
வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க பரபரப்பானாள், ராஜி.
'மனுஷன் வந்தாச்சு. இனிமே, 'ஸ்தோத்திரம்' பண்ணாத்தான் நிம்மதியா பொழப்பு ஓடும்...' என அலுத்துக் கொண்டாள்.
வாசலுக்கு ஓடினாள். ஒரு பத்து வினாடி தாமதமானால் கூட, கத்த ஆரம்பித்து விடுவார், கணேசன்; கண்கண்ட தெய்வமான, கணவர்.
''ம்... சீக்கிரம், கையில, 'வெயிட்' வெச்சிருக்கேன். தெரியலையா?''
''இதோங்க,'' என, தாழ்ப்பாளை தள்ளி கதவைத் திறந்தாள்.
ஹாலுக்கு நுழைந்த கணேசன், 'அப்பாடா...' என்று பையை, டீப்பாய் மீது வைத்தார். பரபரப்பு குறையாமல், பேனை போட்டாள், ராஜி. ஒரு துண்டையும் எடுத்துக் கொடுத்தாள்.
''துடைச்சுக்கோங்க. முத்து முத்தா வேர்த்திருக்கு.''
துடைத்துக் கொண்டே, ''சீப்பா வெண்டைக்காய் குவிச்சு வித்துக்கிட்டிருந்தான். இளசா, 'பிரஷ்'ஷா இருந்தது. மனசு கேக்கல. ஒரு கிலோவா வாங்கியிருக்கேன். பக்குவமா சமை என்ன?''
''கண்டிப்பாங்க. பாவம் நீங்க, வேலை பார்த்த அசதியோட வீட்டுக்கு வர்றீங்க. ஆனாலும், குடும்ப பாசத்துல, ஒரு கிலோவை துாக்கிட்டு வந்திருக்கீங்க. வெண்டைக்காய் சுகருக்கு, மூளைக்கு நல்லது. பார்த்து பார்த்து ஒவ்வொரு காய்கறியும் வாங்கறீங்க. நான் கொடுத்து வச்சவங்க,'' என்று கணவனைப் புகழ்ந்தாள், ராஜி.
''ம்... புரிஞ்சா சரி. 'ஹீட்டர்' போட்டிருக்கியா, குளிக்கணும்.''
''அப்பவே போட்டாச்சுங்க.''
கணேசன் குளிக்கப் போக, அறையிலிருந்து வெளியே வந்தாள், மகள் ரேகா.
''என்னம்மா நீ? வீட்டுலேயே சீரியல் ஓட்டற. அப்பாவ ஓவரா புகழுற. நானும் பார்த்துக்கிட்டே தான் வர்றேன். செயற்கையா இல்ல?'' என்றாள்.
''என்னடி செய்யறது. கல்யாணமான இந்த, 25 வருஷத்துல நான், இதைத்தான் புரிஞ்சுக்கிட்டேன். அவரை புகழலேன்னா, அதை நேரடியா கேட்காம, என்னை திட்ட ஆரம்பிச்சுருவாரு. அப்புறம் பொழுதே நரகமாயிடும். தேவையா?'' என்று மெதுவாக கூறினாள்.
இரவு, உணவு மேஜை முன், கணவனும், மகளும் அமர்ந்திருக்க, உணவு பரிமாறினாள், ராஜி.
''ஹை, இஞ்சி துவையல், சூப்பர்மா...'' என புகழ்ந்தாள், ரேகா.
''இருக்கும், இருக்கும். இஞ்சி கிலோ எவ்வளவு தெரியுமா? 300 ரூபாய். நம்ப ஊர்ல இல்லை. சிட்டிக்கு போய் பார்த்து பார்த்து வாங்கிட்டு வந்தேன். அது, உன் கண்ணுக்கு தெரியலை இல்லை.''
மகளிடம் வெறுப்பாக சொன்னார், கணேசன். இதுவும் அவர்களுக்கு பழகிய விஷயம் தான். அதாவது, தனக்கு மட்டுமே புகழ்ச்சி வேண்டும். மற்றவர்களுக்கு கிஞ்சித்தும் கிடைக்கக் கூடாது. என்ன ஒரு நற்குணம்!
''ஆமாங்க. சுவர் இருந்தா தானே சித்திரம். நீங்க அலைஞ்சு திரிஞ்சு வாங்கிட்டு வந்தாத்தானே நானும், ஏதாவது செய்ய முடியும்? இது, இந்த கழுதைக்கு எங்க தெரியப் போகுது,'' என, விவாதத்தை முன் வைத்தாள், ராஜி.
சில நாட்களில் உறவினர் வீட்டு திருமணம் நடந்தது.
''ராஜி, நீ அந்த பிரவுன் கலர் புடவையை கட்டிக்க. இந்தா ரேகா, நீ, அந்த பிரவுன் சுடிதார போட்டுக்க. நானும், இந்த பழுப்பு கலர், கட்டம் போட்ட சட்டையை போட்டுக்க போறேன்,'' என்றார், கணேசன்.
''அப்பா, என்ன இது யூனிபார்ம் மாதிரி. அதெல்லாம் நான் போட்டுக்க மாட்டேன்,'' என்று மறுத்தாள், ரேகா.
மகளை, கணேசன் முறைக்க, சமாதானப்படுத்தும் விதமாக, ''ஆமாங்க, கல்யாணம் பண்றவங்க வேனா ஒரே கலர்ல, மேட்சா போட்டுக்கலாம். நாம விருந்தினர் தானே, விடுங்க,'' என்றாள், ராஜி.
''அடச்சீ... ஒரு கல்யாணத்துக்கு போகணும்ன்னு எவ்வளவு யோசிச்சு, ஒரு ஐடியாவ சொன்னா, உங்களுக்கு கசக்குதா? நல்லா வேணும் எனக்கு. காச பாக்காம, போக வர ஒரு ஆட்டோவையும் பேசி, வச்சிருக்கேன்.
''ஒரு குடும்பத் தலைவனா, முறையா, பொறுப்பா நடந்துக்கிட்டா, அது புரிஞ்சுக்க முடியாத முட்டாளா இருக்கீங்களே. ச்சே... நன்றியில்லாத ஜென்மங்கள். அப்பனோட, புருஷனோட அருமை தெரியாத பிறவிங்க. உங்க இஷ்டம்,'' என கோபத்தில் வெடித்தார், கணேசன்.
வேறு வழியின்றி, மனைவியும், மகளும் சம்மதித்தனர். இல்லாவிட்டால் மீதி பொழுது நரகமாகி விடுமே.
திருமணத்துக்கு சென்று இரவு வீடு திரும்பியதும், ''பார்த்தியா, ரேகா. நம்ப, மூணு பேர் டிரஸ் தான் கல்யாணத்துல எடுப்பா இருந்தது. இவரோட ஐடியா சூப்பர் தானே?''
கணேசனை, ராஜி புகழ, தலையை குனிந்து கொண்டாள், ரேகா.
'கல்யாணத்தில் இவளது தோழி ஒருத்தி, 'என்னடி கூட்டத்துல காணாமல் போயிடுவேன்னு ஒரே கலர் டிரஸ் போட்டுக்கிட்டு வந்தீங்களோ...' என கலாய்த்தது, அப்பாவுக்கு எங்க புரியப் போகுது. தலையெழுத்து...' என, நினைத்துக் கொண்டாள்.
மறுநாள் காலை... அப்பா காலையில் எழுந்து, சில வழக்கமான வேலைகளை செய்துவிட்டு, அதை மனைவியிடம் ஒப்பித்தார்.
''பார்த்தியா காலையிலேயே பரபரப்பா இருக்க வேண்டியிருக்கு. எந்த வீட்டுல எவன் இப்படி ஒழுங்கா செய்யறான்?'' என அலுத்துக் கொண்டார்.
ராஜி அமைதியாக இருக்க, ''என்ன ராஜி எதுவும் பேசமாட்டேங்குற?'' என்றார், கணேசன்.
''ம்... ஆமாங்க. பால் பாக்கெட்டை கொண்டு வந்து, பிரிஜ்ல வைக்கிறது, மோட்டர் போட்டு, 'ஆப்' பண்றது... இப்படி யாருங்க பார்த்து பார்த்து செய்வாங்க. நீங்க, இந்த வீட்டோட காவல் தெய்வம்ங்க,'' என்று கணேசனை புகழ்ந்தாள், ராஜி.
''எனக்காக சொல்றீயா, இல்ல...'' என்று இழுத்தார், கணேசன்.
''அட, என்னங்க நீங்க. உண்மையை தான் சொல்றேன்,'' அவசரமாக இடைமறித்தாள், ராஜி.
அதன் பின், மகளிடம் தனியாக, ''ஏன்டி... இந்த மனுஷன புகழ்ந்து, புகழ்ந்து எனக்கு ரொம்ப அதிகமாகவே வெறுப்பு வருதுடி. என்ன தான் செய்யறது?'' என்றாள், ராஜி.
''அம்மா, நான் ஒண்ணு சொன்னா கேட்பியா?''
''என்ன?''
''பேசாம, மனோவியல் டாக்டரை பார்க்க கூட்டிக்கிட்டு போ.''
''இது வருமாடி?''
''வராது. உனக்குன்னு ஒரு காரணத்தை சொல்லி, கூட்டிகிட்டு போ. அங்க டாக்டர்கிட்ட அப்பா பத்தி சொல்லு. டாக்டர் புரிஞ்சிப்பாரு.''
மகள் ரேகா கூறியது, ராஜிக்கு சரியெனபட்டது.
தனக்கு சில மாதங்களாக பயங்கர கெட்ட கனவுகள் வருவதாக சொல்லி, கணவனுடன் ஒரு மனோவியல் டாக்டரிடம் வந்தாள், ராஜி.
டாக்டரிடம், ''சார், இவளுக்கு இது பெரிய பிரச்னையா மாறுமா?'' என்று பயந்தபடி கேட்டார், கணேசன்.
''ஏங்க, எனக்கு, 'லைட்'டா மயக்கம் வர்ற மாதிரி இருக்கு. ஒரு லெமன் ஜூஸ் வாங்கிட்டு வர்றீங்களா?'' என்றாள், ராஜி.
''இதோ டாக்டரை பார்த்துட்டு சாப்பிடலாமே,'' என்றார்.
''இல்லைங்க ப்ளீஸ். வாங்கிட்டு வாங்க,'' என்று வறுபுறுத்தினாள்.
கணேசன் வெளியேற, அவசரம் அவசரமாக டாக்டரிடம் எல்லாவற்றையும் கொட்டினாள், ராஜி.
''டாக்டர், இவருக்கு புகழ் போதை. சின்ன வயசிலேருந்தே ஆட்டிப் படைக்குது. அதான், எந்த ஒரு வேலைக்கும், பிரதிபலனை, புகழ்ச்சியை எதிர்பார்க்கிறாரு. கிடைக்கலேன்னா தற்பெருமையா, தானே ஆரம்பிக்கிறாரு...'' எனக் கூறினாள், ராஜி.
''விடுங்க, 'ட்ரிட்மென்ட்' கொடுக்கலாம்,'' என்றார், டாக்டர்.
கணேசன் ஜூஸுடன் வர, ''கணேசன், உங்க மனைவியை பத்தி சில விஷயங்களை கேட்கணும். அவங்க கொஞ்சம் வெளியே இருக்கட்டும்,'' என்றார், டாக்டர்.
ஜூஸ் டம்ளருடன் வெளியேறினாள், ராஜி.
''நீங்களே பாருங்க. ஜூஸ் கேட்டதும், உடனே வாங்கிட்டு வந்தேன். உங்க கிட்டேயும் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். எத்தனை ஹஸ்பென்ட் இப்படி இருப்பாங்க சார்?'' என்றார், கணேசன்.
சிரித்தபடி, ''லட்சத்துல ஒருத்தரை தான் இப்படி பார்த்திருப்பேன், மிஸ்டர். வீட்டுல உங்க மனைவி என்னென்ன வேலை செய்யறாங்க. ப்ரம் த மார்னிங்?'' என்று கேட்டார், டாக்டர்.
சிறிது நேரம் யோசித்து தொடர்ந்தார், கணேசன்...
''காலையில் எழுந்து குளிச்சிட்டு, வாசலில் கோலம் போட்டு, செடிக்கு தண்ணி ஊற்றி, அப்புறம் காபி போடுவா. நடுவுல வீட்டை பெருக்குவா. அப்பறம் சமையல். கூடவே கையில லஞ்சும் தரணுமே. டிபன் கேரியர் ரெடி பண்ணுவா. அப்புறம் நான் ஆபிஸ் போயிருவேன்,'' என்றார்.
''சரி, இதுவரைக்கும் போதும். இப்ப நீங்க காலையில என்னென்ன செய்வீங்க. சொல்லுங்க,'' என்று மீண்டும் கேட்டார், டாக்டர்.
''ம்... காலையில எழுந்து படுக்கையை சுருட்டி வைப்பேன். பழைய துணிய எடுத்து வாஷிங் மெஷின்ல போடுவேன். மோட்டர் சுவிட்ச் போட்டு, 'ஆப்' பண்ணுவேன். பேப்பர் படிப்பேன். இதுக்கே, 8:30 மணி ஆயிரும்,'' என்றார், கணேசன்.
''வெரி குட். இந்த வேலைக்கு நியாயமா உங்களுக்கு பாராட்டு கிடைக்கணும். கிடைக்குதா?''
''எங்க டாக்டர். மாடா உழைக்கிறேன். உடம்பு வலிய கூட சொல்றதில்லை. ஆனா, ஒரு பாராட்டும் இல்லை. கேட்டு கேட்டு வாங்கணும். ச்சீன்னு தோணுது, டாக்டர்,'' என்று அலுத்துக் கொண்டார், கணேசன்.
''சரி, மிஸ்டர். பாராட்டு வேணும்கிறது, நியாயமான ஆசை. ஆமா, உங்க மனைவி செய்யும் வேலைக்கு, அவங்களுக்கு உடம்பு வலிக்காதா?'' என்று கேட்டார், டாக்டர்.
''என்ன டாக்டர் ஆணும், பெண்ணும் ஒண்ணா. அது அவ கடமையாச்சே?'' என்று கணேசன் கூற, சிரித்தார், டாக்டர்.
''அப்ப உங்க கடமை தான் என்ன?'' என்று டாக்டர் கேட்க, விழித்தார், கணேசன்.
''நான் சொல்றேன், கணேசன். ஒரு குடும்பத்துக்கு வேண்டியதை செய்யறது எல்லாமே கடமை தான். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி. ஒரு வேளை அதுக்காக நாம பாராட்டை எதிர்பார்த்தா, அது குழந்தைத்தனம்.
''குழந்தைங்க, 'செல்லம்... வெரி குட்'ன்னு பாராட்டினா, உடனே குதிக்கும். மறுபடியும் நம்ப கிட்ட பாராட்டை எதிர்பார்க்கும். நாம வளர்ந்து எவ்வளவு பக்குவமாயிட்டோம். ஏதாவது, புதுசா ஒரு சாதனை செஞ்சா பாராட்டை எதிர்பார்க்கலாம். காய்கறி வாங்கிட்டு வர்றது. மோட்டார் போட்டு, 'ஆப்' பண்றது எல்லாம் சாதனையா, மிஸ்டர்?''
''சரி, டாக்டர். இந்த கடமையை கூட நிறைய பேர் செய்யறதில்லையே!''
''ஆமாம். அதுக்காக அவங்களை திட்டலாம். ஆனா, கடமையை செய்யறவங்களை ஏன் பாராட்டணும்? உங்க ஆபிஸ்ல நீங்க சம்பளம் வாங்கிட்டு தான் வேலை செய்யறீங்க. அதுக்காக பாராட்டறாங்களா?
''உண்மையா பாராட்டணும்ன்னா, ஒரு உயிரை பெத்து எடுக்கற, ஒவ்வொரு பெண்ணையும் வாழ்நாள் முழுவதும் பாராட்டிக்கிட்டே இருக்கணும். உங்களுக்கு அப்பா அந்தஸ்து கொடுத்த, உங்க மனைவியை எத்தனை முறை பாராட்டியிருப்பீங்க? இல்லை, அவங்க தான் கேட்டிருப்பாங்களா?
''இப்படி குடும்பத்துல செய்யற ஒவ்வொரு வேலைக்கும் பாராட்டை எதிர்பார்த்தால், அது ஒரு நோய் புரிஞ்சுக்கோங்க,'' என்று சொல்லி முடித்தார், டாக்டர்.
கணேசன் மறுவார்த்தை பேசவில்லை. பிறகு மனைவி வந்ததும், டாக்டரிடம் பேசிவிட்டு கிளம்பினர்.
செல்லும் போது வழியில், ''எனக்கு டாக்டரை பார்க்கணும்ன்னு சொன்னதும், உடனே நீங்க அழைச்சுக்கிட்டு வந்தீங்களே ரொம்ப நன்றிங்க. யாரு இப்படி செய்வாங்க?'' என்றாள், ராஜி.
மனைவியை பார்த்து, ''போதும் ராஜி, இது என் கடமை தான்,'' என்றார், கணேசன்.
கீதா ஆனந்த்

