PUBLISHED ON : ஆக 11, 2024

ஆழ்வார்களுக்கு இணையாக போற்றப்படுபவரும், விஷ்ணுவின் வாகனமுமான கருடன், பெருமாள் கோவில்கள் அனைத்திலும் காட்சியளிப்பார்.
சிவாலயங்களில் நந்தியை வணங்கி, அவரது அனுமதி பெற்று கோவிலுக்குள் நுழைவது போல, பெருமாள் கோவில்களில் கருடனை வணங்கி, அவரது அனுமதி பெற்றே உள்ளே நுழைவர், பக்தர்கள்.
இவர், மூலஸ்தானத்திலுள்ள பெருமாளை வணங்கிய நிலையில் காட்சியளிப்பார்.
தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவிலில், கருடனுக்கு கற்சிலை உள்ளது. இவரை கல் கருடன் என்றே சொல்வர். உற்சவ காலங்களில், இவர் பவனி வரும்போது, படிப்படியாக எடை கூடுவார். கோவிலுக்குள் நுழையும் போது எடை குறைந்து கொண்டே செல்வது அதிசயம்.
அதே நேரம், கருடனுக்கென தனிக்கோவில், அதாவது மூலஸ்தானத்திலேயே கருடன் இருக்கிறாரா என்றால், இந்தியாவில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே, அவருக்கு கோவில் இருக்கிறது.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கொல்லதேவி (பேச்சு வழக்கில், கொல தேவி) கிராமத்தில், இந்த அதிசயக் கோவிலை தரிசிக்கலாம்.
ராவணன் கடத்தி செல்லும் போது, 'ராமா, ராமா...' என, கதறினாள், சீதை. ராமநாமம் கேட்ட ஜடாயு என்ற கருட அரசன், ராவணனின் புஷ்பக விமானத்தை மறித்தார்; சீதையை விட்டு விடும்படி எச்சரித்தார். ராவணன் மறுக்கவே, அவனுடன் கடுமையாக போரிட்டார்.
கழுகு என்ற சொல், பறவையை மட்டுமே குறிக்கும். கருடன் என்ற சொல், உருவத்தால் பறவையாய் இருந்தாலும், மனித இயல்பு கொண்டதாக இருக்கும். எனவே, ஜடாயுவால், ராவணனுடன் கடுமையாகப் போரிட முடிந்தது.
இருப்பினும், தவ சக்தி கொண்ட ராவணன், ஜடாயுவை வெட்டி வீழ்த்தினான். அவ்வழியே வந்த ராமனிடம், சீதை கடத்தப்பட்ட விபரத்தை தெரிவித்த, ஜடாயு, தான் ராமனின் தந்தை தசரதனின் நண்பர் என்றும் கூறினார். இதையடுத்து, அவருக்கு இறுதிக்கடன் செய்தார், ராமன்.
தங்களுக்காக உயிர் விட்ட, ஜடாயுவிற்கு ராமபிரான் கோவில் எழுப்பி மரியாதை செய்தார். தற்போது இருக்கும் விக்ரகத்தை ராமானுஜர் நிறுவினார். எனவே, இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை பெற்றதாக உள்ளது. விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.
கருவறையில் கருடன் வலது கையில் பெருமாளையும், இடது கையில் லட்சுமியையும் சுமப்பதை காணலாம். இடது கை சற்றே உயர்ந்து, லட்சுமியின் பார்வை பக்தர்கள் அனைவர் மீதும் பட வேண்டும் என்ற நோக்கத்தில், சிலை வடிக்கப்பட்டது.
கருடனை சுற்றி எட்டு பாம்புகள் உள்ளன. ராகு, கேது தோஷத்துக்கு சிறந்த பரிகாரத்தலம் இது.
தமிழகத்திலிருந்து செல்வோர், ஓசூர் - மங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், கோலார் வழியாக, 105 கி.மீ., சென்றால், கொலதேவி கிராமத்தை அடையலாம். கோலாரிலிருந்து, 45 கி.மீ., துாரத்தில் உள்ளது.
தி. செல்லப்பா!