
தோழி சுதாவை அவசரமாக போனில் அழைத்து, ''சுதா, நாம அடிக்கடி சந்திக்கிற, ஷீலா கபேக்கு ஆபிஸ் முடிச்சிட்டு வந்துருடி,'' என்று பரபரப்பாக கூறி, போனை வைத்தாள், கவிதா.
சுதாவும் ஆபிஸ் முடிந்து அவசரமாக, ஷீலா கபேவிற்கு சென்றாள்.
''நம்ம பள்ளி தோழி, ராதிகாவை உனக்கு தெரியும்ல. அவ, இப்ப சென்னையில தான் இருக்கா. கல்யாணம் செய்து கொள்ளாமல், தனியா வாழ்ந்துகிட்டு இருக்கா,'' என்றாள், கவிதா.
ராதிகாவின் பெயரைக் கேட்டவுடன், ஆச்சரியம் தாங்காமல், ''எப்படி... எங்கே?'' என்று கேள்விகளை எழுப்பினாள், சுதா.
''அது பெரிய கதைடி. அப்புறம் சொல்றேன். முதல்ல பிளானை கேட்டுக்க. ராதிகா, நம்ம படிப்புக்கு நிறைய உதவி செஞ்சிருக்கா. அவ உதவி இல்லேன்னா, நாம இந்த அளவுக்கு வந்திருக்க மாட்டோம். சரி தானே,'' என்று கேட்கவும், சுதாவும், ஆமாம் என்பது போல் தலையாட்டினாள்.
''ராதிகாவின் தனிமையை போக்க, என் வீட்டில் கொஞ்ச நாளும், உன் வீட்டில் கொஞ்ச நாளும் வைத்துக் கொள்ளலாம், சரியா,'' என்று, கவிதா கேட்க, சுதாவும், சரியென பலமாக தலையாட்டினாள்.
''அவளுக்கு குடும்பத்தின் பாசம் என்னன்னு தெரியப்படுத்தணும்டி. அப்படி செஞ்சா அவளுக்கு ஆறுதல் கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்,'' என்று கூறி, 'ஆர்டர்' கொடுத்த காபியை குடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினர்.
மறுநாள், கவிதாவின் பெண் வானதி, மாடியில் ஏறும்போது கால் இடறி கீழே உருண்டு விழுந்தாள். காலில் பலத்த அடி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்தாள், கவிதா.
ராதிகாவுக்கு போன் செய்தாள், கவிதா.
புது எண்ணை பார்த்தவுடன், யோசனையோடு போனை எடுத்தவளுக்கு, கவிதாவின் குரல் கேட்டவுடன், ''ஏய் நீ, கவிதா தானே?'' என்று ஆச்சரியமாக கேட்டாள், ராதிகா.
''பரவாயில்லை, பல ஆண்டுகள் கழிந்தும், என் குரலை ஞாபகம் வைச்சிருக்கியே...'' என்றாள், ஆச்சரியத்துடன், கவிதா.
பிறகு, இருவரும் குசலம் விசாரித்து, ''ராதிகா, உன் உதவி எனக்கு இப்போது தேவைப்படுகிறது,'' என்று நடந்ததை கூறி, ''நீ உடனே மருத்துவமனைக்கு வந்து விடு,'' என்று போனை வைத்துவிட்டாள், கவிதா.
உடனே, மருத்துவமனைக்கு தன் காரில் வந்து சேர்ந்தாள், ராதிகா.
ராதிகாவை வாசலிலேயே வரவேற்று, தன் மகள் வானதியை அறிமுகப்படுத்தினாள், கவிதா.
வானதி என்ற பெயரை கேட்டவுடன், கவிதாவிடம், ''இன்னும், ராஜராஜ சோழனின் பைத்தியம் தெளியாமல் தான் உன் பெண்ணிற்கு, வானதி என்று பெயர் வைத்துள்ளாயா,'' என்று ஆனந்தமாக பழைய நாட்களை நினைவு கூர்ந்தாள், ராதிகா.
''சரி... நான், வானதியை பார்த்துக் கொள்கிறேன். நீ ஆபிசுக்கு கிளம்பு,'' என்று உரிமையோடு அவளை வெளிப்புறம் தள்ளி விட்டாள், ராதிகா.
அன்றிலிருந்து, மூன்று நாட்கள், வானதியை கண்ணும், கருத்துமாக கவனித்து உதவி செய்தாள், ராதிகா.
சுதாவிடம் இருந்து, கவிதாவுக்கு போன் வந்தது. போனை உடனே ராதிகாவிடம் தந்து, ''யார் அழைக்கிறாங்கன்னு பார்,'' என்றாள், கவிதா.
மொபைலில், சுதாவின் பெயரை பார்த்தவுடன் மிகவும் ஆனந்தமாகவும், சந்தோஷமாகவும் சுதாவிடம் பேசினாள், ராதிகா.
''ராதிகா இப்போது எனக்கும் உன் உதவி தேவைப்படுகிறது. நாளை நீ, என் வீட்டுக்கு வருகிறாயா?'' என்றாள், சுதா.
ராதிகாவும் வருவதாக தெரிவித்து, மறுநாள் காலை சுதாவின் வீட்டிற்கு சென்றாள்.
கதவு திறந்தவுடன் பிறந்து சில நாட்களே ஆன, பச்சிளம் குழந்தையின் குரல் ஒலி, தேவகானமாக ராதிகாவுக்கு கேட்டது.
உள்ளே சென்று, கை கால்களை நன்கு சுத்தம் செய்துவிட்டு, சுதாவிடம் கூட பேசாமல் தொட்டிலில் இருந்து குழந்தையை எடுத்து, வாரி அணைத்துக் கொண்டாள். பிறகு, சுதாவிடம், ''குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளாய்,'' என்றாள், ராதிகா.
''நீ ஸ்கூலில் படிக்கும்போது எனக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்க. ஆகவே, என் பேத்திக்கு உன் பெயரை தான் வைத்துள்ளேன்,'' என்று கூறினாள், சுதா.
அதைக் கேட்டவுடன், ''இனி இந்த, ராது குட்டியை நானே பார்த்துக் கொள்கிறேன். சரியா,'' என்று சுதாவிடம் ஆனந்தம் பொங்க கூறினாள், ராதிகா.
சுதாவும் சம்மதம் தெரிவிக்க, ராது குட்டியை கண்ணும், கருத்துமாக கவனிக்க ஆரம்பித்தாள், ராதிகா. அத்துடன், குழந்தை பெற்றவளுக்கு கொடுக்க வேண்டிய பத்திய உணவு வகைகளையும், தேவையான கை மருந்துகள் மற்றும் உணவு வகைகளை கவனமுடன் செய்து கொடுக்க ஆரம்பித்தாள்.
இவ்வாறு, இரண்டு மாதங்கள் போனது கூட தெரியாமல், சுறுசுறுப்பாக வேலை செய்தாள், ராதிகா. இதை பார்த்து, சுதாவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் சந்தோஷமடைந்தனர். மேலும், ராதிகாவை குடும்பத்தில் ஒருவராக நினைத்து நன்றாகவும், சகஜமாகவும் பழக ஆரம்பித்தனர். பிறகு, ராதிகா தன் வீட்டிற்கு கிளம்ப தயாரானாள்.
அப்போது, சுதாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும், ''நீங்கள் ஒருநாள் என் வீட்டிற்கு அவசியம் வர வேண்டும்,'' என்று அன்பு கட்டளையிட்டு புறப்பட்டுச் சென்றாள், ராதிகா.
ஒருவாரம் கடந்த நிலையில், சுதா மற்றும் கவிதாவின் குடும்பத்தினர் அனைவரும், ராதிகாவை சந்திப்பதற்காக அவள் வீட்டிற்கு சென்றனர்.
சுதாவும், கவிதாவும் ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் வழியில், 'நீ, கவனிச்சியா சுதா, ராதிகாவின் அன்பும், அக்கறையும், கவனிப்பும் எவ்வளவு ஆத்மார்த்தமாக இருந்ததுன்னு. அப்போ அவளுக்கும் இந்த மாதிரி தனக்கொரு குடும்பம் இருந்தா நல்லா இருக்கும்ன்னு நினைச்சிருப்பா இல்லையா?
'அவளது தனிமையை போக்க, நாம் எதாவது முயற்சி செய்யணும்டி. அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கணும்...' என்று, ராதிகாவின் வீட்டை அடையும் வரை பேசிக் கொண்டே வந்தனர்.
ராதிகாவின் பிரமாண்டமான வீட்டை அடைய, காவலர்கள் அவர்களை வரவேற்று, கேள்விகள் கேட்டு, அதன் பின்னரே உள்ளே அனுமதித்தனர்.
இதைப் பார்த்த இரு குடும்பத்தினரும், 'எதற்காக இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகள்...' என்று நினைத்தனர்.
சந்தோஷத்துடன், அனைவரையும் வரவேற்றாள், ராதிகா. ராதிகாவின் வீட்டை சுற்றிப் பார்த்தவுடன் அவள் வகித்த பதவியும், அவள் வாங்கிய பதக்கங்களும், அவளது பெருமையை எடுத்துக் காட்டின.
'என்னடி நீ, வன இலாகாவில், இவ்வளவு பெரிய பதவியிலேயா இருந்தே?' என்று, ஆச்சரியமாக கேட்டனர், சுதாவும், கவிதாவும்.
''நான் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் உயர் பதவி வகித்து, தற்போது ஓய்வு பெற்று சென்னை வந்துள்ளேன். அங்கு பணிபுரியும் போது, சுற்றுப்புற கிராம மக்களுக்கு மற்றும் மலைவாழ் மக்கள், நல்ல முறையில் வாழ, பல உதவிகள் செய்துள்ளேன். அந்த மன நிறைவே எனக்கு திருப்தியாக உள்ளது,'' என்றாள், ராதிகா.
''நீ, இனிமே எத்தனை நாள் தான் தனிமையில் இருக்க போற. நீ, எங்கள் வீடுகளில் இருந்த போது நாங்கள் உன்னை கவனித்தபடி தான் இருந்தோம். உனக்கும், இதே மாதிரி குடும்பம் வேணும்ன்னு நினைத்திருப்பாய் அல்லவா?'' என்று கேட்டாள், கவிதா.
''நான் தனியாக இருந்தாலும் தனிமையை உணர்ந்ததில்லை. தனி என்பது வேறு; தனிமை என்பது வேறு,'' என்றாள், ராதிகா.
தோழிகளின் கணவர்களும், 'பெண்ணுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு துணை தேவை. உங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு துணையை நாங்கள் பார்க்கலாமா?' என்று அக்கறையுடன் கேட்டனர்.
''இதைப்பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம். இப்போது மதிய உணவு தயாராக உள்ளது,'' என்று, புன்னகையுடன் ராதிகா கூறி, அனைவருக்கும், அவளே உணவு பரிமாறினாள். அனைவரும் திருப்தியாக உணவு உண்டனர்.
அப்போது அனைவரிடமும், ''நான் எதுக்காகவும் ஏங்கலை. எனக்கு கிடைச்ச வாய்ப்பை மிகச் சரியாக, ஆத்மார்த்தமாக செய்வது என் வழக்கம். அதுவும் உங்கள் இருவரின் குழந்தைகளும் என் குழந்தைகள் போல் தான் நினைத்து வேலைகள் செய்தேன். நான் எப்பவும் திருமணம் செய்து கொள்ளவில்லையே என்று வருத்தப்பட்டது கிடையாது.
''ஒரு பெண்ணுக்கு, ஆண் துணை தேவைன்னு நினைக்கிறது, இந்த சமூகம் தான். அதையே பிடித்து, நாம் தொங்கிக்கிட்டு இருக்கோம்,'' என்று, ராதிகா சொல்லும் போது, ''தனிமரம் தோப்பாகாது அல்லவா?'' என்றார், கவிதாவின் கணவர்.
''தோப்பு என்பது, பல மரங்களின் தொகுப்பு தான். அதில், நான் ஒரு மரம், சுதா ஒரு மரம், கவிதா ஒரு மரம், அதேபோல், நீங்கள் அனைவரும் ஒவ்வொரு மரம் தான். அனைவரும் சேர்ந்தால் அது ஒரு தோப்பு. அதைத்தான் கூட்டு குடும்பம் என்கின்றனர்.
''சுதா... நீ பள்ளியில் படிக்கும் போது, மலையேற்ற வீராங்கனையாக வர வேண்டும். மேலும், நம் கலாசாரத்தை தெரிந்து கொள்ள அனைத்து ஊர்களையும் சுற்றி பார்க்க வேண்டும் என்று கூறுவாயே அதில் ஒன்றையாவது உன்னால் சாதிக்க முடிந்ததா?
''கவிதா... நீ பள்ளியில் படிக்கும் போது, பரதநாட்டியம் முதல் அனைத்து வகை நாட்டியங்களையும் கற்று, 'டான்ஸ் மாஸ்டர்' ஆக புகழ்பெற வேண்டும் என்று அடிக்கடி கூறுவாயே. அதை உன்னால் சாதிக்க முடிந்ததா...'' என்று கேட்டாள்.
இதைக் கேட்ட, சுதாவின் கணவருக்கும், கவிதாவின் கணவருக்கும் தம்மை யாரோ சாட்டையால் அடித்தது போல் உணர்ந்தனர்.
''பெண்கள் என்றாலே, 'வீக்கர் செக்ஸ்' என்று சொல்லி, அவர்களை கீழே தள்ளத்தான் பார்க்கிறது, இந்த சமூகம். பெண்கள் முன்னேறுவதை இந்த சமூகம் விரும்புவதில்லை. தனியாக வாழவும் முடியும். இதற்கு நானே ஒரு உதாரணம்.
''குழந்தைகளை வளர்க்கும் போதே, அவர்களை நல்ல குடிமகனாக வளர்க்கணுமே தவிர, அதிக செல்லம் கொடுத்து தவறான வழியில் செல்ல வழி காட்டக் கூடாது.''
''அப்ப லட்சியம் இருந்தால் கல்யாணமே செய்து கொள்ளக் கூடாதா?'' என்று குறுக்கிட்டாள், கவிதா.
''அப்படி இல்லடி. நல்ல துணை கிடைத்தால் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். திருமணத்துக்கு பின் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டால், வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம்.''
சிறிது நேரம் கலந்துரையாடிய பின், அனைவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பி சென்றனர்.
ஒருவாரத்துக்கு பின், ராதிகாவுக்கு போன் செய்து, ''நாங்க தான் உனக்கு பெரிய உதவி செய்யலாம்ன்னு நினைச்சோம். ஆனா, நீ தான் இப்போது எனக்கு பெரிய உதவி செய்துள்ளாய்.
''என் லட்சியத்தை அறிந்து, உடம்பு நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னை இப்போது, 'ஜிம்'மில் சேர்த்து விட்டுள்ளார், என் கணவர். அதுமட்டுமின்றி, வாய்ப்பு கிடைக்க்கும் போதெல்லாம் வெவ்வேறு ஊர்களுக்கு செல்லவும் அனுமதி அளித்துள்ளார். உனக்கு ரொம்ப நன்றிடி,'' என்று உணர்ச்சி பொங்க கூறினாள், சுதா.
அடுத்த நாள், ''உனக்கு ரொம்ப நன்றிடி, என் லட்சியத்தை நீ கூறியவுடன், என் கணவர் மிகவும் வருத்தப்பட்டு, பரதம் கற்றுக் கொள்வதற்கு பதிலாக, என்னை இப்போது, வீணை கற்க அனுமதி அளித்துள்ளார்.
''என் மகள் வானதிக்கு காலேஜ் படிப்பு முடிந்தவுடன், கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தற்சமயம் அதை மறுத்து, வானதியின் விருப்பப்படி, ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பு செல்ல அனுமதி அளித்துள்ளார்.
''அவளுக்கு, 'டான்ஸ்' கற்றுக்கொள்ள விருப்பமிருந்தாலும், அதற்கும் போகட்டும் என்கிறார். எனக்கு மிகவும் சந்தோஷமாகவும், ஆனந்த அதிர்ச்சியாகவும் இருந்தது. இதற்கு உனக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும்,'' என்று, ராதிகாவிற்கு போன் செய்து உணர்ச்சி பொங்க கூறினாள், கவிதா.
'அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால், நம் பெண் சமூகம் எந்த சூழ்நிலையிலும், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை காணலாம் என்பதில் ஐயமில்லை...' என்று, நினைத்துக் கொண்டாள், ராதிகா.
நெப்போலியன்
வில்லியம் ஜேம்ஸ்
ஹில்
துா. ச. இந்து
வயது: 48. படிப்பு: பி.காம்., நுாலக பட்ட மேற்படிப்பு, எம்.பில்., பணி: மதுரை காந்தி என்.எம்.ஆர்., சுப்புராமன் மகளிர் கல்லுாரியில் நுாலகராக பணிபுரிகிறார்.இதுவரை, தமிழ் இலக்கியங்கள் குறித்த, பல ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். எழுத்துப்பணி மூலம், சமூகம் சார்ந்த விஷயங்களில், பெண்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது, இவரது லட்சியம்.கதைக்கரு பிறந்த விதம்: உறவினர் வீட்டு பெண் ஒருவரின் லட்சியத்தை அலட்சியம் செய்து, படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைத்து, அவளது கனவை சிதைத்து விட்டனர். அதைப் பார்த்து மனம் வருந்தியதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை இது.