
''மாயா! ஸ்கூலுக்கு நேரமாகலையா?'' கேட்டாள், சாரு.
''வரேம்மா. டிரைவர் அண்ணா வந்தாச்சா?'' மாடியிலிருந்து இறங்கி வந்தாள், 12 வயது மாயா.
சமையல் செய்யும் மாமி, டேபிளில் தட்டை தயாராக வைத்திருந்தாள். பக்கத்திலேயே மதிய சாப்பாடு கூடை இருந்தது. அவசரமாக தோசையை சட்டினியில் தோய்த்து விழுங்கினாள், மாயா.
அந்த அவசரத்திலும், 'தோசையும், சட்டினியும் சூப்பர் மாமி...' என, சொல்ல மறக்கவில்லை.
''ஒரு பத்து நிமிஷம் முன்னால் தயாராகக் கூடாதா? இப்படி அள்ளி போட்டு ஓடினால் எப்படி ஜீரணமாகும்,'' என, கேட்டாள், சாரு.
''அம்மா! நாளையிலிருந்து ஒரு வாரத்துக்கு இன்னும் ஒரு டப்பா சாப்பாடு சேர்த்து அனுப்பும்மா.''
''என்ன ஆச்சு மாயா? சிறப்பு வகுப்பா?''
''இல்லைம்மா. என் சினேகிதி உஷாவின் அம்மா மருத்துவமனையில் இருக்காங்க. அவளுடைய அப்பாக்கு சாப்பாடு கட்டி அனுப்ப நேரமில்லை,'' என்றாள், மாயா.
''சரிம்மா. இப்போ நீ கிளம்பு'' என்றாள், சாரு.
டிரைவருக்கு குட்மார்னிங் சொல்லும் பெண்ணை, பெருமையுடன் பார்த்தாள், சாரு.
சங்கர் -- சாரு தம்பதியின் ஒரே பெண், மாயா. சங்கர், ஒரு பெரிய தொழிலதிபர். அமெரிக்காவில், பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு, அப்பாவின், டெக்ஸ்டைல் பேக்டரியை விரிவுபடுத்துவதில் மும்முரமாக இருப்பவர். தன் அப்பா, அம்மாவுடன் தான், சங்கர் வசித்து வந்தார்.
சிறு வயதிலிருந்தே நல்ல பண்புகளுடன், மாயாவை வளர்த்தனர். வேலை செய்பவர்களையோ, டிரைவரையோ ஒருநாள் கூட மரியாதை குறைவாக, அவள் நடத்தியதில்லை.
'மாயா! நீ நல்லா படித்து பெரிய ஆளாகணும்ன்னு நாங்க நினைச்சாலும், அதை விட, நீ ஒரு நல்ல மனுஷியாக வளரணும். உன்னோட படிப்போ, பணமோ உனக்கு தலை கனம் உண்டாக்கக் கூடாது. நீ மனிதர்களை அவர்களின் அந்தஸ்துக்காக இல்லை, குணத்திற்காக மதிக்கணும்...' இது அவளுக்கு, சங்கர் அடிக்கடி சொல்லும் உபதேசம்.
'அப்பா, உங்க மகள் நான். நீங்க உங்களுக்கு கீழே வேலை செய்யறவங்களைக் கூட எவ்வளவு மரியாதையாக நடத்தறீங்கன்னு, நான் பார்த்துட்டு தான் இருக்கேன். நான் உங்களை போல தான் இருப்பேன்...' என்பாள், மாயா.
மாயாவுக்கு அவளுடைய, 10வது வயதிலிருந்து, மாதம், 500 ரூபாய் பாக்கெட் மணி கிடைத்தது. இது, தாத்தாவின் உத்தரவு.
'தாத்தா! எனக்கு பணமே தேவையில்லை. எனக்கு தேவையானதெல்லாம் அப்பா, அம்மா தர்றாங்க...' என்பாள், மாயா.
'மாயா! பணத்தை எப்படி கையாளணும்ன்னு உனக்கு தெரியணும். உன் அப்பாவிற்கும் இதையே தான் செஞ்சேன். ஆனால், நீ என்ன செலவு செஞ்சேன்னு கணக்கு எழுதி, வாரா வாரம் அம்மாவிடம் காண்பிக்கணும். ஒருநாள் இதன் அருமையை நீ புரிஞ்சுப்பே...' என்றார், தாத்தா.
ரெண்டு ஆண்டுகளாக மாயாவுக்கு பணம் சேர்ந்து கொண்டிருந்தது. அது தவிர, பிறந்த நாள், தீபாவளி என, தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் கொடுக்கும் பணத்தையும் சேர்த்து வைத்தாள்.
'உனக்கு பணம் கொடுக்கிறது வேஸ்டு. அப்படியே இருக்கு. ஸ்கூல் கேன்டீனில் கூட எதுவும் வாங்கிக்க மாட்டியா?' என்பாள், சாரு.
'அம்மா! நீ வேணா பாரேன். ஒருநாள் இதுக்கு பெரிய தேவை வரும்...' என, சிரிப்பாள், மாயா.
ஒரு மாதம் ஓடியது. அன்று, ஸ்கூலிலிருந்து திரும்பிய மாயா, மவுனமாக டிபன் சாப்பிட்டாள்.
''ஸ்கூலிலிருந்து வந்தவுடன் லொடலொடன்னு பேசுவே. இன்னிக்கி என்ன ஆச்சு?'' எனக் கேட்டாள், சாரு.
''அம்மா! இன்னிக்கி கார்ல ஸ்கூலுக்கு போகும் போது, சில பசங்க ஸ்கூல் பையை துாக்கிட்டு நடந்து போனாங்க. நம்ம பக்கத்து தெரு முனையிலே இருக்கும், குப்பத்து பசங்கள். அரசு பள்ளியில் படிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்.
''பாவம்மா. சிலருடைய பை கிழிஞ்சிருந்தது. சிலருக்கு செருப்பு கூட இல்லை. நீ என்னோட வர்றீயா? குப்பத்துக்கு போய் பார்த்து, தேவையானதை வாங்கி குடுக்கலாம்மா,'' என்றாள், மாயா.
சாருவுக்கு பேச்சே எழவில்லை.
''அம்மா! உனக்கு நான் சொன்னது பிடிக்கலையா? ஏம்மா பதில் சொல்ல மாட்டேங்கற?'' என்றாள், மாயா.
''இல்லடா கண்ணா. உன்னை நினைச்சு ரொம்ப பெருமையாய் இருக்கு. கட்டாயமா போகலாம்,'' என, மாயாவை அணைத்துக் கொண்டாள், சாரு.
''ஆனா, ஒரு நிபந்தனை, அம்மா. என்னோட பணத்திலே தான் வாங்கணும்,'' என்றாள், மாயா.
அடுத்த சனிக்கிழமையே மாயாவும், சாருவும் குப்பத்துக்கு சென்றனர். அவர்கள் வாழும் சூழ்நிலையை பார்த்து, மாயாவுக்கு கண்ணில் நீர் நிரம்பியது.
மறுநாளே ஸ்கூல் பையும், தண்ணீர் பாட்டிலும் வாங்கி, அந்த குழந்தைகளுக்கு கொடுத்தனர். செருப்பு இல்லாத குழந்தைகளுக்கு செருப்பும் வாங்கி தந்தனர். தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அந்த குழந்தைகள் நன்றி கூறினர்.
''எனக்கு தமிழ் நல்லா தெரியும். நீங்க என்னோட தமிழிலேயே பேசலாம்,'' என்றாள், மாயா.
வீட்டிற்கு வரும் வழியில், ''மாயா! உனக்கு சந்தோஷம் தானே?'' எனக் கேட்டாள், சாரு.
''அம்மா! அந்த பசங்க முகத்திலே இந்த ஸ்கூல் பையையும், செருப்பையும் பார்த்து எவ்வளவு சந்தோஷம்மா. இது ஒரு சின்ன பரிசு தான். ஆனா, அவங்களுக்கு பெரிசாயிருக்கு? எனக்கு ஒரு யோசனை தோணுது. வாரத்திலே ரெண்டு நாள், நான், அந்த குழந்தைகளுக்கு இங்கிலீஷ், கணக்கெல்லாம் கத்து தரட்டுமா?'' என்றாள்.
''தாராளமா போ, மாயா. பாட்டியும், தாத்தாவும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. ஆனா, உன்னை தனியா அனுப்ப, பாட்டி சம்மதிக்க மாட்டாங்க. டிரைவர் அண்ணாவுடன் போ,'' என்றாள், சாரு.
மறுவாரமே மாயாவின் வகுப்பு, குப்பத்தில் ஆரம்பித்தது. ஒரு கரும்பலகையும், நாற்காலியும், நான்கு பெஞ்சுகளும் வாங்கிப் போட்டாள், சாரு.
குப்பத்துக் குழந்தைகள் ஆர்வமுடன் படித்தனர். ஆறே மாதத்தில் ஓரளவு ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தனர். பள்ளியில் அவர்கள் படிப்பிலும் நல்ல முன்னேற்றம் இருந்தது.
மாயாவிடம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர், அவர்கள். தங்கள் வீட்டில் காய்த்த பூசணிக்காய், கீரை, முல்லை, ரோஜா என, ஒவ்வொரு முறையும் மாயாவுக்கு கொடுத்தனர்.
''அப்பா! இதை விட சிறந்த பரிசு வேறென்ன இருக்கு? இந்த பசங்க புத்திசாலிங்க. அவங்களுக்கு தகுந்த சூழ்நிலையை நாம தான் உருவாக்கி தரணும். நீங்க ஒரு நாள் என்னோட அங்கே வரணும்பா,'' என, அப்பாவிடம் சொன்னாள், மாயா.
''கட்டாயமா வரேம்மா. என் பெண்ணோட மாணவர்களை நான் சந்திக்க வேண்டாமா?'' என்றார், சங்கர்.
''பெரிய காரில் வராதீங்கப்பா. அவங்களுக்கு ஏக்கத்தை உண்டு பண்ணக் கூடாது,'' என்றாள், மாயா.
''சரிங்க டீச்சர்,'' பெருமையுடன், மாயாவை தட்டிக் கொடுத்தார், சங்கர்.
மாதங்கள் ஓடின. தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று இரவு புல்வெளியில், 30 நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விருந்து நடக்கும். இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாளே மேஜை, நாற்காலிகள் போடப்பட்டு, சீரியல் பல்புகள் தொங்கவிடப்பட்டன.
மும்முரமாக ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள், மாயா. அவள் தாத்தா, பாட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை.
''சாரு, இது என்னம்மா புது வழக்கம்? தீபாவளி அன்னிக்கு தானே விருந்து?'' எனக் கேட்டார், தாத்தா.
''சர்ப்ரைஸ் தாத்தா. அம்மாவுக்கும், எனக்கும் மட்டும் தெரிந்த ரகசியம். பொறுத்திருந்து பாருங்கள்,'' என்றாள், மாயா.
பங்களா வர்ண விளக்குகளால் ஜொலித்தது. 7:00 மணிக்கு குப்பத்து ஜனங்கள் வர ஆரம்பித்தனர். சாப்பாடு வந்து இறங்கியது. ஜவுளிப் பைகள், மேஜை மேல் வைக்கப்பட்டன. அவர்கள் எல்லாரும் புல்வெளியில் உட்கார்ந்த பின், அப்பா, தாத்தா மற்றும் பாட்டியை வரவழைத்து அறிமுகப்படுத்தினாள், மாயா.
''என் அப்பாவை நீங்க ஏற்கனவே சந்திச்சிருக்கீங்க. இது, என் தாத்தா, பாட்டி. வாழ்க்கைலே நல்ல மனுஷனா இருப்பது தான் முக்கியம்ன்னு எனக்கு புரிய வைச்சவங்க. பணத்தின் உபயோகத்தை புரிய வைச்சவங்க.
''நாளைக்கு தீபாவளி. உங்க எல்லாருக்கும் தாத்தா, தன் கையாலே புது உடைகளும், பட்டாசும் கொடுப்பார். பிறகு, விருந்து சாப்பிட்டு விட்டு, மகிழ்சியுடன் தீபாவளி கொண்டாடுங்கள்,'' என்றாள், மாயா.
எல்லாருக்கும் ஆடைகள், பட்டாசு, பட்சணங்கள் அடங்கிய பைகளை கொடுத்தார், தாத்தா. அந்த விருந்து போல் அவர்கள் வாழ்க்கையில் சாப்பிட்டதில்லை. மாயாவுக்கும், அவள் குடும்பத்தினருக்கும் நன்றி சொல்லி அனைவரும் புறப்பட்டனர். அந்த குழந்தைகள் சார்பாக, ஒரு பெண் பேசினாள்.
''மாயா அக்கா கொடுத்த இந்த பரிசுக்காக மட்டுமல்ல. எங்களுக்கு வாழ்க்கைன்னா என்னன்னு புரிய வச்சு, படிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள செஞ்சதுக்கு, நாங்க என்னிக்கும் கடமை பட்டிருக்கோம்.
''நாங்க நல்லா படிச்சு முன்னேறுவோம். இந்த ஆண்டு தீபாவளியை உண்மையாகவே ஒளிமயமாக ஆக்கிய அக்காவுக்கு, நன்றி,'' என்றாள், அந்த பெண்.
''தாத்தா, அந்த பெண் எவ்வளவு அழகா பேசினா பாத்தீங்களா? முன்னுக்கு வரணும் என்ற ஆர்வத்தை துாண்டினால் போதும். இதுதான் உண்மையான படிப்பு, தாத்தா.
''அந்த குப்பத்தில் இருக்கும் ஒரு குழந்தை கூட, வீட்டு வேலைக்கோ, கூலி வேலைக்கோ போக மாட்டாங்க. இந்த தீபாவளி தான், என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒளிமயமான தீபாவளி,'' என்றாள், மாயா.
''மாயா! நீ எனக்கும் டீச்சர்தாம்மா,'' என்றாள், மாயாவின் பாட்டி.
''தாத்தா! நீங்க கொடுக்க ஆரம்பித்த பாக்கெட் மணிக்காக நன்றி. பல ஆயிரங்களாக சேர்ந்த அந்த பணம் தான், இப்போ ஒரு நல்ல காரியத்துக்கு பயன்படுகிறது,'' என்றாள் மாயா.
கண்கள் பனிக்க, தன் பேத்தியை அணைத்துக் கொண்டார், தாத்தா.
பானு சந்திரன்