sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சத்தம் போடாதே!

/

சத்தம் போடாதே!

சத்தம் போடாதே!

சத்தம் போடாதே!

4


PUBLISHED ON : ஜூலை 13, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 13, 2025

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்டி சத்தம் கேட்டு கண் விழித்து, ''ஜோதி வெளியில வண்டி நிக்கிற சத்தம் கேட்குதே,'' என, துாங்கிக் கொண்டிருந்த மனைவியை தட்டி எழுப்பினான், பிரசாத்.

''அதுவா, பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வர்றாங்க. காலைலயே பால் காய்ச்சிட்டு போய்ட்டாங்க. இப்ப பொருளை இறக்க வந்திருப்பாங்க.''

''வழில தொடர்ச்சியா, கார் நின்னிருக்குமே எப்படி வந்தாங்க?''

''காலைலயே சொல்லிட்டுப் போனதால, வேற இடத்துல காரை நிறுத்தி இருப்பாங்க!''

''கார் வெச்சிருக்கிறவங்க நிலைமை ரொம்பக் கஷ்டம். இப்படி புதுசா குடி வர்றவங்களுக்காக துாக்கத்த தொலைச்சு, காரை எடுக்கணும்.

''வீட்டை மட்டும் பெருசா கட்டத் தெரிஞ்சவங்களுக்கு கார் வெக்கற அளவுக்கு காம்பவுண்ட பெருசு பண்ணத் தெரியல. அவசரத்துக்கு கடைசி வீட்ல இருக்கறவங்க கார் எடுத்தா, வெளிய போக முடியுதா. யாருக்காவது சீரியஸ்னா ஆம்புலன்ஸ் கூட உள்ள வர முடியாத அளவுக்கு தெருவையே சுருக்கி வெச்சு இருக்காங்க?''

''அதுக்கு இப்ப என்னப் பண்றது?''

தலையோடு போர்வையை போர்த்தியப்படி துாங்க முயற்சித்தான், பிரசாத். பக்கத்தில் ஜோதியின் குறட்டை சத்தம் காதை குத்தியது. 'இப்படி சட்டுன்னு துாங்கவும், முழிக்கவும் குடுப்பினை வேண்டும்...' என, முணங்கினான், பிரசாத்.

வெளியே பொருளை இறக்கும் சத்தமும், கேட்டை திறக்கும் சத்தமும் டம், டும் என, இரைச்சலாய் கேட்டது. சரியான துாக்கமில்லாமல் தலை வலித்தது? விடிந்ததும், ஜோதி கொடுத்த காபியை மட்டும் குடித்து விட்டு வேலைக்கு ஓடியிருந்தான், பிரசாத்.

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள், ஜோதி. வெளியே யாருமில்லை. பக்கத்து வீட்டுக் கதவு அடைத்தே இருந்தது. நல்லத் துாக்கமாய் இருக்கும் என நினைத்த நேரத்தில், கார் வந்து நின்றது.

அன்று பால் காய்ச்ச வந்த நடுத்தர வயது ருக்மணி அம்மாவும், கூடவே ஒல்லியாய் ஒரு இளம் பெண். கழுத்தில் தெரிந்த மஞ்சள் கயிறு, அவள் அந்த வீட்டின் மருமகளாக தான் இருக்க வேண்டும் என தோன்றியது. கூடவே, அம்மாவின் சாயலில் ஒரு இளைஞன்.

தான் பார்ப்பதை உணர்ந்து, ஜன்னலை அந்த அம்மா பார்ப்பதற்குள் ஒளிந்துக் கொண்டாள், ஜோதி.

கொஞ்ச நேரத்தில் கேட்டை தட்டியப்படி உரத்துக் குரல் கொடுத்தாள், ருக்மணி அம்மா. புன்முறுவலோடு வெளியே வந்தாள், ஜோதி.

''வாங்கம்மா இப்பத்தான் வந்தீங்களா?''

''ஆமாம். ஆள வெச்சு பொருளை இறக்கி, அடுக்கி வைக்க சொல்லிட்டோம். நாங்க கோவிலுக்குப் போய்ட்டு நேரா இங்க தான் வரோம்,'' என்றாள், உரத்தக் குரலில்.

'கொஞ்சம் மெல்லப் பேசுங்க...' என்று சொல்ல நினைத்து அமைதியானவள், ''உங்க வீட்டுக்காரர் வரலையா?'' என்றாள், ஜோதி.

''இல்லம்மா. அவர், ஊர்ல இருக்கற அரசுப் பள்ளில ஆசிரியரா வேலை பாக்குறாரு. எங்களுக்கு கொஞ்சம் நேரம் சரியில்ல. வீட்ல சண்டை வந்துட்டே இருந்தது. அதனால தான் தள்ளியிருக்கோம்.

''சரிம்மா போய் டிபன் வேலையப் பாக்குறேன். மருமகளுக்கு சமையல் வேலை அவ்வளவா தெரியாது. நான் தான் போய் சொல்லிக் குடுக்கணும்,'' என்றாள், சத்தமாக.

''எது தேவைப்பட்டாலும், 'ஜோதி'ன்னு குரல் கொடுங்க போதும். நான் ஓடி வந்துருவேன்,'' என்றாள், புன்னகையோடு. இவ்வளவு நேரம் பேசியும் மருமகள் பேரை கேட்க மறந்த, தன்னை தானே குட்டிக் கொண்டாள், ஜோதி.

ஜோதியின் வீட்டை ஒட்டியே இருந்தது, அவர்கள் வீடு. வீட்டுக்குள் கொஞ்சம் சத்தமாக பேசினால் கூட, தெளிவாக கேட்கும் அமைப்பு. பல சமயம் தொந்தரவையும் தந்து, சில சமயம் வசதியாகவும் இருந்தது.

வீட்டு ஓனர் வெளியூர் என்பதால், வாடகைக்கு வருபவர்கள் சுதந்திரமாக சண்டையிட்டு கொள்வதை, பல சமயம் பார்த்திருக்கிறாள். ருக்மணி அம்மாள் குடும்பத்தினர் எப்படியோ போகப் போகத் தான் தெரியும்.

''சத்யா, ரவையை வறுத்துட்டயா. உப்புமாக்கு இவ்வளவு வெங்காயம் வேண்டாம். கொஞ்சம் எடுத்து வைச்சுடு. பச்சை மிளகாய கீறிப் போடு. அப்படியே முந்திரி கொஞ்சம் போட்டுக்கோ. மதியத்துக்கு கதம்ப சாம்பார், கேரட் பொரியல் செஞ்சிடு.

''நான் கேசரி செய்யறேன். கேசரிக்கு நெய்யில வறுத்துப் போட முந்திரி, திராட்சை எடுத்து வை...'' என்றாள், உரத்தக் குரலில், ருக்மணி அம்மாள்.

ருக்குவின் சத்தம், ஜோதியின் பக்கத்தில் உட்கார்ந்து அதட்டுவதுப் போல் தோன்றியது. வீட்டில் இப்படியா கத்தி கூச்சலிடுவது.

ஜோதிக்கு, தன் மாமியார் நினைவுக்கு வந்தார். கல்யாணம் ஆன புதிதில் இப்படித்தான் அதட்டி, உருட்டி வேலை வாங்குவார், மாமியார். ஜோதி தானாக முன் நின்று, ஏதாவது வேலையை கையில் எடுத்தாளோ, மாமியாரின் சுயரூபம் வெளிப்படும்.

அதிகாரத்தை கையில் எடுத்து, சாட்டையை சுழட்டுவார். அன்று, மாமியார் பயத்தில் பம்பரமாய் சுற்றிய ஜோதி தான், இன்று வயதாகி ஓய்ந்து ஒடுங்கிய, மாமியாரை சுற்ற விடுகிறாள்.

ஜோதிக்கு பயந்தே இப்போதெல்லாம் அவள் மாமியார், வீட்டில் இருப்பதில்லை. தான் கொடுத்ததை பல மடங்காக திருப்பித் தருகிறாள் என புரிந்து கொண்டார்.

தம்பி வீடு, அண்ணன் வீடு, ஒன்றுவிட்ட சித்தப்பா மகன், மாமியார் வழி சொந்தம் என, தெரியாத சொந்தங்கள் அழைப்பு விடுத்தால் கூட ஓடி விடுகிறார்.

'எங்க குடும்பத்துல பெரியவன்னு இருக்கறது, நான் ஒருத்தி தான். அதனால தான் நல்லது, கெட்டதுன்னு எது நடந்தாலும் பெரிய மனுஷின்னு என்னையே கூப்பிடறாங்க. நான் போகாம இருக்க முடியுமா? வீட்ல இருக்கறதுகளுக்கு தான், என்னோட அருமை தெரியில...' என்பார், மாமியார்.

அதுக்கும் ஏதாவது பதில் சொல்லி அடக்கி விடுவாள், ஜோதி.

'சத்யா குடிக்க தண்ணி கொண்டுட்டு வா? கேட்டு எவ்வளவு நேரமாகுது. தாகத்துக்கு தண்ணிக் கேட்டா சாகறப்பத் தான் தருவா போல இருக்கு?' மருமகளை கடிந்துக் கொண்ட, ருக்மணி அம்மாவின் குரல் கேட்டு, நினைவுகளில் இருந்து மீண்டாள், ஜோதி.

'என்ன ஒரு அதிகாரம். யார் கொடுத்தது இவர்களுக்கு? தன் குடும்பத்தை விட்டு, கணவன் குடும்பத்தை சுமக்கும் பெண்களை தாங்கவும் வேண்டாம், தலையில் வைத்துக் கொண்டாடவும் வேண்டாம். இப்படியா பத்து பேர் கேட்க மிரட்டுவது. என்ன தாய் இவள்?'

போய் கேட்டு விடத் துடித்த மனதை கட்டுப்படுத்தி கொண்டாள், ஜோதி. இன்றைய சண்டை, நாளை சமாதானம் ஆகலாம். நல்ல குடும்பத்தில் சண்டையை பெரிது படுத்த வேண்டாம்.

நாட்கள் செல்லச் செல்ல சத்தம், குறைந்தபாடில்லை; அதிகரிக்கத் தான் செய்தது.

''அம்மா பக்கத்து வீட்டுப் பாட்டி எதுக்கு இப்படி கத்தறாங்க? எங்க மிஸ் ல்கூல்ல இப்படி தான் சத்தமா, க்ளாஸ் எடுப்பாங்க. எனக்கு வீட்டுக்கு வந்தாக்கூட ஸ்கூல்ல இருக்கற, 'பீலிங்' தாம்மா வருது,'' என, கேட்டே விட்டான், மகன் கிரிநாத்.

''போய் அவங்க கிட்ட கொஞ்சம் வால்யூம குறைக்க சொல்லு. வீட்ல அம்மாக்கூட இப்படி கத்த மாட்டாங்க,'' என்ற கணவனை முறைத்தாள்.

''ஆமா, உங்க அம்மா பாவம், வாயில்லாப் பூச்சி. சத்தமே போட மாட்டாங்க. வாய்க்குள்ளயே முணங்கி, மனசுக்குள்ளயே திட்டி, சமாதானம் ஆகறவங்களப் பத்தி, உங்களுக்கு என்ன தெரியும். பொழுதன்னைக்கும் அவங்களோட இருக்கற எனக்கு தானே தெரியும்,'' என்றாள் எரிச்சலோடு.

''சரி, இப்ப நீ போய் சொல்லப் போறியா, இல்ல நான் போய் சொல்லட்டுமா?''

''அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. அவங்க வீட்டுக்குள்ள போய் சத்தமா பேசாதன்னு சொல்ல நமக்கு உரிமை இல்லை. நான் மெதுவா சொல்லி அவங்களுக்கு புரிய வைக்க பாக்குறேன்,'' என, கணவனை சமாதானப்படுத்தினாள், ஜோதி.

மொட்டை மாடியில் நின்றுக் கொண்டிருந்த, சத்யாவை மெல்ல அழைத்தாள், ஜோதி.

''சத்யா, சத்யா உங்க மாமியார் வீட்ல இல்லையா?'' பதில் வரவில்லை. காதில், 'ஹெட் போன்' மாட்டியிருப்பாளோ என்ற சந்தேகத்தில், கைகளை தட்டி அழைத்தாள், ஜோதி.

''என்ன ஜோதி, காக்காவ கூப்டறியா. நீ, கை தட்டின உடனே வந்துடுச்சுப் பாரு,'' என, சத்தமாக பேசியபடி வந்து நின்று சிரித்த, ருக்குவை பார்த்து அசடு வழிந்தாள், ஜோதி.

சத்யாவிடம் மளிகை லிஸ்ட்டை கொடுத்து, கடைக்கு அனுப்பியிருந்தாள், ருக்கு. அவள் வரும் வரை வாசலில் காத்துக் கிடந்தாள்.

''என்னது வாசல்லயே தவம் இருக்குறீங்க?''

''சத்யாவுக்கு காளான் பிரியாணி வேணுமாம். காளான் வாங்க கடைக்கு போயிருக்கா. இன்னும் வரல. அதான் பாக்குறேன்?''

''அட, அவ என்ன சின்னக் குழந்தையா, வந்துடுவா பயப்படாதீங்க?''

''அதுக்கில்ல, மகன் வர்றதுக்குள்ள சமைச்சு வைக்கணும். அப்பத் தான், 2:00 மணி பஸ்சுக்கு அவங்க ஊருக்கு போக சரியா இருக்கும். இல்லன்னா ஊர் போய் சேர, ராத்திரி ஆகிடும். இந்த பைத்தியக்காரப் புள்ளக்கிட்ட, 'கடைக்கு நானே போறேன். வீட்ல இரு'ன்னு அப்பவே சொன்னேன். கேட்டா தானே? 'லேட்'டானா, நான் தான் அவங்கள ஊருல விட்டுட்டு வரணும்?''

''தனியா போனா தான் பயப்படணும். புருஷனோட போறதுல என்ன பயம். பொறுமையா ஊர் போகட்டும்,'' என்றாள், ஜோதி.

''அங்கப் பாரு ஆடி அசைஞ்சு வர்றத?'' என, வீட்டுக்குள் ஓட நின்ற, ருக்குவை பிடித்து நிறுத்தினாள், ஜோதி. அதற்குள் மூச்சு வாங்க ஓடி வந்து நின்றாள், சத்யா.

''ஏம்மா இவ்வளவு நேரம்?'' என்றாள், ருக்கு.

''இ, இ, இ, இங்க... இ, இ, இ, இல்ல... வே வேற கடைக்கு போய்... வா, வாங்க்கிட்டு வந்தேன், அத்தே?''

''சரி, சரி நீ போய் வெங்காயம் நறுக்கி வை. நான் வர்றேன்.''

''எதுக்கு இந்த அவசரம். ஓடி வந்ததுல எப்படி மூச்சு வாங்குது பாருங்க? உங்க மேல அவ்வளவு பயம் சத்யாவுக்கு. மருமகளை கத்தியே மிரட்டி வெச்சிருக்கீங்க.''

''இல்ல, ஜோதி. அவளுக்கு காது சுத்தமா கேட்காது. பேச்சும் திக்கி திக்கித் தான் வரும். என் மகனுக்கு மாலை கண் நோய். அதனால தான், சத்யாவை தேடிப் பிடிச்சு கட்டி வெச்சேன். அவளுக்கு அம்மா, அப்பா யாருமில்ல.

''என் கணவருக்கு இது புடிக்கல. அவனுக்கு வேறப் பொண்ண பார்க்கச் சொல்லி சண்டை போட்டாரு. நான் தான் கேட்கல.

''ஜாடிக்கேத்த மூடி தான் சரி. புள்ளைங்கள தனியா விட பயந்து தான், ரெண்டுப் பேர் பாதுகாப்புக்காகவும், அவர விட்டுட்டு இவங்க கூடவே இருக்கேன், ஜோதி. கொஞ்ச நாள் கூட இருந்தாப் போதும். போகப் போக ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்குவாங்க; உலகமும் புரியும்.''

ருக்கு பேசப் பேச, கண்ணீர் மல்க கேட்டபடி இருந்தாள், ஜோதி.

மாமியார் என்னும் பெரிய மனுஷியின் அருமை, இப்போது தான், ஜோதிக்கு புரிந்தது. யாரையுமே பார்த்தப் பார்வையில் முடிவு செய்யும், தன் அவசர புத்தியை நொந்து கொண்டாள், ஜோதி.

சுதாராணி






      Dinamalar
      Follow us