sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : நவ 10, 2024

Google News

PUBLISHED ON : நவ 10, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 22 வயது பெண். பி.காம்., படித்து, வங்கி ஒன்றில், தற்காலிகமாக பணிபுரிகிறேன். எனக்கு ஒரு தம்பி, பள்ளியில் படிக்கிறான்.

அதே வங்கியில், தற்காலிகமாக பணிபுரியும், இளைஞன் ஒருவன் அறிமுகமானான். எங்கள் இருவரது வீடும், ஒரே பகுதி என்பதால், தினமும், பஸ்சில் ஒன்றாக சென்று, மாலை திரும்புவோம். உடன் பணிபுரிபவர் என்பதால், நானும் சாதாரணமாக பேசுவேன்.

'இந்த வேலை நிரந்தரமல்ல. மேற்கொண்டு படித்து, வேறு நல்ல வேலைக்கு சென்று, சுயதொழில் செய்து முன்னுக்கு வரணும். என் பெற்றோருக்கு ஒரே மகனான நான், வயதான காலத்தில் அவர்களை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.

'அதற்காக, அஞ்சல் வழி கல்வி பயில போகிறேன். நீயும், ஏதாவது பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்க பார்...' என, பொறுப்பாக பேசுவான்.

வங்கியில், தன் வேலைகளை கருத்துடன் செய்வான். தெரியாத விஷயங்களை சீனியர்களிடம் கேட்டு தெரிந்து, எனக்கும் சொல்லிக் கொடுப்பான். நாளடைவில், அவன் மீது எனக்கு காதல் உண்டானது. ஆனால், வெளிப்படையாக அவனிடம் இதை கூறவில்லை.

என் பிறந்த நாளன்று, விலை உயர்ந்த மொபைல் போன் ஒன்றை பரிசளித்தான். நானும் அந்த போனை பயன்படுத்த ஆரம்பித்தேன்.

அலுவலகம் விட்டு வீடு சென்றதும், விடுமுறை நாட்களிலும், நான் என்ன செய்கிறேன், எங்கு செல்கிறேன், யாருடன் பேசுகிறேன் என்பதையெல்லாம் சரியாக மறுநாள் சொல்வான்.

'உங்களுக்கு எப்படி தெரியும்?' என்றால், 'ஒரே ஏரியாவில் இருக்கிறோம். இது கூட தெரியாதா?' என்று மழுப்பலாக பதில் சொல்வான்.

விடுமுறை நாளில் திடீரென்று, 'வெளியே போலாம் வா...' என்று அழைப்பான்.

என் பெற்றோருக்கோ, எங்கள் இருவர் மீது சிறிதும் சந்தேகம் வரவில்லை. நானும், ஷாப்பிங் மால், சினிமா என, அவனுடன் சென்று வருவேன். அங்கெல்லாம், 'டிசன்ட்' ஆகவே நடந்து கொள்வான். ஆனால், என்னுடன் சேர்ந்து, 'செல்பி' எடுத்துக் கொள்வான்.

ஒருமுறை, ஐ.டி.,யில் பணிபுரியும் என் பெரியப்பா மகன், எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான்.

என்னிடமிருந்து, புது மொபைல் போனை வாங்கி பார்த்தான். கொஞ்ச நேரம் அதை, ஆராய்ந்த பின், 'தேவையில்லாத, 'ஆப்' எல்லாம் எதற்கு பதிவிறக்கம் செய்துள்ளாய்?' என்று கேட்டான்.

'நான் எதுவும் செய்யவில்லை...' என்று கூறினேன். ஆனால், அப்போது தான் எனக்கு, 'பொறி' தட்டியது.

அந்த போனில், சில, 'ஆப்'களை பதிவிறக்கம் செய்து என்னிடம் கொடுத்துள்ளான், நண்பன். அதை வைத்தே, என் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளான் என்பது தெரிந்தது. உடனடியாக, எல்லா, 'ஆப்'களையும், 'கேன்சல்' செய்து, போனையும் பயன்படுத்தாமல் வைத்து விட்டேன்.

என் பழைய போனை எடுத்து சென்றதை பார்த்த நண்பன், 'புது போன் என்னவாயிற்று?' என்று கேட்க, 'சரியாக வேலை செய்யவில்லை...' என்று கூறி விட்டேன்.

'நான் நேற்று எங்கு சென்றேன். சொல் பார்க்கலாம்?' என, நண்பனிடம் கேட்க, முதலில் விழித்தான்.

'நான் நேற்று, அம்மாவுடன் கடைக்கு சென்று விட்டேன். அதனால், எனக்கு தெரியாது...' என, மழுப்பினான்.

எனக்கு புரிந்துவிட்டது. சிறிது சிறிதாக அவனிடமிருந்து விலக ஆரம்பித்தேன். பேசுவதையும், பஸ்சில் ஒன்றாக செல்வதையும் தவிர்த்தேன்.

இப்போது, 'என்னுடன் பேசவில்லை என்றால், உன் புகைப்படத்தை, வலைத்தளத்தில் வெளியிட்டு, நீ மோசமானவள் என, போட்டு விடுவேன்...' என, மிரட்டுகிறான். அவனிடமிருந்து தப்பிப்பது எப்படி? நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.

—இப்படிக்கு,

உங்கள் மகள்.



அன்பு மகளுக்கு —

மிகமிக நல்லவனாக தெரிபவன், உண்மையில் மிகமிக கெட்டவன். உன் முன்னாள் காதலனும் இவ்வகையே.

எனக்கு, உன் முன்னாள் காதலனின் மனநிலை புரியவில்லை.

எதற்காக சில ஒட்டு கேட்கும் செயலிகளை பொருத்திய மொபைல் போனை, உனக்கு வாங்கித் தர வேண்டும், அவன்?

ஒட்டுகேட்கும் செயலிகளை வைத்து, நீ, இருக்குமிடம்-, தகவல்கள்-, உரையாடல்கள்-, முகநுால், 'இன்ஸ்டா' விபரங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை உளவறிந்து, என்ன செய்ய போகிறான்?

உன் அந்தரங்க ஒளிப்படங்கள் எதாவது நீ, அனுப்பினாயா அல்லது அவன் எடுத்தானா? மேலும், உன் சாதாரண ஒளிப்படங்களை மார்பிங் செய்யப் போகிறானா? பொறுத்திருந்து பார்ப்போம்.

எதுவாக இருந்தாலும் பயப்படாதே. காவல்துறை உதவி எண் 112. தேசிய பெண்கள் உதவி எண் 181. 044 -- 29580300 சென்னை எண்ணுக்கும் பேசி, புகாரை பதிவு செய்யலாம். தேசிய எண் 1800 209 6789க்கும் புகார் செய்யலாம்.

உன் பெயரை புகாரில் ரகசியமாய் வைக்கச் சொல்லி, 'ரிப்போர்ட் அண்ட் ட்ராக்' முறையில், சைபர் கிரைமில் புகார் செய்யலாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், உன் முன்னாள் காதலனுக்கு, ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

டீனேஜ் பெண்களே! எந்த ஆணுக்கும் துரிதமாக, நல்ல ஆண் என்று சான்றிதழ் கொடுத்து விடாதீர்கள்! பெரும்பாலானோர் விலாங்கு வேஷம் போட்ட, நாகப்பாம்புகள்.

— -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us