
உழைப்பாளர் தொழிற்சங்கத்தின் சார்பாக, 'மே தின விழா' வழக்கம்போல, உற்சாகமான கொண்டாட்டத்திற்கு தயாரானது. மூத்த உறுப்பினர்கள் பங்கேற்று விழா ஏற்பாடுகளை பற்றி பேசினர்.
''இந்த முறை, போதுமான அளவு நிதி இருக்கு. அதனால், விழாவை பெரிய அரங்குல வைக்கலாம்ன்னு தோணுது,'' என்று, தலைவர் கருணாகரன் சொல்ல, மற்றவர்களும் தலையாட்டினர்.
''அப்புறம், இந்த தடவை தொழிலாளர்கள் தவிர, அவங்க குடும்பமும் கலந்துக்கிட்டா, விழா சிறப்பா இருக்கும்ன்னு தோணுது. என்ன சொல்றீங்க?'' என்றார்.
மற்றவர்கள், ஒருவரை ஒருவர், சரி வருமா என்பது போல் பார்த்துக் கொண்டனர்.
''நம் சங்கத்துல சுமார், 1,000 பேர் இருக்கோம், தலைவரே. ஒரு குடும்பத்துக்கு மூணு பேர் வெச்சுக்கிட்டா கூட, 3,000 பேர் வருது. அதுல, 500 பேர் வரலேன்னா, மீதி, 2,500 பேர் உட்கார பெரிய அரங்கா பார்க்கணும். 'சிம்பிளா' ஒரு சாப்பாடு தரணும்.
''குடும்பம் வந்தா வெறும், 'மீட்டிங்' மட்டும் போட்டா சுவாரஸ்யம் இருக்காது. கொஞ்சம் பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் வேணும். செலவு எங்கேயோ போகும். முடியுமா தலைவரே?'' மற்றவர்கள் சார்பாக கேட்டார், ஒருவர்.
''உங்க சந்தேகம் நியாயம் தான். நாம எப்பவும், மே தினத்தை பொதுமக்களோட அடையாளப்படுத்தாம ஏதோ வேலை செய்யிறவங்க, அதாவது, கூலிக்கு, கம்பெனியில் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறவங்களோட நினைவு தினமாகத்தான் இதுவரைக்கும் கொண்டாடிட்டு வர்றோம்.
''இதை, நாம் பொது திருவிழாவா மாத்தணும். அதுக்கு, ஒவ்வொரு குடும்பமும் கலந்துக்கணும். பணம் செலவாகும் தான். அதைப்பற்றி கவலை வேண்டாம். இந்த முறை கூடுதல் நன்கொடை வந்துக்கிட்டு இருக்கு. விழாவை ஜாம் ஜாம்ன்னு நடத்தலாம்.
''அப்புறம், வழக்கம்போல, 'உழைப்பாளர் திலகம்' என்று ஒருத்தரை தேர்வு செய்வோம் இல்லையா. அது, இந்த ஆண்டு, நம் தோழர் தியாகராஜனுக்கு கொடுக்கலாம்ன்னு முடிவாயிருக்கு,'' என்றார், கருணாகரன்.
கூட்டத்தில் அமர்ந்திருந்த, தியாகராஜன், சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை; பரவசமானார். பலத்த கைத் தட்டல்களுக்கிடையே எழுந்து நின்றார்.
''வந்து, எனக்கு திடீர்ன்னு...'' வார்த்தைகள் திக்கி திணறி, இடைவெளிவிட்டு வெளியே வந்தன.
''எக்சைட் ஆகாதீங்க, தியாகு. உங்களுக்கு இந்த விருது, நியாயமாகவும், பொருத்தமாகவும் இருக்கும். காரணத்தை விழா மேடையில் சொல்றேன்,'' என்றார், தலைவர்.
மீண்டும் கைத்தட்டல் எழ, பேச வார்த்தைகளின்றி, கை கூப்பியபடிஅமர்ந்தார், தியாகராஜன்.
இரவு, கணவருக்கு, சப்பாத்தியும், மகன் மற்றும் மகளுக்கு, இட்லியும், தயார் செய்து கொண்டிருந்தாள், லட்சுமி.
வீட்டிற்குள் நுழைந்த தியாகராஜன், மெதுவாக சமையலறையை நெருங்கினார்.
''லட்சுமி, பசங்க எங்க?''
''அறையில படிக்கிறாங்க.''
''சரி, ஒரு, 'குட் நியூஸ்' சொல்லட்டுமா?''
''என்ன, ஏதாவது ஜாக்பாட் அடிச்சீங்களா?'' சுவாரஸ்யமின்றி கேட்டாள்.
''இல்லை, எனக்கு நம் ஏரியாவுல உள்ள சங்கத்தின் சார்பா, இந்த ஆண்டு, 'உழைப்பாளர் திலகம்' என்ற, விருது தரப்போறாங்களாம்,'' என்றார், தியாகராஜன்.
அடுப்பை நிறுத்திவிட்டு, கணவனை நேராக பார்த்தாள், லட்சுமி.
ஏதாவது அவசரத்தில் சொன்னால், மனிதர், 'மூட் அவுட்' ஆகிவிடுவாரோ என யோசித்தாள்.
''ம், நல்ல விஷயம்ங்க...'' என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.
''என்ன லட்சுமி, சாதாரணமா சொல்ற?''
''சரிங்க, அந்த விருதை போட்டோ பிடிச்சு, பத்திரிகையில போடலாம்; இன்னும் பெருமையா இருக்கும்.''
அமைதியாக இருந்தார், தியாகராஜன்.
லட்சுமியின் இந்த அலுப்பு, அவருக்கு புரியும். சங்கத்திற்காக, அந்த ஏரியாவிற்காக, பொது விஷயங்களில் காட்டிய ஈடுபாடு, அவரின் குடும்பத்திற்கு காட்டியதில்லை.
மனைவி பார்த்துக் கொள்கிறாள் என்று ஒரு பக்கம் தைரியமாக இருந்தாலும், ஏனோ பொது சிந்தனை, அவரது மனதை ஆக்கிரமித்திருந்தது. மற்றவர்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சியில், அவருடைய இதயம் நிறைந்தது.
'இதனால் என்ன கிரீடமா கொடுக்கப் போறாங்க. உங்க நேரமும், காசும் தான் வீணாக போவுது...' என்ற மனைவியின் ஆதங்கத்தை, இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டார்.
பள்ளியில் படிக்கும் மகன்களிடம், விருது விஷயத்தை, படுக்கும் முன் சொன்னாள், லட்சுமி.
'ஓ... கங்கிராட்ஸ் டாடி!' என்றனர், மகன்கள்.
விழாவிற்கு, குடும்பமாக வரச் சொல்லியிருந்தனர். லட்சுமி வருவாளா என்ற சந்தேகம், தியாகராஜனுக்கு. கூட பண முடிப்பு கொடுத்தால், லட்சுமி சந்தோஷப்படுவாள். அது வழக்கம் இல்லையே. குடும்பம், தன் சந்தோஷத்தில் பங்கெடுத்தால் தானே, எந்த விருதும் முழுமை பெறும்? படுக்கையில், நிறைய சிந்தனைகளுடன் புரண்டார், தியாகராஜன்.
விழா நாள் நெருங்கியது.
தயக்கத்துடன், மனைவி லட்சுமியிடம், ''வந்து, இன்னைக்கு பங்ஷன்...'' என்று சொன்னார்.
''நான் வரணுமாங்க?''
''ஆமாம், லட்சுமி. பசங்களும், ஸ்கூல் போயிட்டாங்க. நீ வந்தா, எனக்கு சந்தோஷமா இருக்கும்; அரங்கத்திலேயும் மதிப்பா இருக்கும். நீயே வரலேன்னா, ஒரு பேச்சு வராதா?'' பயத்துடன், பணிவாக கேட்டார்.
''சரி, வர்றேன். இப்படி பாவமா மூஞ்சியை வச்சுக்காதீங்க.''
சட்டென்று புது புடவைக்கு மாறினாள். மற்றவர்கள் முன், கட்டியவனை விட்டுத்தர மனமில்லை. பெரும்பாலான மனைவியருக்கு இதுதானே நிலைமை.
அமர்க்களமாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது, விழா. உறுப்பினர் ஒருவர் கேட்டுக் கொண்டபடி, பெண்களுக்கான சிறு சிறு போட்டிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், ஒரு ஓரத்தில் பாப்கார்ன், டிபன் என்று, பார்க்கவும், ரசிக்கவும், கோலாகலமாக இருந்தன.
இறுதியில், அரங்கு மேடையில், விருதுகள் வழங்கும் விழா ஆரம்பமானது.
''நான் எதிர்பார்த்ததை விட, நிறைய குடும்பங்கள் இதில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இனிய நினைவுகள், நம் மனதில் எப்போதும் பசுமையாக இருக்கும். மேலும், இந்த ஆண்டின், 'உழைப்பாளர் திலகம்' விருது பெறும், தியாகராஜன் அவர்களை, மேடைக்கு அழைக்கிறேன்,'' என்று தலைவர் சொல்ல, கூட்டத்திலிருந்த தியாகராஜன் மேடைக்கு விரைந்தார்.
அவரை, நாற்காலியில் அமர வைத்தார், தலைவர்.
''இந்த ஆண்டு, இவருக்கு இந்த விருது தருகிறோம் என்றால், அது ஒரு சம்பிரதாயம் அல்ல. சென்ற டிசம்பரில் வெள்ளம், மழை, காற்று என, சென்னையே அல்லோலகல்லோலப் பட்ட போது, இவர், நம் ஏரியாவின் குடியிருப்பில் செய்த உதவிகள், ஆற்றிய பணிகள் சாதாரணமானதல்ல; சங்க அலுவலகத்திலேயே இரண்டு நாட்கள் தங்கி பணியாற்றினார்.
''சுயநலமற்ற இந்த பொதுப்பணியை, இது போன்ற பேரிடர் காலத்தில் மட்டுமல்ல, மற்ற நாட்களில் கூட, தொடர்ந்து செய்து வருகிறார். இந்த விருது, இவரது உழைப்பிற்கு மிகப் பெரிய சன்மானம் என்று கூட சொல்ல முடியாது. ஆம், இதையாவது கொடுத்து, நம் நன்றியை காட்டுகிறோம். அவ்வளவே,'' என்று சொல்லி, தியாகராஜனுக்கு பொன்னாடை போர்த்தினார், தலைவர் கருணாகரன்.
பின்னர், கண்ணாடி போட்ட பாராட்டு பத்திரத்துடன் கூடிய விருதை எடுத்து, தியாகராஜனிடன் கொடுக்க முற்படும் சமயம், ''மன்னிக்கணும், ஒரு நிமிடம் நான் பேசலாமா?'' என, கருணாகரனிடம் கேட்டார், தியாகராஜன்.
''தாராளமாக...'' என சொல்லி, சற்று தள்ளி நின்றார், கருணாகரன்.
''முதலில் தலைவருக்கும், மற்ற அனைவருக்கும், என் வணக்கம். நன்றி!
''பொதுவாக இது போன்ற விருதுகள் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியையும், மேலும் ஊக்கத்தையும் தருகிறது என்பது உண்மை. அதே நேரம், இந்த விருதுக்குரிய உண்மையான தகுதி, என்னை விட இன்னொரு நபருக்குத்தான் உண்டு.
''அவரும் இங்கு வந்திருக்கிறார். எனவே, தலைவர், இந்த விருதை, அவருக்கு அளிப்பதே மிக மிக நியாயமாகவும், உண்மையாகவும் இருக்கும் என்பதே என் எண்ணம்,'' என்று, பேச்சை நிறுத்தி, தலைவர் கருணாகரனை பார்த்தார், தியாகராஜன்.
தலைவருக்கு ஏதும் புரியவில்லை. விழித்தார். கூட்டமும் யோசித்தது.
'என்ன இவர், விருது இன்னொருவருக்கு என்கிறார், யாராக இருக்கும்?'
தியாகராஜன் தொடர்ந்தார்...
''உங்கள் ஆச்சரியம், சிறு குழப்பம் புரிகிறது. நான், தலைவர் சொன்னது போல், பொதுப்பணி செய்திருக்கிறேன் என்றால், அதற்கு நான் மட்டும் காரணமல்ல. மூல காரணம், என் மனம் தெளிவாக சிந்திக்க, என் உடல் நலம் ஒத்துழைக்க, எனக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தது, என் மனைவி லட்சுமி தான்.
''நான், செய்த சில பொது பணிகள், என் வீட்டிற்கே கூட தேவையாக இருந்தும், என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்த என் மனைவிக்கு, நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். வெறும் ஆதரவு மட்டுமல்ல, என் இரண்டு பிள்ளைக்கும் தாயாக இருந்து, வெளியே சுற்றும் கணவனுக்கு பணிவிடைகள் செய்து, வீட்டு வேலைகளையும், சில வெளி வேலைகளையும் தனியாக அலைந்து முடிப்பார்.
''ஓர் உயிருள்ள இயந்திரமாய், வீட்டை, என் குடும்பத்தை, நன்கு கவனித்து கொண்டதால் மட்டுமே, என்னால் இந்த பொதுப்பணிகளை சிரமமின்றி செய்ய முடிந்தது. இந்த உழைப்பு, என் உழைப்பை விட அதிகமானது.
''ஆனால், வெளியில் தெரிந்த என் உழைப்பிற்கு அங்கீகாரமான இந்த விருது, அதற்கு அடித்தளமான, என்னை போல் பலமடங்கு உழைத்த, என் மனைவிக்கு தானே நியாயமாக சேர வேண்டும்?
''எனவே, தயவுசெய்து, என் மனைவி லட்சுமி மேடைக்கு வந்து, இந்த விருதை வாங்க, தலைவரான நீங்களும் சம்மதிக்க வேண்டும்,'' என கூறி, தன் மனைவியை பார்த்தார்.
கலங்கிய கண்களுடன், கூட்டத்தின் பலத்த கரகோஷத்துடன் மேடையை நோக்கி சென்றாள், உழைப்பாளி லட்சுமி.
கீதா ஆனந்த்

