
''நான் வேலைக்குப் போகலாம்ன்னு இருக்கேன்ப்பா,'' என்று, மகன் ரவியிடம் தயக்கத்துடன் கூறினார், சுந்தரம்.
தன் மனைவி ராதாவைப் பார்த்து முறைத்தான், ரவி.
நடுங்கியபடி, ''அய்யோ, நான் எதுவும் மாமாவை சொல்லலைங்க,'' என்றாள் மிரட்சியுடன், ராதா.
பதட்டத்துடன், ''இல்லடா, நானாத் தான் விருப்பப்பட்டு கேட்கிறேன்,'' என்றார், சுந்தரம்.
பெருமூச்சு விட்டான், ரவி.
''அப்பா உங்களுக்கு இங்கே என்ன பிரச்னை? 62 வயசுல நீங்க வேலைக்குப் போய் யாருக்கு சம்பாதிச்சுத் தரணும்? யாரைக் காப்பாத்தி, கரை சேர்க்கணும்? உங்க கடமைகள் முடிஞ்சு போச்சு. அமைதியா ஓய்வெடுங்க,'' என்றான், ரவி.
தான் பலமுறை யோசித்து தயார் நிலையில் வைத்திருந்த அந்த பதிலை சொன்னார், சுந்தரம்.
''நானும் ஆரம்பத்துல அப்படித் தான் நினைச்சேன். ஆனா, நாள் போகப் போக ஒருமாதிரி வெறுமையா உணர்றேன். வெளியே போகாம, நாலு மனுஷங்களை பார்க்காம, அவங்ககிட்ட பேசாம என்னமோ மாதிரி இருக்கு.''
அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான், ரவி. இடைவெளி விடாது மீண்டும் தொடர்ந்தார், சுந்தரம்...
''நான் வேலைக்குப் போறது, பணம் சம்பாதிக்கிற ஆசையில இல்ல. வீட்டுலேயே இருந்து எனக்கு ரொம்ப போரடிக்குது. ஒரே மாதிரியான தொடர் சிந்தனைகள், சலிப்பைத் தருது.
''போனை நோண்டறது, 'டிவி' பார்க்கறது, பார்க், நுாலகம் போகிறதுன்னு தினசரி ஒரே மாதிரி நேரத்தைக் கடத்தறது சிரமமா இருக்கு.
''ஒரு முன்னேற்றம், வளர்ச்சி எதுவும் இல்லாம, ஜடம் போல என்னை உணர்றேன். டேபிள் மாதிரி, 'டிவி' மேஜை மாதிரி. இப்படி வீணாத் தேயறதை விட, உழைச்சுத் தேயறேனே...'' என்றார், சுந்தரம்.
ஆனால், பிடிவாதமாக இருந்தான், ரவி.
''ம்ஹூம். உங்க உழைப்பு போதும். இது ஓய்வுக் காலம். அமைதியா நீங்க கடந்து வந்த பாதையை திரும்பிப் பாருங்க. ஆன்மிக பயணம் போகணுமா. ஒரு மாச சுற்றுலாவுக்கு, 'புக்' பண்ணித் தர்றேன்.
''சொந்தக்காரங்க வீட்டுக்கு போங்க; பழைய நண்பர்களை தேடிப் போய் சந்தீங்க; பூர்வீக ஊருக்குப் போய் சந்தோஷப்படுங்க; கவிதை எழுதுங்க, மரக்கன்று நடுங்க, தியான க்ளாஸ் போங்க. வாழ்க்கையை நிதானமா ரசிங்க.
''இப்படி எதையாவது மாத்தி மாத்தி சுவாரசியமா செய்து, உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கோங்க. சித்து இருக்கான். அவன் படிப்புக்கு உதவுங்க. ரெண்டு பேரும் சேர்ந்து, 'யு-டியூப்' சேனல் கூட ஆரம்பிக்கலாம். என்ன ராதா!
''இந்த, 'மெடிக்கல் ரெப்' வேலையில, ஊரு ஊரா அலைஞ்சு திரிஞ்சு, எனக்குன்னு நேரம் ஒதுக்க முடியலையேன்னு, நான் மனசு நொந்துக்கிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா...'' சலித்துக் கொண்டான், ரவி.
மகனிடமிருந்து இத்தனை பெரிய பதிலை எதிர்பார்க்கவில்லை, சுந்தரம்.
''இல்லை, நான் சொல்றது... என்னால உனக்கு சரியாப் புரிய வைக்க முடியலை,'' என்றார், சுந்தரம்.
''அப்பா ப்ளீஸ். எனக்கு புரியாவிட்டாலும் பரவாயில்லை. அமைதியா வீட்டோட இருங்க. 'வயசான காலத்துல அப்பனை வேலைக்கு அனுப்பி, அந்த சம்பளக் காசை வாங்கி குடும்பத்தை நடத்தறான் பாரு'ன்னு, நாலு பேரு என்னைக் கேவலமா பேசணுமா.
''கண்டவன் வாயிலும் நான் விழறது தான் உங்க ஆசையா? எல்லா விஷயத்துக்கும், உங்களை வெச்சு மட்டுமே யோசிக்காதீங்க.''
ராதா ஏதோ சொல்ல வர, அடக்கினான்.
''நீ இடையில வராதே. உனக்கு ஒண்ணும் தெரியாது. உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்ததே தப்பு. அப்படியே தோணினாலும் என்கிட்ட கேட்கலாமா, நான் இதுக்கு சம்மதிப்பேன்னு எதிர்பார்த்தீங்களா?''
''ப்ச், அதில்லை. என் நண்பன் ரத்தினம், சின்னதா ஒரு மின் வாகனம் விற்பனை கடை வைக்கிறான். 'இ - ஸ்கூட்டர் ஷோரூம்' கடை. கூட ஒத்தாசைக்கு வான்னு கூப்பிட்டான். இங்கே உட்கார்றதுக்கு அங்கே உட்காரப் போகிறேன்.''
''ஓஹோ. ஒத்தாசைன்னா... எந்த மாதிரி? உங்க நண்பர் என்ன உங்களை கல்லாவுலயா உட்கார வெக்கப் போறாரு? டீ சொல்லு, வண்டியைத் தொடச்சு வை, ப்ளோர் க்ளீன் பண்ணுன்னு சொன்னா மறுப்பீங்களா. செஞ்சு தானே ஆகணும். உதவிக்குப் போறேன்னு சொல்லி, ஊருல என் மானம், மரியாதையை கெடுத்துடாதீங்க.''
அதிர்ந்தார், சுந்தரம்.
மகனின் வார்த்தைகளில் யதார்த்தமான உண்மை இருந்தது. தெரிந்தவர்கள் வரும் போது, அவர்கள் முன்னிலையில், 'சுந்தரம், ரெண்டு டீ சொல்லுடா...' என, தன் நண்பன், முதலாளி உரிமையை தன்னிடம் காண்பித்தால்...
'என்ன வண்டியைத் தொடச்சே நீ, அழுக்கெல்லாம் அப்படியே இருக்கு பாரு...' என சலித்துக் கொண்டால்... அவரது கற்பனையில் அந்தக் காட்சி உருவாக, கூசியது.
இதெல்லாம் நடக்கும் தான். ஆனால், இது கேவலமில்லை. வேலை என்றால் இதுவும் சேர்த்தி தான். இருப்பினும், தன் மனநிலைக்கு, வயதுக்கு, குணத்துக்கு இதுவரை இருந்த இருப்புக்கு இதெல்லாம் பொருந்துமா?
இறுதியாக, ''போதும், இதோட இந்தப் பேச்சை நிப்பாட்டுங்க,'' என்றபடி, கோபம் குறைந்தவனாக எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான், ரவி.
மகன் தன் மீது வைத்திருக்கும் அக்கறையை நினைத்து நெகிழ்ந்தார். அதேநேரம், தன் மகனுக்கு தன்னை விட அதிகம் இந்த உலகம் புரிந்திருக்கிறது. மனிதர்களை சரியாக கணித்திருக்கிறான். சிறப்பான தொலைநோக்கு சிந்தனை இருப்பதையும் உணர்ந்து பெருமைப்பட்டார்.
அடுத்த மாதம் ஒருநாள் காலைப் பொழுதில்...
''அப்பா கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாம் வாங்க,'' என்றபடி, சுந்தரத்தை வண்டியில் அழைத்து சென்று, பேருந்து நிலையம் பின்புறம் இருந்த தெருவுக்கு வந்தான், ரவி.
இடதுபுறம் இருந்த, விநாயகர் காம்ப்ளக்சின் முன்புறம் வண்டியை நிறுத்தி, அவரை இறங்கச் சொன்னான். எதுவும் புரியாமல் இறங்கினார், சுந்தரம்.
காம்ப்ளக்சின் நடுவில் இருந்த ஷட்டரை மேலே உயர்த்தினான், ரவி. சின்னதாக ஒரு இடம் தெரிந்தது. எட்டுக்கு எட்டு இருக்கலாம். சற்றுத் தள்ளி படிகள் கீழே போக, காம்ப்ளக்ஸ் கடைகளின், ஈபி பேனல்கள், ப்யூஸ் கேரியர்கள் தெரிந்தன.
விளக்கை போட்டான், ரவி. ஸ்லிம் ட்யூபின் பளிச். புது பேன், பிளாஸ்டிக் டேபிள் ஒன்றும், மர சேர் ஒன்றும் தெரிந்தது.
''அப்பா இந்த இடத்தைப் பார்த்துக்குங்க,'' என்றான்.
''ம், சரி...''
''தினசரி காலையில, 7:00 மணிக்கு இங்கே வர்றீங்க. 10:00 மணி வரை இருக்கீங்க. அதே மாதிரி சாயங்காலம், 6:00 மணிக்கு வந்துட்டு, 9:00 மணி வரை இருக்கீங்க.''
''ம்...''
''இந்த டேபிளையும், சேரையும் முன்னாடி பார்வைக்கு வர்ற மாதிரி போட்டுக்கிறீங்க. கந்தசாமின்னு ஒருத்தன் ரெகுலரா வருவான். டாடா ஏஸ்ல. மூட்டையில கீரைக் கட்டு கொண்டு வருவான்.
''புதினா, முடக்கத்தான் மற்றும் பண்ணைக் கீரைன்னு ஏழெட்டு விதங்கள் இருக்கும். எல்லாத்தையும் அவனே பிரிச்சு, கயிறு சுத்தி கட்டி வெச்சிருப்பான். நீங்க அதெல்லாம் வாங்கி டேபிள்ல அடுக்கி வெச்சிடுங்க. ஒரு கட்டு, 20 ரூபாய்; விற்பனை விலை.
''பக்கத்துல இருக்கிற நாயர் கடையிலிருந்து, 8:30 மணிக்கு சூடா டீயும், உளுந்து வடையும் உங்களுக்கு தந்துடுவாங்க. பின்னாடி, 'தாய் மெஸ்'ன்னு இருக்கு. உங்க பேருல அக்கவுன்ட் ஆரம்பிச்சிருக்கேன்.
''காலையில பிடிச்சதை சாப்பிட்டுட்டு, பொறுமையா வீடு வாங்க. இதே மாதிரி தான் சாயந்திரமும். 'நேம் போர்டு' சொல்லியிருக்கேன். 'லட்சுமி கீரைக் கடை'ன்னு, அம்மா பேரை வெச்சிருக்கேன்...'' என்றான், ரவி.
மகனையே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார், சுந்தரம்.
''பொழுது போகலைன்னு சொன்னீங்க தானே. அதான் உங்களுக்காக இப்படி ஒரு ஏற்பாடு. மக்களுக்கு தரமான பொருள் விக்கிறீங்க. தினசரி அழியற, சுலபமா விற்பனை ஆகற பொருள். 'ரிஸ்க்' இல்லை, உங்களை எவனும், எந்த வேலையும் செய்ய சொல்ல மாட்டான்.
''நீங்க தான் ராஜா, மந்திரி எல்லாமே. எல்லாமே உங்க விருப்பம் தான். என் நண்பன் சுகுமார் தெரியும்ல்ல. உயரமா, கண்ணாடி போட்டுக்கிட்டு. அவனோட பராமரிப்பில் இருக்கிற காம்ப்ளக்ஸ் இது. அதனால, யாரும் உங்களை எதுவும் கேட்க மாட்டாங்க,'' என்றான், ரவி.
கடையையே திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார், சுந்தரம்.
''இந்த வழியில தினசரி ஆயிரம் பேர் வர்றாங்க, போறாங்க. 'போர்டு' பார்த்துட்டு வர்றவங்களுக்கு பொருள் வித்தாப் போதும். பொழுது போகலை, நேரம் வீணாகுதுன்னு வேதனைப்பட்டீங்க. ஒருநாளோட பாதி நேரத்தை உங்களுக்கு, 'பிசி' பண்ணித் தந்திருக்கேன், பயனுள்ளதா மாத்தி! மகிழ்ச்சி தானே. இனி சும்மா இருக்கேன்னு, 'பீல்' பண்ண மாட்டீங்கள்ல.''
அரைகுறையாக தலையாட்டினார், சுந்தரம். மனதில் யோசனைகளின் மோதல்.
''புதன்கிழமை முகூர்த்த நாள். ஒரு விநாயகர் படத்தை மாட்டி சம்பிரதாயத்துக்கு பூஜையைப் போட்டு கடையை ஆரம்பிச்சுடலாம்.''
''ம்...''
''போகலாமா,'' என்று, ஷட்டரை இழுத்து மூடினான், ரவி.
அமைதியாக ஸ்கூட்டரில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
'இந்த வயதில் வேலை செய்ய வேண்டாம் என்பது பற்றி, அன்றைக்கு அத்தனை துாரம் பேசினானே. இது மட்டும் என்னவாம். அதாவது வேலைக்காரனாக வேலை செய்ய வேண்டாம், முதலாளியாக வேலை செய்யலாம்!
'மகனது அந்தஸ்தும், கவுரவமும் இதனால் கெடாது. 'அப்பா சொந்தமா கடை வெச்சிருக்காரு...' என்று சொன்னால் மதிப்பு கூடும், அப்படித் தானே! கீரைக் கடையாவது, சூரைக் கடையாவது. ஆனால் இதுதான், தான் விரும்பின சுதந்திரமா, இதுதான் எனக்கு திருப்தி தருகிறதா... மனம் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா?' என, மனதில் எண்ணம் ஓட, புரியாமல் அலைபாய்ந்தார்.
''என்னப்பா அமைதியா வர்றீங்க. கடையை எப்படி, 'டெவலப்' பண்றதுன்னு, இப்பவே யோசனை பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா?'' என்று சொல்லி சிரித்தான், ரவி.
பதில் பேசத் தெரியாமல் வெறுமனே புன்னகைத்தார், சுந்தரம். அதுமட்டுமே அவரால் முடிந்தது.
நித்யா