
பா - கே
பா .கே.ப., மற்றும் கேள்வி - பதில் பகுதியின் தீவிர வாசகி அவர். வயது, 40 ப்ளஸ் இருக்கும். பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர். காதல் திருமணம் செய்து, மகள் பிறந்ததும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரை விவாகரத்து செய்து விட்டார். பெற்றோரின் அனுமதியுடன், தன் வீட்டு மாடியில், கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். அவ்வப்போது, அலுவலகம் வந்து, என்னை சந்திப்பார். மிகவும் புத்திசாலியான அவர், கம்ப்யூட்டர் நாலேட்ஜ் உள்ளவர். 'வெப்-சைட்டு'களில் தான் படித்த சுவையான தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். சமீபத்தில், என்னை சந்திக்க வந்திருந்தார். 'எப்படி போகிறது பயிற்சி நிறுவனம்? உங்கள் மகள் படிப்பை முடித்து விட்டாரா?' என்றேன். 'ஆரம்பத்தில் இருந்ததை விட, இப்போது கூடுதலாக கம்ப்யூட்டர்கள் வாங்கியுள்ளேன். மாணவர்கள் தவிர, நிறைய இல்லத்தரசிகள் கம்ப்யூட்டர் பயிற்சி பெற ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு பயிற்சி எடுத்து, வீட்டிலிருந்தே பல நிறுவனங்களுக்கு, 'டேட்டா என்ட்ரி' மற்றும் 'புராஜெக்ட் ஒர்க்' செய்து கொடுத்து நிறைவாக சம்பாதித்து, குடும்பத்திலும், சமூகத்திலும் கவுரவமாக வாழ்கின்றனர்...' என்றார். வழக்கம் போல், இப்போதும் தான் 'வெப்-சைட்'டில் படித்த, ஆய்வு கட்டுரை ஒன்றை, 'பிரின்ட்' எடுத்து வந்திருந்தார். பாட்டிலில் அடைத்து விற்கும், மினரல் வாட்டர் பற்றிய ஆய்வு கட்டுரை அது. அதிலிருந்த தகவல்களின் சுருக்கம் இது:
கடந்த, 1622ல், புனித கிணறு ஒன்றிலிருந்து தண்ணீரை பாட்டிலில் அடைத்து வழங்கும் முறை, பிரிட்டனில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த, 18ம் நுாற்றாண்டில், ஐரோப்பா மற்றும் அமெரிக்க மக்களிடையே, 'ஸ்பா' எனப்படும் கனிம நீர் சிகிச்சை முறை புகழ்பெற ஆரம்பித்தது. இது, பாட்டில் நீர் தேவையை அதிகரிக்க வைத்தது.
இங்கிலாந்தின், முக்கிய துறைமுக நகரான பிரிஸ்டலில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில், நாட்வெல் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள கனிம நீர் ஊற்றிலிருந்து எடுக்கப்பட்ட நீர், பிரிஸ்டல் வாட்டர் என, பெயர் சூட்டப்பட்டு விற்பனைக்கு வந்தது. இதுவே முதல், வியாபார குடிநீர்.
கனிம நீர் என்பது, உப்புகள் மற்றும் கந்தக சேர்மங்கள் கலந்த கனிம ஊற்றிலிருந்து எடுக்கப்படுவது.
இன்று உலகளவில், நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பிராண்டுகளில் தண்ணீர் பாட்டில் விற்பனைக்கு வருகிறது.
இந்தியாவின் பிரபலமான தண்ணீர் பாட்டில், 'பிஸ்லேரி!'
கடந்த, 1970ல், ரமேஷ் சவுகான் என்பவரால் தொடங்கப்பட்டது.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி பயன்படுத்தும் மினரல் வாட்டர் பாட்டில் எது தெரியுமா?
'எவியன் நேச்சுரல் ஸ்பிரிங் வாட்டர்!' 1 லிட்டர் பாட்டிலின் விலை, 4 ஆயிரம் ரூபாய் என்றும், 600 ரூபாய் என்றும் கூறுகின்றனர். எது உண்மை என்று தெரியவில்லை.
உலகின் சில மிக விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் பிராண்டுகளின் பெயர்களையும், அவற்றின் விலையையும் கேட்டால், அதிர்ச்சி அடைவீர். அவை:
ஸ்வால் பார்ட்டி!
வட துருவத்திற்கு அருகில் உள்ள, 'ஸ்வாலபார்ட்' எனப்படும் இடத்தை சுற்றியுள்ள கடல் பள்ளத்தாக்குகளில், உருகும் பனிப்பாறைகளிலிருந்து சேகரிக்கப்படுகிறது. இது, மிகவும் துாய்மையான நீர். இது ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டுமே சேகரிக்கப்படும். ஒவ்வொரு துளியையும் ரசித்து, ருசித்து குடிக்க வேண்டும். 750 மில்லி அளவு பாட்டிலின் விலை, 9 ஆயிரம் ரூபாய்.
இதில், 'கலெக்ட்ஸ் கெட்' பதிப்பு என, ஒன்று உண்டு. 1 லிட்டர் பாட்டிலின் விலை, 5 லட்சத்து, 52 ஆயிரம் ரூபாய்.
பிலிக்கோப்ளாக்கிங்!
தண்ணீரை விட, அதை அடைத்து வைக்கும் பாட்டிலுக்கு பல சிறப்புகள் உண்டு. இது, தங்கம் பதிக்கப்பட்ட கண்ணாடி கொள்கலன்கள் மற்றும் உறுதியான பனிப்பாறை படிகங்களால் ஆனது. விலை உயர்ந்த வாசனை திரவியம் பாட்டில் அல்லது சிறந்த மதுபான பாட்டில்களைப் போல வடிவமைக்கப்பட்டது. இப்பாட்டில்களை பரிசளிக்கவும், காட்சிப்படுத்தவும் வாங்குவர். ஒரு பாட்டிலின் விலை, 3 லட்சம் ரூபாய்.
பிலிங் ஹெச்20 கிளியர் ப்ளூ!
பிலிங் என்ற வார்த்தைக்கு மதிப்பு என்று அர்த்தம். கிரிஸ்டல் படிகங்களால் செய்யப்படும் பாட்டில். இதுவும் சேகரிப்பாளர், 'கலெக்ஷன்' தான். மற்றும் 'பப்' கலாசார பிரியர்களால் மிகவும் விரும்பப்படுவது. இது, திரவ பேஷன் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் விலை, 750 மில்லி அளவுள்ள பாட்டிலின் விலை, 2 லட்சத்து 26 ஆயிரத்து 800 ரூபாய்.
எவியன் ஜீன்பால் கோல்டியார்!
இது , இரண்டு பிராண்டுகளின் கூட்டு. 1 லிட்டர், 36 ஆயிரம் ரூபாய்.
நெவாஸ் வாட்டர் அப்போரோ!
நெவாஸ் - ஜெர்மனி நாட்டின் இரண்டு நீருற்றுகளின் கலவை. இதை, 'தண்ணீர்களின் ஷாம்பெயின்' என செல்லமாக அழைப்பர்.
பெரும்பாலும், ஆடம்பர நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும். சிறப்பான டிசைன் கொண்ட, 1.5 லிட்டர் பாட்டிலின் விலை, 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்.
ஆப்சோ!
இந்த, நீர் உலகின் மிகவும் துாய்மையானது. மனிதர்கள் கால்படாத தொலைதுார நிலப்பரப்புகளில் ஒன்றான, படகோனியா என்ற இடத்திலிருந்து கொண்டு வரப்படுவது. 750 மில்லி பாட்டிலின் விலை, 11 ஆயிரத்து 760 ரூபாய்.
ஒசுயிஸி!
சுவிட்சர்லாந்தின் ஆல்பைன் மலையிலுள்ள, மிருதுவான நீருற்றுகள். சுண்ணாம்பு பாறைகளின் இடுக்கு வழியாக மெதுவாக வடிந்து வரும் இயற்கையான பனி உருகலில் இருந்து உருவாவது. ஒரு லிட்டர் பாட்டிலின் விலை, 36 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்.
மைனஸ் 181!
ஜெர்மனியில், 181 மீட்டர் உயரத்திலுள்ள நீரூற்றுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதன் விலை, 1 லிட்டர், 4 ஆயிரம் ரூபாய்.
ஆர்.ஒ.ஐ.,!
ஸ்லோவேனியா நாட்டில் கிடைக்கும் இந்த மினரல் தண்ணீரில், மற்ற தண்ணீரில் உள்ளதை விட, மெக்னீஷியம் அதிகம். நீர் சிகிச்சை மற்றும் கவுரவத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு லிட்டர், 5 ஆயிரம் ரூபாய்.
கிரிஸ்டல் கோர்ஸ்!
அமெரிக்காவில், நீர் ஊற்றுகளில் படிகங்கள் காணப்படும். அவை ரத்தின கற்கள் போல் ஜொலிக்கும். இந்த நீருற்றிலிருந்து, நேரிடையாக பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கின்றனர். இதன் விலை, 25 லிட்டர், 11 ஆயிரத்து 600 ரூபாய்.
படித்து முடித்ததும், 'அம்மாடியோவ் தண்ணீருக்கு இவ்வளவு விலையா!' என்று வியந்தேன்.

