sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

போட்டி!

/

போட்டி!

போட்டி!

போட்டி!


PUBLISHED ON : பிப் 23, 2025

Google News

PUBLISHED ON : பிப் 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்மன் ஹோட்டல் உள்ளே போடப்பட்டிருந்த ஐம்பதிற்கும் குறைவான சேர்களிலும் பாதியளவே கூட்டம் நிரம்பி இருந்தது. ஓடியாடி சாப்பிட வந்தவர்களை கவனித்து கொண்டிருந்தான், ஹோட்டலின் மேனேஜர் கணேசன்.

பொம்மிடி எனும் அந்த கிராமத்துக்கு, சுற்றுவட்டாரத்திலிருந்து தினம் வரும் மக்களுக்கு பசியாற்ற தரமான ஹோட்டல் என்றால், இரண்டே இரண்டு தான். ஒன்று இந்த, அம்மன் ஹோட்டல். இன்னொன்று, இதன் எதிரில் இருந்த ஹோட்டல், சிவன்.

எதிரில் இருக்கும் ஹோட்டல் மட்டுமல்ல. இரண்டும் எதிரி ஹோட்டலும் கூட.

இரண்டு ஹோட்டல்களுக்கும் மத்தியில் போட்டி அதிகம். எதையாவது செய்து வாடிக்கையாளர்களை தங்கள் வசம் இழுக்க, இரண்டு ஹோட்டல்களுக்கும் இடையே போட்டியே நடக்கும்.

அந்த ஊருக்கு இட்லி, பொங்கல், பூரி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா தான் ஹோட்டல் உணவு. கூடவே சட்னி, சாம்பார், வடை, குருமா. இரவிலும் அதுவே.

மதியத்தில் வழக்கமான சாப்பாடு. சிக்கன், மீன், மட்டன் என, 'நான்-வெஜ்' வகைகளும் உண்டு.

''சார் வாங்க என்ன வேணும்?'' என, சாப்பிட வந்து உட்கார்ந்த ஒருவரிடம் கேட்டான், கணேசன்.

''ரெண்டு சப்பாத்தி,'' என்றார், அவர்.

''குமாரு, ரெண்டு சப்பாத்தி.''

''சரிண்ணே,'' என்றான், குமார்.

''சார் ஒரு நிமிஷம்,'' என்றார் சப்பாத்தி, 'ஆர்டர்' செய்தவர்.

''சொல்லுங்க சார்,'' என, பக்கத்தில் போனான், கணேசன்.

''தோசைக்கு என்ன எண்ணெய் உபயோகிக்கறீங்க? ஒரு, 'டேஸ்ட்'டும் இல்ல. நேத்தும், ரெண்டு நாள் முன்னாலயும், சிவன் ஹோட்டலில் சாப்பிட்டேன். தோசை என்ன, 'டேஸ்ட்' தெரியுமா? அவ்ளோ வாசனை. மொறு மொறுன்னு முறுகலா இருந்தது.

''சட்னி, சாம்பார், 'டேஸ்ட்' தனி. இன்னைக்கு அங்க பயங்கர கூட்டம். அதனால, இங்க வந்தேன். அந்தளவு, 'டேஸ்ட்' இல்ல. சப்பாத்தியாவது நல்லாருக்குமா?'' என, அவர் சொன்னதும் முகம் சுருங்கியது, கணேசனுக்கு.

''நல்லாருக்கும் சார். சாப்பிட்டு சொல்லுங்க,'' என்றவன், முதலாளி அழகேசன் உட்கார்ந்திருந்த கல்லா நோக்கி நடந்தான்.

கணேசன் பார்வை முழுவதும் எதிர் ஹோட்டல் மேலிருந்தது. இங்கு ஈயோடிக் கொண்டிருக்க அங்கே, பயங்கர கூட்டம்.

''என்ன, கணேசா. கூட்டத்தை காணோம். ஒரு வாரமாவே இப்டித்தானப்பா இருக்கு. எதிர்ல பார்த்தியா?'' என்றார், அழகேசன்.

''ம்ம்... பார்த்தேன். அவன் கூட்டத்தை வரவழைக்க என்னமோ செய்யறான், முதலாளி. நாமளும் புதுசா ஏதாவது செய்யணும். அப்பத்தான் அங்கிருக்கற கூட்டம் நம்ம பக்கம் திரும்பும்.''

''ம்... அதாம்பா நானும் யோசிக்கறேன். புதுசா என்ன பண்ணலாம்?''

''நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா, முதலாளி?''

''சொல்லு.''

''அதோ, அந்த சப்பாத்தி சாப்பிடறாரே, அவர் சொன்னார், எதிர் ஹோட்டல்ல தோசை, 'டேஸ்ட்'டா இருக்காம். அதில்லாம வாசனையும் நல்லாருக்காம்.''

''ஒரிஜினல் கடலை எண்ணெய்ல போடுவாங்கன்னு நினைக்கிறேன்,'' என்றார், அழகேசன்.

''ஆமா, நாம பாமாயிலில் போடறோம். நாமளும் கடலை எண்ணெய்க்கு மாறணும். அதில்லாம இன்னொரு யோசனை.''

''என்ன?''

''இப்போ நாம இட்லி, தோசை, பொங்கல் இதுக்கெல்லாம் தேங்காய் சட்னி, சாம்பார் மட்டும் தர்றோம். இது கூட ஒரு தக்காளி சட்னியோ, வெங்காய சட்னியோ, இல்ல புதினா, கொத்தமல்லி சட்னியோ, அந்த நேரத்துல எது விலை குறைவா இருக்கோ, அதை, 'எக்ஸ்ட்ரா'வா கொடுத்தா என்ன? போன வாரம் டவுனுக்கு போயிட்டு வந்த என் மச்சான், சாப்பிட்டு வந்து சொன்னான்.''

''நல்ல ஐடியா கணேசா. நாளையில இருந்தே ஆரம்பிச்சிடலாம்,'' என்றார், முதலாளி அழகேசன்.

அடுத்த நாளே, சுவையான தக்காளி சட்னி பரிமாற ஆரம்பித்தனர். ஒவ்வொரு நாள் ஒரு வகை சட்னி.

மூன்றே நாளில் விஷயம் பரவ, அம்மன் ஹோட்டலுக்கு கூட்டம் சேர ஆரம்பித்தது.

சிவன் ஹோட்டலில், காலை டிபன் வேளையில் வழக்கமாக வரும் கூட்டம் குறைய ஆரம்பித்தது. அம்மன் ஹோட்டலில் கூட்டம் சேர்வதை பார்த்த, சிவன் ஹோட்டல் முதலாளி, ஆறுமுகத்துக்கு காரணம் ஒன்றும் விளங்கவில்லை.

''எனக்கு தெரியும்ங்க,'' என்றான், சூப்பர்வைசர் மாரிமுத்து.

''என்ன விஷயம்?''

''காலையிலயும், ராத்திரியிலயும் டிபன் வகைகளுக்கு கூடுதலா, 'வெரைட்டி' சட்னி தர ஆரம்பிச்சிருக்காங்க. அதோட, 'டேஸ்ட்' மக்களுக்கு புடிச்சு போயிருச்சி. அதான் காரணம்.''

''நம்ம கிராமத்து பக்கம் சட்னி, சாம்பார் மட்டும் தானே தர்றது வழக்கம்?''

''அதை மாத்திதான் வித்தியாசமா மூணாவதா ஒரு சட்னி தர்றாங்க,'' என்றான், மாரிமுத்து.

'நாமளும் ஏதாச்சும் செஞ்சாகணுமே. என்ன செய்யலாம்?' என, யோசித்தவன், ''ஒரு யோசனை தோணுது, மாரிமுத்து,'' என்றார், ஆறுமுகம்.

''என்னங்க?''

''மதியம், அளவு சாப்பாடு கொடுக்கறோம்ல. இனிமே அதை, 'அன்லிமிடெட்' சாப்பாடா மாத்துவோம். இப்போ சாப்பாட்டுக்கு சாம்பார், ரசம், காரக்குழம்பு மட்டும் தருவதை, இனிமே பருப்பு பொடி, நெய் சேர்த்து தருவோம். எல்லாம் அதே பழைய விலையிலேயே,'' என்றார், ஆறுமுகம்.

''நல்ல யோசனை தான். ஆனா கட்டுப்படியாகுமா, 'அன்லிமிடெட்' சாப்பாடு அதே விலையில போட்டா?''

''தாராளமா, மாரிமுத்து. உனக்கு மனுஷ மனச பத்தி தெரியாது. எதுலயுமே கட்டுப்பாடு இருந்தா தான், அத மீற பார்க்கும். 'அன்லிமிடெட்'ன்னு சொன்னா எவ்வளவு அதிகமா சாப்பிட போறாங்க? அதிகமா போனா ஒரு கிண்ணம்? எவ்வளவுனாலும் சாப்பிடலாம்ன்னு சொன்னா சாப்பிடவே தோணாது. என்ன லாபத்துல கொஞ்சம் குறையும். பார்த்துக்கலாம்.''

''சரிங்க.''

''பெயின்டர் செல்வனுக்கு போன் செய்து, இரவே, 'போர்டு ரெடி' பண்ணிட சொல்லு. நாளைக்கு காலையில 10:00 மணிக்கெல்லாம் ஹோட்டல் முன்னால, 'போர்டு' இருக்கணும்.''

அடுத்த நாள் காலை. 11:00 மணி. காலை டிபன் நேரம் முடிந்து, அன்று நல்ல கலெக்ஷன் என்பதால், சந்தோஷமாய் சேரில் உட்கார்ந்திருந்தான், அழகேசன். தற்செயலாய் திரும்பி, எதிர் ஹோட்டலை பார்த்தவனுக்கு துாக்கி வாரிப்போட்டது.

'இன்று முதல் சாப்பாடு, 'அன்லிமிடெட்' அதே விலையில்!' என, புதிதாய் முளைத்திருந்த, 'போர்டு' தான் காரணம்.

பகீரென்றிருந்தது அழகேசனுக்கு. கண்டிப்பாக வியாபாரம் குறையும் என, தெரிந்து போனது.

அன்று மதியமே விடை தெரிந்து போனது. தினம் போகும் சாப்பாட்டில் கால்வாசி கூட, அன்று சாப்பிட வரவில்லை.

சிவன் ஹோட்டலிலும் இவர்களை போலவே கூடுதலாய் ஒரு சட்னி டிபனுக்கு கொடுக்க ஆரம்பிக்க, டிபனுக்கு வந்த கூட்டமும் இரண்டாக பிரிய ஆரம்பித்தது.

''என்ன முதலாளி. ரொம்ப குறைஞ்சிட்டாங்க, மதியம் சாப்பிட வர்றவங்க. எப்படி சமாளிக்கறது,'' என முதலாளி அழகேசனிடம் கேட்டான், கணேசன்.

''வேற வழியில்லப்பா. நாமளும், 'அன்லிமிடெட்' பண்ணி தான், ஆகணும். இன்னொன்னு, சாப்பாட்டுல இன்னும் கொஞ்சம், 'டேஸ்ட்' அதிகம் பண்ணணும்பா.

''எல்லா பொருளும் தரமானதா வாங்கி கொடு,'' என, தலையை குனிந்தபடி ஏதோ யோசித்துக் கொண்டே சொன்னவன், திடீரென, ''ஒரு புது ஐடியா தோணுது, கணேசா. நம்மூரு பக்கம் சிறுதானிய சாப்பாடு எங்கயும் கிடைக்கறதில்ல. தினை, சாமை, வரகுல சாப்பாடு கொடுத்தா என்ன?'' ஆர்வமாக கேட்டான், அழகேசன்.

''ஓடுமா முதலாளி?''

''கண்டிப்பா ஓடும்பா. நம்ம ஊரை சுத்தி இருக்கற வயசானவங்க, சின்ன வயசுல இதைத்தான சாப்பிட்டு வளர்ந்தாங்க. இப்போ கிராமங்கள்ல இந்த சாப்பாடுலாம் கிடைக்கறதில்ல. அதனால, இதை சாப்பிட விரும்புறவங்க கண்டிப்பா வருவாங்க. அதே மாதிரி சின்ன வயசுக்காரங்க, அதோட, 'டேஸ்ட்' எப்படி இருக்குங்கற ஆர்வத்துல சாப்பிடுவாங்க.''

''சரிதான் முதலாளி. ஆனா, செலவு அதிகமாகுமே...''

''சாப்பாடு, 50 ரூபாய்க்கு விக்கறோம். இதுக்கு, 70 ரூபாய் போடுவோம்.''

இரண்டே நாளில் விளம்பரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, சிறுதானிய உணவுகளுக்கு அப்படி ஒரு வரவேற்பு.

''இந்த தினை, வரகு, சாமை சாப்பாடெல்லாம் நான், சின்ன வயசுல சாப்பிட்டது, தம்பி. கிடைக்குமான்னு ஏங்கிட்டு இருந்தேன். ஒரு பார்சல் கொடுங்க, தம்பி. உடம்புக்கும் ஆரோக்கியம்,'' என்றார், ஒரு பெரியவர்.

''எனக்கும்,'' என்றார், சாப்பிட்ட இன்னொருவர்.

எதிர்பார்த்தபடியே நல்ல வரவேற்பு இருக்க, அதற்கு தனியாக ஒரு சமையல் ஆளையே போட்டு விட்டார். அழகேசன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

ஒரு வாரம் கடந்தது. காலை டிபன் வேலை. வாடிக்கையாளர்களை கவனித்துக் கொண்டிருந்த அழகேசன் கண்களில் பட்டான், எதிர் ஹோட்டலின் முன்பு நின்று கொண்டிருந்த அந்த பையன். 15 வயதிருக்கும்.

'சார் வாங்க சார். வாங்கண்ணா. சாப்ட்டு போலாம். வீட்டு சாப்பாடு மாதிரியே இருக்கும், வாங்க சார். இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி மூணு வகை சட்னியோட கிடைக்கும். வாங்க சார்...' ஹோட்டலின் முன்பாக நின்று, சத்தமாக கூவி குரல் கொடுத்துக் கொண்டிருந்தான்.

''பார்த்தியா கணேசா?'' என்றான், அழகேசன் பக்கத்தில் வந்த கணேசனிடம்.

''எல்லாம் ஒரு விளம்பரம் தான் முதலாளி,'' என்ற, கணேசன் உள்ளே போய் விட்டான்.

மதியம், சாப்பாடு வேளை வந்தது. பையன் சத்தம் போட்டபடியே இங்கு வந்த, வாடிக்கையாளர் இருவரை அந்த ஹோட்டலுக்கு கூட்டிப் போனான்; அதை பார்த்த கணேசனுக்கு கோபம் வந்தது.

''டேய், இப்ப என்ன பண்ண? எங்க ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவரை எதுக்கு உங்க ஹோட்டலுக்கு கூட்டிட்டு போற?'' என, பையனிடம் கோபமாக கேட்டான்.

''அவங்களா தான் வந்தாங்க. நான் ஒண்ணும் கைய புடிச்சி கூட்டிட்டு போகல,'' என்றான், அவன்.

''நான் பார்த்தன்டா. நீ கூட்டிட்டு தான் போன.''

சிவன் ஹோட்டல் முதலாளி ஆறுமுகம் வெளியே வந்தார்.

ஆறுமுகம் கோபமாய் பேச, பதிலுக்கு கணேசனும் கோபமாக பேச, வீதியில் சண்டை போட்டுக் கொண்டனர்.

அதற்குள் வெளியில் போயிருந்த, அழகேசன் வந்துவிட எல்லாம் சொன்னான், கணேசன்.

''நீ வா, பார்த்துக்கலாம். விடு, விடு,'' என, சமாதானப்படுத்தி, கணேசனை அழைத்து சென்றான், அழகேசன்.

ஒரு மாதம் அமைதியாய் போனது.

அன்று ஞாயிறும், அதற்கடுத்த நாளும், சிவன் ஹோட்டல் திறக்கவில்லை. அழகேசனுக்கும், கணேசனுக்கும் ஆச்சரியம்.

அடுத்த நாள், ''முதலாளி. எதிர் ஹோட்டல மூடப் போறாங்களாம். சொந்த ஊரு பாப்பிரெட்டிப்பட்டிக்கே போய் திறக்கப் போறாங்களாம். இனி போட்டி இருக்காது,'' என்றவன், அழகேசனிடம் அந்த சந்தோஷத்தை எதிர்பார்த்தான், கணேசன்.

அழகேசன் முகத்தில் சந்தோஷமில்லை. அதிர்ச்சி தான் இருந்தது.

''தப்பு, கணேசா. வாழ்க்கையில போட்டின்னு ஒண்ணு இருக்கணும். அதுதான் நம்மள முன்னேற வைக்கும்; ஜெயிக்க வைக்கும். நம்ம திறமை என்ன, நம்ம, 'வீக்னஸ்' எதுன்னு நமக்கே நம்மை உணர வைக்கும். நம்மை நிலை நிறுத்திக்கவும், மேலும் புதுசு, புதுசா ஏதாவது பண்ணி முன்னேறவும் போட்டி இருக்கணும், கணேசா.

''அதான் சுவாரஸ்யம். நாம ஜெயிக்கறோம்; இல்ல தோக்கறோம். அது வேற. நாம தொடர்ந்து ஓடிட்டே இருக்க, போட்டி அவசியம். போட்டி இல்லாட்டி, நாம தேங்கி நின்னுடுவோம். அது நமக்கு நல்லதில்ல. ஒரு அலட்சியம் வந்துடும். அது, நம்ம வளர்ச்சிக்கு நல்லதில்ல.

''நம்மள அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறதே, சரியான, வலுவான போட்டி தான். போர் இல்லாத இடத்துல அமைதி இருக்காது. போட்டி இல்லாதவன் வாழ்க்கையில முன்னேற்றம் இருக்காது, கணேசா.

''ஓட்டப் பந்தயத்துல, 10 பேரை ஓடி ஜெயிச்சவனுக்கு இருக்கற சந்தோஷமும், பெருமையும், அஞ்சு பேர் மற்றும் மூணு பேர் மத்தியில ஓடி ஜெயிச்சவனுக்கு இருக்காது. போட்டியே இல்லாம ஓடுறவனை, யாரும் கண்டுக்க கூட மாட்டாங்க. வாழ்க்கையும் அப்படிதான்.

''எதிர் ஹோட்டல் இல்லாதது எனக்கு சத்தியமா சந்தோஷம் தரல. சோர்வையும், அயற்சியையுமே தருது. அது சாப்பிட வர்றவங்களுக்குமே நல்லதில்லை,'' என, விரக்தியான குரலில் சொன்னான், அழகேசன்.

அடுத்த மாதத்தில் ஒருநாள், வேகமாய் வந்த, கணேசன், ''முதலாளி, எதிர்ல புதுசா ஹோட்டல் திறக்கப் போறாங்களாம். அடுத்த வாரம், 'ஓப்பன்' ஆகப் போகுது,'' என்றதும், ''அப்படியா?'' என்ற, அழகேசன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்திற்கான காரணம், கணேசனுக்கு தெரிந்தே இருந்தது.

கே. ஆனந்தன்






      Dinamalar
      Follow us