தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/இளவேனிற்காலம்!

இளவேனிற்காலம்!

இளவேனிற்காலம்!

1


PUBLISHED ON : மே 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 03, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேனிற்காலத்தில் காலை நேரம், தீபாவிற்கு பிடித்தமான ஒன்று. வாசல் தெளித்து கோலமிட்ட பின், பில்டர் காபியை கலந்து எடுத்து வந்து, வாசலில் அமர்ந்து, துளித்துளியாக காபியை அருந்தும் போது, ஒரு குளிர் தென்றல் அவளை சுற்றி வீசும். அது ஒரு சுகானுபவம். அன்றும், அந்த இளம் காலை வேளை தென்றலை அனுபவித்தபடி அமர்ந்திருந்தவள், வாசலில் டாக்சி வந்து நிற்பதை பார்த்து, 'யார் இந்த நேரத்தில்...' என, சற்று குழப்பத்துடன் பார்த்தாள்.

டாக்ஸியிலிருந்து இறங்கியவள், அவள் நாத்தனார், ஊர்மிளா. பெட்டியை நங்கென வாசல் படியில் வைத்தவள், டாக்ஸிக்கு பணம் கொடுத்து அனுப்பினாள். நாத்தனாரை பார்த்தவுடன் வேகமாக எழுந்து வந்து, ''வாங்க அண்ணி...'' என, வரவேற்றாள், தீபா.

வாசலில் இருந்த அழகான கோலத்தையும், அவள் கையில் காப்பி டம்ளரையும் பார்த்த ஊர்மிளா, ''இவ்வளவு காலையிலேயே எழுந்திருச்சுடுவியா?'' என்றாள் ஆச்சரியமாக.

''ஆமாங்க அண்ணி, 6:00 மணி ஆகப்போகுதே,'' என்றாள், தீபா.

''திவா, எழுந்திருச்சிட்டானா,'' என, தன் தம்பியை குறித்து கேட்டாள், ஊர்மிளா.

''இல்லை அண்ணி, அவர் எழ இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்,'' என்ற, தீபாவின் பதிலை காதில் வாங்காமல், வேகமாக தன் பெட்டியை இழுத்துக் கொண்டு வீட்டினுள் சென்று, ஹால் சோபாவில் பொத்தென அமர்ந்தாள், ஊர்மிளா. நாத்தனார் கடுமையான கோபத்தில் இருக்கிறாள் என்பது மட்டும், தீபாவுக்கு நன்கு புரிந்தது.

பேச்சு குரல் கேட்டு அங்கு வந்த, ஊர்மிளாவின் அம்மா சந்திரிகா, ''ஏய் ஊர்மி, என்ன திடீர்ன்னு ஒரு போன் கூட செய்யல. மாப்பிள்ளையும், குழந்தையும் எங்கடி. கார்ல வந்தீங்களா?'' என, கேள்விகளாக அடுக்கினாள். பதில் எதுவும் கூறாமல், தன் அம்மாவின் அருகில் வந்த, ஊர்மிளா, சந்திரிகாவை அணைத்துக் கொண்டு, ''ஐ மிஸ் யூ மா,'' என்று விம்மினாள்.

மகளின் கண்ணீரைப் பார்த்து உருகிப்போன, சந்திரிகா, ''ஏன் தங்கம் என்ன ஆச்சு?'' என்று, அவள் தலையை பாசமுடன் தடவினாள்.

தி ருமணம் முடிந்து, ஆறு ஆண்டுகள் கழித்தே அவர்களுக்கு, ஊர்மிளா பிறந்ததால், பெற்றோருக்கு அவள் செல்லப்பெண். பெற்றோர் வழங்கிய அதீத செல்லம், அவளை பிடிவாதக்காரியாக மாற்றி இருந்தது. வீட்டில் அவள் வைத்தது தான் சட்டம். திவாகரும், அக்காவின் மேல் உள்ள பாசத்தால், அவள் சொல்படி நடக்கும் நல்ல தம்பியாக இருந்தான். சந்திரிகா மட்டும், அவ்வப்போது தன் கணவரிடம், 'உங்கள் மகளுக்கு நீங்க ரொம்ப இடம் கொடுக்குறீங்க. கல்யாணம் பண்ணி போற இடத்துலேயும் இதே மாதிரி இவ இருந்தால், என்னைத்தான் குறை சொல்வாங்க...' என, மகளைப் பற்றி புகார் சொல்வாள்.

'அதெல்லாம் அவ, 'டீல்' பண்ணிக்குவா. என் மகள் ரொம்ப கெட்டிக்காரி. நீ, இதெல்லாம் பெருசு பண்ணாதே...' என்பார், அவள் கணவர்.

ஊர்மிளாவுக்கு வாய்த்த மாப்பிள்ளை வீடும், பெரிய அந்தஸ்தான இடம். ஒரு திருமணத்தில் அவளைப் பார்த்து பிடித்து போய் அவர்களாகவே பெண் கேட்டு வந்தனர். அவர்கள் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்ய தனித்தனியாக வேலை ஆட்கள் இருந்ததால், சற்று நிம்மதியானாள், சந்திரிகா. மணமான புதிதில் சின்ன சின்ன மனத்தாங்கல்கள், சச்சரவுகள் இருந்தாலும், ஊர்மிளாவின் சந்தோஷ வாழ்க்கைக்கு ஆதாரமாக ஒரு மகள் பிறந்ததும் அனைவரும் மகிழ்ந்தனர்.

'இ ப்போது என்ன பிரச்னையுடன் வந்திருக்கிறாள் என, தெரியவில்லையே...' என்று நினைத்த, சந்திரிகா, ஒரு நீண்ட பெருமூச்செறிந்தாள். திருமணமாகி, இந்த நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூட, ஊர்மிளா பிறந்த வீட்டுக்கு, அவள் தனியாக வந்ததே இல்லை. அது, அவளுக்கே வருத்தத்தை கொடுக்க, தன்னிரக்கத்தால் அவள் கண்களில் நீர் வழிந்தது.

மகளை, ஆதுாரத்துடன் அணைத்த, சந்திரிகா, அவளிடம், ''நீ முதல்ல காபி குடி. மிச்சமெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்,'' என்றாள், பாசத்துடன். காலை கடன்களை முடித்து டைனிங் ஹாலுக்கு வந்த, அவள் தம்பியும், அப்பாவும், ஊர்மிளாவை வரவேற்றனர்.

தீபா, காலை டிபனை பரிமாற அனைவரும் பேசாமல் சாப்பிட்டனர். பிரச்னை குறித்து, ஊர்மிளாவே சொல்லட்டும் என, அனைவரும் மவுனமாய் இருந்தனர். ஊர்மிளாவும் எதுவும் கூறாமல், தன் தம்பி மனைவி, தீபாவை கவனித்தாள். வீட்டில் சமையலுக்கு ஆள் இருந்தாலும், அவர்கள் உதவியுடன், தீபாவே சமையலை செய்தாள். ஏதாவது மாற்றங்கள் செய்ய நினைத்தால், தன் மாமியாரிடம் அதை செய்வதற்கு அனுமதி பெற்றுக் கொண்டாள்.

திவாகர் ஆபீஸ் கிளம்புவதற்குள், தீபா பலமுறை அவர்கள் அறைக்கு சென்று, அவனுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொடுத்துவிட்டு வந்தாள். 'இது என்ன பழக்கம். எல்லா ஆண்களுமே இப்படித்தானா. அவங்களுக்கு தேவையானதை அவங்களே செய்துக்க மாட்டாங்களா. எப்போதும் மனைவியை சார்ந்தே இருக்காங்களே...' என்று நினைத்த, ஊர்மிளாவுக்கு வெறுப்பானது.

தி வாகரும், அவள் தந்தையும் ஆபீஸுக்கு சென்ற பின், ஹால் சோபாவில் அமர்ந்து எதையோ யோசித்தபடி இருந்தாள், ஊர்மிளா.

அங்கு வந்த, சந்திரிகா, ''என்ன தங்கம் நீ, பேத்தி சஞ்சனாவை அங்கேயே விட்டுட்டு வந்துட்டியே! குட்டிமாக்கு வேளைக்கு சாப்பாடு கொடுக்கணும். உங்க மாமியாரால முடியுமா? நீயும், அவளை நினைச்சு கவலைப்பட்டுட்டே இருக்க,'' என்றாள், ஆதங்கத்துடன்.

''அவ, என் மகள்ன்னு சொன்னாரில்ல. அவரே பார்த்துக்கட்டும். அப்பதான் என் அருமை அவருக்கு தெரியும்,'' என்றாள் சிடுசிடுப்புடன், ஊர்மிளா.

''என்னதான் பிரச்னை உங்க ரெண்டு பேருக்குள்ள,'' என்ற சந்திரிகாவிடம், ''எல்லாமே பிரச்னை தான். நான் சொல்றதை யாராவது காது கொடுத்து கேட்டா தானே,'' என்று கூறி, எழுந்து தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள், ஊர்மிளா.

'என்ன இவ இப்படி இருக்கா...' என நினைத்து திகைத்தாள், சந்திரிகா. இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த, தீபா, ''அத்தை ப்ரீயா விடுங்க. நான் பார்த்துக்கிறேன்,'' என்றாள் மென்மையாக.

''வேணாம், தீபா. அவளுக்கு கோபம் வந்தா,'' என்று தயங்கியவரை, ''நான் கோபப்பட மாட்டேன் அத்தை,'' என, பதில் கூறியபடி சென்றாள், தீபா.

மெ லிதாக கதவு தட்டும் சத்தம் கேட்டு, ''கதவு திறந்து தான் இருக்குது,'' என்றாள், ஊர்மிளா. கதவை திறந்து, உள்ளே வந்த, தீபா மேடிட்ட வயிற்றுடன் தாய்மை பொலிவில் இருந்தாள்.

அவளைப் பார்த்த ஊர்மிளா, ''என்னோட பிரச்னையில உனக்கு, 'ஸ்வீட்' கூட வாங்காம வந்துட்டேன் பாரு. 'கன்சிவ்' ஆன உன்னை, இப்ப தான் பார்க்கிறேன்,'' என்றாள், குற்ற உணர்ச்சியுடன்.

''இன்னைக்கு வாங்கிட்டா போச்சு,'' என்று கூறிய, தீபா, ''என்ன அண்ணா, அவங்க அப்பா-அம்மா சொல்ற யோசனைப்படியே நடந்துக்கிறாரா,'' என்றாள் இயல்பாக.

பளிச்சென கண்கள் மின்ன, ''இதை எப்படி கண்டுபிடிச்ச,'' என்றாள் ஆச்சரிய குரலில், ஊர்மிளா.

''இது, 'யுனிவர்சல்!' எல்லா வீட்டிலும் நடக்கிறதுதான், அண்ணி,'' என்று கூறி சிரித்தாள், தீபா.

''ஏய், நீ நல்லா தப்பிச்சிக்கிற,'' என்றாள், பாராட்டும் குரலில், ஊர்மிளா.

''ஆமா அண்ணி, நான்,'கூகுள்'ல,'ரெவ்யூ' பார்த்து, ஒரு பிரபலமான, 'லேடி' டாக்டர்கிட்ட போய் காட்டலாம்ன்னு சொன்னா, உங்க தம்பி அம்மா சொல்ற அடுத்த தெருவில் இருக்கும், 'எக்ஸ்பீரியன்ஸ்ட்' டாக்டர்கிட்ட காண்பிக்கலாம்ன்னு சொல்லி, அங்க தான் என்னை கூட்டிட்டு போறாரு. இப்படி நிறைய விஷயங்கள்,'' என்றாள் சிரித்தபடி.

''அங்கேயும் இதே கதை தான். சஞ்சனாவுக்கு, நான் ஒரு நல்ல பெரிய ஸ்கூல்ல, 'அட்மிஷன்' போடலாம்ன்னு சொன்னா, அவங்க வீட்டுக்கு பக்கமாக இருக்கிற ஸ்கூல்ல போட்டுக்கலாம். தினம் அவ்வளவு துாரம், சஞ்சனா போயிட்டு வர முடியாதுங்குறாங்க. சரி நாம ஸ்கூலுக்கு பக்கமா குடி போகலாம்ன்னு சொன்னா, சொந்த வீட்டை விட்டுட்டு வர முடியாதுங்கறாங்க, அத்தையும், மாமாவும். அப்போ நாம தனி குடித்தனம் போகலாம்ன்னு சொன்னா, அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்குறாரு. தினப்படி சமையல், சாப்பாட்டிலிருந்து உடம்புக்கு ஏதாவது என்றால், காண்பிக்க டாக்டர் வரை எல்லாமே, அவங்க அப்பா, அம்மா சொல்றபடி தான் செய்யணும். எனக்கு வர்ற கோபத்துக்கு,'' என்று பல்லை கடித்தாள், ஊர்மிளா.

''அண்ணி வெளிப்படையா சொல்லணும்ன்னா எனக்கும் இதே நிலைமை தான்,'' என்ற, தீபா, ''அம்மா வீட்டுக்கு போனபோது, எங்க அம்மாகிட்ட இதெல்லாம் சொல்லி புலம்பினேன். அம்மா சிரிச்சிட்டே, 'இந்த மனத்தாங்கல் எல்லா பெண்களுக்கும் இருக்கிறது தான். ரொம்ப சாதாரண விஷயத்தை கூட பெருசா நினைச்சு வாக்குவாதம் செய்வோம். ஆனா, நாம ஒண்ணு புரிஞ்சுக்கணும். நீங்க எல்லாம் நல்லது கெட்டது தெரிஞ்சவங்க தான். அதெல்லாம் பட்டறிவு தான். ஆனா, அனுபவ அறிவுன்னு ஒண்ணு இருக்கு.

'சின்ன வயசுல உனக்கு சைக்கிள் ஓட்ட கத்து கொடுக்கும் போது, எனக்கு, நீ கீழே விழாம நல்லா சைக்கிளை ஓட்டிடுவேன்னு நம்பிக்கை வரும்போது தான் பின்னால வெச்சிருக்கிற என் கையை எடுப்பேன். அது போல வாழ்க்கை பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் போது, பெரியவங்களுக்கு உங்க மேல நம்பிக்கை வரும்போது, உங்க விஷயங்களை நீங்களே பார்த்துக்கட்டும்ன்னு பேசாம இருப்பாங்க.

'மாப்பிள்ளைக்கு அது புரிஞ்சு இருக்குது. உனக்கு புரிய கொஞ்சம் நாட்கள் ஆகும். அதுவரைக்கும், நீ பொறுமையா இருக்கணும்'ன்னு சொன்னாங்க, அண்ணி,'' என்றாள், தீபா.

''அத்தை சொன்னது, 'கரெக்ட்' தான். நானும் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கணும். நான் ஒரு வேகத்துல கிளம்பி வந்துட்டேன். ஆனா, சஞ்சனாவை பிரிஞ்சு என்னால இருக்க முடியல, தீபா,'' என்றாள் கவலையுடன், ஊர்மிளா.

அப்போது, 'அம்மா' என்று, சஞ்சனாவின் குரல் கேட்க, பிரமையா என நினைத்து நிமிர்ந்த, ஊர்மிளாவின் எதிரில், அவள் மகள், சஞ்சனாவும், கணவன், பாஸ்கரனும் வந்து நின்றனர். ''சஞ்சனா, அம்மாவைப் பார்க்கணும்னு, ஒரே அடம். அதான் கிளம்பி வந்துட்டோம்,'' என்றார் பாஸ்கர்.

சஞ்சனாவை பார்த்த, ஊர்மிளா, மகளை வாரி எடுத்து கொஞ்சினாள். பாஸ்கரிடம், ''வாங்க அண்ணா,'' என்று கூறி, சஞ்சனாவை பார்த்து ''குட்டிமா நீங்க எந்த ஸ்கூல்ல படிக்க போறீங்க?'' என்று கேட்டாள், தீபா.

''ஆன்ட்டி நான் ஸ்கூலுக்கு எல்லாம் போகல. வீட்ல தான் படிப்பேன்,'' என்றாள், சஞ்சனா மழலை குரலில். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.

அங்கே இளவேனிற்கால தென்றல் குளுமையாக வீசத் தொடங்கியது.

பவானி உமாசங்கர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us