/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: மலையில் சூடிய மாலை!
/
விசேஷம் இது வித்தியாசம்: மலையில் சூடிய மாலை!
PUBLISHED ON : ஏப் 13, 2025

ஏப்., 14 - தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு
உலகில் எத்தனை மலைகள் இருந்தாலும், தனக்கென தனிப்பெருமையை பொதிந்து வைத்துள்ளது, பொதிகை மலை. அதன் பெயர் தான் தியாகம்.
உலக நாயகனான சிவனுக்கு கல்யாணம். பார்வதியை மணம் செய்து கொள்ளப் போகிறார். உலகமே திரண்டு இமயத்திற்கு வந்து விட்டது. உலகின் சமநிலை ஆட்டம் காண்கிறது. இதை சரிப்படுத்த தவத்தில் சிறந்த அகத்தியரையும், அவரது மனைவி லோபமுத்ராவையும் அழைக்கிறார், சிவன்.
'நீ பொதிகைக்கு செல், உலகை சமன் செய். அப்படியானால், கல்யாணத்தை எப்படி பார்ப்பது என்ற கவலை, உனக்குள் எழுவது இயற்கையே. இங்கு நடக்கும் திருமணம், அங்கும் நடக்கும். ஆம்... இந்த காட்சிகளை அங்கே உனக்கு காட்டுவேன்...' என்றதும், பதில் பேசாமல் சம்மதித்தார், அகத்தியர்.
'அகத்தியனே! இதோ, இந்த மாலையை கையில் பிடி. இது சாதாரண மாலையல்ல. தீர்த்த சக்தி கொண்டது. இதை அந்த மலைக்கு சூட்டி விடு. பின் நடக்கும் அதிசயத்தைப் பார்...' என, ஒரு மாலையை கையில் கொடுத்தார், சிவன். உடனே அந்த மாலை, ஒரு பெண்ணாக மாறியது.
'அகத்தியனே! இவள் உன் மகள். இவளையும் உன்னோடு அழைத்துச் செல்...' என்றார்.
அந்த பெண்ணின் உடல், துலக்கி வைத்த செம்பைப் போல பளபளவென மின்னியது. உடனே அனைவரும், அவளை, 'தாமிரவர்ணீ' என, பெயரிட்டு அழைத்தனர்.
தாமிரம் என்றால் செம்பு. வர்ணீ என்றால் எல்லையற்றது அல்லது வற்றாதது. அவளுக்கு இவ்வுலகிலுள்ள மூன்று கோடி புண்ணிய தீர்த்தங்களை வழங்கினான், வருணன். மீண்டும் மாலையாக மாறினாள், அந்த கன்னி.
தென் பொதிகை வந்தார், அகத்தியர். பொதிகை மலையின் உச்சியில், அந்த மாலையை சூட்டினார். அவ்வளவு தான்! அங்கே பெரும் நீர்ப்பெருக்கு ஏற்பட்டது. அது, இன்று வரை வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. காலப்போக்கில், தாமிரபரணி ஆனாள், தாமிரவர்ணீ.
அந்த நதியை கண்டவர்கள், 'ஆகா! இவளே பொருநை...' என, புகழ்ந்தனர். பொருநை என்றால், மலைகளின் தலைவி அல்லது குறிஞ்சித் தலைவி என, பொருள்.
இந்த புராணக் கதையின் அடிப்படையில், தாமிரபரணி மலையை விட்டு இறங்கி, சமநிலத்துக்கு வரும் பாபநாசம் என்ற புனிதத்தலத்தில், சித்திரை விஷு விழாவாக கொண்டாடப்படுகிறது.
மூன்று கோடி தீர்த்தங்களையும் தாமிரபரணி கொண்டு வந்து விட்டாள் அல்லவா! அதனால், உலகில் உள்ள எல்லா நதி தேவதைகளும், சித்திரை விஷுவன்று, தாமிரபரணிக்கு நீராட வருகின்றனர். தங்களிடம், மக்கள் கரைத்த பாவங்களை, தாமிரபரணியில் கரைத்து, புனிதம் பெற்று திரும்புகின்றனர்.
சித்திரை விஷுவன்று இரவில், அகத்தியருக்கு சிவன் திருமணக்காட்சி தரும் நிகழ்வும், பாபநாசநாதர் கோவிலில் நடக்கும்.
திருநெல்வேலியில் இருந்து பாபநாசத்திற்கு, 45 கி.மீ., துாரம் உள்ளது.
தி. செல்லப்பா