
அன்றைய நாளின் விடியல் எப்போதும் போல இல்லை; உற்சாகத்தை அகிலாவுக்கு கொடுக்கவில்லை.
இன்றைய வேலைகள் என்னென்ன, எவையெல்லாம் முதலில் வரும், இன்று அணிகிற குர்த்திக்கு நீலநிற, 'கிளிப்' சரியாக இருக்கும், கட்டுரை போட்டிக்கு தலைப்பாக என்ன வைக்கலாம், அன்புச்செழியன் உடல்நலம் மேம்பட்டு இன்று பள்ளிக்கு வருவானா என, பல எண்ணங்கள் அகிலாவுக்கு தோன்றும். ஆனால், அவை எதுவுமே இல்லை, ஆழ்கடல் போல நிசப்தமாக கிடந்தது மனது.
''அகிலா, யுவர் காபி... குட் மார்னிங்,'' என்றபடி அருகில் வந்து அமர்ந்தான், செல்வா.
''குட் மார்னிங். சாரி இன்னைக்கு நான் டிக்காஷன் போடலே,'' என்று வாங்கிக் கொண்டாள்.
''தெரியும், இன்னைக்கு நீ கொஞ்சம், 'அப்செட்'டாக இருப்பாய். பிரச்னையை ஒதுக்கி வைத்து, ப்ரியாக இரு,'' என்று இதமாகப் புன்னகைத்தான், செல்வா.
''முயற்சிக்கிறேன், செல்வா,'' என்றபோது அவளை அறியாமல் பெருமூச்சு வந்தது.
இன்று பள்ளியில், 'ஓப்பன் ஹவுஸ்' தினம். அதாவது, மாணவர்களின் பெற்றோர்கள், வகுப்பாசிரியரை சந்திக்கலாம், பேசலாம், கேள்விகள், சந்தேகங்கள் என்று, தங்கள் குழந்தையைப் பற்றி விசாரிக்கலாம்.
நல்ல விஷயம் தான். ஆசிரியர் என்பவர், தாய் - தந்தை போலத்தான். அவருடன் தான் பிள்ளைகள் அதிக நேரம் செலவழிக்கின்றனர் என்பதும் உண்மை தான். ஆனால், அதற்காக ஆசிரியர் தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு என்பது போலத் தானே இருக்கின்றனர், பெற்றோர்!
இதுவரை நடந்த, 'ஓப்பன் ஹவுஸ்' ஒன்றில் கூட அவளுக்கு ஏச்சோ, திட்டோ விழாமல் போனதில்லை. கைநீட்டி ஓங்கி அறையவில்லையே தவிர, நீயெல்லாம் ஒரு டீச்சரா என்ற அளவுக்கு, பெற்றோர்கள் பேசி விட்டுப் போவது தான் நடந்திருக்கிறது.
''அகிலா, நீ கொஞ்சம், 'ரெஸ்ட்' எடு. டிபன் நான் செய்யறேன். 'லஞ்ச்' வெளியில் வாங்கிக்கலாம்,'' என, அவள் கையை பற்றினான், செல்வா.
''இல்லே செல்வா, நான் செய்யறேன்.''
''வேண்டாம்மா. நீ, 'மென்டலி பிரிபேர்' ஆகிக் கொள். நாம சின்சியரா, நமக்கு உண்மையா, ஒரு பணியை செய்யும் போது மத்தவங்க வந்து குற்றப்பத்திரிகை வாசிக்கிறதை கேக்க வேண்டி இருக்கு. இந்த, 'சிஸ்டம்' அப்படித்தான் இருக்கு. இன்று அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.''
''சரி,'' என்றாள், அகிலா.
''என்னவோ பேசிட்டுப் போகட்டும் அவங்க. நீ பெரிதாக எடுத்துக்கவே வேண்டாம். இந்த டீச்சர் வேலையை நீ, மாத சம்பளம் தரும் வேலையாக பார்க்கலே. இது உன் கனவு, உன் லட்சியம். தினம் வாசிக்கிறே, தினம் வகுப்புகளை உற்சாகமா எடுக்கறே.
''மாணவன் என்கிறவன், எதிர்கால குடிமகன் என்ற பொறுப்புணர்வோட அவனுக்கு தத்துவம், கோட்பாடுன்னு வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களை சொல்லிக் கொடுக்கிறே. இது உன் நல்ல மனதின் வெளிப்பாடாகச் செய்வது. யாரும் எதுவும் சொல்லட்டும் சரியா?'' என்றான், செல்வா.
''ம்... சரி,'' என்றாள்.
எழுந்து சமையலறைக்குப் போனான், செல்வா; கண்களை மூடிக் கொண்டாள், அகிலா.
உண்மை தான். செல்வா அவளை புரிந்து கொண்டவன். பி.எச்.டி., முடித்து, எம்.பில்., தேறி, அவள் ஆசைப்பட்டு வந்தது நடுநிலைப் பள்ளி ஆசிரியராக, என்ற நிஜம் தெரிந்தவன்.
வெறும், 'சிலபஸ்' சொல்லிக் கொடுப்பது மட்டுமே ஆசிரியர் வேலையாக, ஒருநாளும் தன் எல்லைகளை அவள் குறுக்கிக் கொண்டதில்லை. பாடம் எடுப்பது என்பதும், வெறும் ஒப்பிக்கிற வேலையாக நினைத்ததில்லை. கடைசி மாணவனுக்கும் புரிய வைப்பாள்.
நீதிக்கதைகள், நாட்டு நிகழ்வுகள், மன்னராட்சிகள், பண்டைய தமிழ் வாணிபங்கள், முந்தைய நாகரிகம், மக்களாட்சியின் முக்கியத்துவம் என, போதிப்பது போல இல்லாமல், ஜென் கதைகள், புத்தர் கதைகள் மூலம் சொல்வாள்.
மனிதன் இன்று வந்து நிற்கும் இடத்திற்குப் பின், கோடிக்கணக்கான ஆண்டுகளின் சரித்திரம் இருக்கிறது என்பதை மிருதுவாக எடுத்துச் சொல்வாள்.
ஆனால், பெற்றோர்களின் எதிர்பார்ப்பெல்லாம் முழுமையாக வேறு கோணங்களில் இருந்தது.
'என்ன டீச்சர் சொல்லிக் கொடுக்கிறீங்க? ஏழாம் வகுப்பு என் பையன். மாத்ஸ்ல, எழுபது, எண்பதுன்னு நொண்டி அடிக்கிறான். அப்புறம் எங்க, 'கேட்' எக்சாம் எழுதறது. நீங்க இன்னும் விளக்கமா சொல்லிக் கொடுக்கணும்...'
'என் பையனுக்கு நாலு வயதில் இருந்தே டாக்டர் ஆகணும்னு கனவு. நீங்க என்னடான்னா அவனுக்கு ஹிஸ்டரி, இங்கிலீஷ்னு இன்டரஸ்ட் உண்டாக்கறீங்க. சயின்ஸ்ல அவன், 'சென்ட்டம்' வாங்கணும். உங்க பொறுப்பு மேடம்...'
'ஐ.ஏ.எஸ்., குடும்பம் டீச்சர் எங்களுடையது. இவன், 'ஆவரேஜ் மார்க்'கே வெறும், எழுபது. என்ன சொல்லிக் கொடுக்கறீங்க? லட்சக்கணக்குல, 'பீஸ்' கட்டித்தானே இப்படி தனியார் பள்ளிக் கூடங்களுக்கு வரோம்? இங்கேயும் அலட்சியமா இருக்கீங்க?'
முதலில் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். புன்னகையுடன் தன் பொறுப்புகளை எடுத்துச் சொன்னாள். வளரும் பருவம், விளையாட்டுப் பருவம், இன்னும் கொஞ்ச காலத்தில் சிறுவர்கள் பொறுப்பானவர்களாகி விடுவர் என, நிதானமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஆனால், அவர்களுக்கு எந்த நீதி, நியாயமும் தேவைப்படவில்லை. நோக்கத்தில் தெளிவாக இருக்கின்றனர். மகனோ, மகளோ ஆயிரத்திற்கு ஆயிரம் வாங்க வேண்டும். போனால் போகட்டும் ஒன்றிரண்டு மார்க்குகள் குறைந்தால் பரவாயில்லை.
இங்கே மருத்துவம் படித்துவிட்டு அமெரிக்காவில் சம்பாதித்து, செழிக்க வேண்டும். இங்கே பொறியியல் முடித்துவிட்டு, லண்டன், நெதர்லாந்து என, யூரோவில் கொழிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., - ஐ.எப்.எஸ்., என, முடித்து விட்டு, பெரிய அதிகாரியாக மத்திய அரசில் அதிகாரம் செலுத்த வேண்டும், அவ்வளவுதான்.
இது அதற்கான பாதை. இவர்கள் அந்தப் பாதையில் மட்டுமே ரதத்தை செலுத்த வேண்டிய சாரதிகள்.
அகிலாவுக்கு அலுப்பாக இருந்தது. எதிர்பார்த்ததை விட, அன்றைய தினம் இன்னும் அதிக அழுத்தத்துடன் இருந்தது.
கண்ணுக்குத் தெரியாத சாட்டைகளை வைத்துக் கொண்டு பெற்றோரும், மற்றோரும் அவளை சாத்தி விட்டுப் போயினர்.
வகுப்பறை நிலைப்படி அருகில் வந்து நின்றாள், ஒரு பெண்மணி.
''நேரமாகிட்டது டீச்சர், வரலாமுங்களா?'' என்று முகம் குனிந்து பார்த்து கேட்டாள்.
''வாங்கம்மா,'' என்ற போது தான் கவனித்தாள், அகிலா.
அந்தப் பெண்மணி, துாய்மைப் பணியாளர் என்பதை அறிவிக்கும் உடை அணிந்திருந்தாள். மெல்லிய உருவம். நடுத்தர வயது உடல்வாகு.
''உள்ளே வாங்க. வகுப்பறையை பெருக்கி கூட்டணுமா?'' என்றாள், அகிலா எழுந்து.
''இல்லீங்க டீச்சர். நான் வேலம்மா. உங்க வகுப்பில் படிக்கிற, தனசேகர், என் புள்ளைங்கம்மா,'' என்றார்.
அகிலாவுக்கு திகைப்பாக இருந்தது. இது மேல்மட்ட பொருளாதார குடும்பங்களுக்கான பள்ளி அல்லவா?
''ஆமாம் டீச்சரம்மா. எங்க வீட்டுக்காரரு பெரிய சிமென்ட்டு கம்பெனில டிரைவரா இருந்தாரு. விபத்துல தொழிற்சாலை கிரேன்ல மாட்டி இறந்துட்டாரு. முதலாளி தான் எங்க மகன், படிப்பு செலவை ஏத்துகிட்டு கட்டிகிட்டு வராரு.''
''அப்படியா, உள்ளே வாங்கம்மா.''
தயக்கத்துடன் வந்தாள், வேலம்மா. அந்த முகத்தில் இருந்த வெட்கமும், புன்சிரிப்பும் அவளுக்கு பார்க்கப் பிடித்தன.
''தனா, நல்லா படிக்குற புள்ளை டீச்சரம்மா. உங்களைப் பத்தி அடிக்கடி பெருமையா சொல்லுவான், புள்ள.''
''உண்மைதான் வேலம்மா. இந்த, 'அசெஸ்மென்ட் டெஸ்ட்' எல்லாத்துலயும் உங்க மகன், 'டாப்'ல இருக்கான். எல்லா பாடத்திலேயும் அவன் சூப்பர்மா. நல்ல மாணவன்மா அவன்,'' என்றாள், அகிலா பரவசத்துடன்.
''சரிங்க டீச்சரம்மா. நான் வந்தது வேற சிலது கேக்கணும்ன்னு.''
''சரி கேளுங்க,'' என்று புன்னகைத்தாள், அகிலா.
''எம் மவன் மத்த புள்ளைங்களோட நல்லா பழகுறானா டீச்சரம்மா?''
''ஆமாம். அவன் எப்பவும் சிரிச்ச முகமா ப்ரெண்ட்லியா இருப்பான், வேலம்மா.''
''ஏதாவது குறிப்பிட்ட பாடத்துல அவனுக்கு ரொம்ப ஆர்வம் இருக்குதா டீச்சரம்மா?''
''ஆமாம். அவனுக்கு, 'ஆஸ்ட்ரோ பிசிக்ஸ்' ரொம்ப பிடிக்கும். எதிர்காலத்தில் நல்ல அறிவியலாளரா, வானியல் ஆய்வாளரா வரணும்ன்னு நினைக்கிறான்.''
''சந்தோஷம் டீச்சரம்மா. அப்புறம் மத்த புள்ளங்க, அதான் பொம்பளை பிள்ளைங்ககிட்ட மட்டு மரியாதையா நடந்துக் குறானா?''
''தனசேகர் எப்பவும் ஸ்பெஷல்மா, எங்க வகுப்பு குழந்தை களுக்கு; நல்ல நண்பன் எல்லாருக்கும். அவன் கிட்ட தான் பாடத்தில் வரும் சந்தேகங்களை கேட்பாங்க, மாணவியர்.''
முகம் மலர்ந்து, கை எடுத்து கும்பிட்டாள், வேலம்மா.
''ரொம்ப நன்றி டீச்சரம்மா. நல்ல மனுஷனாவும் இருக்கணும் இல்லம்மா. அதுதானே ரொம்ப முக்கியம். என் மவன் படிப்புல சுமாரா இருந்தா கூட பரவாயில்லம்மா. அறிவை எப்ப வேணா வளத்துக்கலாம். ஆனா, நல்ல குணமும், பழக்கமும் சின்ன வயசுல இருந்தே வரணும்.
''உங்க வாயால என் மகனைப் பத்தி நல்ல வார்த்தை கேட்டேன். அதுவே போதும்மா. வரட்டுமாம்மா?''
அகிலா தன்னை அறியாமல் கை எடுத்து வணங்கினாள்.
மொபைல் போன் அழைத்தது.
செல்வா பேசினான்.
''எப்படி போகுது, 'ஓப்பன் ஹவுஸ்?' அதே அக்கப்போர் பேரண்ட்ஸ் தானே?''
''தேவதையைக் கண்டேன் செல்வா,'' என்ற, அவள் குரல் வழுக்கியது.
வி. உஷா