
பாத்திரங்கள் மோதும் சத்தம் கேட்டு, படுக்கையில் இருந்து எழுந்த சரத், கண்ணை கசக்கிக்கொண்டே சமையல் அறையை நோக்கி போனான். நேற்று தான், எட்டாம் வகுப்பு முழு பரீட்சை எழுதி முடித்திருந்தான்.
வாஷ்பேசினில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த அம்மா, ''என்னப்பா சரத் அதுக்குள்ள எழுந்துட்டே. இன்னும் கொஞ்சம் நேரம் துாங்கலாமே... விடுமுறை தானே,'' என்றாள்.
''அம்மா, அப்பா என்னம்மா சொன்னாங்க?''
''நான் இன்னும் பேசலைடா.''
ஏமாற்றத்துடன் அம்மாவிடம், ''அப்பாவுக்கு காபி கொடுக்கிற போதாவது பேசறீயாம்மா?'' என்றான்.
''பார்ப்போம்டா.''
கோடை விடுமுறையில், கிரிக்கெட் 'சம்மர் கேம்ப்'பில் சேர மிகுந்த ஆசையில் இருந்த, சரத், அம்மாவின் பதிலால் எரிச்சல் அடைந்தான்.
அவனது நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு குறிக்கோள் வைத்து இருந்தனர். ஒருவன், 'கீ போர்டு' கற்றுக் கொள்ள, 'இன்ஸ்ட்ருமென்ட்' வாங்கி விட்டதாக பெருமை அடித்தான். சுரேஷ், 'அபாகஸ் கிளாஸ்' சேர்ந்து விட்டதாக நேற்று சொன்னான். கிரீஷ், சுற்றுலா விசாவில், கனடா சென்று வர இருக்கிறான். சரத்துக்கு கிரிக்கெட் விளையாட ஆசை என்பதால், பயிற்சி வகுப்பில் சேர விரும்பினான்.
பள்ளியின் ஆண்டு விழா மலரில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும் என்பதே, அவர்களது ஆசை. விளையாட்டு, ஓவியம் மற்றும் இசைத் திறமை உள்ளவர்கள், பள்ளி அல்லது மாவட்ட அளவில் பரிசு பெற்றால், கேடயத்துடன் அதில் புகைப்படம் வெளியிடுவர். வெளிநாடு போய் வருவதைக் கூட, செய்தியாக போட்டு கவுரவப்படுத்துவர். கிரீஷ் மட்டும் ஆண்டுதோறும் அந்த செய்திக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
அப்பாவிடம் சம்மதம் கிடைக்குமா என தெரியவில்லை. கிரிக்கெட் என்றால் அப்பாவுக்கு வெறுப்பு. அவருக்கு தெரியாமல் தான், 'டிவி'யில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பான்.
''என்ன நமச்சி, சோகமா இருக்கே?''
''அம்மா, உனக்கு எத்தனை தடவை சொல்றது. என்னை, நமச்சின்னு கூப்பிடாதேன்னு. கோபம் கோபமா வருது.''
''உன் செல்லப் பேருடா, அது. சின்ன வயசுல இருந்து அப்படித் தானே கூப்பிடுறோம்.''
''அப்ப எனக்கு விபரம் புரியாது.''
''விடுமுறைக்கு நாம, நம்ம சொந்த ஊருக்கு போகப் போறோம். என்ன ஜாலியா பையா!'' என, அலுவலகத்தில் இருந்து வந்ததும் கூறினார், அப்பா மணிவண்ணன். அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மேலும் கவலையில் ஆழ்ந்தான், சரத்.
''ஒரு மாதமாகவே, விடுமுறை கேட்டுக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு தான் சம்மதிச்சாங்க. ரெண்டு வாரம், நம்ம ஊருக்கு போய், நம்மள புத்தாக்கம் பண்ணிக்கப் போறோம்,'' என்றார், அப்பா.
மணிவண்ணனின் சொந்த ஊர், சிதம்பரம் அருகே பெருமாத்துார் என்ற கிராமம். வயதான அவரது அப்பா, அம்மா அங்கே தான் இருக்கின்றனர். சுற்றுவட்டார கிராமத்தில், அவரது உறவினர்களே நிறைந்து இருந்தனர்.
கிராமத்துக்கு வந்த மறுநொடியே சரத்துக்கு, ஓவென அழவேண்டும் போல இருந்தது. அப்பாவைப் போல தாத்தா உயரமாகவும், கறுப்பாகவும், அடர்ந்த தலைமுடியுடனும் இருந்தார். இரண்டு நாளாக பார்த்த வரையில், இடுப்பில் வேட்டியும், நேரத்துக்கு தகுந்த மாதிரி தோளிலும், கழுத்திலும் துண்டு போட்டிருந்தார்.
கலைநயத்துடன் கூடிய கனமான மரக்கதவு, வீட்டின் வெளியே நீண்ட திண்ணை இருந்ததை பார்த்து, அந்த காலத்து வீடு, இப்படி தான் இருக்கும் போல என நினைத்துக் கொண்டான், சரத். நல்ல காற்றும், வெளிச்சம் மற்றும் திடமான வடிவமைப்பான இதுபோன்ற வீட்டை அவன் சென்னையில் பார்த்ததில்லை.
''சரத்தை பார்க்கிறப்ப, என் அப்பாவை பார்க்கிற மாதிரி இருக்கு,'' என, தாத்தா சிதம்பரநாதன் சொல்ல, பொக்கை வாய் பாட்டியும் ஆமோதிப்பது போல சிரித்தது, சரத்தை மேலும் எரிச்சலுாட்டியது.
''பேராண்டி, போன வருஷமே உன்னை எதிர்பார்த்தேன். நீ வரல. நான் கொடுத்து வச்சவ. இப்பயாவது உன்னைப் பார்த்தேனே. எப்ப வேணாலும் சந்தோஷமா கண்ணை மூடுவேன்.''
ஒல்லியான அத்தை, சரத் கன்னத்தை கிள்ளி சிறுபிள்ளையாக பாவித்து, அவனை துாக்கி ஒரு சுற்று சுற்றினாள்.
''அடி, செண்பகம். என் பேரனை கீழே போட்டுடாதேடி,'' என்று கூறியவாறே, பதட்டமாய் ஓடி வந்து இறக்கி விட்டதும் தான் அமைதியானாள், பாட்டி.
''உனக்கு உன் பேரன் மேல இருக்கிற அக்கறை போல, எனக்கு என் அண்ணன் பையன் மேல இருக்காதா?'' என்றாள், அத்தை செண்பகம்.
தன் அண்ணன் மணிவண்ணன், குடும்பத்தோடு வந்திருப்பதை அறிந்து, பொழுது விடிந்ததும் தன் குடும்பத்துடன் வந்துவிட்டாள், அத்தை. மாங்காய், எலுமிச்சை பழம் என, மூட்டை கட்டி வந்து நடுக்கூடத்தில் இறக்கினாள். அந்த வாசனை வீடெங்கும் இன்னமும் நிறைந்திருந்தது.
''மணி, ஊருக்கு போறப்ப சொல்லு. புதுசா பறிச்ச மாங்காயும், எலுமிச்சை பழமும் மூட்டை கட்டித் தரேன்,'' என்றாள்.
வெளித் திண்ணையில், அத்தையின் கணவருடன் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்த அப்பா, 'சரி சரி...' என்று குரல் கொடுத்தார். அக்கம் பக்கம் ஆட்கள், ஆசையுடன் வந்து பேசினர். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அப்படி ஒரு மதிப்பு அந்த ஊரில் இருந்தது. ஒரு கவுரவமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார், தாத்தா.
''என்ன சரத், மனசுல எதையோ நினைச்சுக்கிட்டு திருதிருன்னு முழிக்கிறே. இது யாரு தெரியுமா? என் தம்பி பொண்ணு. உன் அப்பனுக்கு தங்கச்சி முறை. உன் அப்பாக்கூட பேசிக்கிட்டு இருக்கிறாரே அவரு, உனக்கு மாமா முறை. என்ன புரியுதா,'' என்ற தாத்தா, வருவோர் போவோரிடம் எல்லாம் பேரனை அறிமுகப்படுத்தி, பெருமை அடித்துக் கொண்டார்.
அன்று இரவு, தாத்தா, பேரன், அப்பா மற்றும் அம்மா என, அனைவரையும் உட்கார வைத்து திருஷ்டி சுத்தி போட்டாள், பாட்டி.
ஆரம்பத்தில், தாத்தா - பாட்டியிடம் விலகியே இருந்த, சரத், கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி பழகினான்.
சரத்துடன் நிறைய நண்பர்கள் சேர்ந்தனர். பம்பரம் விட்டான். கோலி குண்டு உருட்டி விளையாடினான். மாலையில் தாவணி போட்ட அக்காக்கள், 'ஸ்கிப்பிங்' மற்றும் பல்லாங்குழி விளையாடியதை வேடிக்கை பார்த்தான்.
அம்மாக்கள் ஒன்று கூடி, நோட்டு புத்தகத்தில் புள்ளி வைத்து கோலம் போட்டனர். மறுநாள் அந்த கோலங்கள் தெருவெங்கும் உயிரோட்ட ஓவியமாய் கலர் கலராக விரிந்து இருந்தது. அம்மா வாசலை நிறைத்து அற்புதமான கோலம் போட்டிருந்ததை பார்த்து அசந்தே விட்டான், சரத்.
தெரு கோடியில் இருக்கும் முருகன் கோவிலில், 'பாலிருக்குது... பழமிருக்குது...' பாடல் ஒலித்து, அந்த அதிகாலையை ரம்மியப்படுத்தி இருந்தது.
தோள் மீது பேரனை உட்கார வைத்து, தோட்டம் வழியே நடந்தார், தாத்தா. வீட்டுக்கு பின்னால், கொஞ்ச துாரத்தில், உப்பனாறு ஓடிக்கொண்டிருந்தது. பேரனை தண்ணீரில் இறக்கி, நீச்சல் அடிக்க கற்றுக் கொடுத்தார். ஆரம்பத்தில் பயந்த சரத், நான்கைந்து நாளிலேயே நன்றாக பயிற்சி பெற்றவனாய் நீச்சலடித்தான்.
தாத்தா குளிக்கும் முன்பு வேப்பங்குச்சியை வைத்து பல் தேய்த்தார். பேரனுக்கும் அந்த கசப்பு பிடித்து இருந்தது.
திரும்ப வரும் வழியில், கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய் பறித்து, துண்டை விரித்து மூட்டையாக கட்டி, ஒரு பக்க தோளில் போட்டுக் கொண்டார். மறு தோளில், உட்கார்ந்து இருந்த, சரத், குதிரை சவாரி செய்வது போல் ஆனந்தம் கொண்டான்.
''பேராண்டி எல்லாம் நம்ம தோட்டம் தான். அப்புறம் வந்து இளநீர் பறிச்சு குடிக்கலாம்,'' என்றார்.
எந்த வீட்டிலும் அழுது வடியும், 'டிவி' சீரியல் ஓடவில்லை. அவ்வப்போது, மின்சாரம் போனாலும், சில்லென்று காற்றடித்தது. பகலில் கோடை வெப்பம் தகித்தாலும், அடர்ந்த மரங்களுக்கு அடங்கித்தான் போயிருந்தது. நிலவுக்கு இத்தனை வெளிச்சமா என, கிராமத்துக்கு போய் தான், தெரிந்து கொண்டான், சரத்.
நடுத்தர வயதுகாரர்கள், பெரியவர்கள் என, வயது வாரியாக ஒன்று கூடி, அரட்டையடித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்பா, நடுத்தர வயதுகாரர்களுடன், வேட்டியை இறுகக் கட்டி, கபடி ஆடியதை, சரத்தால் நம்ப முடியவில்லை.
''உன் அப்பா, உன் வயசுல எல்லாம் வீட்டுலேயே தங்க மாட்டான். சதா நண்பர்கள், விளையாட்டுன்னு கெடப்பான். எல்லாரும் சமத்தான நல்ல பசங்க. அதுல, அருள்மொழின்னு ஒருத்தன் இருக்கான் பாரு. ஸ்கூல்ல இப்ப வாத்தியாரா இருக்கான். அவனும், உன் அப்பாவும் படு தோஸ்த்து.
''அருள்மொழி, கிரிக்கெட் பிரமாதமா விளையாடுவான். அரசியல் பண்ணி அவன், 'ஸ்டேட் பிளேயர்' ஆவறதை கெடுத்துட்டானுங்க. அதுல பெரிதும் பாதிக்கப்பட்டது, உன் அப்பா தான். பிறகு, எந்த விளையாட்டு மேலேயும் அவனுக்கு ஆர்வம் இல்லாம போயிடுச்சு,'' என, பழைய சோகக் கதையை கூறினார், தாத்தா.
'அதனால் தான், தன் கிரிக்கெட் ஆர்வத்தை, அப்பா பெரிதாக கண்டு கொள்ளவில்லையோ...' என நினைத்தான், சரத்.
பலாப்பழம் வெட்டி சுளை சுளையாக எடுத்து வைத்தார், தாத்தா. பலாச்சுளைகளை அக்கம் பக்கம் எல்லாம் கொண்டு போய் கொடுத்து வந்தாள், பாட்டி. சரத் நிறைய சாப்பிட்டான்.
''டேய் சரத், வயிறு வலிக்கப் போவுது,'' என, எச்சரித்தாள், அம்மா.
''அதெல்லாம் ஒண்ணும் ஆகாதும்மா. இப்பவும் முழுப் பழத்தை ஒத்த ஆளா சாப்பிடுவேன். கடைசியா பலாக்கொட்டை சாப்பிட்டா, எந்த வலியும் வராது,'' என்ற தாத்தா, ஒரு பலாக் கொட்டையை எடுத்து தோல் நீக்கி சாப்பிட்டு, சரத்துக்கும் கொடுத்தார். துவர்ப்பாக இருந்தது.
''மருந்து இனிக்கவா செய்யும்,'' என சத்தமாக சிரித்தார், தாத்தா.
''நாங்க நாளைக்கு ஊருக்கு போகலாம்ன்னு இருக்கோம். விடுமுறை முடியப் போகுது,'' என்றார், அப்பா.
''அட ஆமாப்பா, நீங்க வந்து ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு இல்லை,'' என்று ஆமோதித்தார், தாத்தா.
கம்பீரமான தாத்தா காற்று போன பலுான் மாதிரி ஆகிவிட்டார். மறுநாள் குளிக்கப் போன போது கூட, தோள் குறுகிப் போயிருந்தார்.
''தாத்தா, கவலைப்படாதே. பரீட்சை முடிந்து விடுமுறை விட்டால், அப்பாவையும், அம்மாவையும் அடம் புடிச்சு கூட்டிட்டு நான் வர்றேன்,'' என்றான், சரத்.
ஆர்ப்பரிக்கும் தண்ணீரை விட சத்தமாக சிரித்தார், தாத்தா; பேரனை இறுகக் கட்டிக் கொண்டார்.
விடுமுறையை எப்படி கழிக்கப் போகிறோம் என, பயந்த சரத்தை இந்த கிராமம், பிரிய மனசில்லாதவனாக மாற்றிவிட்டது. ஊருக்கு திரும்பும் செய்தியறிந்து தெருவே ஒன்று கூடி, பிரியா விடை கொடுத்து அனுப்பியது.
விடுமுறைக்கு பின் பள்ளி திறந்ததும், ''டியர் ஸ்டூடெண்ட்ஸ், விடுமுறையில் ஜாலியா இருந்தீங்களா?'' என்றார், கணக்கு ஆசிரியை.
'ஆமாம் மிஸ்...' என்றனர், கோரஸாக.
''விடுமுறையில் என்ன செஞ்சீங்க, எங்க போனீங்க?'' என்றதும், ஆளாளுக்கு ஆர்வத்துடன் சொல்ல ஆரம்பித்தனர்.
முகம் வெளிறி, தடுமாறி, பேசாமல் நின்ற சரத்தின் பரிதாப நிலையை பார்த்து கைத்தட்டி கிண்டலடித்தனர், மாணவர்கள்.
''என்ன சரத்... நீ எங்கேயும் போகலையா?'' என்றார், ஆசிரியை.
''எங்க அப்பா என்னை சொந்த ஊருக்கு அழைச்சுக்கிட்டு போயிட்டார்,'' என, மெலிதான குரலில் சொன்னான்.
நண்பர்கள் டேபிளை தட்டி சத்தம் எழுப்பி பரிகாசம் செய்தனர்.
''மிஸ் இவன் இன்னமும் நமச்சிவாயமாகவே இருக்கான்,'' என, அவனது செல்லப் பெயரை குறிப்பிட்டு சுரேஷ் சொல்ல, அனைவரும், 'கொல்' என, சிரித்தனர்.
''ஸ்டாப் இட்...'' ஆசிரியையின் குரலுக்கு ஊசி விழுந்த சத்தம் கூட எழவில்லை.
''உண்மையா, கோடை விடுமுறையை சிறப்பா பயன்படுத்திக் கொண்டது நம்ம, சரத் தான். எல்லாரும் ஜோரா கைத்தட்டுங்க,'' என, ஆசிரியை கூற, சுரேஷ் உட்பட அனைவரும் கைத்தட்டினர்.
''நாம எல்லாம் நாகரிகம் அடைஞ்சுட்டதா நினைச்சு, செயற்கையா ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். நம்ம குடும்பத்துல யார், யார் இருக்காங்க; அவங்க எப்படிபட்டவங்க. தாத்தா - பாட்டி பாசம்ன்னா என்ன? அத்தை - மாமா அரவணைப்பு என்னன்னு, அனுபவப்பூர்வமா சரத்துக்கு தெரிஞ்சிருக்கும். பாசம் இல்லாம தனித்தனி தீவு மாதிரி வாழுறது தான் வாழ்க்கையா?
''பசங்களா... மியூசிக், பாட்டு, விளையாட்டு எல்லாம் எப்ப வேணாலும் கத்துக்கலாம். இனிமையான, இயல்பான வாழ்க்கையை, அது போகிற போக்குல தான் வாழ கத்துக்கணும். 'பேமிலி ட்ரீ' படம், உறவினர் பெயரோட வரையச் சொன்னா, நம்ம சரத், டக்குன்னு வரைஞ்சுடுவான்.
''எனக்கு தெரிஞ்சு இந்த கால மாணவர் நிறைய பேருக்கு, தாத்தா - பாட்டியோட பேரே தெரியல. சுரேஷ், உன் தாத்தா - பாட்டி பேரைச் சொல்லேன்.''
''தாத்தா பேரு, தாத்தா பேரு...'' என, ராகம் போட்டு தெரியாமல் தவித்தான், சுரேஷ்.
''சரத், உங்க தாத்தா பேரு என்ன?''
''சிதம்பரநாதன், மிஸ். கடலுார் மாவட்டம், புவனகிரி பக்கத்துல இருக்கிற, பெருமாத்துார் கிராமத்துல இருக்காங்க.''
''ஓ.கே., உங்க தாத்தாவோட அப்பா பேரு என்ன?''
''நமச்சிவாயம், மிஸ்,'' என்றான்.
மாணவர்களிடம் எழுந்த கைத்தட்டல், அந்த வகுப்பு மணி அடிக்கும் வரை நீண்டது.
அந்தாண்டு நீச்சல் போட்டியில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த, நமச்சிவாயம் என்ற சரத், கேடயம் துாக்கி பிடித்தபடி, 'ஸ்கூல் மேகசினில்' இடம் பிடித்திருந்தான்.
வி. மகராசி