
கல்யாண மண்டபத்தில், சுமித்ராவை எல்லாருமே பார்த்த பார்வையில் லேசான பரிகாசம் இருந்தது. சிலர் வாய்விட்டே சொல்லிக் கொண்டனர்...
'காதுல ப்ளூ ஜாகர் வைரம் ஜொலிக்க நிமிர்ந்து நடப்பவள், இனிமே அந்த காதுக்கு மேலே இருக்கிற தலையை எங்கே கொண்டு வச்சிப்பாளாம்?'
'என்னமாய் பெருமையடிச்சிப்பா இந்த, சுமித்ரா? என்னோட ப்ளூ ஜாகர் வைரத்தோடு போல உங்க யார்கிட்டயும் கிடையாது. நீலமும், வெள்ளையுமா வாரி இறைக்கிற இந்த ஜொலிப்பு வைரத்தை என் புருஷன் பாரின்ல தெரிஞ்சவர்கிட்ட ஸ்பெஷலா, 'ஆர்டர்' செய்து வாங்கினதாக்கும்.
'இதே மாதிரி வைரத்தோடு போட்டு வருகிற பணக்கார பெண் தான், எனக்கு மருமகளா வருவா அப்படீன்னா... கடைசில பையன், அமெரிக்கால நம்ம ஊர் ஏழைப் பெண்ணை, 'லவ்' பண்ணி, அம்மாவையும் சம்மதிக்க வச்சி கல்யாணத்தை இன்னைக்கு நடத்திக்கிறான்...'
'பொண்ணு ஏழைன்னாலும் அழகா, அடக்க ஒடுக்கமா இருக்கா. எம்.எஸ்., முடிச்சிட்டாளாம். வேலையும் அங்கயே கிடைச்சிடுமாம். டாலர்ல சம்பாதிச்சா, தோடு என்ன வைர நெக்லசே வாங்கிடுவா. இல்லேன்னாலும், சுமித்ரா பையன் அரவிந்தன், புது பொண்டாட்டிக்கு வைரத்துலயே இழைச்சிட மாட்டானா என்ன?'
குறுக்கும், நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்த, சுமித்ராவின் செவிகளில் கூட்டத்தில் சிலர் இப்படிப் பேசுவது விழாமல் இல்லை. அந்த நேரத்திலும் காதுகளில் மின்னும் வைரத் தோட்டை புடவை நுனியால், மென்மையாய் நீவி விட்டு, அசட்டு சிரிப்பு சிரித்தபடி கடந்தாள்.
ஆறு மாதம் முன்பே, தன் கல்யாணத்துக்கு அஸ்திவாரம் போட்டான், அரவிந்தன். அம்மா கோபித்துக் கொள்வாள் என்று தெரிந்து, தயங்கித் தயங்கி விஷயத்தை சொன்னான்.
'வித்யா நல்ல பொண்ணும்மா. அமெரிக்கால படிக்க வந்த நம்ம ஊர்ப் பொண்ணுங்க, இது மாதிரி நம்ம கலாசாரத்தோட இருக்கிறது கஷ்டம். இங்க வந்தால் ஆளே மாறிடுவாங்க. ஆனால், வித்யா ரொம்ப எளிமை. எனக்குப் பிடிச்சிருக்கும்மா...' என்றான்.
சுமித்ராவுக்கு, வித்யாவின் குடும்ப பின்னணியைக் கேட்டதும் எரிச்சலாகி விட்டது.
'என்னடா சரியான ஓட்டாண்டி குடும்பமா இருக்கு போலிருக்கே. அப்பா இல்லாத குடும்பம் வேற. பொறுப்பில்லாத, அண்ணன். புத்திசுவாதீனம் இல்லாத, தம்பி. இதய நோயாளியாய் அம்மா. நம்ம ஸ்டேட்டஸுக்கு இது சரிப்படாதுடா...' என்றாள்.
'இல்லம்மா, வித்யா சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவா. அவளை, துாரத்து உறவுக்காரங்க தான் செலவழிச்சிப் படிக்க அனுப்பினாங்களாம். ரொம்ப கெட்டிக்காரிம்மா. அதேசமயம், ரொம்ப அமைதியான சுபாவம். எனக்கு பிடிச்சிருக்கும்மா....' என்று தன் பிடியைத் தளர்த்தாமல் பொறுமையாய் பதில் சொன்னான், அரவிந்தன்.
'உனக்கு மட்டும் பிடிச்சா போதுமாடா? ஒரே பிள்ளை, நீ. எனக்கு வரப்போற மருமகள், காதில் கண்டிப்பா வைரத்தோடு இருக்கணும்டா. 50 பவுனாவது தங்கம் இருக்கணும். சொசைட்டில நமக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்குடா, அரவிந்தா. ஏன்டா உனக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்குது?'
'அம்மா, நாமும் கஷ்டப்பட்டு முன்னேறின குடும்பம் தானேம்மா. ஆறு வருஷம் முன்னாடி, மாரடைப்புல அப்பா சாகறதுக்கு முன், பங்குச்சந்தை உயர்ந்ததில் அவர் கையில் நிறைய பணம் புழங்கியது. அதுல உனக்கு வைரத்தோடு வாங்கிப் போட்டார்; சொந்த வீடு வாங்கினார்; என்னைப் படிக்க அமெரிக்காவுக்கு அனுப்பினார். மறந்துட்டியாம்மா?'
'டேய் முட்டாள். இன்னைக்கு நாம் எப்படி இருக்கிறோம், அதை நினைச்சிப்பார். அதுக்கு பொருத்தமா எனக்கு மருமகள் வரணும். எந்த வசதியும் இல்லாத இப்படி ஒருத்தி, எனக்கு மருமகளாய் வரக்கூடாது...'
'அப்படீன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்...' என்று அரவிந்தன் போட்ட அணுகுண்டு, சுமித்ராவின் வாயை அடைத்து, இன்று கல்யாணத்தில் முடிக்க வைத்தது.
தாலி கட்டிக் கொண்டு, ஆசிர்வாதம் வாங்க, தன் காலில் விழுந்த, வித்யாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, சுமித்ரா.
கோவில்களுக்கு, ஒரே காரில், மூவரும் உட்கார்ந்து போன போதும், வித்யாவுடன் ஒரு வார்த்தை பேசவில்லை. அரவிந்தனுக்கு அது கஷ்டமாக இருந்தாலும், வித்யாவின் பொறுமை குணம் அவனை பிரமிக்க வைத்தது.
ஆயிற்று... அன்று, புதுமணத்தம்பதிகள் அமெரிக்காவுக்கு புறப்படும் நாள்.
வித்யாவை பார்க்க அவள் பிறந்த வீட்டு மனிதர்கள் வந்தனர். யாருடனும் பேசாமல் தன் அறையிலேயே இருந்தாள், சுமித்ரா.
அதிகாலை, 1:00 மணிக்கு பன்னாட்டு விமானப் பயணத்துக்கு தயாராக, சூட்கேசை எடை பார்க்கும் கருவியில் வைத்த அரவிந்தன், ''பாஸ்போர்ட்டுகளை எடுத்து வச்சியா, வித்யா?'' என்று கேட்டான்.
''இதோ,'' என்று அறைக்குள் போனவள், பதறியபடி திரும்பி வந்தாள்.
''என்னங்க. என் பா... பாஸ்போர்ட்டைக் காணோம்,'' என்றாள், பதட்டமான குரலில், வித்யா.
''சரியா தேடிப் பாரு. இருவரின் பாஸ்போர்ட்டையும் ஒரே இடத்தில் தானே வைத்தேன்?'' என்றான், அரவிந்தன்.
''நல்லா தேடிட்டேன். காணவே இல்லை. உங்களது மட்டும் தான் இருக்கு.''
''அம்மா, வித்யாவோட பாஸ்போர்ட்டை நீ பார்த்தியா?'' என்று கேட்டான், அரவிந்தன்.
''ஆமாம்டா, விமானப் பயணம்ன்னா பயம்ன்னு, பாஸ்போர்ட் எடுக்காம, அமெரிக்காவுக்கு நீ, ஆயிரம் தடவை கூப்பிட்டும் வராம இருக்கேன். பாஸ்போர்ட் கருப்பா, சிகப்பான்னு கூடத் தெரியாது.
''மேலும், உங்க அறையில எனக்கென்ன வேலை? எல்லாம் உன் பொண்டாட்டி வீட்டு மனுஷங்க தான், அந்த அறையிலேயே உக்காந்திருந்தாங்க. பீரோவைக் குடைஞ்சி, எங்க கடாசிப் போட்டுப் போனாங்களோ யாருக்குத் தெரியும்?'' என்றாள், அலட்சியமாக.
அரவிந்தன் பதட்டமுடன் வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.
''சரி, வித்யா, இன்னைக்கு நான் மட்டும் கிளம்பறேன். ஆபீஸ்ல முக்கிய மீட்டிங். என்னால இன்னும், 'லீவ்' போட்டு இங்கு இருக்க முடியாது. நீ மறுபடி, இன்னும் நல்லாத் தேடிப் பாரு.
''கிடைக்கலேன்னா பாஸ்போர்ட் விபரம் எல்லாம் போன்ல, மெயில்லயும் இருக்கு. மறுபடி, 'அப்ளை' பண்ணிடலாம். ஒருவாரம் கண்டிப்பா ஆகும். அதுவரை என் அம்மாவுக்கு உதவியா இங்கேயே இரு என்ன?'' என்றான்.
தலையாட்டினாள், வித்யா.
அவன் வீட்டை விட்டுக் கிளம்பியதும், வித்யாவிடம் நெருப்பாய் வார்த்தைகளைக் கொட்டினாள், சுமித்ரா.
''வாழ வந்த மருமகள், வைரத்தோட வந்தா இப்படி நடக்குமா? இன்னும் என்னவெல்லாம் இந்த வீட்டில் தொலையப் போகுதோ! அரவிந்தனிடம் எவ்வளவு கெஞ்சினேன். அவன் மனசு மாறவே இல்ல. என்ன தான் சொக்குப்பொடி போட்டுத் தொலைச்சியோ. ஹும்ம்... எல்லாம் என் போதாத காலம்.''
கண்களில் நீர் பெருக அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டாள், வித்யா.
துாக்கமே வரவில்லை. அரவிந்தன் ப்ளைட்டில் அமர்ந்து விட்டதாய், 'வாட்ஸ்-அப்'பில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
அடுத்த, 24 மணி நேரத்தில் இடியாய் அந்த செய்தி, சுமித்ரா மற்றும் வித்யா போனில் வந்து இறங்கியது.
சியாட்டில் நகர ஏர்போர்ட்டிலிருந்து, ரெட்மண்ட் பகுதியில் அரவிந்தனின் வீடு போகும் வழியில் கார் பெரும் விபத்துக்குள்ளாகி விட்டது. அரவிந்தன் தலையில் அடிப்பட்டு, மிக மோசமான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும், நிலைமை கவலைக்கிடம் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.
அந்த செய்தியை அனுப்பியவன், அரவிந்தனின் நண்பன், பரத்; போனிலும் அழுதபடி நடந்ததை கூறும் போதே கதறினான்.
''அரவிந்தனுக்கு உடனே, 'சர்ஜரி' செய்தால், உயிரை காப்பாத்திடலாமாம், வித்யா. அவன் உன்னையும், அவன் அம்மாவையும் பார்க்க நினைப்பான். அதனால, அவன் அம்மாவை கூட்டிட்டு நீ உடனே புறப்பட்டு வா,'' என்று, போனை வைத்து விட்டான்.
கேட்டுக் கொண்டிருந்த சுமித்ராவிற்கு வயிறு சில்லிட்டது. மளமளவென தன் அறைக்கு போனவள், பீரோவில் தன் புடவை ஒன்றில் மறைத்து வைத்திருந்த, வித்யாவின் பாஸ்போர்ட்டை எடுத்தாள்.
வித்யாவை பழிவாங்க, அவளை மகனுடன் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பக் கூடாது என நினைத்து பாஸ்போர்ட்டை ஒளித்து வைத்த கரம், அதை மறுபடி எடுக்கும் போது, லேசாய் நடுங்கியது.
அதை எடுத்து வந்து வித்யாவின் கைகளில் கொடுத்து, ''மறுபடி தேடினேன்; உன் பாஸ்போர்ட் கிடைச்சது. அமெரிக்காவுக்கு நீ கிளம்பு,'' என்றாள், சுமித்ரா.
அரை மணி நேரம் அங்கும், இங்கும் விசாரித்து, ''அத்தை, எந்த விமானத்திலும் டிக்கெட் இல்லை. ஒரே ஒரு ப்ளைட்ல, 'பிசினஸ் க்ளாஸ்' டிக்கெட் இருக்கு. அதுவும் இப்போ, 'ஹாலிடே சீசன்' என்பதால், விலை ஜாஸ்தி. ஆறு லட்சமாம்.
''உங்க மகனின் நிலைமையை சொன்னதால், எனக்கு அதைத் தருவதாய் சொல்றாங்க. ஆனா, அவ்ளோ பணம் இப்போ இல்லையே,'' என்று கையைப் பிசைந்தாள், வித்யா.
ஒருக்கணம் யோசித்து, ''இரு வரேன்,'' என, வெளியே போன சுமித்ரா, அரை மணி நேரத்தில், வீடு வந்தாள்.
''வித்யா! கவலைப்படாதேம்மா. போய் முதலில் அந்த டிக்கெட்டை, 'புக்' செய். பணம் ரெடி பண்ணிட்டேன்,'' என்றவளின் முகத்தை, வியப்போடு ஏறிட்டாள், வித்யா. அங்கே காதுகள் இரண்டும் வெறுமையாய் தெரிந்தன.
ஷைலஜா