sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ரத்து ஆன ரத்து!

/

ரத்து ஆன ரத்து!

ரத்து ஆன ரத்து!

ரத்து ஆன ரத்து!


PUBLISHED ON : ஜன 19, 2025

Google News

PUBLISHED ON : ஜன 19, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விமலாவுக்கு கோபம் கோபமாக வந்தது.

எப்படித்தான், 30 வருஷம் இந்த மனுஷனோடு குடித்தனம் நடத்தினேனோ? இரண்டு பிள்ளைகளை வளர்த்தேனோ? நல்லவேளை, இரண்டு பெண்களுக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் முடித்து, வெளிநாடு பறந்து விட்டனர்.

ஒருத்தி பாரிஸில். இன்னொருத்தி லண்டனில். 'வாட்ஸ் - ஆப்'பில் அவர்களுடன் பேசினாலே இவருக்கு, 'பொசு, பொசு' என்று கோபம் வருகிறது.

'அப்பா' என்று கூப்பிட்டால், 'தலைக்கு மேல் வேலை இருக்கிறது...' என்று சிடுசிடுத்தால், அதுகள் என்ன செய்யும்? எனக்கு ஒரே ஆறுதல் அந்தப் பிள்ளைகள் தான். தினசரியா பேச முடிகிறது? அது அதுகளுக்கு வேலை, குடும்பம், பொறுப்பு இருக்கிறதே!

'பாரிசும், லண்டனும் பக்கம் பக்கம் தான். அப்பாவை அழைத்து வாம்மா...' என, பலமுறை அழைத்தனர். 'பிசினஸ் கெட்டுப் போகும்...' என்பார். பெரிய பிசினஸ். இனி யாருக்கு உழைக்க வேண்டும்?

திருமணமான புதிதில், மெரினா பீச்சுக்கு கூட அழைத்து போகவில்லை.

'டேய், சோமு, விமலாவை அழைத்து கொண்டு, கபாலீஸ்வரர் கோவிலுக்காவது போய் வாப்பா...' என்பார், அத்தை. எதற்கும் அசையாத கல்லாக இருப்பார், சோமு.

அடுப்படி, சமையல், துவைத்தல், காயப் போடுதல், மடித்தல், கூட்டல், பெருக்கல், மெழுகுதல், பத்துப் பாத்திரம் கழுவுதல், பரிமாறுதல் மற்றும் சாப்பிடுதல் என்றே வாழ்க்கை கடந்தது. ஒரே ஆறுதல், இரண்டு பிஞ்சு முகங்கள் மட்டும்.

மிகவும் நல்லவர், அத்தை.

'நீயா ஒண்டியா சிரமப்படாதே, விமலா. நான் காய்கறி நறுக்கித் தருகிறேன். வெங்காயம் உரித்துத் தருகிறேன்...' என்பார்.

பாவம் அவருக்கு, நான் மருமகளாக வரும்போதே வயது, 65. அவருக்கு, தாமதமாக திருமணம் நடந்தது. என் மாமனார் வசதிக்குறைவாக இருந்து, கைஊன்றி கர்ணம் போட்டு மேலே வந்தவர். பெட்டிக்கடை, அரிசிக்கடை, மளிகைக்கடை என, என்னவர் தொழிலைத் தொட்ட பின் தான், ஜவுளிக்கடை, நகைக்கடை, 'மால்' என்று வளர்ச்சி.

'எல்லாம் நீ வந்த வேளை..' என்பார், அத்தை. ஆனால், அவர் மகன் ஒரு பேச்சு, பாராட்டு, ம்ஹும். சரியான பாறாங்கல்.

'அத்தைக்கு உடம்பு சரியில்லை, மூச்சுத் திணறல் காரை அனுப்புங்கள். ஆஸ்பத்திரிக்குப் போய் காட்டி வருகிறேன்...' என்று கேட்டது தப்பாம்.

'ஏன், வாடகைக்காரில் போக மாட்டீர்களோ?' என்று கூறிவிட்டார்.

எப்படியோ, வண்டி ஏற்பாடு செய்து போனதில், 'சரியான நேரத்துக்கு வந்தாய், விமலா. ஒரு இரவு இங்கேயே தங்க வேண்டும். தொடர் சிகிச்சை வேண்டும்...' என்றார், டாக்டர்.

'பிள்ளைகள் இரண்டும் காலேஜ் விட்டு வரும் நேரம். நீங்கள் வந்து அம்மாவுடன் ஆஸ்பத்திரியில் இருங்கள். நான், பிள்ளைகளை வீட்டில் பார்த்துக் கொள்கிறேன். காலையில் பிள்ளைகளை காலேஜுக்கு அனுப்பிவிட்டு வந்து விடுகிறேன்...' என்றேன்.

இது கேட்டது தப்பாம். இத்தனைக்கும் அவருக்கு அம்மா.

'நீ ராத்திரி தங்கு. நான் பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறேன்...' என்றார்.

ஆனால், வீட்டுக்கு தாமதமாக சென்றதால், பிள்ளைகள் கேட்டுக்கு வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை. மறுநாள் காலை கேட்டதும் கோபம், 'பொசுக்' என்று. 'அம்மா எப்படி இருக்கிறாள்?' என்று கூடக் கேட்கவில்லை. என்ன மனுஷன் இவர்.

லண்டன் மகள் சுமதி, கொஞ்சம், 'பொசஸிவ்' வகை; முணுக்கென்று கோபம் வரும். அப்பா மாதிரி குணம். தான், தனது என, இருப்பவள்.

அன்று வழக்கம் போல் மகள் சுமதியிடமிருந்து போன் அழைப்பு வந்தது. அவள் புருஷனை விவாகரத்து செய்யப் போவதாக, வெடிகுண்டாக, போனில் தெரிவித்தாள்.

''என்னடி சொல்கிறாய்?'' என்று எரிச்சலுடன் கேட்டேன்.

''ஆமாம் அம்மா. என்னால முடியலை. ஒதுங்கிடலாம் என, முடிவெடுத்து விட்டேன். அதிடமும் (அவர் என்பது அதுவாகி இருந்தது) சொல்லிவிட்டேன். அதுக்கும் சம்மதம் தான்.''

''என்னடி உங்களுக்குள்ள பிரச்னை?''

''சொல்ல எத்தனையோ இருக்கு.''

''என்ன ரெண்டை மட்டும் சொல்லு,'' வெடித்தேன்.

''வாரத்துக்கு, நான்கு நாளைக்கு ஒரே தடவையில் சமையல். முதல் வாரம் நான் சமைத்தால், மறு வாரத்துக்கு, அது சமையல். பாக்கி, மூன்று நாளைக்கு ஹோட்டல். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் குடித்தனம் ஆரம்பித்தோம்.

''பாத்திரம் துலக்குவது, துணி இஸ்திரி பண்ணுவது எல்லாம், அதன் வேலை. எழுதப்படாத ஒப்பந்தம். அந்த ஒப்பந்தம், மீறப்பட்டு விட்டதால், என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அப்புறம், 'இனிமேல் நீ, 'லிப்ஸ்டிக்' போடக் கூடாது...' என, அது சொல்லி விட்டது.

''அது எப்படி முடியும்? குளிர் நாடு. உதடு வெடிப்புக்காகத் தான் லிப்ஸ்டிக். நாகரிகத்துக்காக இல்லை. ஏன் போடக் கூடாது என்று கேட்டால், பதில் சொல்லவில்லை...'' என்றாள், சுமதி.

'என்ன இது அநியாயம்? இதெற்கெல்லாம் விவாகரத்து என்றால், நான் என்ன செய்திருக்க வேண்டும்!'

அத்தையிடம் கூறியதும், மிக அழகாக தீர்வு சொன்னார்.

''நீ, என் மகனிடம் படற சிரமம் தான் ரொம்ப ஜாஸ்தி. அதுவும், சுமதிக்குத் தெரியும். அதனால, நீயும், 'என் கணவரை விவாகரத்து பண்ணப் போறேன்...' எனச் சொல்லு,'' என்றார், அத்தை.

நினைத்து பார்க்கவே முடியவில்லை என்னால்.

நான் தயங்க, போனை வாங்கி, ''பாட்டி பேசறேன், சுமதி. நீ சொன்னது அந்த நாட்டில் சகஜம் தான். இங்க உன் அம்மா, என் மகனிடம், 30 வருஷம் கஷ்டப்பட்டதாலே, ஜீவனாம்சத்தோட, விவாகரத்து வழக்கு போடப் போறா. அது தெரியுமா உனக்கு?'' என்றார், அத்தை.

அந்தப்பக்கம் இருந்து, குரல் இல்லை. போனையும், 'ஆப்' செய்து விட்டாள்.

என் கணவரிடமும், நான் விவாகரத்து செய்யப் போவதாக சொல்லி விட்டார், அத்தை.

பாறாங்கல் கொஞ்சம் அசைந்தது.

''நான் என்ன தப்பு பண்ணினேன்?'' என்றார், கணவர் சோமு.

மூலைக்கு ஒருவர் ஆக உட்கார்ந்திருந்தோம். திடீரென்று, சுமதியும், அவளது கணவரும், பாரிசிலிருந்து வாசுகியும், அவளது கணவரும் வந்தனர்.

வந்த உடனே, பெரும் குரலில், ''என்ன ஆச்சு உங்களுக்கு?'' என்றாள், சுமதி.

''உனக்கு வர்ற வேதனை. உங்க அம்மாவுக்கு வராதா?'' என்றார், அத்தை.

''சும்மா தானே மிரட்டினீர்கள்?'' என்றாள், வாசுகி.

சலனமே இல்லாமல் இருந்த என் நிலை அவர்களுக்கு பயம் அளித்திருக்கும்.

'அம்மா, அம்மா'வென கதறியவள், ''நான் முடிவை மாத்திக்கிட்டேன். விவாகரத்து செய்யல. அவரோடவே, (இப்போது அது என்று சொல்லவில்லை) வாழ்கிறேன். நீயும் விட்டுக்கொடு, அம்மா,'' என்றாள், சுமதி.

''இத்தனை ஆன பிறகு, இனி எப்படி முடியும்?'' என்றார், அத்தை.

''நான் சாமியார் ஆகிவிடுகிறேன். எல்லா சொத்தும் அவளே அனுபவிக்கட்டும்,'' என்றார், பாறாங்கல் ஆன சோமு.

இறுதியாக, ''விமலா, நீயும் விவாகரத்து வழக்கு போடாதே. சுமதியையும் விவாகரத்து பெட்டிஷனை ரத்து செய்ய வைக்கிறேன்,'' என்றார், அத்தை.

மகள்களுக்கும், பாறாங்கல்லுக்கும் இது ஒரு நாடகம் என்று தெரியாமல் போனது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

- என். சுசிலா






      Dinamalar
      Follow us