PUBLISHED ON : ஏப் 06, 2025

முன்கதை சுருக்கம்:
ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று, கலெக்டர் போஸ்ட்டுக்காக காத்திருந்தான், புகழேந்தி. கல்லுாரி விழா ஒன்றில் அவனை சந்தித்த, அமைச்சரின் மகள் சுபாங்கி, அவனை திருமணம் செய்து கொள்ள விரும்பி, தந்தை மூலம் துாது அனுப்பியும், முடியாததால், தானே நேரில், புகழேந்தி வீட்டுக்கு சென்றாள்.
புகழேந்தியின் பெற்றோரிடம் உருக்கமாக பேசி, அவனை திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்து விடுகிறாள். அதன்பின் தான், அவளது சுயரூபம் வெளிப்பட்டது. தன்னை மதிக்காத, புகழேந்தியை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே, திட்டமிட்டு, அவனை திருமணம் செய்து கொண்டிருந்தாள்.
அவளது எதேச்சதிகார போக்கில் மனம் வெறுத்து, தன் நண்பனும், பத்திரிகை ஆசிரியருமான பிரபாகருக்கு கடிதம் எழுதினான், புகழேந்தி.
'நீங்க என், 'ஈகோ'வை அடிச்சீங்க. நான் உங்க வாழ்க்கையையே அடிச்சேன். இது ஒரு திட்டமிட்ட பழிவாங்கல் தான். ஆரம்பத்துல உங்க அழகுல மயங்கினது, உண்மை தான். நீங்க என் அழகை கண்டுக்காம அலட்சியம் பண்ணினதுல, என் மனசுல ஆழமான காயம் ஏற்பட்டு போச்சு. என்னை அலட்சியம் பண்ணின உங்களை, அடிச்சு வீழ்த்தணும்ன்னு முடிவு பண்ணினேன். வீழ்த்தியாச்சு. என் காயத்துக்கு மருந்தும் போட்டாச்சு...' என, 'டிவி'யில் வரும் நாடக நடிகை மாதிரி பேசி சிரித்தாள்.
'அப்ப, நீ என் கவிதை பற்றி பேசினதெல்லாம்...'
'இந்த கவிதை, கதை குப்பையெல்லாம் நான் படிப்பதே இல்லை. எங்கப்பாவை சுத்தி ஒரு பெரிய ஜால்ரா கூட்டம் இருக்கு. அப்பாவுக்கு அறிக்கை மற்றும் 'ஸ்பீச்' எழுதித் தருவாங்க. அவங்ககிட்ட சொன்னேன். ரெண்டே நாள். உங்களைப் பற்றின மொத்த விஷயமும் சேகரிச்சு எழுதித் தந்துட்டாங்க.
'நாலே நாள்ல மனப்பாடம் பண்ணி, உங்க வீட்டுக்கு வந்து, அப்படியே ஒப்பிச்சேன். என்னை ஒரு பொருட்டாகவே நினைக்காத, திரும்பிக் கூட பார்க்காத உங்களை வீழ்த்தியாச்சு. நான் ஜெயிக்கணும்ன்னு நினைச்சேன்; ஜெயிச்சாச்சு. அவ்வளவு தான். ஆட்டம் க்ளோஸ்...' என்கிறாள்.
'என்னுடைய இத்தனை மேன்மைக்கும் அடிப்படை காரணம், அப்பா என்பதை நீ அறிவாய் அல்லவா...'
'அவர், என்னை சம்பாதிக்க லாயக்கற்றவனாக்கி வைத்திருக்கிறாராம். சம்பளம் தவிர வேறு எந்த வழியிலும் பணம் பண்ண வக்கற்றவனாகச் செய்திருக்கிறாராம். அப்பாவின் எளிமை, இவர்களுக்கு பிடிக்கவில்லையாம். அப்பா, டூ-வீலரில் போவது இவர்களை உறுத்துகிறதாம். அவமானமாக இருக்கிறதாம்.
'திருமணத்துக்கு பிறகு நடந்த ஒரே நல்ல விஷயம், நானிருந்த துறையிலிருந்து கலெக்டர் ஆனது தான். தலைமைச் செயலர் கூப்பிட்டு பேசிய பின், கொடுக்கப்பட்ட பதவி. உனக்கே தெரியும். தலைமைச் செயலரிடம் அது, அமைச்சரே ஆனாலும் சிபாரிசு எடுபடாதென்று.
'திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, 'போஸ்டிங்!' அருமையான மாவட்டம். புகழ்பெற்ற சிவன் கோவில். ஏராளமாகக் குவியும் பக்தர்கள். எனக்கு தான் கோவிலுக்குப் போகக் கூட நேரம் கிடைப்பதில்லை.
'கலெக்டர் என்பது, என்னைப் பொறுத்தவரை பதவியே அல்ல. அது எனக்குப் பெருமையோ, புகழோ, படாடோபமோ அல்ல. 'கலெக்ட்ரேட்' என்பது, ஒரு சேவை மையம்.
'பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் கிடக்கும் பயன்தரக் கூடிய விஷயங்களை தீர்த்து வைக்கிற இடம். கடைநிலை மக்களுக்கு என்னாலான அனைத்து நன்மைகளையும் செய்ய வேண்டும் என்கிற ஆசையை செயல்படுத்துகிற இடம். அதில், என் பயணம் தொடரும்!'
இப்படிக்கு,
உன் புகழேந்தி.
புகழேந்தி எழுதிய எட்டுப் பக்க கடிதத்தில் இருந்த விஷயம், அப்படியே நினைவில் உள்ளது.
இதை அப்படியே விட்டு விடக்கூடாது. காரியமாற்ற வேண்டியவன் அவன். ஏழை, எளிய மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவன். உற்ற நண்பன் என்பவன், இன்னொரு தோள்.
உடனே அவனிடம் பேச வேண்டும் போலிருந்தது. மொபைல் போனில் அழைத்தான்.
''பேசலாமா, புகழ்?''
''பேசு, பிரபா.''
''எங்க இருக்க?''
''கஸ்துாரி மலைக்கு வந்திருக்கேன். மலைவாசி மக்கள், வருஷா வருஷம் வசந்த விழா கொண்டாடுவது வழக்கம். அதுல கலந்துக்க வந்தேன். விழா முடிந்து ஓய்வு நேரம் இருந்தது. நீ கேட்ட அந்த, 'ஆத்ம துணை' மாதிரியான இன்னொரு கட்டுரையை முடித்து, இப்போது தான் மெயிலில் அனுப்பினேன். உடனே, நீ கூப்பிடுகிறாய். இது தான் ஒத்த அலைவரிசை.
''என் கட்டுரையை படித்துவிட்டு எப்படி இருக்குன்னு சொல்றியா, பிரபா?''
''உன் எழுத்துக்கு சொல்லணுமா, புகழ்.''
''சொல்லணும், பிரபா. அடிபட்டு ரணமாகக் கிடக்கிற, என் மனசுக்கு நீ தான் பஞ்சு. நீ தான் ஆறுதல்.''
''சரி, சுபாங்கி இப்போது எங்கிருக்கிறாள்?''
''இங்கு தான் என்னோடு தான். நான் தான் இப்போது, கலெக்டராகி விட்டேனே. கலெக்டர் மனைவி என்ற பெருமையும், பந்தாவும் வேண்டாமா?''
''நம்மால் மாற்றவோ, திருத்தவோ முடியாதவங்களை என்ன செய்யலாம், புகழ். விட்டுவிடத்தானே வேண்டும்.''
ஆழ்ந்த பெருமூச்சு ஒன்று எழுந்தது, புகழேந்தியிடமிருந்து.
''நீ சொல்வதும் சரிதான். உன் பேச்சு எப்போதுமே மயிலிறகால் வருடிக் கொடுக்கிற மாதிரி இதமாக இருக்கும். நான் பதவி ஏற்ற பின், நீ இந்த ஊருக்கு வரவே இல்லையே, பிரபா. வந்து என்னோடு ரெண்டு நாள் தங்கேன்.''
''வரணும். உன் கூடத் தங்கணும். கஸ்துாரி மலைக்கு போகணும். அங்குள்ள பழங்குடி மக்களை சந்திக்கணும்ன்னு தான் நினைக்கிறேன். எங்க நேரம் கிடைக்குது. இந்த, 'இஷ்யூ' முடிஞ்சிடுச்சா அப்பாடான்னு மூச்சு விட்டு நிமிர்வதற்குள் அடுத்தது. இதோ வந்திட்டேன்னு கண்ணு முன்னால வந்து நிக்குது. ஆனாலும், நிச்சயமாக வந்து உன் கூட, நாலு நாள் இருக்கேன். கவலைப்படாதே.''
மொபைல் போனை நிறுத்தி சட்டைப் பையில் போட்டு, மடிக்கணினியை மூடி கையில் எடுத்தான், புகழேந்தி. அறைக் கதவைத் திறந்து வெளியில் வந்ததும் தயங்கினார், உதவியாளர்.
''என்ன சொல்லுங்க?'' என்றான், புகழேந்தி.
''ஒரு போன் வந்திச்சுங்கய்யா.''
''எத்தனை தரம் சொன்னாலும், இந்த, ஐயாவை விட மாட்டீங்க போலிருக்கு. சரி, என்ன போன்?''
''யாரோ ஒருத்தன், ஒரு பொண்ணுக்கு ஆபத்து. போய் காப்பாத்துங்கன்னு சொன்னாங்கய்யா.''
''என்னது?'' திடுக்கிட்டான்.
''எப்ப வந்திச்சு?''
''ஒரு மணி நேரம் இருக்குங்கய்யா.''
துாக்கிவாரிப் போட்டது, புகழேந்திக்கு.
''ஒரு மணி நேரமா? ஏய்யா உனக்கு அறிவிருக்கா. ஒரு பொண்ணுக்கு ஆபத்து. போய் காப்பாத்துங்கன்னு கூப்பிட்டிருக்காங்க. நீ சாவகாசமா ஒரு மணி நேரம் கழிச்சு சொல்றே?''
''இல்லீங்கய்யா, நீங்க அறைக்குள்ள கதவை மூடிக்கிட்டிருந்தீங்களா... ஏதாச்சும் முக்கிய வேலையா இருந்திருப்பீங்கன்னு...'' என இழுத்தார், உதவியாளர்.
''ஆபத்துன்னு போன் வருது. ஒரு பொண்ணுக்கு ஆபத்துன்னு சொல்றாங்க. உடனே சொல்ல வேண்டாமாய்யா. இதுவே உங்க வீட்டுப் பொண்ணா இருந்தா, இப்படி பேசாம இருந்திருப்பியா?''
தன் தவறை உணர்ந்து தலைகுனிந்து கொண்டார், உதவியாளார்.
''சரிய்யா, பேசினது ஆம்பிளைக் குரலா. பொம்புளைக் குரலா? எந்த நம்பர்ல இருந்து வந்திச்சு?''
உதவியாளர் கொடுத்த எண்ணை இருமுறை கூப்பிட்டுப் பார்த்தான்.
'இந்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை...' என்ற பதில் தான் வந்தது. சலித்துக் கொண்டான்.
''சரி போலீசுக்கு பண்ணாமல் நமக்கு ஏன் பண்ணியிருக்காங்க?''
''உங்க மேல அவ்வளவு நம்பிக்கைங்கய்யா.''
'மக்கள் அனைவரும் மதிக்கிற, ஏற்றுக் கொள்கிற, நீதி கிடைக்கும் என, நம்புகிற பதவி இந்த கலெக்டர் பதவி...' என, தான் சொன்னதை நினைத்துக் கொண்டான். இதற்கு மேலும் தாமதப்படுத்தக் கூடாது என, காருக்கு விரைந்தான்.
''சீக்கிரம் வண்டியை எடு, பழனி.''
மலைப்பாதையில் வண்டி இறங்க துவங்கியது. மழை நன்றாகப் பெய்து கொண்டிருந்தது. காரின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி, வெளியில் பார்த்தபடி வந்தான், புகழேந்தி. கண்கள் எல்லா பக்கங்களிலும் துழாவின. பார்வை கூர்மையானது.
'எங்கிருந்து எப்படி கண்டுபிடிப்பது. ஒரு மணி நேரத்துக்கு முன் என்றாரே. இதற்குள் அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?'
ராஜாளி பறவை மாதிரி பார்வையை இன்னும் கூர்மையாக்கி, இருபுறமும் பார்த்தபடி வந்தான், புகழேந்தி.
பாதை தெரியாத அளவிற்கு மழை கொட்டிக் கொண்டிருந்தது. இந்த மழையில் எங்கிருந்து கண்டுபிடிப்பது?
வண்டி நிதானமாகத்தான் இறங்கியது. மலை இறக்கம். வளைந்து வளைந்து செல்லும் பாதை. பார்த்து மெதுவாகத்தான் ஓட்டினார், வாகன ஓட்டி. புகழேந்தி, இரு புறங்களிலும் பார்த்துக்கொண்டே வந்த போதிலும் எதுவும் தென்படவில்லை. ஆளரவமில்லை. என்ன செய்வதென்று யோசித்தான்.
'பேசாமல் எஸ்.பி., ஈஸ்வரியைக் கூப்பிட்டு சொல்லி விடலாமா? எவ்வளவு நம்பிக்கையோடு என்னைக் கூப்பிட்டு சொல்லி இருக்கின்றனர்! இயலவில்லை என கைவிரிப்பதா? இன்னும் சற்று துாரம் போய் பார்க்கலாம்...'
மலையிலிருந்து சமதளத்துக்கு வந்தாயிற்று. மலையில் பெய்த அடை மழை இங்கில்லை. பெய்து ஓய்ந்து விட்டிருந்தது. சிறிது துாரம் போன பின், சாலையின் நடுவில் நின்று, வண்டியை வழி மறித்தான், 10 வயது சிறுவன் ஒருவன். மாடு மேய்க்கும் சிறுவன் என்பது தெரிந்தது.
வண்டியை நிறுத்திய ஓட்டுனர், ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி, ''என்ன?'' என்றார்.
''ஐயா, அந்த பொதருக்குள்ள ஒரு பொண்ணு உடம்பு தெரியுதுங்க. லேசான முனகல் சத்தம் கேக்குதுங்க,'' என்றான்.
சடாரென்று கதவை திறந்து இறங்கினான், புகழேந்தி.
''எங்க தம்பி?''
''அதோ அந்தப் புதர்ல. வழியெல்லாம் ஒரே சகதியா கெடக்குதுங்க.''
''பொண்ணுதானா? நீ பார்த்தியா?''
''ஆமாங்க. முகம் மட்டும் வெளிய தெரிஞ்சுச்சு. பய்ந்துக்கிட்டு ஓடியாந்துட்டேன்.''
''சரி, வா. காட்டு.''
''வாங்க,'' என, முன்னால் போனான், சிறுவன்.
உடன் வர தயாரான ஓட்டுனரை நிறுத்தினான், புகழேந்தி.
''இங்கேயே இரு பழனி. நான் கூப்பிட்டால் மட்டும் வா!''
சிறுவன் சொன்னது போல், பெண்ணின் முகம் தெரிந்தது.
அவனுக்குள் ஒரு பதட்டம் ஏற்பட்டது. துாக்கி முட்புதருக்குள் வீசப்பட்டிருக்க வேண்டும். அருகில் போய் ஒரு புதரை விலக்கியவன் திடுக்கிட்டான்.
அப்பெண்ணின் உடலில் பொட்டுத் துணியில்லை. கடித்துக் குதறப்பட்டிருந்தது. கடிபட்ட உதடுகளில் ரத்தம். உடல் முழுவதுமே ரத்தக் கறை.
திரும்பிப் பார்த்தான். பையன் சற்று துாரத்திலேயே நின்று விட்டதில் நிம்மதி ஏற்பட்டது. மடமடவென்று, தன் சட்டையைக் கழற்றி, அப்பெண்ணின் உடலைப் போர்த்தினான். பாதி உடல் மறைந்தது. மேல் பாதிக்கு தேடினான்.
''தம்பி, ஓடிப் போய், கார் சீட் மேல போட்டிருக்கிற வெள்ளை டவலை நான் கேட்டேன்னு, டிரைவரை எடுத்து தரச் சொல்லி, வாங்கிக்கிட்டு வா,'' என்றான், புகழேந்தி.
ஓடினான், சிறுவன். பெரிதான வெள்ளைப் பூத்துவாலையை பழனியே எடுத்து வந்தான்.
''அங்கேயே நில்லு, பழனி. டவலை மட்டும் சுருட்டி என்கிட்ட வீசு.''
உடலை முற்றிலும் மறைத்தது, டவல். பின், டிரைவரை கூப்பிட்டான். அருகில் வந்த பழனி திடுக்கிட்டான்.
''ஐயா?'' என, பயந்தான்.
''படுபாவிகள். கூட்டாகச் சேர்ந்து இதை செய்திருக்காங்க. பாவம். உயிர் இருக்குது, பழனி. கார் வரை துாக்கிட்டுப் போயிட்டா. படுக்க வச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிடலாம்.''
''சரிங்கய்யா!''
சேற்றிலும், ரத்தத்திலும் கிடந்த உடலை, இருவருமாக சேர்ந்து துாக்க முயன்றனர். உடல் தொய்ந்தது. இருந்த நிலைமையை பார்த்து பயந்து போனான், புகழேந்தி. கார் வரை கூட துாக்கிப் போக முடியாது என்பதை புரிந்து கொண்டான்.
''பழனி, சீக்கிரம் போய் என் மொபைல் போனை எடுத்து வா.''
வினாடி வேகத்தில் மொபைல் வந்தது. அவன் அழைத்த கால் மணி நேரத்தில், ஆம்புலன்ஸ் வந்தது. வெள்ளை, 'பெட்ஷீட்' போர்த்தி, 'ஸ்ட்ரெட்சரில்' துாக்கி ஆம்புலன்ஸில் படுக்க வைக்கப்பட்டதும், ஆம்புலன்ஸ் கிளம்பியது.
மறக்காமல் மாடு மேய்க்கும் சிறுவனுக்கு நன்றி சொன்னான், புகழேந்தி. வாகனத்தில் ஏறி அமர்ந்ததும், ஆம்புலன்ஸ் பின்னாலேயே போகச் சொன்னான்.
- தொடரும்இந்துமதி