
''அடடா... ருத்ரா, மரம் வைக்கிற அழகை வந்து பாருங்களேன். வாங்க வாங்க...'' என்ற, பாஸ்கர் தாத்தாவின் உரத்த குரல் கேட்டு, பூங்காவில் மரம் வைப்பதற்கான முஸ்தீபுகளில் இருந்த அனைத்து சிறுவர், சிறுமியரும் குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தனர்.
ருத்ராவின் செயல், வியப்பாகத்தான் இருந்தது.
'இங்க பார்டி, இவ செடி வைக்கிறதை?' வாயில் கை வைத்து, 'கொல்'லென சிரித்தனர், சிறுவர், சிறுமியர்.
மூக்கைச் சுழித்து, கண்களை சுருக்கி, முகத்தை அஷ்டகோணலாக்கி, ''அய்யே, மண்டு...'' என்று கிண்டலடித்தாள், ராதா மாமியின் சின்னப் பெண். கூடவே, இரு சிறுவர்களும், அவளோடு சேர்ந்து சிரித்தனர்.
குழி தோண்டி, செடியின் வேர் பூமிக்குள் பதியும்படி ஒவ்வொன்றாக நடுவதற்கு பதிலாக, ஒவ்வொரு குழியிலும், இரண்டிரண்டு செடிகளாக, 10 குழிக்கும் மேல் நட்டு வைத்திருந்தாள், ருத்ரா. அனைவரும் அதைப் பார்த்துத்தான் சிரித்தனர்.
அதற்குள் அந்த மைதானத்தில் காலை நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த பெரியவர்கள் சிலரும் வந்து சேர்ந்தனர். ருத்ராவின் அப்பாவுக்கும் வியப்பு தான்.
ஞாயிற்றுக்கிழமை என்றால், கே.கே., காலனியில் இருக்கும் வீதியோரங்களிலோ, பொது மைதானத்திலோ, இல்லை யார் வீடுகளிலோ மரம் வைக்கப் போய் விடுவார், பாஸ்கர். ஓய்வுப்பெற்ற, அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர். அவருடன், அந்த காலனி வாண்டுகளும் சேர்ந்து கொள்வர்.
வீட்டில் இருந்தால் மொபைல்போனை நோண்டி, வீணாக பொழுதை போக்குவதை விட, மரம், செடி, கொடி வைக்கிற இந்தக் காரியம் உருப்படியாக இருந்ததால், காலனியிலும் அதற்கு ஏக வரவேற்பு.
சில சமயங்களில், காலை பொழுது தாண்டி, 10:00 - 11:00 மணி கூட ஆகிவிடும். வீட்டிலிருந்து சாப்பிடச் சொல்லி ஓயாமல் யாராவது வந்து மிரட்டினாலும், அசையாமல் பாஸ்கர் சாருடனே ஒட்டிக் கொண்டிருப்பர், சிறுவர்கள்.
பெற்றோர் வந்து, சிறுவர்களை வலுக்கட்டாயமாய் அழைத்துப் போவதும் உண்டு. அவர்களிடம், மரம் வளர்ப்பதற்கான அந்தளவு ஆர்வத்தை, ஈடுபாட்டை உருவாக்கி இருந்தார்.
குழியை வெட்டி, மரத்தை நட்டோமா, குழியை மூடினோமா, ரெண்டு, 'செல்பி' எடுத்து, முகநுாலில் போட்டு, இன்றைய, நவீன சமூக சேவகராக அவரை எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும்.
அவர் வைத்து, ஒரு மரம் கூட இதுவரை பட்டுப் போனதாகவோ, வளராமல் போனதாகவோ சரித்திரமே இல்லை. மரம் நட, அந்த இடத்தை தேர்வு செய்வதற்கு முன்பாகவே பத்து முறை பரிசீலிப்பார்.
அந்த இடத்தின் அமைப்பு, சாலையிலிருந்து எவ்வளவு அடி துாரம், மேலே, மின்சார கம்பி போகிறதா, செடி வைக்கிற பூமி ஏற்றாற் போல செம்மண்ணாக இருக்கிறதா... இல்லை, கற்கள் நிரம்பியதாக இருக்கிறதா...
குழிக்குள் பிளாஸ்டிக் காகிதங்கள் ஏதும் தட்டுப்படுகிறதா... செடி வளர போதிய வெளிச்சம் கிடைக்கிறதா... ஓரளவேனும் வெயில் தாங்கி வளரும் ரகம் தானா... மரமான பின், காற்று பலமாக அடித்தால் தாங்குமா... பழ மரமாக இருந்தால், வவ்வால் தொந்தரவு வருமா...வேர் அதிக துாரம் நீண்டு, வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை பதம் பார்த்துவிடக் கூடாதே... தண்ணீர் வசதி உள்ளதா என, ஒவ்வொரு நாற்றுக்கும் நுாறு விஷயங்களை பார்த்து, பார்த்து யோசித்து நட்டு வைப்பார். அதனால் தான், அவரது மரம் வளர்க்கும் விஷயம் வெற்றியடைந்தது.
குழந்தைகளை குஷிப்படுத்த இது போதாதே. அந்த மரத்தின் பூர்வீகம், அதன் உபயோகம், அறிவியல் பெயர், குணாதிசயங்கள், அதன் அமைப்பு, ஆயுட்காலம், பழ மரமாக இருந்தால், பழங்களின் மருத்துவ குணம்.
கடவுளோடு தொடர்புடைய ஸ்தல விருட்சமாக இருக்கும் பட்சத்தில், அதன் ஸ்தல வரலாறு... இப்படி மரம் பற்றி அவர் அறிந்த நுாற்றுக்கணக்கான செய்திகளை பரிமாறுவது மட்டுமின்றி, சமயங்களில் மரங்களைப் பற்றிய கேள்வி - பதில், வினாடி - வினா மாதிரி நடத்தி, பரிசும் கொடுப்பார்.
அதுமட்டுமின்றி, சிறுவர் - சிறுமியர் கேட்கும் கேள்விகள் எதுவென்றாலும், பொறுமையோடு கேட்டு, பதில் விளக்கம் தருவார். ஒவ்வொரு முறையும், மரம் வைக்கும் நிகழ்வில், குழந்தைகளும் அதில் ஒன்றிவிடும் அதிசயத்தை கண்கூடாக அங்கே பார்க்கலாம்.
ருத்ராவிடம், ''என்ன ஆச்சு ஈகிள்... ஏன் இப்படி ரெண்டு, ரெண்டாக நட்டு வச்சுருக்கே?'' என, வியப்பும், சிரிப்புமாக கேட்டார், பாஸ்கர்.
அனைவரும் சுற்றி நின்று பரிகசித்துக் கொண்டிருப்பதை பற்றி, துளியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஒவ்வொரு குழந்தையையும் அவர்களது குணாதிசயத்துக்கு ஏற்ப, எதாவது ஒரு பெயரை வைத்துத்தான் கூப்பிடுவார், பாஸ்கர். குழந்தைகளும் அதை மிகவும் ரசித்தனர். தங்களுக்குள்ளும் அப்படியே கூப்பிட்டுக் கொண்டனர்.
மிகவும் அறிவான பெண், ருத்ரா. பாஸ்கர் தாத்தா மீண்டும், ''ஏய் ஈகிள், ரெண்டு ரெண்டா ஏன் வைச்ச?'' என்றார்.
அனைவரையும் ஒரு கழுகுப் பார்வை பார்த்தபடி, ''தாத்தா... வீட்ல, ஸ்கூல்ல எங்கேயுமே தனியாவே இருக்கக் கூடாது; யாராவது நல்ல, 'ப்ரெண்ட்ஸ்'களோட சேர்ந்தே தான் இருக்கணும்ன்னு நீங்க தானே சொன்னீங்க?'' என்றாள், ருத்ரா.
நங்கூர கேள்வில், சற்றே அயர்ந்து, தலையாட்டியபடி, ''ஆமா ஈகிள், சொன்னேன். உனக்கு மட்டுமில்ல எல்லாருக்குமே, எப்பவுமே நான் சொல்றது தானே அதுக்கென்ன?'' என்றார். ''அதான் ரெண்டு ரெண்டாக நட்டு வெச்சிருக்கேன்.''
அர்ஜுனனின் அம்பு போல அசத்தலாக இலக்கை, அங்கிருந்தவர்களின் இதயத்தை குத்தியது, அவளது பதில்.
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். திரும்ப திரும்ப ருத்ராவின் செயல், அவளது அப்பாவிற்கும் ஆச்சர்யமாக இருக்கவே, குழப்பமாக அவளையே உற்றுப் பார்த்தார்.
அதுவரை கேலி பேசிய குழந்தைகள், 'ஈகிள் சொன்னா சரியாத்தான் இருக்கும்...' என, அவளது செயலை ஆமோதிப்பது போல் மவுனமாகினர்.
''எனக்கு புரியலியே, முழுசா சொல்லு...'' என்றார், பாஸ்கர் தாத்தா.
தன் தலையில் லேசாக தட்டியபடி, ''அய்யோ தாத்தா, இது கூடவா புரியல... தனியா இருந்தா மரத்துக்கும் போரடிக்கும் தானே... கூட இன்னொரு மரம் இருந்தா, நல்ல, 'ப்ரெண்ட்ஸ்' ஆயிடுவாங்க. பேசறதுக்கு, விளையாடறதுக்கு, ஈசியா இருக்குமில்ல... அதான் ரெண்டு, ரெண்டா நட்டு வச்சேன்,'' என்றாள், ருத்ரா.
அவள் சொல்லச் சொல்ல, ஒரு கணம் அனைவருமே விக்கித்துப் போயினர். 'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?' என்று, திருவிளையாடல் படத்தில் வரும் அவ்வையார் மாதிரி இருந்தார்,
பாஸ்கர் தாத்தா.
அவளை வாரி அணைத்து உச்சி மோர்ந்து, ''அச்சோ குழந்தை... என்ன அறிவுடி உனக்கு செல்லம்...சமர்த்து சமர்த்து...'' என, அவள் கன்னத்தை தட்டி பாராட்டியபடி, பெருமையாக அனைவரையும் பார்த்தார்.
'என்ன... குழந்தைகளை சரியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் தானே... குழந்தைகளுக்கு, இயற்கை மீதான அபிமானத்தை, புரிதலை சரியாக தந்திருக்கிறேன் தானே?' என்று கேட்பது போல இருந்தது, அந்தப் பார்வை.
ருத்ராவின் அப்பா முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு தெரிந்தது. புருவங்களை உயர்த்தி, ஆச்சர்யத்தில் அவளைப் பார்த்து சிரித்தார்.
அன்றைய இயற்கைப் பாடத்தை, ருத்ரா சொல்லித்தர, இனிதே முடிந்தது மரம் நடும் நிகழ்ச்சி.
- முருகானந்தன்