
ஜி.பி.அஜித், சென்னை: நாம் கண்டுபிடித்த இட்லியையும், சாம்பாரையும் ஆங்கிலேயர்கள் அதே பெயரில் அழைக்கின்றனர். அவர்கள் கண்டுபிடித்த கார் முதல் கம்ப்யூட்டர் வரைக்குமான சகல பொருட்களுக்கும் தமிழில் பெயர் வைத்து அழைப்பது சரியா?
சரியில்லை. காபியை, குழம்பி என்றும், ஐஸ்கிரீமை, பனிக்கூழ் என்றும் எழுதினால், மக்கள் குழம்பித் தான் போவர்!
ஷம்மு, திண்டுக்கல்: ' கடந்த ஒரு மாத காலமாக, பருவமழையிலிருந்து மக்களை காக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்...' என்று, அமைச்சர் துரைமுருகன் கூறுகிறாரே...
ஓஹோ... ஒரு மாதமாகத்தானா? அதனால் தான், துரைமுருகனின் மாவட்டமே தண்ணீரில் மிதந்தது; நெல்மணிகள் அனைத்தும் கொள்முதல் செய்யாமலேயே முளைத்து விட்டன; சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மாறிவிட்டன போலும்!
எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்: எதற்கெல்லாமோ கோடிகளில் செலவு செய்யும் அரசு, நெல் கொள்முதல் செய்யும் இடங்களில், நெல்லை மழை நீரில் நனையாமல் பாதுகாக்க, எது தடுத்தது? அரசிடம் பணமில்லையா, மனமில்லையா?
சம்பந்தப்பட்ட அமைச்சரவையில், இப்பிரச்னையை கவனிக்க அமைச்சருக்கும் தெரியவில்லை; அதிகாரிகளுக்கும் புரியவில்லை. பிரச்னை ஏற்பட்டவுடன், அதை உடனடியாக கவனிக்காமல், 'எங்கள் ஆட்சியில் நெல் மூட்டைகளில் ஒரு செ.மீ., தான் நாற்று முளைத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் பெரிதாக முளைத்தது...' என்ற சப்பைக்கட்டு கட்டிய அமைச்சரும்... 'கடந்த ஆட்சியில், அக்டோபரில் தான் கொள்முதல் ஆரம்பித்தனர்; நாங்கள் செப்டம்பரிலேயே ஆரம்பித்து விட்டோம்...' என்ற, முதல்வரின் பொறுப்பற்ற பேச்சும்... அவதிப்படுவது யார், விவசாயிகளும், குடோன் உரிமையாளர்களும், நெல் அரவை உரிமையாளர்களும் தான்!
டி.ரவீந்திரன், சென்னை: துாய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்க, அரசு ஆணையிட்டுள்ளதே...
துாய்மைப் பணியாளர்கள் கேட்ட எந்த கோரிக்கையையும் ஏற்காமல், அவர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கி, சோற்றால் அடிக்கப் பார்க்கிறது, தமிழக அரசு. இவர்களின் ஜம்பம் ஓட்டாக மாறுமா என்று, பொறுத்திருந்து பார்ப்போம்!
* நடேஷ் கண்ணா, கல்லிடைக்குறிச்சி: தன் மகளை தர்மபுரியில் களம் இறக்க, பா.ம.க., ராமதாஸ் முடிவு செய்து இருப்பது பற்றி...
பாட்டாளி மக்கள் கட்சியாக இருந்தது, தற்போது, பாட்டாளி மகள் கட்சியாக மாறி விட்டது. ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தியும், 'ஒற்றைத் தலைமையாக ராமதாஸ் இருக்கும் வரை, நமக்கு தோல்வி இல்லை; ராமதாஸ் என்ற நெஞ்சுரத்தோடு வீறுநடை போடுவோம்...' என, வசனம் பேசுகிறார். இந்த வீரம், ஓட்டுகளைப் பெற்றுத் தருமா என்பதை பார்க்கத்தான் போகிறோமே!
மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காலாவதியான பழைய வாகனங்களை நீக்கும் திட்டம், தமிழகத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறித்து...
நல்ல திட்டம். காயலான் கடைக்குப் போக வேண்டிய வண்டிகள், இனி சாலையில் ஓடாது என்று நம்பலாம். காற்று மாசு குறையவும், விபத்துகள் குறையவும் இது சிறந்த வழி!
* எம்.சுப்பையா, கோவை: ம.பி., மாநிலம், மண்ட்லா மாவட்டத்தில், பள்ளி சீருடையுடன் மதுக்கடைக்குச் சென்று, மது பாட்டில்களை மாணவியர் வாங்கிய, சமூக வலைதளத்தில் பரவிய வீடியோ குறித்து...
மிக அதிர்ச்சி அளிக்கும் விஷயம். நம் நாட்டின் எதிர்காலமான மாணவ சமுதாயம், இப்படி சீரழிந்து போவது, மிகவும் கவலையளிக்கிறது. ம.பி.,யில் மட்டுமல்லாமல், 'சரக்கு' சப்ளையாகும் அனைத்து மாநிலங்களிலும் இதே கதி தான். அத்தோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும் சர்வ சாதாரண புழக்கத்திற்கு வந்து விட்டன!
பா.ஜெயகுமார், வந்தவாசி: இந்த மழைக் காலத்துக்கு ஏற்றவாறு, லென்ஸ் மாமா, எந்த, உ.பா., விரும்பி அருந்துவார்?
மழையோ, வெயிலோ... இங்கிலாந்தில் தயாரிக்கப்படும், 'ஜானி வாக்கர் - பிளாக் லேபிள்' சரக்கு தான், லென்ஸ் மாமாவுக்கு துணை. அதை, 'அங்கிள் ஜானி' என, செல்லமாக அழைப்பார். 'அங்கிள் ஜானி தான் என்னை பாசமுடன் பார்த்துக் கொள்கிறார்...' என்பார்!

