sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பிள்ளை மனம்!

/

பிள்ளை மனம்!

பிள்ளை மனம்!

பிள்ளை மனம்!


PUBLISHED ON : ஜூலை 20, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 20, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணவன் முகத்தையே பார்த்தபடி இருந்தாள், கவிதா.

''என்ன, கவிதா நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லலை. நான் நல்லா யோசிச்சு தான், இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.''

''வேண்டாங்க. அவனுக்கு இன்னும் விபரம் பத்தாது. இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியலை. அண்ணன், தங்கச்சியாக விமலும், தான்யாவும் ஒருத்தர் மேல் ஒருத்தர் பிரியமாக இருக்காங்க. அதுவே நமக்கு போதுங்க.''

''புரியாமல் பேசாதே, கவிதா. விமல் நம் குழந்தை, நீ பெற்ற மகன். தான்யாவை, அவளுக்கு 2 வயது இருக்கும் போது, தத்து எடுத்து, வளர்த்து வருகிறோம். நல்ல வசதி வாய்ப்போடு இருக்கோம். இன்னொரு குழந்தை பெத்துக்கலாம்ன்னு நினைக்கும் போது, உனக்கு கர்ப்பப்பை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துச்சு.

''பரவாயில்லைன்னு மனசை சமாதானம் பண்ணிக்கிட்டு, பிரியத்தைக் காட்ட ஒரு பெண் வேண்டும்ன்னு, இரண்டு பேரும் முடிவு பண்ணி, முறையோடு தத்து எடுத்த பெண் தான், தான்யா.

''இன்னைக்கு வரைக்கும் இரண்டு பேர் மேலேயும், ஒரே மாதிரியான பாசத்தை கொட்டி வளர்க்கிறோம். நமக்கு எந்த குறையுமில்லை. இருந்தாலும் விமலுக்கு, 12 வயசு ஆகிடுச்சு. தான்யாவும், 5 வயது பெண்ணாக வளர்ந்துட்டா.

''நாம் கட்டாயம் உண்மையை சொல்லணும், கவிதா. 'தான்யா கூடப் பிறந்தவள் இல்லை; நாம் தத்து எடுத்த பெண்'ணுங்கிறதை, விமலுக்கு தெரியப்படுத்தணும்.

''நாளைக்கு பெரியவனானதும், வேறு யார் மூலமாக தெரிஞ்சுக்கிட்டா, பிரச்னை வரும். நம் சொத்தை பிரிக்கும் போது, இரண்டு பிள்ளைகளுக்கும் சரிசமமாக கொடுக்கணும்ன்னு நினைக்கிறோம். அதனால், விமலுக்கு உண்மையை இப்பவே சொல்றது தான், நல்லதுன்னு என் மனசுக்கு படுது.''

''விமல் தங்கச்சி மேலே பாசமாக இருக்கான். விபரம் தெரிந்ததும், அவன், தான்யாகிட்டேயிருந்து விலகிட்டால் என்னங்க செய்யறது?''

''பைத்தியம், அப்படியெல்லாம் நடக்காது. என்னைப் பொறுத்தவரை இது, அவன் உண்மையை தெரிஞ்சுக்க வேண்டிய வயது. பயப்படற மாதிரி எதுவும் நடக்காது. கவலைப்படாதே.''

கணவன் சொல்ல, குழப்பமான மனநிலையிலேயே இருந்தாள், கவிதா.

விமல், தான்யா ஸ்கூல் விட்டு வர, அவர்களுக்கு டிபன், காபி தந்தவள், ''தான்யா, உனக்கு, 'ஹோம் ஒர்க்' இருக்காம்மா,'' என, மகளை அன்போடு கேட்டாள்.

''அம்மா, நான் என் பிரெண்டு, நிஷா வீட்டில் போய் அவளோடு, 'ஹோம்- ஒர்க்' செய்யட்டுமா?'' என்றாள், தான்யா.

பக்கத்து வீட்டில் தான், நிஷா இருக்கிறாள்.

''சரிம்மா, உன் ஸ்கூல்-பேக்கை எடுத்துட்டு போ. சீக்கிரமாக வீட்டுக்கு வரணும் சரியா?'' என, மகளை அனுப்பி வைத்தாள், கவிதா.

''கவிதா, விமல் எங்கே?''

''உள்ளே அறையில் இருக்கான்.''

''சரி, அவனை அழைச்சுட்டு வா. தான்யாவும் வீட்டில் இல்லை. இதுதான் அவன்கிட்டே பேச சரியான நேரம்.''

கணவன் சொல்ல, மனசில்லாமல் மகனை அழைத்து வந்தாள்.

''என்னப்பா, கூப்பிட்டீங்களா, எனக்கு, 'மேக்ஸ் ஹோம் ஒர்க்' இருக்குப்பா.''

''இருக்கட்டும், விமல். நிறைய நேரம் இருக்கே. மெதுவா செய்யலாம். இப்படி அப்பா பக்கத்துல உட்காரு. உன்கிட்டே பேசணும்.''

மகனை பக்கத்தில் உட்கார வைத்து, அந்த பிஞ்சு முகத்தையே பார்த்தவர், ''அப்பா சொல்றதை நீ நல்ல விதமாக புரிஞ்சுக்கணும், விமல். நீ எங்களுக்கு மகனாகப் பிறந்தபோது, நானும், அம்மாவும் ரொம்பவே சந்தோஷப்பட்டோம்.

''உன்னைத் தாலாட்டி, சீராட்டி வளர்த்தோம். நீ தனியா வளரக் கூடாது. உன்னோடு வளர, நம் அன்பைப் பரிமாற இன்னொரு குழந்தை வேணும்ன்னு நினைச்சோம்.''

''அப்புறம், தான்யா பிறந்தாள்; அது தானேப்பா?''

''இல்லப்பா. தான்யா, எங்களுக்கு பிறந்தவள் இல்லை. பெத்தவங்க யாருன்னு தெரியாமல் ஆதரவில்லாமல் இருந்த, அந்த, 2 வயது குழந்தைக்கு, நானும், அம்மாவும் பெத்தவங்களாக இருக்கணும்ன்னு முடிவு பண்ணி, அவளை எங்க மகளாக வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தோம்.

''உன் தங்கச்சியாக இப்ப, அவள் நம் வீட்டில் வளர்ந்துட்டு இருக்கா. எங்க ஆசை என்ன தெரியுமா? நீ, உன் தங்கச்சிகிட்டே, எப்பவும் பாசமாக இருக்கணும். நீ பெரியவனான பிறகும் இந்த பாசம் மாறக் கூடாது.

''உன்கிட்டே உண்மையை மறைக்க வேண்டாம்ன்னு முடிவு பண்ணி, அம்மாவும், நானும் இதை உன்கிட்டே சொல்றோம். புரிஞ்சுக்க, விமல்.''

சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவன், ''சரிப்பா, எனக்கு, 'ஹோம் ஒர்க்' இருக்கு. நான் போய் 'மேக்ஸ்' போடறேன்,'' என, அந்த இடத்தை விட்டு எழுந்து போனான், விமல்.

கவலையோடு கணவனைப் பார்த்தாள், கவிதா.

''என்னங்க இது. நீங்க சொன்னதை கேட்டுக்கிட்டு எதுவும் சொல்லாமல் போறான். என்ன நினைக்கிறானோ தெரியலை. இதுக்கு தான் அவன்கிட்டே தெரியப்படுத்த வேண்டாம்ன்னு சொன்னேன். நாமே அவங்களுக்குள் பிரிவை உண்டாக்கிடப் போறோம்ன்னு பயமாக இருக்கு.''

''நான் சொன்னதில் தப்பில்லை, கவிதா. உண்மை தெரிஞ்சிடிச்சி இல்லையா. அதுக்கு தகுந்த மாதிரி அவனும் நடந்துப்பான். எதுவாக இருந்தாலும் சரி பண்ணிக்கலாம், கவிதா. நீ கவலைப்படாதே.''

மனைவியை சமாதானப்படுத்தினான், அவள் கணவன்.

அழுதுகொண்டே, தான்யா வர, அவள் கையைப் பிடித்து வேகமாக வீட்டிற்குள் அழைத்து வந்தான், விமல்.

''விமல் என்னாச்சு, ஏன் தான்யா அழறா?'' என, புரியாமல் கேட்டபடி, மகளை சமாதானப்படுத்தினாள், கவிதா.

''தான்யா, ரொம்ப மோசம்பா, நல்ல பழக்கமில்லை. இப்படியே விட்டால் அடுத்தவங்க பொருளை எடுக்க ஆரம்பிச்சிடுவா. அதான் முதுகில் இரண்டு வச்சு அழைச்சுட்டு வந்தேன்.''

''அப்படி என்ன செய்தா, விமல். ஏன் அவளை அடிச்சே. சின்னக் குழந்தை, எப்படி அழறா பார்,'' என, கோபமாக மகனைப் பார்த்தாள், கவிதா.

கலங்கிய கண்களோடு அருகில் நிற்கும் கணவனிடம், ''பார்த்தீங்களா, நான் பயந்த மாதிரி நடக்குது. விமல், தான்யா மேல் வெறுப்பைக் காட்ட ஆரம்பிச்சுட்டான்,'' என, கிசுகிசுத்த குரலில் சொன்னாள்.

''தான்யா என்னப்பா செய்தா. ஏன் அவள் மேல் உனக்கு இவ்வளவு கோபம்?'' என, கனிவான குரலில் மகனிடம் கேட்டார்.

''அப்பா, நிஷாவோட பென்சிலை எடுத்து, அவளுடையதுன்னு பேக்கில் வச்சுக்கிட்டாப்பா. நிஷா கேட்டும் தரலை. அப்புறம் நான், அவள் பேக்கில் இருந்த தான்யாவோட பென்சிலை எடுத்துக் கொடுத்து, இதுதான் உன்னோடது; அது நிஷாவோடது. அவக்கிட்டே கொடுன்னு சொன்னேன்.

''அடுத்தவங்க பொருளை எடுப்பது தப்பு தானேப்பா. இப்பவே அது தப்புன்னு சொல்லி கண்டிச்சா தானே, நாளைக்கு அந்த தப்பை செய்ய மாட்டா. அதனால்தான்பா, அவளை லேசாக முதுகில் தட்டி, 'இப்படியெல்லாம் அடுத்தவங்க பொருளை எடுக்கக் கூடாது. உனக்கு வேணும்ன்னா, அப்பா, அம்மாகிட்டே கேளு. வாங்கித் தருவாங்க'ன்னு சொன்னேன்.

''நான் செய்தது சரிதானேப்பா. தான்யா என் தங்கச்சிப்பா. நாளைக்கு யாரும் என் தங்கச்சியை தப்பா எதுவும் சொல்லக் கூடாது இல்லையா?'' என்றவன், தான்யாவின் அருகில் வந்தான்.

''தான்யா, நீ நல்ல பெண் இல்லையா. இனிமேல் இப்படி செய்யக் கூடாது. சரியா, வா. அண்ணன் உனக்கு சாக்லெட் தரேன். அண்ணன் அடிச்சது வலிச்சுதா?'' என, கேட்டபடி, தான்யாவை தன்னோடு அணைத்து அழைத்துச் சென்றான், விமல்.

''தான்யாவுக்கு, நல்ல அப்பா, அம்மா மட்டுமில்லை, பொறுப்பான அண்ணனும், கிடைச்சுட்டான். சந்தோஷம் தானே, கவிதா,'' என, மனைவியைப் பார்க்க, மனசில் இருந்த பாரம் குறைந்து, கணவனைப் பார்த்து புன்னகைத்தாள், கவிதா.

பரிமளா ராஜேந்திரன்






      Dinamalar
      Follow us