
இலவச கண் மருத்துவமனை முகாம், மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஆங்காங்கே போடப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்த பல நோயாளிகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டு, காத்திருந்தனர்.
சொட்டு மருந்து விடப்பட்ட நிலையில் கண்களை மூடி அமர்ந்திருந்தாள், தேவகி. அவள் அருகே பக்கத்து வீட்டுப் பெண் அமர்ந்திருந்தாள். தேவகி கையைப் பிடித்து, 'நான் இங்க தான் இருக்கேன் பெரியம்மா கவலைப்படாதீங்க...' என்றாள்.
செவிலி வந்து, மருந்து போட, கண்களை திறக்கச் சொன்னார். பிறகு, மறுபடியும் மருந்து போட்டுவிட்டு, 'பொறை நல்லா கெட்டியாயிடுச்சு. இன்னும், குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும்...' என்றார்.
யோசித்தாள், தேவகி. இவள் வாழ்வே பொறையோடிப் போனது தான்.
தாயின் மரணத்திற்குப் பின், லைன் வீட்டில் தனியாக இருந்தவளுக்கு, பக்கத்து வீட்டு கமலா தான் பாதுகாப்பு.
அரசாங்க மருத்துவமனை ஒன்றில், செவிலியராக பணிபுரிந்து கொண்டிருந்தாள், கமலா. குடிகாரன் ஒருவனுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட தேவகிக்கு, தாயின் மரணத்திற்கு பின், எல்லாமே கமலா தான். ஒருநாள், குடி போதையில், வண்டி மோதி, கணவனும் இறந்து போனான்.
அந்த நேரத்தில் கூட, இவளால் வாய் விட்டு அழ முடியவில்லை. ஏனெனில், இவள் கருவுற்று இருந்தாள்.
கமலாவின் தயவால், அவள் வேலை பார்த்த மருத்துவமனையில், இவளுக்கும் ஒரு ஆயா வேலை கிடைத்தது.
ஆனால்...
''கண்ணைத் திறங்கம்மா...''என்றார், செவிலி.
திடீரென்று கடந்த கால நினைவிலிருந்து மீண்ட தேவகி, பிசுபிசுத்த கண்களைத் திறந்தாள்.
ஒற்றை கண்ணின் மங்கலான பார்வையில் சில மங்கிய தோற்றங்கள். ஏற்கனவே ஒரு கண் பார்வை போய் விட்டது. இன்னொரு கண்ணிலும் பொறை, இனியும் தாமதிக்கக் கூடாது என்று தான், வீட்டுக்கார அம்மா வற்புறுத்தி, இவளை இங்கு அழைத்து வந்திருந்தாள்.
இவளை பரிசோதித்த பெரிய டாக்டர், ''இந்த அளவுக்கு வியாதியை முத்த விட்டுட்டீங்களேம்மா. பரவாயில்ல, முதல்ல, இந்த கண்ணை சரி பண்ணிடலாம்; அப்புறமா இன்னொரு கண்ணை பார்த்துக்கலாம். ஒரு கண்ணால, 'மேனேஜ்' பண்ணிக்க முடியும் இல்ல?'' என கேட்டார்.
எல்லா குறைகளுடன் வாழ பழகிக் கொண்டவள்.
கடந்த காலம் கண் முன் பிரகாசமாக தெரிந்தது.
இவள், பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அரசாங்க மருத்துவமனை, 'லேபர் வார்ட்' நிரம்பி வழிந்ததால், மருத்துவமனை வளாகத்தில், குழந்தைகளுடன், தாய்மார்கள் கிடத்தப்பட்டிருந்தனர்.
பிரசவ அறையில் அலறிக் கொண்டிருந்தாள், தேவகி.
நர்ஸ் உடையிலிருந்த கமலா, இவள் கைகளைப் பிடித்து, 'கொஞ்ச நேரம் தான் தேவகி, பொறுத்துக்கோ...' என்று, ஆசுவாசப்படுத்தினாள்.
உயிரே போகிற வலி. கண் விழித்ததும், நர்ஸ் உடையிலிருந்த கமலாவின் கைகளில் ஒரு மூட்டை. அந்த மூட்டையில், கரிக்கட்டையாக ஒரு குழந்தை. நெஞ்சுக்கூடு ஏறி இறங்குவதிலிருந்து தான், அது உயிரோடு இருக்கிறது என்பது தெரிந்தது.
இது குழந்தையா, இல்லை சுடுகாட்டிலிருந்து எடுத்து வந்த பிணமா? ஆனால், அசைகிறது. குழந்தைக்கு பிறவி குறைபாடாம். வாயில் நுழையாத ஏதோ ஆங்கில பெயரை சொன்னார்களாம் டாக்டர்கள்.
அறுவை சிசிச்சை தான் செய்ய வேண்டுமாம்; அதுவும் இப்போது முடியாதாம், அதற்கான வசதி இந்த மருத்துவமனையில் கிடையாதாம். எனவே, தனியார் மருத்துவமனைக்கு தான் போக வேண்டும். அதுவும், இந்த நிலையில் எதுவுமே செய்ய முடியாது.
இரண்டு ஆண்டுகள் சென்றதும், ஒருவேளை, குழந்தை உயிரோடு இருந்தால், ஏதாவது அறுவை சிகிச்சை செய்து, சரி பண்ண முடியுமா என்று பார்க்க முடியுமாம். லட்சக் கணக்கில் செலவாகுமாம்!
இதெல்லாம் கமலா சொன்னது.
பெற்றோரை இழந்து, வறுமையால் வாடி, குடிகார கணவனுக்கு வாக்கப்பட்டு அவலமாகி போன இந்த நிலையில், ஒரு கரி கட்டைக்கு தாயாகி என்ன கொடுமை?
கடந்த காலம் கண்ணுக்குள் தோன்ற, இவளுக்கு எல்லாமே கருப்பாக தான் தெரிந்தது.
கண்களில் சுற்றி போடப்பட்ட கருப்பு பேட் பாதுகாப்புடன், கையில் கொடுக்கப்பட்ட கருப்பு கண்ணாடி மற்றும் மருந்து மாத்திரைகளுடன் இவள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள்.
எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ஊருக்கு வந்திருக்கிறாள், தேவகி.
ஊருக்கு வந்தவுடன், முதல் காரியமாக, கமலா வேலை பார்த்த மருத்துவமனைக்கு தான் ஓடினாள். கமலாவை பற்றி விசாரித்த போது, ஓய்வு பெற்று அவர், கிராமத்திற்கு போய் விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
''தேவகி, கவலைப்படாத. உன் கண் சரியாகும் வரை, நான் பார்த்துக்கிறேன். என் மகள், உனக்கு, இரவில் துணைக்கு இருப்பா; மருந்து போடுவா. நானும், அப்பப்ப ஏதாவது ஆக்கிக் கொண்டாறேன்,'' என, ஆறுதலாக சொன்னாள், வீட்டுக்கார அம்மா.
ஒரு மாதம் சென்றது. கண் ஒளி பெற்றாள், தேவகி.
''ஜாக்கிரதைம்மா, கண்ணுல என்ன பிரச்னை வந்தாலும், இந்த ஆஸ்பத்திரிக்கு வந்துருங்க. 'விசிட்டிங் கார்டு' தரேன். அழக் கூடாது என்ன?'' சொன்னார், டாக்டர்.
இப்போது உலகம் கொஞ்சம் பளிச்சென்று தெரிந்தது.
''தேவகி, மறந்தே போயிட்டேன். நீ, ஹாஸ்பிடல்ல இருந்தப்போ உனக்கு ஒரு, 'கொரியர்' வந்தது. இன்னிக்கி எதையோ குடைஞ்ச போது தான் என் கண்ணில் பட்டது; ஒரு மாசம் ஆகிப்போச்சு. இந்தா படி, இப்போ படிக்க முடியும் இல்ல? படிச்சு பாரு,'' என, பிரிக்கப்படாத அந்தக் கவரை தந்தாள், வீட்டுக்கார அம்மா.
அவசரமாக கவரை பிரித்தாள், தேவகி.
கமலா தான் கடிதம் எழுதியிருந்தாள். ஒரு கதை போல அந்த கடிதம் நீண்டிருந்தது. இவள், நிதானமாக படிக்க ஆரம்பித்தாள்:
தேவகி, உன்னை நான் எங்க எல்லாம் தேடினேன் தெரியுமா... உன் பிள்ளையை கொல்லச் சொல்லி, என்கிட்ட கொடுத்துட்ட. உன்னாலேயே உன் பிள்ளையை கொல்ல முடியாதுன்னா, என்னால மட்டும் முடியுமா? நானும் ஒரு தாய் இல்லையா, உனக்கே தெரியாத உன் வாழ்வினுடைய பின்பகுதியை இப்ப நான் சொல்றேன்.
கையில் உன் குழந்தையை வைச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியாம நான், அந்த ஆஸ்பத்திரி வராண்டாவில் நடந்து வந்துட்டு இருந்தேன். அப்போ, 'ஐயையோ, என் பிள்ளையை, நாய் துாக்கிட்டு ஓடுது... நாய் துாக்கிட்டு ஓடுது...' என, ஒரு பொம்பள கத்திக்கிட்டே ஓடி வந்து, என் காலடியில் மயங்கி விழுந்தா.
எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியல. அப்போது தான் பிறந்த ஒரு குழந்தையை துாக்கிக் கொண்டு, ஒரு நாய் ஓடி இருக்கிறது. ஆஸ்பத்திரியே கலவரப்பட்ட நேரம் அது. எனக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது,
என் கையில் இருந்த உன் கரிக்கட்டை குழந்தையை அவகிட்ட கொடுத்து, 'நான், நாய்கிட்ட இருந்து உன் பிள்ளையை காப்பாத்திட்டேன்; இந்தா...' என்றேன்.
அந்த குழந்தையை வாங்கி முத்தமிட்டாள். ஒரு உயிரை காப்பாத்திட்டேன் என்ற நிம்மதி எனக்கு.
அதுக்கப்பறம் நடந்தது தான், அதிசயம். அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் நான் அந்த ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்போது, என்னை ஒரு நோயாளியின் வீட்டுக்கு, 'ஹோம் நர்ஸ் டியூட்டி' போட்டிருந்தாங்க. இடுப்பு ப்ராக்சர், அந்த அம்மா படுத்த படுக்கையா இருந்தாங்க.
வேலைக்கு போய், அவங்களை பார்த்தபோது, அதிர்ந்து போயிட்டேன். ஏன் தெரியுமா? அவங்க தான் உன் கரி கட்ட பிள்ளையை கொடுத்தேனே, அந்த அம்மா; அந்த பிள்ளைக்கு தாய். எனக்கு ஒண்ணுமே புரியல. அங்கு, ஒரு அஞ்சு வயசு பையன் ஓடி விளையாடிட்டு இருந்தான். நான் அந்த அம்மாவிடம், 'உங்க மகனா?' என்றேன்.
அந்த அம்மா பெருமிதத்தோடு, 'ஆமா, என் பிள்ளை தான், பெயர் கண்ணன். கண்ணா இங்க வா. 'குட் மார்னிங்' சொல்லு...' என்றார்.
ஆஸ்பத்திரியில் அவள் பிள்ளையை ஒரு நாய் துாக்கி கொண்டு ஓடி விட்டதாகவும், அதை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் இவளிடம் சேர்த்ததாகவும் சொன்னாள்.
'கண்ணன் அதிர்ஷ்டக்காரன். இவன் வந்த வேளை, நிலுவையிலிருந்த எங்க பூர்வ சொத்து கோர்ட் கேஸ், எங்க பக்கம் தீர்ப்பாகி, லட்சக்கணக்கா பணம் வந்தது. இவனுக்கு ஆபரேஷன் முடிச்சு இவனை முழுசா குணமாக்கியாச்சு. இவன் அதிர்ஷ்டக்காரன். இவனால் தான் எனக்கு அதிர்ஷ்டம் வந்தது...' என்றாள்.
பார்த்தாயா தேவகி, நீ அதிர்ஷ்டம் கெட்டவன் என்று நினைத்து ஒதுக்கிய, உன் மகன், இன்று லட்சாதிபதி. தீ விபத்தில் கால் கருகிப் போன கரிகாலன். பிற்காலத்தில் சோழ அரசன் ஆன மாதிரி, ஒரு அபூர்வ நிகழ்வு.
தினம் தினம் நான், அந்த அம்மாவுக்கு கதைகள் எல்லாம் படித்துக் காண்பிப்பேன். கண்ணணும் உடன் அமர்ந்து கேட்பான்.
உனக்குக் கிடைக்காத பாக்கியம். ஒரு விதைக்குள் விருட்சம் ஒளிந்து இருக்கிறது, தேவகி. அந்த விதையை அழிக்க நினைப்பது, மகா பாவம். அந்த கண்ணன் தான் மருத்துவ படிப்பு படித்து, அமெரிக்கா போய் மேற்படிப்பும் படிச்சு, 'கண்ணன் மருத்துவமனை' என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறான்.
இதையெல்லாம் சொல்ல, உன்னை எங்கெங்கோ தேடினேன் தெரியுமா? நீ கிடைக்கவில்லை. ஆனால், நான் தேடாத போது, நீ எனக்கு கிடைத்தாய். சில வாரங்களுக்கு முன் நடந்த, இலவச கண் மருத்துவ முகாமிற்கு, என் தாயுடன் அங்கு வந்திருந்தேன்.
சொட்டு மருந்து போடப்பட்ட நிலையில், நீ கண் மூடி அமர்ந்திருந்தாய். ஏக கூட்டம், உன்னிடம் எதுவுமே பேச முடியாத சூழ்நிலை. பிறகு, என் தாயுடன் நான் கிராமம் திரும்ப வேண்டிய அவசரம். அந்த மருத்துவமனையில் உன் விலாசம் பார்த்து எழுதி வந்து, இந்த, 'கொரியரை' அனுப்புகிறேன்.
உனக்கு மருத்துவம் பார்த்தது, உன்னுடைய கண்ணன். நீ ஒதுக்கி தள்ளிய, உன்னுடைய பிள்ளை தான் உன் கண்ணுக்கு ஒளி தந்திருக்கான். நீ புறக்கணித்த உன் மகன் தான், உனக்கு வைத்தியம் பார்த்திருக்கிறான். போ, இப்பவே போய் நீ தான் அவரோட அம்மான்னு சொல்லு.
கண்ணன் ஐ கேர் மருத்துவமனை, உன் மகனின் சொந்த மருத்துவமனை...
கடிதத்தை படித்து முடித்து யோசித்தாள், தேவகி.
'வீழ்வதானாலும் அருவியாக விழ வேண்டும் எழுவதானால் விதையாக எழ வேண்டும்...' என்பர். விதைக்கிற காலத்தை வீணடித்து விட்டு, பின் அறுவடை காலத்தில் அரிவாளைத் துாக்கிக்கிட்டு போக, இவளுக்கு என்ன உரிமை இருக்கிறது?
வாழ்வின் அதிர்ஷ்டத்தைத் தொலைத்துவிட்டு, சாபமாக்கிக் கொண்டவள் இவள்.
சட்டென்று எழுந்தாள்.
இப்போதே கண்ணன் முன் போய் நின்று, 'நான் தான் உன் அம்மா...' என்று கதற வேண்டும் என்று தோன்றியது. எழுந்த அதே வேகத்தில் அப்படியே அமர்ந்தாள்.
எந்த உரிமையில் என் மகன் என்று சொல்ல முடியும்... பிறந்தவுடன் உன்னை துறக்க நினைத்த நானா உன் தாய்?
கண்களில் கண்ணீர். இவள் பார்வை பளிச்சென்று தெரிந்தாலும், இது வெற்றி பார்வை அல்ல; வெற்றுப் பார்வை.
விமலா ரமணி