PUBLISHED ON : மார் 02, 2025

துாக்கம் தொலைத்த இரவு, பார்வதியின் கண்களுக்கு அனல்கட்டிகளைக் கொடுத்திருந்தது. எப்படியோ எழுந்தாள். இன்று முக்கியமான வேலை இருக்கிறது.
கணேஷ்குமார் டாக்டர் எழுதிக் கொடுத்த, ஸ்பெஷல் மாத்திரையை, மெடிக்கல் ஷாப் அன்வர், இன்று வாங்கி வைத்திருப்பார். தாமதம் செய்யாமல் உடனே வாங்கி சாப்பிட வேண்டும் என, சொல்லியிருந்தார்.
நினைத்துப் பார்த்தாள். இந்த, ஐந்து ஆண்டுகளில் இது எத்தனையாவது புது மாத்திரை என, கணக்கு போட்டு பார்த்தபோது, இருபதைத் தாண்டி விடும் போலிருந்தது.
சுந்தர் அடிக்குரலில் முனகுவது கேட்டது.
''வரேன், வரேன்...''
காபி தயார் செய்தாள், பார்வதி.
சூடான காபியை பார்வதியும், சுந்தரும் உட்கார்ந்து ஒன்றாக குடித்த நாட்களை நினைத்துப் பார்த்தாள். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், காபி, சாப்பாடு, டிபன் எல்லாம் சேர்ந்தே தான் சாப்பிடுவர். 30 ஆண்டுகளாக இருந்த பழக்கம். இப்போது இல்லை. என்றைக்கு, சுந்தர், பக்கவாதத்தில் விழுந்தாரோ அன்றுடன் எல்லா வசந்தங்களும் நின்று விட்டன.
''காபி தரேன். மெல்ல வாயைத் திறக்கணும்,'' என, பக்கத்தில் உட்கார்ந்தாள்.
'ம்...' என, முனகலாக பதில் சொன்னார், சுந்தர். இளைத்து ஒடுங்கிப் போன கண்களில், அவளைப் பார்த்ததும் லேசாக ஒரு வெளிச்சம் வந்து விட்டுப் போனதைப் போல இருந்தது.
''உப்புமா பண்றேன். உங்களுக்குக் கொடுத்துட்டுப் போறேன்.''
''ம்...''
''ஓ... எங்கேன்னு சொல்லலியே... டாக்டர் ஒரு ஸ்பெஷல் மாத்திரை எழுதிக் கொடுத்திருக்கார். அதுல நல்ல முன்னேற்றம் தெரியும்ன்னு சொல்றார். அன்வர் வாங்கி வெச்சிருப்பார். பார்க்கலாம். நம்பிக்கையோட சாப்பிடலாம்.''
''ம்...''
''சரி... இதோ வரேன்.''
மொபைல் போன் அழைத்தது.
வெளிநாட்டு அழைப்பு; மகன் ஆகாஷ் அழைத்தான்.
மகன் குரலைக் கேட்க வேண்டும் என, பரபரத்தது. அவன் தான் இப்போதைக்கு ஒரே ஆறுதல். இந்த கசப்பு தினங்களுக்கு கொஞ்சமாவது மாற்று என்றால், அவன் தான்.
''கண்ணா, எப்படிடா இருக்கே? சாப்பிட்டியா?'' என்பதற்குள் குரலில் உணர்ச்சிகள் தெறித்தன.
''சாப்பிட்டேம்மா. நீ எப்படிம்மா இருக்கே?''
''இப்பதான் காபி ஆச்சு. டிபனுக்கு உப்புமா. லஞ்சுக்கு இஞ்சி குழம்பு, கீரை மசியல். உன் ஆபிஸ் எப்படி இருக்கு, ராஜா?''
''எல்லாம் நல்லபடியா போகுதும்மா. அப்பாகிட்ட ஏதாவது முன்னேற்றம் இருக்கா?''
''அப்படியே தான் இருக்கார். ரெண்டு மாசம் முன், நீ வந்தபோது இருந்த அதே நிலைமை தான். பாவம் சுறுசுறுப்பா இருந்த மனுஷரை, இப்படி பாக்கவே கஷ்டமா இருக்கு.''
''சரியாகிடும்மா. கணேஷ் டாக்டர்கிட்ட பேசினேன். நல்ல மெடிசின் எடுக்கறதால சீக்கிரம், 'ரெகவர்' ஆயிடுவார்ன்னு சொல்றார். நீ நம்பிக்கையா இரும்மா.''
''பாக்கலாம். அஞ்சு வருஷமா அப்படித்தானே இருக்கேன்?''
''அம்மா, வந்து... ஒரு விஷயம் சொல்லணும்மா.''
''சொல்லு கண்ணா.''
''தப்பா எடுத்துப்பியோன்னு பயமா இருக்கும்மா.''
''பயமா, என்கிட்டயா? ஏன்டா கண்ணா. சொல்லுடா தங்கம்,'' என்றாள், பார்வதி. இருந்தாலும், உள்ளே வியர்த்தது.
''நான்சின்னு ஒரு பொண்ணும்மா. பென்சில்வேனியால பிறந்து வளர்ந்தவள். என் கூட வேலை செய்கிறாள். ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. பாத்து பேசினா, உனக்கும் அவளை ரொம்ப பிடிக்கும்.''
''ம்.''
''மோஸ்ட்லி நான், இங்க தான், 'செட்டில்' ஆயிடுவேன். அவளை கல்யாணம் பண்ணிகிட்டா, வாழ்க்கை ரொம்ப ஈசியா இருக்கும்மா. உன்னை மாதிரியே அவளும் அன்பா, பிரியமா, கெட்டிக்காரியா இருக்கா.
''நீ எப்பவும், 'பிராக்டிகலா' இருப்பியே... அதேதான் அவளும். உன்கிட்ட சொல்லாமல் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லே எனக்கு. வர்ற சண்டே இங்கேயே...''
அவன் சொல்லிக் கொண்டே போனான். அவளின் உதடுகள் மட்டும் ஏதோ ஒரு தாளகதியில், 'ம்... ம்...' என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தன.
''யம்மாவ். எத்தினி நேரமா கூப்புடுறேன். என்ன யோசிச்சுகிட்டிருக்கே?''
பணிப்பெண் வளர்மதியின் குரல், பார்வதியை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.
''குழாய்ல தண்ணி சரியாவே வரலேம்மா. பிளம்பர் வந்தாரா இல்லையா?''
''வந்தார் வளர்மதி. 'ரிப்பேர்' பாத்தாரே.''
''என்ன பாத்தாரோ. தண்ணி எப்படி வருது பாரு, எலி வாலாட்டம். நேத்து நான் தப்பிச்சேன். தெரியுமா உனக்கு? இல்லேன்னா இன்னிக்கு பால் எனக்கு.''
''என்ன வளர்மதி சொல்றே?''
''கூடைல எப்பவும் போல, சாமான் கழுவி கவுத்தேம்மா. பெருக்கி தள்ளலாம்ன்னு தென்னந்துடப்பத்த எடுக்க நகந்தேன். 'டமால்'ன்னு உத்தரத்துல இருந்து ரெண்டு செங்கல் விழுது. நீ, அப்ப அய்யாவுக்கு டயாப்பர் வேலை செஞ்சுகிட்டிருந்தியா. நானும் அவசரமா போயிட்டேன்.''
''அய்யோ... நல்லவேளை வளர்மதி,'' என, பதறிப் போனாள், பார்வதி.
''ஆமா, 20 வருஷமாச்சு இந்த வீட்டுக்கு நீ வந்து. செகண்ட் ஹாண்ட் வீடு இல்லியா? கொஞ்சம் வீக்காதான் இருக்கு. நல்ல மேஸ்திரியா கூப்பிட்டு, 'ரிப்பேர்' பாரு. இல்லாட்டி எப்ப எது விழும்னு தெரியாம பயந்துகிட்டே இருக்கணும்.''
''சரி, பாக்கலாம். இந்தா இதை சாப்பிட்டு கிளம்பு.''
''உன் ரசத்துக்காகவே தெனம், 'லீவு' போடாம வரேன். பாவம்மா நீ. ஐயா திடமா இருந்தா, நீ ராணியாட்டம் இருப்ப. என்ன செய்ய, தல எழுத்து.''
கிளம்பிப் போனாள், வளர்மதி.
வெயில் இன்று மிக சாந்தமாக இருந்தது. காற்றின் குளுமை. மரங்கள் தாலாட்டு போல ஆடிக் கொண்டிருந்தன.
''நீங்க துாங்குங்க. கடைக்குப் போய்ட்டு வரேன்,'' என, சுந்தரிடம் சொல்லி, வீட்டை பூட்டி கிளம்பினாள், பார்வதி.
சொன்னது போலவே, அன்வர் மாத்திரைகளை வரவழைத்து வைத்திருந்தார். புன்னகையும், மரியாதையுமாக கொடுத்தார்.
திரும்பி நடந்தாள். பூங்கா வழியாக வீடு நோக்கி செல்லும் பாதை. வாசலில் நிற்கும் இருசக்கர வாகனங்கள். நெருக்கமான மரங்களில் மகிழ மரங்கள் உண்டு. மவுனமாக அவை வெளிப்படுத்தும் நறுமணம், எப்போதும் அவளுக்கு விருப்பமாக இருக்கும். அதற்காகவே இந்தப் பாதையை பயன்படுத்துவாள். குழந்தைகளின் இரைச்சலும் உற்சாகமாக இருக்கும். இன்றும் எல்லாம் இருந்தன. ஆனால், அனுபவிக்கும் மனம் தான் இல்லை.
'பார்வதி. நீ... நீ பாரு இல்லே?' என, யாரோ திடீரென பூங்கா வாசலில் இருந்து அழைத்தனர்; திரும்பினாள்.
ஓடி வந்தாள், ஒருத்தி. சட்டென கைகளைப் பற்றிக் கொண்டாள். ஒல்லியாக, பளீர் முகமாக.
'இவள், காஞ்சனா அல்லவா?' பார்வதிக்கு உடனே நினைவுக்கு வந்துவிட்டது.
''அட, காஞ்சனா. நீயா? லக்னோகிட்ட எங்கேயோ இருக்கிறதா நெனச்சேனே. இங்கேயா இருக்கே?'' என்றாள் புன்னகைத்து, பார்வதி.
''ஆமாம் பார்வதி. இங்கே தான் இருக்கேன். கோட்டூர்புரம்கிட்டே. நீ?''
''இங்கேதான். அஞ்சு நிமிடத்தில் வீடு. வாயேன்.''
''இன்னொரு நாள் வரேன். இப்ப, 'குரூப்'பா வந்திருக்கோம். எப்படி இருக்கே, பார்வதி? பழைய பாருவா இது? இல்லையே! முகத்துல சிரிப்பு, கன்னத்துல சதை, கண்கள்ல வெளிச்சம் எதுவுமே இல்லையே... என்னடா?'' என, தோளில் விரல் வைத்து மென்மையாகக் கேட்டாள், காஞ்சனா.
சடாரென பார்வதிக்கு கண்கள் பொத்துக் கொண்டன.
''என்ன சொல்றதுன்னு தெரியலே, காஞ்சனா. வாழ்க்கை என்னை தினம் அடிச்சு துவைக்குது. அவருக்கு, 'பராலிடிக் அட்டாக்' படுத்த படுக்கை. இதோ இப்பக் கூட, புது மெடிசின் வாங்கிகிட்டு தான் போறேன்.
''பையன் நல்லா படிச்சு, அமெரிக்கால நல்ல வேலைல இருக்கான். அந்த ஊர் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு தகவல் சொல்றான். சொந்த வீடுன்னு தான் பேரு. ஆயிரம், 'ரிப்பேர்' இருக்கு. தினம் ஒரு மராமத்து பண்ண வேண்டியிருக்கு. என்னால முடியலே, காஞ்சனா. எங்கேயாவது தீவு கெடச்சா ஓடிப் போயிடலாம்ன்னு இருக்கு.''
குமுறி வெடித்த தோழியை அணைத்துக் கொண்டாள், காஞ்சனா. விரலால் கண்ணீரைத் துடைத்தாள். தலையை வருடினாள்.
குனிந்து நிமிர்ந்தாள், பார்வதி.
''சாரி காஞ்சனா. உன்னையும், 'அப்செட்' ஆக்கிட்டேன். சொல்லு, நீ எப்படி இருக்கே? எப்போ லக்னோ விட்டு வந்தே?''
''இங்கே கஸ்துாரிபா முதியோர் விடுதி இருக்கே, தெரியுமா?''
''ஆமாம். நல்ல, 'பாப்புலர்' தெரியும்.''
''அங்க தான் இருக்கேன். சீனியர் ஹோம் மாதிரி.''
''என்ன... ஹோமா? உன் கணவர், குழந்தைகள்?'' திடுக்கிட்டாள், பார்வதி.
''கணவர், கல்யாணமான ஐந்தாவது வருஷமே விபத்தில் மறைஞ்சுட்டார், பார்வதி. குழந்தை பாக்கியம் இல்லை எனக்கு. மறுமணம் செய்து கொள்கிற மனமும் இல்லை. பெத்தவங்களையும் சீக்கிரமே இழந்துட்டேன்.
''ஒரே அண்ணன், சிட்னியில இருக்கான். நான் இங்கே வந்து ஹோம்ல சேர்ந்துட்டேன். கணவரோட பென்ஷன் வருது. வாழ்க்கை ஓடுது. இப்பக்கூட ஹோம்ல ஒருத்தருக்கு, 100 வயது ஆகுது. பிறந்தநாள் கொண்டாடணும்ன்னு, ஒரு நடிகர், 'ஸ்பான்சர்' பண்ணி, அதோ நடக்குது பார்க்ல.''
''அய்யோ, என்ன காஞ்சனா. இவ்வளவு வலியா உன் மனசுல?''
''பார்வதி, முதலில் எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பிறகு மெல்ல மெல்ல புரிதல் ஏற்பட்டது. மாற்ற முடியாததை, அப்படியே ஏற்கும் பக்குவம் வந்து விட்டது. இப்போ எனக்கு எந்த மனக்குறையும் இல்லே. அமைதியா, மகிழ்ச்சியா இருக்கேன். யாரும், யாருடனும் கடைசி வரை வர முடியாது இல்லையா?''
''இல்லே, காஞ்சனா. உன் மாதிரி எல்லாம் தத்துவம் பேசிக்கிட்டு என்னால இருக்க முடியாது. தினம் அழுவேன். தினம் மனபாரத்தோட துாங்காம முழிச்சுகிட்டு இருப்பேன். வேறே என்ன செய்ய முடியும்?''
''யோசிக்க முடியும், பார்வதி.''
''என்னது?''
''ஆமாம், பார்வதி. நமக்குக் கிடைச்ச நல்ல விஷயங்கள் என்னென்னன்னு, யோசிக்க முடியும். நான் சொல்லவா, உனக்குக் கிடைத்த நன்மைகள் என்னன்னு? இருக்க ஒரு வீடு, சொந்தமாக வாய்ச்சிருக்கு, யாரும் வந்து காலி பண்ண சொல்ல முடியாதபடி.
''உன் மகன், வெளிநாட்டுக்குப் போனாலும், அவன் மனதில் காதல் என்ற புதையல் உருவாகியிருக்கு காலாகாலத்துல. எத்தனை பசங்க இளமையை தொலைச்சுட்டு, பணம் பணம்ன்னு அலைஞ்சுட்டு, வழுக்கை விழும் காலத்தில் ஏதோ கல்யாணம், ஏதோ வாழ்க்கைன்னு அவஸ்தைப் படறாங்க?
''அடுத்து, உன் கணவர். நம்பிக்கையாக டாக்டரும் மருந்து தருகிறார், அவரும் சாப்பிடுகிறார். 'மெடிகல் சயின்ஸ்' நல்லா முன்னேறி வரும் காலம் இது. அவர் நிச்சயம் சரியாகி விடுவார். கவலைப்படாமல் இரு. தைரியமா இரு. மகிழ்ச்சியாக இரு, பார்வதி.
''நிச்சயமாக, நான் வெத்து சமாதானம் சொல்லலே. எந்த உறவும் ஆத்மார்த்தமாக இல்லாமல், தனிமையில் வாழ்வது பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னு தான் சொல்றேன். என் கதையத்தான் சொல்றேன். யோசிச்சு பாரு. எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்ததுன்னு புரியும். கூப்பிடறாங்க, பார்வதி. மீண்டும் சந்திப்போம்,'' எனக் கூறி, விரைந்தாள், காஞ்சனா.
மகிழ மரத்தின் நறுமணம், நாசியில் ஏறுவதைப் போலிருந்தது; ஒரு தேவதை வந்து நல்வார்த்தைகள் சொல்லி, மறைந்து விட்டதைப் போல பிரமை.
நடந்தாள், பார்வதி. மனதின் சுமை பாதியாகக் குறைந்திருந்தது.
வி. உஷா