sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

'மேக் அப்' உமன்!

/

'மேக் அப்' உமன்!

'மேக் அப்' உமன்!

'மேக் அப்' உமன்!


PUBLISHED ON : ஆக 18, 2024

Google News

PUBLISHED ON : ஆக 18, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



துள்ளிக் குதித்தோடும் கன்றுக் குட்டியைப் போல், காலம் ஓடியிருந்தது. எத்தனையோ மாற்றங்கள் உருவத்திலும், மனதிலும். கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தையே பார்த்தபடி இருந்தாள், லலிதா.

ஓடிய காலத்தால், அவள் இளமையை பெரிதாக மாற்றிச் செல்ல முடியவில்லை. 45 வயதைக் கடந்தும், இளமை, அவள் முகத்தில் தங்கி விட்டது. கரு கருவென்று நீண்டு வளர்ந்தக் கூந்தல். சுருக்கமே இல்லாத வட்ட முகம். உதட்டோரம் நிரந்தரமாய் தங்கி விட்ட புன்னகை, முகத்தையே பிரகாசப்படுத்தியது.

''மம்மி, மம்மி லலிதா மம்மி... எத்தனை முறை தான் கூப்பிடறது, கொஞ்சம் திரும்பிப் பாருங்க,'' அழைத்தாள், மூத்த மகள், ஷாலி.

''என்ன ஷாலி, சொல்லு!''

''மார்க் லிஸ்ட்ல, கையெழுத்து போட, மிஸ் உங்களை வரச் சொன்னாங்க. மதிய உணவு வேளை நேரத்தில் வந்துடுங்க,'' என்றாள், ஷாலி.

''ஓ.கே., வந்துட்டாப் போச்சு,'' என்றாள்.

அம்மாவையே பார்த்தபடி நின்றாள், ஷாலி.

''வேற ஏதாவது சொல்லணுமா கண்ணா?''

''நேற்று நான் சொன்னதுக்கு, சாரி மம்மி,'' என்றாள்.

''சரிடா கண்ணா, அதையெல்லாம் மறந்துடு.''

''ஸ்வீட் மம்மி...'' சிரித்தபடி ஓடும் மகளை பார்த்தாள், லலிதா.

நேற்று நடந்தது, நினைவில் வந்து நின்றது.

'மம்மி உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி சொல்லணும். உங்க தோழி, பானு ஆன்ட்டியோட பொண்ணு, என், 'க்ளாஸ் மேட்' தான். அவள் என்கிட்ட என்ன சொன்னா தெரியுமா? உங்களை, 'இன்சல்ட்' பண்ற மாதிரி இருந்துச்சு.

'மிஸ்கிட்ட, 'கம்ளைன்ட்' பண்ணினேன். மிஸ் அவளை, 'வார்ன்' பண்ணி, என்கிட்ட மன்னிப்பு கேட்க சொன்னாங்க. அவள் என்ன சொன்னான்னு கேட்க மாட்டீங்களா?'

'உனக்கு சொல்ல விருப்பமிருந்தா சொல்லு, ஷாலி...'

'உங்க அப்பா, துபாய்ல வேலை செஞ்சு அனுப்பற பணம், உங்கம்மா, 'மேக் அப்'புக்கே சரியாப் போய்டுமே, அப்புறம் சாப்பாட்டுக்கு என்னா பண்ணுவீங்கன்னு கேட்கறா. வீட்ல, பானு ஆன்ட்டி, உங்களை பற்றி இப்படிதான் பேசறதா அவ சொல்றா...'

'சரி, நீ என்ன சொன்ன?'

'மேக் அப் போடுறதும், போடாததும் எங்கம்மாவோட தனிப்பட்ட விருப்பம். அதைப் பற்றி பேசறதுக்கு, யாருக்கும் உரிமை இல்லேன்னு சொல்லிட்டேன்...'

மகளின் நினைவிலிருந்து வெளியே வந்து, பள்ளிக்கு கிளம்பினாள், லலிதா.

பள்ளி மைதானத்தில் வண்டியை நிறுத்தி, ஆபிஸ் அறை நோக்கி நடந்தாள், லலிதா.

''எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்...''

''நீங்க, ஷாலியோட மம்மி தானே... அப்படியே ஷாலிய பார்த்த மாதிரி இருக்கு. ரொம்ப நல்ல பொண்ணு, ஷாலி. வகுப்புல மத்த மாணவர்களிடம் ரொம்ப, 'ப்ரண்ட்லி'யா இருப்பா. நான் தான் ஷாலியோட வகுப்பு ஆசிரியை.

''ஆமா, மார்க் லிஸ்ட்ல, கையெழுத்து போடத்தானே வந்தீங்க. ஆபீஸ் அறையில் காத்திருங்க. மேடம் வந்துடுவாங்க. எனக்கு வகுப்புக்கு நேரமாகுது, ஷாலிகிட்ட நீங்க வந்திருக்கிறதா சொல்லிடறேன்,'' கேள்வியும், பதிலுமாய் பேசிய வேகத்தில் நடந்தார், அந்த ஆசிரியை.

பெற்றோர்களால் நிறைந்திருந்தது, வரவேற்பறை. காலியாய் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள், லலிதா. அத்தனை கண்களும் லலிதாவையே அளவெடுத்தன.

''ஹாய் லலிதா, எப்படி இருக்க... பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.''

''நல்லா இருக்கேன்; உன்னை தான் பார்க்க முடியல. ரொம்ப, 'பிசி'யோ?''

''ஆமாம்டி, அவர் சொந்தமா பிசினஸ் ஆரம்பிச்சதுல இருந்து நான், 'பிசி' ஆகிட்டேன். வீட்டையும், பிசினஸையும் ஒன்னா கவனிக்க முடியல. 'டென்ஷன்' தான் மிச்சம். உன்னை ஆபீஸ் அறையில கூப்பிடறாங்க, லலிதா. போயிட்டு வந்து காத்திரு. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.''

கையெழுத்தை போட்டு விட்டு வெளியே வந்தாள், லலிதா.

போனில் யாருடனோ கத்திக் கொண்டிருந்தாள், பானு.

''யாருடி போன்ல?''

''வேற யாரு, என்னை கட்டினது தான்...'' என்றாள், வெறுப்போடு.

''சரி, நீ இங்கேயே இரு; நான் போயிட்டு வரேன்.''

எரிச்சலோடு ஆபீஸ் அறை நோக்கி நடந்தாள், பானு.

பானுவும், லலிதாவும் ஒரே கல்லுாரியில் படித்தவர்கள் என்றாலும், அதிகம் பேசிக் கொண்டதில்லை. ஆபீஸ் அறைக்கு போன பானு, அதே எரிச்சலோடு திரும்பி வந்தாள்.

''என்னடி ஆச்சு, முகமெல்லாம் இப்படி வேர்த்திருக்கு?''

''நான் பெத்த சனியன், எல்லா பாடத்திலும் குறைஞ்ச மார்க் வாங்கினதுக்கு, என்னை கூப்பிட்டு திட்டினா, நான் என்ன பண்ணட்டும்?'' என்றாள், எரிச்சலோடு.

''சரி அதை விடு, நீ ஸ்கூட்டியில தான வந்த. அதுலயே என் வீட்டுக்குப் போவோம் சீக்கிரம்,'' பானுவின் முகத்தில், 'டென்ஷன்' தெரிந்தது.

பானுவின் மாடி வீட்டு முன் வண்டியை நிறுத்தினாள், லலிதா. வீட்டுக்குள் நுழைந்த உடன் ஏதோ நெடி மூக்கை தாக்கியது.

''உட்காருடி, ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்,'' என, பரபரப்பாய் சமையலறை நோக்கி நடந்தாள், பானு.

வீட்டை சுற்றி பார்வையை ஓட விட்டாள், லலிதா. சோபா முழுவதும் துணிகள் கலைந்து கிடந்தன. ஒழுங்காக அடுக்கப்படாத புத்தக அலமாரி, சுவரில் தொங்கும் ஒட்டடைகள், தரையெங்கும் திட்டுத் திட்டாய் சரியாக துடைக்கப்படாத கறைகள், எடுக்கப்படாத எச்சில் டம்ளர்களில் ஈ மொய்த்துக் கிடந்தன.

''இந்தா லலிதா, ஜூஸ் குடி!''

''தேங்க்ஸ் பானு... என்ன ஜூஸ் இது?'' சில்லென்று தொண்டையில் இறங்கிய ஜூஸில், இனிப்போ, புளிப்போ இல்லை.

''நன்னாரி ஜூஸ். டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல வாங்கினேன். சுவையே இல்லாம, பச்சைத் தண்ணி மாதிரி இருக்கு, ஏமாத்திட்டான்.''

''இதுல கொஞ்சம் லெமன் பிழிஞ்சு, சர்க்கரையும் கலந்து குடிச்சுப் பாரு, தேவாமிர்தமா இருக்கும். சரி இரு, நானே கலந்து கொண்டு வரேன்.''

லலிதா கலந்து கொடுத்த ஜூஸை ருசித்துக் குடித்தாள், பானு.

''இப்ப, சுவையா இருக்குடி!''

''சேர்க்கறத அளவா சேர்த்தா, எல்லாம் சுவையா தான் இருக்கும்.''

''இதெல்லாம் நல்லாப் பேசு, முக்கியமான விஷயத்துல கோட்டை விட்ரு.''

''என்ன சொல்ற?''

''உன்னை பற்றி, நம் தெருவுல என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியுமா?''

''தெரியும்!''

''தெரியுமா, என்னடி சொல்ற?''

''ஒருத்தர பற்றி பேசறதுக்கு, நல்ல விஷயமும் இருக்கு; கெட்ட விஷயமும் இருக்கு. அடுத்தவங்களை மட்டம் தட்டுவதற்காகவே, அவங்களை பற்றி தப்பா பேசறவங்க நிறைய பேர் இருக்காங்க.''

''தெரிஞ்சுமா அமைதியா இருக்க?''

''அமைதியா இல்ல, அவங்களை அலட்சியப்படுத்தறேன்; அவ்வளவு தான்,'' என்றாள்.

''இங்க பாரு லலிதா, நான் மத்தவங்க மாதிரி இல்ல; உன்னோட தோழி. உனக்கு நல்லதை மட்டும் தான் சொல்வேன், தெரிஞ்சுக்கோ.''

''சரி, சொல்லு.''

''இங்க, எல்லாரும் உன்னை தப்பா பேசறாங்க, லல்லி. வயசுப் பிள்ளைங்களோட அம்மா, நாம சரியா இருந்தா தானே, நம் பிள்ளைங்க ஒழுங்கா இருப்பாங்க.''

''உண்மை தான்.''

''என்னை பாரு, நான் உன்னை விட, ஒரு வயசு சின்னவ தான். என் முகத்துல ஏதாவது, 'மேக் அப்' தெரியுதா? பாரு, எவ்வளவு எளிமையா இருக்கேன்.

''உன்னை விட வசதியில உயர்ந்தவ தான். இருந்தாலும், உன்னை மாதிரி கழுத்துலயும், காதுலயும் நகையை போட்டுட்டா நடக்கறேன். நீ எப்படி இருக்கேன்னு கண்ணாடியில் பாரு,'' என்றாள்.

''எனக்கென்ன, நான் நல்லா தான் இருக்கேன்.''

''வயசுப் பிள்ளைங்கள வெச்சுருக்கிற நாம சரியா இருந்தா தான், நம் பிள்ளைங்க ஒழுங்க இருப்பாங்க. புருஷன் வெளி நாட்டுல இருக்கறப்போ, புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரி புடவைக்கு, 'மேட்சா' வித விதமா பிளவுஸ்.

''காதுல ஜிமிக்கி. அது இல்லாவிட்டால், பேன்சியா சுடிதார் போட்டுக்கிட்டு, நீ, ஸ்கூட்டியில் ஊரை சுத்திக்கிட்டு இருக்கிறதா பேசிக்கிறாங்க தெரியுமா?''

''நான், 'பேஷன் டிசைனிங்' படிச்சவ. 'பேன்சியா' அணிவது, என்னோட பேஷன். அதைப் பார்த்துட்டு அதே மாதிரி ப்ளவுஸ், சுடிதார் வேணும்ன்னு கேட்கறவங்களுக்கு, 'ஸ்டிச்' பண்ணித் தருவேன், அவ்வளவு தான்.

''என் வீட்டுக்காரர் வெளிநாட்டுல இருக்காரு. வீட்டுக்கு வேண்டிய எல்லாமே நான் ஸ்கூட்டியில் போய் தான் வாங்கிட்டு வரணும். இது கூட உனக்கு புரியாதா பானு...''

''நீ உன்னை மாத்திக்கணும்ன்னு தான் சொன்னேன்.''

''எதுக்கு என்னை மாத்திக்கணும். எங்க போனாலும், உன்னை மாதிரி நைட்டியோட போனா, நான் நல்லவ; புடவை கட்டி, 'டிசைன் பிளவுஸ்' போட்டுட்டு வந்தா, தப்பானவளா?

''முகத்தைக் கூட கழுவாம, கலைஞ்ச தலையோட இருந்தா, எதார்த்தமானவ; அதுவே நேரத்துக்கு குளிச்சு, நீட்டா உடை மாத்தி வெளிய வந்தா, தப்பானவளா. இதெல்லாம் உன்னை மாதிரி பெண்களோட பொறாமையின் வெளிப்பாடு.''

''நான் அப்படிப்பட்டவ இல்ல தெரிஞ்சுக்கோ,'' என்றாள் பானு, கோபமாக.

''உன் வீடு சொல்லுது, உன் மனசு என்னன்னு... எதுக்கெடுத்தாலும் கோபப்படறதையும், 'டென்ஷன்' ஆகறதையும் முதல்ல நிறுத்து. உன் மகளை விட, என் மகள் வாங்கின மார்க் குறைவு தான். அதுக்காக நான் அவளை திட்ட மாட்டேன்.

''ஏன்னா, அவளோட, 'கெபாசிட்டி' என்னன்னு எனக்குத் தெரியும். பசங்களை திட்டிக்கிட்டும், அவங்க முன்னாடி அடுத்தவங்களை குறை சொல்றதையும் நிறுத்திட்டு, ஒரு டாக்டரை போய் பார்த்து, கவுன்சிலிங் எடு.

''காமாலைக்காரனுக்கு பார்க்கறது எல்லாம் மஞ்சளா தான் தெரியும். உன் மனசு சரியானா, எல்லாமே சரியாத் தெரியும். நீ சொன்னதுல, எனக்கு வருத்தமில்லை; மகள் வர்ற நேரமாச்சு, சரி, நான் வீட்டுக்கு கிளம்பறேன்,'' என, சொல்லி விட்டு வெளியேறும் லலிதாவை, வெறித்த விழிகளோடு பார்த்தாள், பானு.

சுதாராணி






      Dinamalar
      Follow us