ்டம்ஸ்ல சிக்கிருச்சும்மா. அப்பதான் சார் என்னைக் கூப்பிட்டு விஷயத்தையே உடைச்சாரு. நாம அனுப்பின பணமும் வராது. சரக்கும் வராது. கேஸ் முடியற வரைக்கும் அத்தனை கன்டெய்னரும் வராது. சட்டத்துக்கு எதிரா நடந்துக்கிட்டதால, 'இன்ஷூரன்ஸ்'லயும் ஒரு காசு கேக்க முடியாது. ரெக்கார்ட்ஸ்லாம் மாத்தி, சார் பேரு அடிபடாம இருக்க, அவர், 'அரெஸ்ட்' ஆகாம இருக்க, 12 கோடி ரூபாய்க்கு மேல செலவாச்சு. அரசியல்வாதிக்கும், அதிகாரிகளுக்கும் அழ வேண்டியிருந்துச்சு.''

''ஆக மொத்தம், நம்ம பிசினஸ் மொத்தமும் கவுந்துருச்சுன்னு சொல்றீங்களா?''

''சாரும், நானும் ராப்பகலா உழைச்சு உருவாக்கின கம்பெனிம்மா அது. என் வாயால அப்படிச் சொல்ல மாட்டேன்,'' என்று கூறி, கண்கள் கலங்கி தலை குனிந்து கொண்டார், முத்துராமன்.

''லெதர் ஜாக்கெட் பிசினஸ்ல ஏற்கனவே ஈடுபட்டிருந்த முதலைங்களுக்கெல்லாம், ஞானசேகரனும் போட்டில எறங்கினது கொஞ்சம் கூடப் பிடிக்கலை. சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தாங்க. அவங்க தான் கஸ்டம்ஸ்க்குப் போட்டுக் கொடுத்து ஒரே நிமிஷத்துல நம்மள ஒண்ணுமில்லாம ஆக்கிட்டாங்க.''

''மத்தவங்களைக் குறை சொல்லாதீங்க. அப்பாவுக்கு எங்கே போச்சு புத்தி?'' என்று குமுறினாள், தீபா.

''எல்லாம், அந்த சின்ன வீட்டு, 'ஐடியா'வாயிருக்கும்,'' என்றாள், மஞ்சுளா, மூக்கு விடைக்க.

''சரி, இப்ப என்னதான் நிலைமை?''

''ஒரு ரெண்டு நாள் நேரம் கொடுங்கம்மா. நான் ஆடிட்டர்கிட்டயும், 'லீகல் டிபார்ட்மென்ட்'லயும் பேசிட்டு வந்து, உங்களுக்குத் தெளிவா சொல்றேன்.''

ஒ ரு பக்கம் மகிழ்ச்சி, ஒரு பக்கம் கலக்கம் என்று, திலகன் கலவையான மனநிலையில் இருந்தான்.

அன்றைக்கு அவன் சந்தித்த அந்த மும்பை தொழிலதிபர் பங்குகொண்ட சிறப்பு வகுப்பு முடிந்ததும், அவன் பெயரைக் குறிப்பிட்டு அவர் ஆங்கிலத்தில், 'பையா, நீ நிறைய சிந்திக்கிறாய். நறுக்குத் தெறித்தாற்போல் கேள்வி கேட்கிறாய். வணிகத்தில், புதிய மாற்று யோசனைகளைச் சொல்கிறாய். உனக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. பட்டமளிப்பு முடிந்ததும், என் நிறுவனத்துக்கு மறக்காமல் விண்ணப்பித்துவிடு...' அவருடைய கம்பெனியில், 'மேனேஜ்மென்ட் ட்ரெய்னி'யாகப் போய்ச் சேர்வதைவிட, தீபாவின் கம்பெனியில் மிக உயர்ந்த பொறுப்பில் அவன் நேரடியாகச் சேர இருப்பதை அவரிடம் அவன் பகிர்ந்துகொள்ளவில்லை.

மாலையிலிருந்து அவன் பலமுறை முயற்சி செய்தும், தீபா போனை எடுக்காதது அந்த மகிழ்ச்சியை அழுத்தும் கலக்கமாயிருந்தது. மறுநாள் விடியலிலேயே அவளைப் போய்ப் பார்த்துவிடுவது என்று முடிவு செய்தான்.

காலை நேர இளம்வெயில் பூக்களையும், இலைகளையும் தலை கோதிக்கொண்டிருக்க, பட்டாம் பூச்சிகள் சுறுசுறுப்பாயிருந்தன. தோட்டத்தில் திக்பிரமை பிடித்தவள்போல் அமர்ந்திருந்தாள், தீபா. அவளுக்குத் தெரிந்த ஞானசேகரன் மென்மையானவர். அன்பானவர், நேர்மையானவர், குடும்பத்தின் பேரில் அபாரமான பாசம் வைத்திருப்பவர். ஆனால், இப்போது தெரிய வருகிற அப்பாவிற்கு எத்தனை இருட்டான பக்கங்கள்!

மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள், தீபா.

வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, செடியிலிருந்து ஒரு ரோஜாவைப் பறித்துக்கொண்டு, நேரே அவளிடம் வந்து மண்டியிட்டான், திலகன்.

''சாரி, தீபு. நேத்து நான் தவிர்க்க முடியாத ஒரு கிளாஸ் இருந்தது,'' என்றான், திலகன்.

''ஆனா, நான் கூப்புட்டா மிஸ் பண்ணலாம் தானே.'' என்றாள் தீபா.

''கோபமாப் பேசறே. தீபா கூப்பிட்டதை மட்டுமல்ல, தீபாவையே மிஸ் பண்ணேன். என்ன பரிகாரம் பண்ணனும்ன்னு சொல்லு. கிணறு எங்கன்னு சொல்லு. குதிக்கறேன்.''

''ஐயா, நம்ம தோட்டத்துல கிணறு இல்ல. போர்வெல் தான்,'' என்று செடிக்குப் பின்னாலிருந்து பதில் வந்ததும், அவளறியாமல் புன்னகைத்தாள், தீபா.

''வா, ஒரு சின்ன, 'வாக்' போலாம்,'' என்று அவள் நடக்க, கூடவே ஆட்டுக்குட்டிபோல் தொடர்ந்தான், திலகன்.

''அந்தப் பொண்ணு அப்புறம் வந்து கலாட்டா பண்ணலியே?'' என்று கேட்டான்.

''அவளைப் பத்தி தான் உன்கிட்ட பேசணும்ன்னு நெனச்சேன், திலக். அவ பேரு மட்டும் தான் நமக்குத் தெரியும். அவ இந்த ஊரா, வெளியூரா, அவங்கம்மா பேரு என்ன, அவங்க வீடு எங்க இருக்கு, அவ படிக்கறாளா, வேலைக்குப் போறாளா, ஒண்ணுமே கேட்டுக்காம அவசரப்பட்டு தொரத்திட்டோம்.''

''முத்துராமன் சாருக்குத் தெரிஞ்சிருக்கலாம்.''

''கேட்டாச்சு. அவருக்கும் தெரியல.''

''கவலைப்படாத. அவளே தேடி வருவா. சொத்துல பங்கு கேட்டுக்கிட்டு எப்படியும் வந்து நிப்பா. அப்ப ஆதார்லேர்ந்து எல்லாம் வாங்கிடலாம்.''

''நோ ஜோக்ஸ் ப்ளீஸ். அவ வர வரைக்கும், 'வெயிட்' பண்ண எனக்கு இஷ்டமில்ல. அவளைப் பத்தி நாம கண்டுபிடிக்க முடியாதா?''

''அவ வந்த ஆட்டோ நம்பரைக்கூட நான் கவனிக்கல. எப்படி அவளைத் தேடறது?''

''வாட்?''

''அந்த ஆராதனாவைக் கண்டுபிடிக் கணும்ன்னு தான சொல்லிட்டிருந்தே?''

''யெஸ், யெஸ்''

''அவ தம்பி ஸ்கூலா, காலேஜா கேட்டுக்கல. அவ வந்த வண்டி நம்பர்கூட கவனிக்கலன்னு சொல்லிட்டிருந்தேன்.''

''எப்படி, என்னன்னு நான் சொல்லப் போறதில்ல. நீதான் கண்டுபிடிக்கணும், திலக். ரெண்டே நாள் தான். ஐ வான்ட் ரிசல்ட்ஸ்''

நடக்காமல் நின்றான், திலகன்.

''இதென்ன அநியாயமா இருக்கு?''

''நீ எம்.பி.ஏ., எந்தப் பிரச்னைக்கும் தீர்வு இருக்கணும்,'' என, அழுத்தமாகச் சொன்னாள், தீபா.

''தீபா ஷிப்பிங் ஏஜன்சீஸ் முதலாளி சொல்லும்போது தட்ட முடியுமா?''

மற்ற நேரமாயிருந்தால், அந்த பதிலை ரசித்திருப்பாள், தீபா. இப்போது எதுவும் சொல்லாமல் அவனுடன் கையைக் கோர்த்துக்கொண்டாள்.

'இ ரண்டு நாட்கள் என்று சொல்லி விட்டாளே...' என்று மும்முரமாக யோசித்தான், திலகன்.

ஆராதனாவும், வருணும் உண்மையிலேயே ஞானசேகரனின் மரணத்தில் ஆடிப்போயிருந்தால், அவர்களும் தங்கள் மனப்பூர்வமான அஞ்சலியை செலுத்தியிருக்க வேண்டுமே. தீபாவைப் போலவோ, அவர்களுடைய கம்பெனியைப் போலவோ பெரும் செலவு செய்திருக்க மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டான். நுாலகம் சென்றான். முந்தின மூன்று நாட்களில் வெளிவந்த நாளிதழ்களை ஆராய்ந்தான்.

அதிர்ஷ்டம் அவன் பக்கம் இருந்தது.

ஒரு தமிழ் நாளிதழில், வரி விளம்பரப் பகுதிகளில், 'கண்ணீர் அஞ்சலி' என்ற பகுதியில் அவன் கண்கள் விரிந்தன.

உங்கள் பிரிவு கடும் சுமையாய் நெஞ்சில் கனக்கிறது. ஆனால், வானைப் பிரிந்த நட்சத்திரங்களாகப் பொசுங்கிப் போகாமல், வானைப் பிரிந்த மேகங்களாக பூமியை நனைப்போம் என்று உறுதியெடுக்கிறோம்

- ஆராதனா, வருண்


நுாலகரின் அனுமதியுடன் அந்தத் தாளை மட்டும் எடுத்துக்கொண்டான்.

நாளிதழ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டான்.

அண்ணா நகரில் ஒரு விளம்பர ஏஜன்சி மூலம் கொடுக்கப்பட்ட அஞ்சலி செய்தி என்று கேட்டறிந்து, அங்கே நேரில் போய் நின்றான்.

''வாடிக்கையாளர் முகவரிலாம் தர முடியாது, சார்,'' என்று கீச் குரலில் ஓர் உதவியாளரின் பதில் கிடைத்தது.

''கம்பெனில அவங்களுக்கு நன்றிக் கடிதமும், இறந்தவர் குடும்பத்துலேர்ந்து ஒரு நினைவுப் பொக்கிஷமும் அனுப்பத்தான் கேக்கறேன். என் ஆதார் நம்பர் வேணும்னாலும் குறிச்சுக்குங்க. பிரச்னை வந்தா, போலீஸ்ல கொடுங்க,'' என்று அடாவடித்தனமாகப் பேசி, நம்ப வைத்தான், திலகன்.

'வருண், அறை எண்: 42, கஸ்துாரிபா காலேஜ் ஹாஸ்டல்' என்ற முகவரி கிடைத்தது.

தெருமுனை திரும்பியதும், பைக்கை நிறுத்தி, தீபாவுக்கு போன் செய்தான்.

அவள் துண்டித்தாள். மறுபடி போன் செய்தான். துண்டித்தாள்.

'ஏய், என்னடி ஆச்சு உனக்கு? எவ்வளவு பெரிய விபரத்தோடு காத்திருக்கிறேன், போனை எடு, தீபு' என்று குறுஞ்செய்தி அனுப்பி, மீண்டும் அழைத்தான்.

எடுத்தாள். ''கட் பண்ணா, புரிஞ்சுக்க மாட்டே?'' என்று, கனலாக அவள் குரல் வந்தது.

''ஆராதனா பத்தி விசாரிக்கச் சொல்லியிருந்தியே,'' என்று அவன் வாக்கியத்தை முடிக்கும் முன்னரே, எதிர்முனையிலிருந்து வெடித்தாள்:

''ஒரு மண்ணும் வேண்டாம். வை போனை!'' தொடர்பு துண்டிக்கப்பட்டது.



- தொடரும்- சுபா






      Dinamalar
      Follow us