sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சிலந்தி வலை!

/

சிலந்தி வலை!

சிலந்தி வலை!

சிலந்தி வலை!


PUBLISHED ON : நவ 17, 2024

Google News

PUBLISHED ON : நவ 17, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''இந்த வீடுதாம்பா, நிறுத்து நிறுத்து...'' என, கனகரத்தினம் கூற, ராஜம்மாள் இல்லம் முன், ஆட்டோ நின்றது. வாடகையை தந்துவிட்டு இறங்கிய, கனகரத்தினம் முறுக்கிய மீசையுடன், வெள்ளை வேட்டி சட்டையில் உற்சாகமாக வீட்டை நெருங்கினார்.

''அக்கா, அக்கா...'' என்றவாறே அந்த வீட்டின், 'கேட்'டை திறந்து உள்ளே சென்றார்.

''மாமா, வாங்க வாங்க, எப்படி இருக்கீங்க?'' என, முக மலர்ச்சியுடன் வரவேற்றாள், கனகரத்தினத்தின் அக்கா மகள், சுமதி.-

''நல்லாயிருக்கேன் மா. நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க? எங்க யாரையும் காணோம்?'' என, ஹாலை நெருங்கியவர், சுற்றும் முற்றும் பார்த்தார்.

''அவரு ஆபீஸ் போயிருக்கார், மாமா. பசங்கள ஸ்கூல் பஸ் ஏத்திவிட போயிருக்காங்க, அம்மா. இப்ப வந்துருவாங்க. உட்காருங்க, மாமா,'' என, சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.

''ஓஹோ,'' என்றவர், சோபாவில் அமர்ந்தார்.

''இருங்க மாமா, நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரேன்,'' என, உள்ளே சென்றாள், சுமதி.

''இருக்கட்டும்மா, எங்கயோ வெளிய கிளம்பிட்ட போல?'' என்றார்.

''ஆமா மாமா, வேலைக்கு போயிட்டு இருக்கேன். இன்னும் நேரம் இருக்கு. இருங்க, காபி போட்டு எடுத்துட்டு வரேன்,'' என, உள்ளே சென்றாள்.

''எப்ப இருந்து வேலைக்கு போக ஆரம்பிச்ச?''

''ஆறு மாசம் ஆச்சு, மாமா. பசங்கள அம்மா பாத்துக்கறாங்க. எதுக்கு வீட்டுல சும்மா இருக்கணும்ன்னு தான், வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்,'' என்றாள், சுமதி.

''அது சரி,'' என்று நிமிர்ந்த, கனகரத்தினத்தின் விழிகள், ஹால் சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தில் நிலைக் கொண்டது. சந்தன மாலையில் சிரித்து கொண்டிருந்தார், ராஜமின் கணவர் சுப்பிரமணி.

'ம்ம்... ஒன்றரை வருஷம் ஓடிப்போச்சு...' என, கனகரத்தினத்திற்கு மனம் நைந்தது.

''அடடே, கனகு, வாடா தம்பி! எப்ப வந்த?'' என்றவாறே உள்ளே நுழைந்தார், ராஜம்மாள்.

''அக்கா,'' என்று திரும்பிய, கனகத்தின் விழிகள், ஒரு நொடி திகைத்துப் போனது. ராஜத்தின் இரட்டை நாடி தேகம் மெலிந்து, நிறம் குன்றி போயிருந்தது. வியர்வை வழியும் முகத்தை முந்தானையில் துடைத்தபடி, கனகத்தை நெருங்கினார், ராஜம்.

''அக்கா, இப்ப தான் வந்தேன். என்ன இப்படி இளைச்சுட்ட?''

''நான் எங்கடா இளைச்சிட்டேன்? ஊருல பசங்க, மனைவி எல்லாம் எப்படி இருக்காங்க? காபி ஏதும் சாப்பிட்டயா?''

''எல்லாரும் நல்லா இருக்காங்க. சுமதி, காபி போட போயிருக்கு.''

''சரி சரி...'' என்றவாறே சோபாவில் அசதியுடன் அமர்ந்தார், ராஜம். காபியுடன் வந்தாள், சுமதி.

''அப்புறம் சுமதி, நம்ம ஊர் திருவிழா இன்னும், 10 நாளுல வருது. நீங்க எல்லாரும் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்திருங்க.''

''பாக்கலாம் மாமா. அவருக்கு, 'லீவு' கிடைக்காது.''

''அட, என்னம்மா? வருஷத்துக்கு ஒரு தரம் வர பண்டிகை. இரண்டு நாள் முன்னாடியாவது வாங்க,'' என்றார், கனகு.

''சரி மாமா, நேரமாச்சு. நான் கிளம்புறேன். நீங்க இருந்து சாப்பிட்டுத்தான் போகணும்,'' என்றவள், ராஜம் பக்கம் திரும்பினாள்.

''அம்மா, டேபிள் மேல, ஈ.பி.,க்கு பணம் வச்சிருக்கேன், கட்டிடு. அப்புறம் துணி மெஷின்ல போட்டு வச்சிருக்கேன், காயப் போட்டுடு. அப்படியே ரேஷனுக்கும் போயிட்டு வந்துரு,'' என்று அடுக்கிக் கொண்டே அவள் வெளியேற, கனகத்தின் முகம் வெகுவாக கறுத்தது.

''அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ, 'லன்ஞ் பாக்ஸ்' எடுத்திட்டியா?'' என, அவள் பின்னே விரைந்தார், ராஜம்.

'எப்படி இருந்தவள்? இன்று சொந்த வீட்டில் வேலையாள் போல்...' மனதில் நினைத்து, கண்களை இறுக மூடி திறந்தார், கனகு.

சுப்பிரமணி இருந்தவரை, ராஜமை எந்த வெளி வேலைக்கும் அனுப்பியதில்லை. தங்கமாக பார்த்துக் கொண்டார். உயிருக்கு உயிராக இருந்த கணவர், திடீரென்று நெஞ்சு வலியில் விட்டு சென்றதில், வெகுவாக மனம் உடைந்து போனார், ராஜம்.

ராஜமின் தனிமையை போக்க, வெளியூரில் இருந்த மகள் குடும்பத்தை, அவளுடன் இணைத்தார், கனகு. அது தவறோ என்று இப்போது அவருக்கு தோன்றியது.

சுமதியை அனுப்பிவிட்டு வந்த ராஜம், ''கனகு, நீ போய் கை, கால், முகம் கழுவிட்டு வா, நான் இட்லி எடுத்து வைக்கறேன்.''

''அக்கா, நீயும் என்னோட ஊருக்கு கிளம்பு. 10 நாள் இருந்துட்டு திருவிழா முடிஞ்சதும் வரலாம்,'' என்றவரை ஆச்சரியமாக ஏறிட்டார், ராஜம்.

''என்னடா தம்பி சொல்ற? நினைச்ச உடனே கிளம்ப முடியுமா? வீட்டுல நிறைய வேலையிருக்கு. சுமதி வேலைக்கு போறா, சாயந்தரம் பசங்க ஸ்கூல்ல இருந்து வருவாங்க,'' என, மறுத்தார்.

''ப்ச். அக்கா, இப்படியே வீட்டுல அடைஞ்சு கிடக்காத. ஊருல எல்லாரையும் நீ பார்த்து எவ்வளவோ நாளாச்சு? மாமா இருக்குற வரைக்கும் அவரு வேலையை காரணம் காட்டி நீ வரமாட்ட. இப்பவும் இப்படி சொன்னா எப்படி?''

சுப்பிரமணியின் நினைவில் ராஜத்திற்கு கண்கள் கலங்கியது. கனகு சொல்வது போல, கணவர் இருந்தவரை அவரை விடுத்து, தனியாக எங்கும் சென்று தங்கியதில்லை. இப்போது, கனகத்தின் கேள்வியில், ராஜத்திற்கு ஊருக்கு செல்ல ஆசை வந்தது.

''சரிடா தம்பி, சாயந்திரம் சுமதி வந்ததும் சொல்லிட்டு கிளம்பலாம்,'' என, சம்மதித்தார்.

''ராத்திரி பயணம் சரிப்பட்டு வராதுக்கா, நாம இப்பவே கிளம்பலாம். நான் போன் போட்டு சுமதிகிட்டே சொல்றேன். நீ போய் இட்லி எடுத்து வை,'' என, ராஜத்தை சமையற்கட்டுக்கு அனுப்பிவிட்டு, சுமதிக்கு போன் செய்து விஷயத்தை கூறினார்.

முதலில் ஆச்சரியப்பட்ட சுமதி, பின், ''அம்மா ஊருக்கு வர ஒத்துக்கிட்டாங்களா, மாமா?'' என, மீண்டும் கேட்க, எரிச்சலானார்.

'அம்மா ஊருக்கு போயிட்டா, வேலைக்கு என்ன செய்றதுன்னு யோசிக்கறா போல...' என வெகுண்டார்.

''ஆமா, சுமதி. அம்மா ஊருக்கு வந்து, 10 நாள் இருக்கட்டும். நீங்க திருவிழாவுக்கு வரும்போது உங்ககூட திரும்பி வரட்டும். நீ, இன்னைக்கு பர்மிஷன் போட்டுட்டு வந்து, பசங்கள கூட்டிட்டு வா. நாங்க கிளம்புறோம்,'' என்றவர், அவள் பதிலை எதிர்பாராமல் போனை, 'கட்' செய்தார்.

தம்பி கனகு கூறியது போலவே சொந்த ஊர் விஜயம், ராஜமின் மனதிற்கு இதமாக இருந்தது. கனகுவின் மனைவியும், அவரது பிள்ளைகளும், ராஜத்திடம் பிரியத்துடன் நடந்து கொண்டனர். பிறந்த ஊர் மனிதர்கள் மத்தியில், ராஜமின் மனம் லேசானது.

பத்து நாட்கள், நிமிடங்களாக பறந்து போனது. ராஜமின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, கனகுக்கு திருப்தி அளித்தது. திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்திருந்தாள், சுமதி. திருவிழாவை கொண்டாடி விட்டு கிளம்பும் போது, ராஜமை அனுப்ப மறுத்தார், கனகு.

''அக்கா இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டும், சுமதி,'' என்ற கனகுவை, திகைப்புடன் ஏறிட்டனர், ராஜமும், சுமதியும்.

''இல்ல கனகு, வந்து 10 நாள் ஆச்சு. நானும் சுமதியோட போறேன்,'' என்றார், ராஜம்.

''ஆமா மாமா, அம்மா இல்லாம வீடே வெறுமையா இருக்கு,'' என்றாள், சுமதி.

'வெறுமையா இருக்கா? இல்ல வேலை செய்ய கஷ்டமா இருக்கா?' என, தனக்குள் கேட்டுக் கொண்ட கனகு, வற்புறுத்தி ராஜமை இருக்க வைத்தார்.

''சரிம்மா... மாமா இவ்ளோ துாரம் சொல்றாரே, நீ இருந்துட்டு வா,'' என கூறி கிளம்பி விட்டாள், சுமதி.

அடுத்த இரு வாரங்கள் கடந்து போக, ராஜத்தின் முகம், சுணங்க ஆரம்பித்தது. அதை கவனித்து, ''ஏங்க, உங்க அக்காவை எப்ப ஊருக்கு அனுப்ப போறீங்க?'' என்றாள், கனகுவின் மனைவி.

''ஏன்? எங்க அக்கா இருக்குறது உனக்கு வலிக்குதா?'' என, சுள்ளென்று எரிந்து விழுந்தார்.

''ஏங்க புரியாம கத்துறீங்க? உங்க அக்காவுக்கு வீட்டு ஞாபகமாவே இருக்கு போல. அதான் கேட்டேன்.''

''அக்கா உன்கிட்ட சொல்லுச்சா?''

''சொல்லணுமா? அவங்க இங்க வந்தபோது இருந்த முகம், இப்ப இல்லையே. எனக்கு என்னவோ நீங்க வற்புறுத்தறதால தான், அவங்க இருக்கற மாதிரி தோணுது,'' எனக் கூற, யோசனை செய்தார், கனகு.

மறுநாள், ராஜத்தை பார்க்க வந்தார், கனகுவின் பெரியப்பா சிதம்பரம். அவரை வரவேற்று, உபசரித்து, ராஜத்தை ஊரில் இருந்து அழைத்து வந்த கதையை கூறினார், கனகு.

''பேசாம, அக்காவ எங்க கூடவே வச்சுக்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன், பெரியப்பா,'' எனக் கூறி முடித்தார்.

''இவர் மட்டும் நினைச்சு என்ன பண்ண? அண்ணி இதுக்கு ஒத்துப்பாங்கன்னு தோணல மாமா. எனக்கு அவங்க ஊரு ஞாபகமா இருக்கற மாதிரி தோணுது. எப்பவும் சுமதி பத்தி தான் பேசிட்டு இருக்காங்க,'' என்றாள், கனகுவின் மனைவி.

''அக்கா மட்டும் நினைச்சு, என்ன பண்ண பெரியப்பா? இந்த சுமதி பொண்ணு, அம்மான்னு பார்க்காம அத்தனை வேலை வாங்குது. திருவிழா முடிஞ்சு போய் ஒரு மாசம் ஆச்சு. இதுவரைக்கும் ஒரு போன் போட்டு அக்காவிடம் பேசல.

''அது, வேலைக்கு ஆள் தேடுது, பெரியப்பா. அக்கா, வேற வழியில்லாம அந்த வலையில மாட்டிட்டு இருக்கு,'' என, அங்கலாய்த்தார், கனகு.

அதுவரை அமைதியாக இருந்த பெரியப்பா, ''புரியாம பார்க்கறவனுக்கு சிலந்தி வலையில மாட்டியிருக்கற மாதிரி தான் தோணும். ஆனா, அது உண்மையில்லை. உன் பார்வைக்கு ராஜம், வலையில மாட்டி இருக்க மாதிரி தோணுது.

''ஆனா, உண்மையில் அது அவளோட கூடு. மிச்ச வாழ்க்கைய ஓட்ட, அவளுக்கு இருக்கிற பிடிமானம்,'' என்றார், சிதம்பரம்,

''பெரியப்பா?''

''ஆமா கனகு, உங்க பெரியம்மா போனதுக்கு அப்புறம் என் மகனும், மருமகளும் நல்லா தான் பார்த்துகுறாங்க. எனக்கு எந்த வேலையும் தர்றது இல்லை.

''ஆனா, எனக்கு சில சமயம், என்னடா இது, மத்தவங்களுக்கு எந்த பிரயோஜனம் இல்லாம, இப்படி சும்மா இருக்கோமேன்னு மனசு வலிக்கும். என்னோட தேவை யாருக்கும் இல்லைன்னா, நான் இருக்கறதுல என்ன அர்த்தம்? நீயே சொல்லு.''

''என்ன பெரியப்பா இப்படி எல்லாம் சொல்றீங்க?''

''அவளை போக விடு, கனகு. நீ, நினைக்கற மாதிரி உங்க அக்கா அங்க கஷ்டப்படலை. நம்மளோட தேவை பிள்ளைகளுக்கு இருக்குன்னு, நிறைவா தான் வாழ்ந்துட்டு இருக்கு. இரு வரேன்,'' என்றவர் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்ப சென்றார்.

நிதானமாக திரும்பி தமக்கையை பார்த்தார், கனகு. அழைத்து வந்த போது இருந்த கலகலப்பு காணாமல் போய், வாசல் ஓரத்தில் அமர்ந்து இருந்தார், ராஜம். முன், அவள் வீட்டிற்கு சென்ற போது, வியர்வை வழிந்த முகத்துடன் இருந்தாலும், அதில் சோகம் இல்லை என்பதை, கனகுவின் மூளை கணக்கிட்டது.

இரவு உணவின்போது, சுரத்தே இல்லாமல் உணவை வெறித்துக் கொண்டிருந்த, ராஜமை பார்த்தார்.

''அக்கா, நாளைக்கு டவுனுக்கு போறேன். அப்படியே உன்ன வீட்டுல விட்டுவிடவா?'' என. வினயமாக கேட்டார், கனகு.

ஒரு நொடி திகைத்த, ராஜமின் விழிகள், மறுநொடி மின்னியது.

''சரிடா தம்பி,'' என்றார், சிறு புன்னகையுடன். உற்சாகமான தமக்கையை பார்த்தவருக்கு பெரியப்பாவின் வார்த்தைகளில் இருந்த உண்மை புரிந்தது.

மறுநாள், ராஜம்மாள் இல்லம் வீட்டின் வாசற்படி மிதித்த மறுநொடி, பம்பரமாக சுழல ஆரம்பித்தார், ராஜம்.

''அம்மா,'' என, ஓடி வந்த, சுமதி இருவரையும் வரவேற்றாள்.

குழந்தைகள் இருவரும், 'பாட்டி பாட்டி...' என, ராஜத்தின் காலைக் கட்டிக் கொண்டனர். அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, ரேஷன் கடைக்கு பறந்தார், ராஜம்.

சுமதி கொடுத்த காபியை வாங்கி கொண்டவர், ''ஏம்மா இந்த ஒரு மாசத்துல உங்க அம்மாவுக்கு ஒரு தடவை கூட போன் போடல?'' என, தன் மனதில் இருந்த இறுதி சந்தேகத்தை கேட்டார், கனகு.

''வேணும்ன்னு தான் மாமா பண்ணல. நான் மட்டும் போன் போட்டிருந்தா, பசங்கள பார்க்கணுன்னு உடனே கிளம்பி இருப்பாங்க, அம்மா. அப்பா போனதுக்கு அப்புறம், அம்மா எங்கேயும் போறது இல்லை. எப்பவும் அழுதுட்டே இருப்பாங்க.

''இந்த மாதிரி சின்ன சின்ன வேலை, வீட்டுல பண்ணும் போது தான், அப்பாவை நினைக்காம இருப்பாங்க. சொல்லப் போனா, உங்களால தான் மாமா, அம்மா இப்படி ஒரு மாதம் நிம்மதியா ஊருல இருந்துட்டு வந்திருக்காங்க. அவங்க முகம் எவ்ளோ பளிச்சுன்னு இருக்குன்னு பாருங்க,'' என, நன்றியுடன் கூறினாள், சுமதி.

மனதில் இருந்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துவிட, சந்தோஷமாக சாப்பிட்டு ஊர் திரும்பினார், கனகு.

ப. தனலட்சுமிவயது: 32, படிப்பு: பி.சி.ஏ., பணி: புராஜெக்ட் கோ ஆர்டினேட்டர். திரைக்கதை எழுத்தாளராவது இவரது லட்சியம். கதைக் கரு பிறந்த விதம்: என் சொந்த வாழ்வில் சந்தித்த சில நிகழ்வுகளே, இக்கதையின் கரு. மாதம் ஒருமுறை நலம் விசாரிக்க வரும் சில உறவினர்களுக்கு, உடனிருந்து பெற்றோரை கவனித்து வரும் பிள்ளையின் உணர்வுகள் புரிவதில்லை. பெற்றோரை வேலை வாங்குவதாக நினைத்துக் கொள்கின்றனர்.பழைய நினைவுகளை யோசித்து புலம்பும் அவர்களின் நினைவை திருப்பவே, சின்ன சின்ன வேலைகள் கொடுத்து, அவர்கள் மனநலத்தை பேணும் பிள்ளைகளின் பாசம் தெரிவதில்லை. அதை விளக்க, நான் எடுத்துக் கொண்ட முயற்சியே இந்த படைப்பு.






      Dinamalar
      Follow us