/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து - முடக்கத்தான் கீரை
/
நம்மிடமே இருக்கு மருந்து - முடக்கத்தான் கீரை
PUBLISHED ON : செப் 01, 2024

கொடி வகையைச் சேர்ந்த தாவரம், முடக்கத்தான்; சிறந்த மருத்துவ மூலிகை கீரை. முடக்கத்தான் கொடியின் வேர், இலை, விதை ஆகிய அனைத்துமே, மருத்துவ தன்மை கொண்டவை. இது தன்னிச்சையாக வளரக் கூடியது.
சிலருக்கு, 40 வயதுக்கு மேல், இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். 'ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிசின்' ஆரம்ப நிலையாகவும் இருக்கலாம். இந்தியாவில், 65 சதவீத மக்களுக்கு இந்த மூட்டு வலி பாதிப்பு உள்ளது. இதற்கெல்லாம் சிறந்த நிவாரணம் முடக்கத்தான் கீரை தான்.
மூட்டுவலி பிரச்னை இருந்தால், துவக்கத்திலேயே, முடக்கத்தான் கீரையை எடுத்து கொண்டால், பூரண சுகமாகும். இதில், 'தாலைட்ஸ்' என்ற பொருள் உள்ளது. இது மூட்டுகளில் படிந்திருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து மூட்டுவலியை விரட்டுகிறது.
வைட்டமின், தாது உப்புகள் இருப்பதால், இதை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால், மலச்சிக்கல் குணமாகும். சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களை சீர் செய்யும். பாதிக்கப்பட்ட இடங்களில், முடக்கத்தான் இலையில் பற்று போட்டால் நிவாரணம் கிடைக்கும்.
ஜலதோஷத்தால் ஏற்படும் தலைவலியை போக்க, முடக்கத்தான் இலைகளை நன்றாகக் கசக்கி, வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால், தலைவலி சரியாகும்.
இக்கீரையை வதக்கிப் பிழிந்து, சாறை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட காது வலி, சீழ் வடிதல் முதலியன நீங்கும். மூல நோய்களுக்கும், இக்கீரை சிறந்த மருந்தாகும்.
முடக்கத்தான் கீரையை இடித்து, பிரசவிக்கும் நிலையிலுள்ள பெண்ணின் அடிவயிற்றில் கட்டுவதாலும், இலையின் சாறை பூசுவதாலும் சிறிது நேரத்திற்குள் சுகப்பிரசவம் ஆகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு, முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து அடிவயிற்றில் பூசி வந்தால், கருப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
முடக்கத்தான் இலைகளை எண்ணெயில் சேர்த்து தலைக்குத் தடவி வந்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
உடலில் புற்று செல்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதை தடுக்க, முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து சாப்பிட, புற்று நோயின் கடுமை குறையும். இதில், அதிகளவு ஆன்ட்டி ஆக்சிடெண்ட் நிறைந்துள்ளது. இவை, உடலில் செல் அழிவு ஏற்படாமல் காக்கும்.
வயிற்றுப்புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்னைகளை சரி செய்கிறது. தினமும் சிறிதளவு முடக்கத்தான் கீரையை உட்கொண்டு வந்தால், அல்சர் பிரச்னை விரைவில் முற்றிலுமாக குணமாகும்.
முடக்கத்தான் இலைகளை வெயில் படாமல் நிழலில் உலர வைத்து, பொடியாக்கி வைத்து கொண்டால், இருமலின் போது பயன்படுத்தலாம். சூடான சாதத்தில் நல்லெண்ணெய், உப்பு, முடக்கத்தான் பொடி சேர்த்து கலந்து சாப்பிடலாம். இளஞ்சூட்டு நீரில் இந்த பொடியை கலந்து குடித்தால், இருமல் கட்டுப்படும். குழந்தைகளுக்கும் தேனில் கலந்து நாவில் தடவி விடலாம்.
முடக்கத்தான் இலைகளை கைப்பிடி அளவு கொதிக்க வைத்து, க்ரீன் டீ போல் குடித்தால், உடல் சோர்வு மறையும்; லேசாக கசப்பு இருக்கும் என்பதால், தேன் சேர்த்து குடிக்கலாம்.
முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, அதை கட்டி வந்தால் மூட்டு வலி வீக்கம், வலியும் குறையும்.
- ஞான தேவராஜ்