தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பத்மஸ்ரீ சௌகார் ஜானகி (9)!

பத்மஸ்ரீ சௌகார் ஜானகி (9)!

பத்மஸ்ரீ சௌகார் ஜானகி (9)!


PUBLISHED ON : மார் 02, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 02, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்களின் ஆரோக்கியம் மற்றும் அழகின் ரகசியம் என்ன எனக் கேட்ட ரசிகர்களுக்கு, ஜானகி அளித்த பதில் என்ன தெரியுமா?

'நான் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பேன். வீட்டு வேலைகள் செய்வேன். இல்லாவிட்டால் வீட்டுத் தோட்டத்தை அழகுபடுத்துவேன். நானே சமையல் செய்வேன்.

'தினசரி மாலையில், பசுமையான காய்கறிகளை, கடைகளுக்கு சென்று வாங்கி வருவேன். எப்போதும், 'ஆக்டிவ்' ஆக இருப்பது தான், என் ஆரோக்கியத்தின் ரகசியம்...' என பதிலளிப்பார், ஜானகி.

'நாம் சாப்பிடும் உணவை, நாமே சமைத்து சாப்பிட வேண்டும்...' என்ற கொள்கை கொண்டவர். ஜானகியின் விருந்தோம்பல் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

'நீர்க்குமிழி படப்பிடிப்பு, அருணாசலம் ஸ்டூடியோவில் நடந்த சமயம். தன்னோடு மதிய உணவு உண்ணும் படி என்னை அழைப்பார்; நானும் பலமுறை அவரது சுவையான சமையலை விரும்பி சாப்பிட்டிருக்கிறேன்.

'அப்போதெல்லாம் வீட்டில் என் மனைவியிடம் அவளது சமையலைப் பற்றி ஏதேனும் குறை சொன்னால், 'ஜானகி அம்மாவின் சமையலைச் சாப்பிட்டு உங்களுக்கு நாக்கு நீளமாகி விட்டது...' என வேடிக்கையாக சொல்வார், என் மனைவி...'

இப்படி, ஜானகியின் சமையலுக்கு சான்றிதழ் தருகிறார், இயக்குனர் கே.பாலசந்தர்.

'கமலஹாசன், சினிமா பைத்தியம் படத்தில், என் தம்பியாக நடித்தார். அவரது, ஹேராம் தமிழ் மற்றும் ஹிந்தி பதிப்புகளில் நடித்தேன். நான் நடித்த எல்லா காட்சிகளுமே நீக்கப்பட்டு இருந்தன. ஒரேயொரு காட்சியில் முகம் கூட சரியாகத் தெரியாமல், நான் வருவேன். அதைப் பார்த்து, கமல் மேல் கோபம் வந்தது.

'செப்டம்பர், 1992ல், இதய அறுவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தேன், நான். அப்போது, ஹேராம் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்த மொத்த தொகையையும், கமலின் மேனேஜர் கொண்டு வந்து கொடுத்தார். அறுவை சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருந்தது, அந்தப் பணம்...' என்றார், ஜானகி.

சென்னை, தியாகராய நகரில் உள்ள திருமலைப்பிள்ளை சாலையில், காமராஜர் வீட்டுக்கு பக்கத்தில் முன்பு குடியிருந்தார், ஜானகி. ஒரு சமயம் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட தருணத்தில், காமராஜரை சந்தித்த, ஜானகி, 'உங்கள் வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளட்டுமா?' என கேட்டிருக்கிறார்.

'என்னம்மா நீ இப்படி கேட்கிறே! நான் எல்லார்கிட்டேயும், செளகார் ஜானகி வீட்டுக்கு பக்கத்துல இருக்கிறேன் என சொல்லிக் கொண்டிருக்கிறேன்...' எனக் கூறி, சிரித்துள்ளார், காமராஜர்.

கடந்த, 1986ல், தேசிய விருதுக்கான சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில், ஜானகியை நியமித்திருந்தனர். ஆனால், படங்களை திரையிடும் தேதிகளில், அவருக்கு முதுகு வலி காரணமாக ஒரு நாளைக்கு நாலைந்து படங்கள் வீதம் தொடர்ந்து, 10 நாட்களுக்கு பார்ப்பது, மேலும் அவரது உடல் நிலையை பாதிக்கும் என, அந்தப் பொறுப்பில் இருந்து விலகி விட்டார்.

கடந்த, 1982ல், நடிகை சுஹாசினி மற்றும் சுமலதா இருவரும், ஜானகியை, 'பொம்மை' இதழுக்காக பேட்டி எடுக்க, அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர். அதில், பல சுவாரசியமான பதில்களை அவர் சொல்லி இருக்கிறார்.

ஒரு கேள்விக்கு, 'நமது படங்களில் கவர்ச்சி என்ற எல்லை தாண்டி, 'செக்ஸ் அப்பீலு'க்கு தான் முக்கியத்துவம் அதிகமாகி விட்டது. 'செக்ஸ் அப்பீல்' அளவோடு இருந்தால் பரவாயில்லை. நடிகையர் தங்கள், 'இமேஜை' பற்றி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

'ரசிகர்கள் மத்தியில் அவர்களைப் பற்றி ஒரு, 'இமேஜ்' உருவான பிறகு, அது அடிபடும்படியான வேடங்களை அவர்கள் ஏற்க கூடாது என்பது, என் கருத்து. அதற்காக மாறுபட்ட பாத்திரங்களை ஏற்க கூடாது என்பதல்ல.

'புதிய பறவை படத்தில், நான் ஏற்று நடித்த வேடம், வில்லி வகையானது. அந்த படத்தையும், அந்த வேடத்தையும் ரசிகர்கள் நன்றாக ரசித்தனரே தவிர, விமர்சிக்கவில்லை. அது போன்ற வேடங்களை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்...' என கூறியிருந்தார்.

தனக்குப் பிடித்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் பற்றி குறிப்பிடும் போது, 'நான் அதிகமாக விரும்பிய நட்சத்திரங்கள், மார்லின் மன்றோ, சோபியா லாரன்ஸ், இன்க்ரிட் பெர்க்மென் மற்றும் லிவின்லி போன்றவர்கள். இவர்களது வாழ்க்கை அனுபவங்கள் என்னை மிகவும் கவர்ந்தன என்று கூறலாம்.

'எனக்கு, இன்னொருவரை, 'இமிட்டெட்' செய்து நடிப்பதில் நம்பிக்கை கிடையாது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கிறவர்கள், அவர்களது பழகும் முறைகள், நடவடிக்கைகள் இவற்றை கவனித்தால், சில சமயங்களில் சில வேடங்களை ஏற்று நடிக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும்போது அது ஓரளவுக்கு உதவியாகவும், 'இன்ஸ்பிரேஷன்' ஆகவும் இருக்கும்.

'உதாரணம், தில்லுமுல்லு படத்தில் நான் ஏற்ற வேடம். அதேபோன்ற ஒரு நபரை மனதில் வைத்து நடித்தது தான். அதற்காக நிறைய பாராட்டு பெற்றேன்...' என்கிறார், ஜானகி.

திரை உலகில், சொந்த காருக்கு பெட்ரோல் பணம், உணவு, காஸ்டியூம் செலவுகளை, தயாரிப்பாளர்கள் தலையில் கட்டாமல், தானே செய்து கொண்ட, ஒரே நடிகை, ஜானகி தான்.

ஜானகியின் ஆரோக்கிய ரகசியம் என்னவென்றால், பசித்தால் மட்டும் சாப்பிடுவது என்பது, அவரது கொள்கை.

மத்தியானம் துாங்கும் பழக்கம் கிடையாது. போர் அடிக்கிறது என்ற வார்த்தை, அவர் அகராதியில் இல்லை. காலையில் மூச்சுப் பயிற்சி. இந்த வயதில் அதிகம் உடற்பயிற்சி செய்யக் கூடாது என்பதால், அன்றாடம் வீட்டு வேலைகளை, அவரே கவனித்துக் கொள்கிறார். சமையல் வேலை, நடைப்பயிற்சி செய்ய தவறுவதில்லை.

ஆண்டுக்கொரு முறை வெளிநாட்டில் உள்ள, மகன் வழி பேரன் - பேத்திகளை கொஞ்ச சென்று விடுகிறார்.

பெரும்பாலும் சத்தான உணவு வகைகளை அவரே சமைத்து சாப்பிடுகிறார். தன்னை சந்திக்க வருகிறவர்களுக்கும், அவரே சமைத்து பரிமாறுகிறார். இப்படி பல சிறப்பான குணங்களைக் கொண்ட குணச்சித்திர நாயகி தான், பத்மஸ்ரீ சௌகார் ஜானகி.



— முற்றும்சபீதா ஜோசப்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us