PUBLISHED ON : ஏப் 06, 2025

ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு சங்கரலிங்கம், வீட்டுக்குள் நுழைய, ஒரே சத்தமாக இருந்தது.
''இப்ப என்னதான்டி சொல்றே?'' கோபத்துடன் கேட்டாள், சங்கரலிங்கத்தின் மனைவி மீனாட்சி.
''ம்... புதுசா ஒண்ணுமில்ல. முதலில் சொன்னதைத் தான் இப்பவும் சொல்றேன். இனி நான் அங்கு இருக்க மாட்டேன்,'' என்றாள், சுபா.
''அப்ப நீ ஒரு முடிவுக்கு வந்துட்டே அப்படித்தானே?''
''ஆமா.''
''ஆனா, நானோ, அப்பாவோ உன் முடிவுக்கு ஒத்து போவோம் என, கனவிலும் நினைக்காதே.''
''நான், ஏன் கனவில நினைக்கிறேன்? நிஜமே அதான். அப்படித்தான் செய்யப் போறேன்.''
''அது ஒருநாளும் நடக்காது.''
''கண்டிப்பா நடக்கும்.''
''ஹாலில் வந்தமர்ந்த எனக்கு குடிக்கத் தண்ணீர் கூடக் கொடுக்காம, என்ன சண்டைப் போட்டு இருக்கீங்க?'' என, அறையின் உள்ளே பார்க்க, மூத்த மகள் சுபா இருப்பதை கண்டார்.
''என்னம்மா, சுபா நீ எப்ப வந்த?'' என்றவர், ''நான் என்னமோ, உன் தங்கை, உமா கிட்ட தான், சத்தம் போட்டுட்டு இருக்கான்னு நினைச்சேன். உமா தான் காலேஜ், 'டூர்' போயிருக்கா இல்லை. ஞாபகம் வரல. ஆமாம், என்ன திடீர்ன்னு வந்திருக்கே... ஏதாவது விசேஷமா?'' என்றார், சங்கரலிங்கம்.
''இவ மாமியார், இவகிட்ட தினமும் சண்டை போட்டு, 'டார்ச்சர்' பண்றாங்களாம். மாப்பிள்ளையும் கண்டிக்கிறது இல்லையாம். எனவே, அங்கிருக்க பிடிக்கலையாம். இன்னிக்கி காலையில வாக்குவாதம் முத்தி போய் கோபிச்சுக்கிட்டு, நம்ம வீட்டுக்கு வந்துட்டா. 'நீ தான் கொஞ்சம் அனுசரித்துப் போகணும்'ன்னு சொல்லிகிட்டு இருந்தேன். நீங்க வந்துட்டீங்க.''
''நீ சொல்றது அந்த காலம், மீனாட்சி. 'கண்ணைக் கசிக்கிட்டு பிரச்னைன்னு சொல்லிகிட்டு, ஊர் பக்கம் வந்தா, முள்ளியாற்றில் வெட்டி போட்டுடுவேன்'னு, கோபமாகச் சொல்லிட்டு போனாரு, உங்க அப்பா.''
''அவங்களுக்குக் கவுரவம் தான் முக்கியம். பாசமெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.''
''நீயும், 30 வருஷமா அனுசரித்துப் போனே. மேலும், நீ அதிகம் படிக்கல. விபரம் பத்தாது. இப்ப அப்படி இல்லை. தங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டாங்க, பெண்கள். அப்படித்தானே, சுபா.''
'ஆமாம்...' என்பதற்கு அடையாளமாக, தலையசைத்தாள்.
''சுபா கண்ணு, நீ, நம்ம வீட்டிலிருந்து, 'வொர்க் பிரம் ஹோம்' வேலை பாரு; உங்க கம்பெனிக்கு, 'ரிக்வ்ஸ்ட்' கொடுத்து இங்கேயே, 'ரெஸ்ட்' எடு. மாப்பிள்ளையோ, சம்பந்தியோ வரட்டும், நான் பேசறேன்.''
''தேங்க்ஸ் அப்பா. நீங்க தான் என்னை சரியா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க.''
''குழந்தைக்கு டிபன், ஜூஸ் கொடுத்தியா, மீனாட்சி?''
''நீங்க கொடுக்கிற தைரியம் தான். என்னவோ போங்க. உங்க பாடு, உங்க பொண்ணு பாடு,'' என்றபடி, சமையலறைக்கு சென்றாள், மீனாட்சி.
சின்ன டவுனில், ஆயுர்வேத டாக்டராக இருந்தார், சங்கரலிங்கம். இவர் கொடுக்கும் மருந்துகளும், கனிவான பேச்சும், உளவியல் ரீதியாகக் கொடுக்கும் அறிவுரைகளும், இவர் மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயத்தைக் கொடுத்திருந்தது.
மூத்தவள், சுபாவை சென்னையில் திருமணம் செய்து கொடுத்திருந்தார். ஐ.டி., வேலையில் இருந்தார், மாப்பிள்ளை சுந்தர். இரண்டாவது பெண், உமா, என்ஜினியரிங் படிக்கிறாள். சென்னைக்கும், அவர் ஊருக்கும் ஒரு மணி நேர பயணம் தான்.
மாமியார் வீட்டில், ஆரம்பத்தில் பிரச்னை ஏதும் இல்லாமல் தான் போனது. சில நாட்களுக்குப் பின், மாமியார் தன்னுடன் சரியாகப் பழகாததை உணர ஆரம்பித்தாள், சுபா. அவளது மாமியார் பழைய பாணியில் இருந்தார்.
இரண்டு பேருக்கும் ஒத்து போகாமல், தினமும் சண்டை. பல மாதங்கள் இது தொடர, சுபாவும் திருப்பிப் பதிலடி கொடுத்து வந்தாள்.
விசேஷத்தை காரணம் காட்டி, ஒருமுறை வீட்டுக்கு வந்தபோது, பிரச்னைகளை விரிவாகச் சொன்னாள், சுபா. மீனாட்சி, சங்கரலிங்கம் இருவரும் புத்திமதி கூறி, திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில், சுபாவை, மாமியார் மீண்டும் மீண்டும், 'டார்ச்சர்' செய்யவே, நிலைமை மோசமானது. இப்போது தன் மாமியாரை, முற்றிலும் வெறுக்க ஆரம்பித்திருந்தாள், சுபா.
மாமியாரை எந்த வழியிலாவது ஒழித்துக் கட்டுவதற்கான வழியை தேட ஆரம்பித்தாள். படித்தவளுக்குத் தோன்றும் யோசனை அல்ல என்றாலும், இதற்கு ஒரு முடிவு வேண்டுமே?
அன்று இரவு சாப்பிட்டதும், மொட்டை மாடியில் அழுதபடி, அப்பாவிடம் தன் வலியைச் சொன்னாள், சுபா.
''தயவுசெய்து எனக்கு விஷத்தை கொடுங்கள். இல்லாட்டி அவங்களுக்கு விஷம் கொடுங்க,'' என்றாள்.
''பைத்தியம் மாதிரி உளறாதே. அது தீர்வு கிடையாது. அப்படி செஞ்சா உன்னையும், என்னையும் காவல்துறை கைது செய்யும்.''
''சுந்தரும், தனிக்குடித்தனம் வரவும் இஷ்டப்படலை. 'அப்பா - அம்மா சாகிற வரைக்கும், ஒரே பையனான நான் தான் காப்பாத்தணும்'ன்னு சொல்றாரு. மீண்டும் நான், மாமியார் வீட்டிற்கு போக மாட்டேன். அந்த அளவுக்கு எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கு.
''அம்மா ஆறுதலா பேசுவாங்கன்னு நினைச்சா, பழைய பல்லவியைச் சொல்லிகிட்டு இருக்காங்க. எனக்கு ஒரு முடிவு சொல்லுங்க, அப்பா,'' என்றாள்.
சிறிது நேரம் யோசித்தவர், ''சரி, சுபா. உன் விருப்பம் போல செய்யறேன். நான் சொல்வதைச் கேட்டால், பிறகு, நீ சொல்வதைச் செய்கிறேன், நான்,'' என்றார், சங்கரலிங்கம்.
''என்ன செய்ய வேண்டும்?'' என்றாள், சுபா.
சுபாவின் காதில் ஏதோ சொன்னார். பிறகு அறைக்கு வந்து, அவள் கையில் ஒரு டப்பா நிறைய ஏதோ கொடுத்தார்.
மறுநாளே அவர் கொடுத்த பொருளுடன், ஒரு பேப்பரில் என்ன செய்ய வேண்டுமென்று எழுதிக் கொடுத்ததையும் வாங்கிக் கொண்டு, சந்தோஷமாக கிளம்பி போனாள், சுபா.
மாமியார் வீட்டிற்கு வந்தவுடன், தினமும் தன் மாமியார் உணவில், அப்பா கொடுத்த மருந்தை, ஒரு சிட்டிகை கலக்க ஆரம்பித்தாள், சுபா.
அப்பா சொன்னபடி, மாமியாரின் எந்தக் கிண்டலுக்கும் பதில் சொல்லாமல், தன் கோபத்தை விழுங்கி, சிரித்தபடி சமாளித்தாள். மாமியாருக்கு இது ஆச்சரியமாக இருந்தது.
மாமியார் விருப்பப்படி, தினமும் என்ன மெனு எனக் கேட்டு, உணவுகளைச் சமைக்க ஆரம்பித்தாள்.
இரவு படுக்கப் போகும் முன், மாமியார் கால்களைப் பிடித்து, மசாஜ் செய்து விட்டாள். அவருடைய ஒவ்வொரு கட்டளைக்கும், கீழ்ப்படிய ஆரம்பித்தாள்.
'அப்பா சொல்படி நடக்க வேண்டும். அதில் மாற்றம் கிடையாது. எல்லாம், ஆறு மாதம் தானே சமாளிப்போம்...' என, மனதில் நினைத்துக் கொண்டாள், சுபா.
மாமியாரின் குணமும் இப்போது மாற ஆரம்பித்தது. மருமகளிடமிருந்து எந்த எதிர் வாதமும் இல்லாததால், அவரது கேலி குறைந்து விட்டன.
நான்கு மாதங்கள் கடந்தன. அந்த வீட்டின் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. மாமியார் மற்றும் மருமகள் இடையே சண்டை, கடந்த ஒரு மாதமாக இல்லாமல் போனது.
முன்பெல்லாம், சுபாவை திட்டுவதில் சளைக்காத மாமியார், இப்போது அக்கம்பக்கத்தினர் முன்னிலையில், சுபாவை புகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டார். அது, சுபாவின் காதிலும் விழுந்தது.
மருமகளுக்குத் தன் கையால் ஊட்டி விட்டு, உறங்கச் செல்லும் முன் கூட, மருமகளுடன் அன்பாக பேச ஆரம்பித்தார், மாமியார்.
ஒருநாள், சுபா வாந்தி எடுத்ததும் பதறிப் போய், டாக்டரை அழைத்து வந்து காண்பித்தார், மாமியார்.
சுபா, கர்ப்பமடைந்திருப்பது தெரிந்ததும், அவளை ஒரு வேலையையும் செய்யவிடவில்லை. வேளா வேளைக்கு ஜூஸ் தயார் செய்து மாமியார் கொடுக்கவும் நெகிழ்ந்தாள், சுபா. மாமியார், தன்னை மகளாக நடத்துவதை உணர ஆரம்பித்தாள்.
தான் கொடுத்த மருந்தால், மாமியார், இன்னும் சில நாட்களில் இயற்கையாக இறந்து விடுவார் என்பதை நினைத்து, மிகவும் கவலைப்பட்டாள். இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஒருநாள், தன் அப்பா வீட்டிற்கு சென்றாள்.
''இப்போது நான், என் மாமியாரை சாகடிக்க விரும்பவில்லை. அவங்க என்னை மகளா நினைச்சு, அன்பா இருக்காங்க. நானும் அவரை, அம்மாவைப் போல நேசிக்க ஆரம்பித்துள்ளேன். என் மனசாட்சி என்னை உறுத்துது. அந்த விஷத்தை முறிக்கும் மாற்று மருந்தை எனக்குக் கொடுங்கப்பா?'' என்றாள், சுபா.
உரக்கச் சிரித்தார், சங்கரலிங்கம்.
''விஷமா... விஷம் என்ற பெயரில், ஜீரணப் பொடியையும், தெம்புக்கு சில ஊட்டச்சத்து மருந்தையும் தான் கலந்து கொடுத்தேன். ஒரு ஆயுர்வேத மருத்துவர் விஷத்தை கொடுப்பேனா!
''நீ, ஒரு குழந்தைக்கு தாயாக போறே. ஆனா, நீ இன்னும் குழந்தை மாதிரி தான். விபரம் புரியாம மாமியாரை பழி வாங்க நினைச்சு, என்கிட்ட விஷம் கொடுக்கும்படி கேட்டே. இந்தக் காலப் பெண்களுக்கு திருமண உறவு என்பது புரியவில்லை. கருத்து வேறுபாடு கணவரிடம் இல்லை, மாமியாரிடம் தான்.
''அன்பு என்ற ஒரு வார்த்தை உன்னையும், மாமியாரையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. இப்ப ஒருவருக்கொருவர் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தி வர்றீங்க. இது, இனிமேல் காலத்துக்கும் நிலைக்கும்,'' என்றார், சங்கரலிங்கம்.
''சாரிப்பா, புரியாம மடத்தனம் பண்ண நினைச்சேன். எனக்கு புரிய வைச்சிட்டீங்க,'' என்றாள், சுபா.
''சீக்கிரம் பேரன் இல்லை, பேத்தியை பெற்று கொடு. உங்க மாமியார் கொஞ்சட்டும்,'' என்றார், சங்கரலிங்கம்.
சந்தோஷமாக வீடு திரும்பினாள், சுபா.
''என்ன மாயம் செஞ்சிருக்கீங்க?'' என்றாள், மீனாட்சி.
''அன்று இரவு மொட்டை மாடியில், சுபா தேம்பி தேம்பி அழுதாள். கொஞ்ச நேரம் கழிச்சு, ஒரு பொடியைக் கட்டி, சுபாவிடம் கொடுத்து, இந்தப் பொட்டலத்தில் இருந்து தினமும் ஒரு சிட்டிகை எடுத்து, மாமியார் உணவில் கலக்க வேண்டும்.
''அவர், உடனடியாக இறக்க மாட்டார். ஆனால், மெதுவாக பலவீனமடைந்து, ஆறு மாதங்களுக்குள் இயற்கையான மரணம் அடைவார். முக்கியமா, உன் கணவருக்கு இது தெரியக் கூடாது. உனக்கும் பழி வராது.
''ஆனா, ஒரு நிபந்தனை. நான் கொடுத்த இந்த மருந்து வேலை செய்யணும்ன்னு, நீ நினைச்சா, இன்று முதல், மாமியாரிடம் சண்டை போடாமல், அவங்களுக்குச் சின்னச் சின்ன உதவி செய். எதிர்த்துப் பேசக் கூடாது என்றேன். 'ஆறு மாசம் தானே, அப்பா. அப்புறம் எனக்கு நிம்மதி கிடைக்கும் தானே...' என, சம்மதம் சொல்லிவிட்டு போனாள், சுபா.
''சுபா, குழந்தை. அவளுக்கு நல்லது, கெட்டது புரியல. அதான் அவ போக்கில் போய், ஜீரண மற்றும் வைட்டமின் மருந்தையும் கலந்து கொடுத்து, சுபாவை நம்ப வைச்சு, ஒரு நாடகம் ஆடினேன்.
''ஒரு விஷயம் புரிஞ்சுக்க. கொள்ளியை இழுத்துப் போட்டா, கொதிக்கிறது அடங்கும் என, கிராமப்புறங்களில் ஒரு சொலவடை கேள்விப்பட்டு இருப்ப. இது, மனோதத்துவ வைத்தியம். முள்ளை முள்ளால தான் எடுக்கணும்.
''நான், சுபாவை உயிருடன் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அவள் நம்பிக்கையுடன் இருக்க முயற்சி செய்தேன். சுபாவுக்கு சரியான பாதையைக் கற்பித்தேன். அது வெற்றி அடைந்துள்ளது,'' என்றார், சங்கரலிங்கம்.
''இதுபோன்ற புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க, உங்களால் மட்டுமே முடியும்,'' என, நன்றியுடன், கணவனை பார்த்தாள், மீனாட்சி.
ஆனந்த் ஸ்ரீனிவாசன்