PUBLISHED ON : ஜூன் 01, 2025

முன்கதைச் சுருக்கம்: மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கயல்விழியை, புகழேந்தியும், பிரபாகரும் தினமும் நேரில் போய் பார்த்து, அவளது உடல்நிலை குறித்து விசாரித்தனர். இவர்கள் இருவரும், மருத்துவமனைக்கு சென்று கயல்விழியை சந்திப்பது, சுபாங்கிக்கு பிடிக்கவில்லை. சிகிச்சை முடிந்த பின், கயல்விழியை எங்கு தங்க வைப்பது என, இருவரும் கலந்தாலோசித்தனர்.
''மருத்துவ சிகிச்சை முடிந்த பின், கயல்விழியை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும் என, நினைக்கிறேன்,'' என்றான், புகழேந்தி.
''இதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்கணும்? உனக்குத்தான் குட்டி அரண்மனை மாதிரி பங்களா கொடுத்திருக்காங்களே... நிறைய அறைகளும் காலியாகத்தான் கிடக்கு. பேசாமல் கூட்டிக்கிட்டுப் போய் உன் வீட்ல வச்சுக்க,'' என்றான், பிரபாகர்.
''அது சரிப்படுமா. இன்னைக்கு என்னை புகழ்கிற இதே பத்திரிகைகளும், ஊடகங்களும் நாளைக்கு வேறு மாதிரி பேசாதா?''
''இதைப்பாரு, புகழ்... நீ இப்படிப் பேசுறது எனக்கு ஆச்சரியமாக இருக்கு. இது சரிப்படுமா, ஊர், உலகம் ஒத்துக்குமான்னு எல்லாம் தயங்கினால், யாருக்கும் எந்த நல்லதும் செய்ய முடியாதுன்னு நீ தானே அடிக்கடி சொல்லுவ!''
''நீ சொல்றது நிஜம் தான், பிரபா. அதெல்லாம் பொது விஷயத்துக்குத்தான் பொருந்தும். தனிப்பட்ட விஷயத்துக்கு எப்படி பொருந்தும்?''
''இது எப்படி தனிப்பட்ட விஷயமாகும்? இதுவும் பொது விஷயம் தானே? உனக்கு ஏதாவது ஆட்சேபனையோ, தயக்கமோ இருந்தால் சொல்லு. நான் வேணா, சென்னைக்கு கூட்டிட்டுப் போய், என் வீட்ல தங்க வச்சுக்கறேன்.
''வீட்ல அம்மாவையும், என்னையும் தவிர வேறு யாருமில்ல. எங்கம்மாவைப் பத்தி உனக்கே தெரியும். எவ்வளவு அன்பானவங்க என்பதை நீயே அறிவாய்.''
''அந்த அன்பு, என் வீட்ல கிடைக்குமாங்கிற சந்தேகம் தான். சுபாங்கியை நினைச்சுத்தான் பயப்படுறேன்.''
''அந்த கவலைல தான், நானும் சொல்றேன். ஏற்கனவே நொந்து போயிருக்கிற பொண்ணு. சுபாங்கி மேலும் நோகடிச்சுட்டா என்ன செய்வது?''
''எத்தனையோ பார்த்திட்ட நான், இதையும் பார்த்துடறேன். இன்னும் நாலைஞ்சு நாள்ல, 'டிஸ்சார்ஜ்' பண்ணிடுவாங்க. வீட்டுக்கே கூட்டிட்டுப் போறேன். பிறகு பார்த்துக்கலாம்.
''சரி. உனக்காகவே நான், நாளை கஸ்துாரி மலை, 'கேம்ப்' போட்டிருக்கேன். ரெண்டு நாள் அங்க தங்கிட்டு அப்புறம் வந்து, டீன் கிட்ட பேசி, கயல்விழியை, 'டிஸ்சார்ஜ்' பண்ணிக்கலாம்,'' என்றான், புகழேந்தி.
இப்போது, பிரபாவின் மனதில் கஸ்துாரி மலை, இரண்டாம் பட்சமாகி விட்டது. மனசு முழுவதையும், கயல்விழி ஆக்கிரமித்து விட்டாள். இதைப்பற்றி, புகழேந்தியிடம் சொல்லலாமா? அதைக் கேட்டால் அவன் எவ்வளவு சந்தோஷப்படுவான். ஆனால், சற்று பொறுக்கலாம்.
அந்த பெண் மனதில் என்ன இருக்கிறது என்பதே தெரியாத போது, என்ன அவசரம்? அதுவும் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், இதையெல்லாம் நினைக்கிற நிலையில் கூட, அவள் இல்லையே! இப்போது பேச வேண்டிய பேச்சா இதெல்லாம்.
உடனே, தன் மனதை அடக்கி, அந்த எண்ணத்தை மூலையில் ஒதுக்கினான்.
''சரி, புகழ். கஸ்துாரி மலைக்குப் போய் வரலாம். அதற்கு முன், 'டிஸ்சார்ஜ்' எப்போது என்பதை மட்டும் விசாரித்து தெரிந்து கொண்டு விடலாம்.''
''காலையில் விசாரிக்கிறேன். வா, இப்போது போய் படுக்கலாம்.''
இருவரும் போய் படுத்து, கால் மணி நேரம் இருக்காது. அதற்குள், புது பிரச்னை ஒன்று முளைத்தது. நீர்வளூர் என்ற கிராமத்தில், தலித் சமூகத்திற்கும், முற்பட்டோர் சமூகத்திற்குமான மோதல் வெடித்தது.
பழைய பிரச்னை தான். நீண்ட காலமாக இருப்பது தான். சில காலம் அடங்கிக் கிடந்தது. மீண்டும் இப்போது தலை துாக்கியுள்ளது.
தலித் மக்களின் இடுகாடு, சற்று தள்ளி உள்ளது. அதற்கு போகும் வழி, கருவேல முட்கள் படர்ந்து, கள்ளிச் செடிகளாலும், புதர்களாலும் சூழப்பட்டிருந்தது. உயரமான பாம்பு புற்றுகளில் கட்டுவிரியன்களும், கருநாகங்களும் வாசம் செய்து கொண்டிருந்தன. யாரையும் நெருங்க விடாமல், 'புஸ் புஸ்' என, சீறின.
நெடுங்காலமாக தலித் மக்கள், இடுகாட்டு வழிக்காக போராடிக் கொண்டிருந்தனர். அதற்கான மற்றொரு வழி, முற்பட்டோர் வசிக்கும் தெரு என்பதால், அவர்கள், தலித் மக்களின் இறந்தவர்களின் சடலத்தை, தங்கள் தெரு வழியாக துாக்கிச் செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.
தலித் மக்கள் எவ்வளவோ போராடியும், அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. அதைப் பற்றின எந்த பைலும், புகழேந்தியின் மேஜையை எட்டவில்லை. எட்ட விடாமல் பார்த்துக் கொண்டதோடு, விஷயம் அவன் காதுக்கு போகாமலும் செய்து விட்டனர்.
இதைப் பற்றிய எந்த விபரங்களும் தெரிவிக்கப்படாத நிலையில், ஒன்றும் அறியாத புகழேந்தி, மொபைல் போனில் தெரிவிக்கப்பட்ட செய்தி கேட்டு, சற்று குழம்பினான்.
அன்றைய முன்னிரவில், தலித் குடும்பத்தை சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் இறந்து விடவே, உடலை அடக்கம் செய்ய தலித் மக்கள், முற்பட்டோர் வசிக்கும் தெரு வழியாக சடலத்தை துாக்கிப் போக திட்டமிட்டுள்ளனர். அத்திட்டத்தை தடுக்க, முற்பட்டோர் சமூகத்தை சேர்ந்த ஆண்கள் சவுக்குக் கட்டைகளும், இரும்புத் தடிகளையும் கையில் வைத்து தாக்க ஆயத்தமாயினர்.
இதை தெரிந்து கொண்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், தங்கள் வேண்டுகோளை மணியக்காருக்கு தெரியப்படுத்தி, தாசில்தார் மூலம் அனுமதி கேட்டு, வெற்றி பெற்று விட்டனர்.
தங்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக, மிகப் பிரமாண்டமான இறுதி யாத்திரைக்கு ஏற்பாடு செய்தனர். மணியக்காரர், தாசில்தாரின் அனுமதியை அவர்களுக்கு பெற்றுத் தந்ததை தெரிந்து கொண்ட, முற்பட்டோர் சமூகத்தினர், உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர்.
இந்த செய்தி தான் புகழேந்திக்கு தெரிவிக்கப்பட்டது. இரண்டு சமூகத்தினர்களுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் உருவாகலாம் என்பதால், சட்டென்று எழுந்து உடை மாற்றிக் கொண்டு புறப்பட்டான்.
சப்-கலெக்டர், தாசில்தார், எஸ்.பி., ஈஸ்வரி, இன்ஸ்பெக்டர் ஷண்முக பாண்டியன், மணியக்காரர், தலையாரி என, அத்தனை அரசு அதிகாரிகளும் அங்கு தான் இருந்தனர். அமைதியாக கிடக்கும் அந்த நீர்வளூர் கிராமம் திமிலோகப்பட்டது.
அரசாங்க ஜீப்களும், கார்களும், 'ஹெட்லைட்'களை அணைக்காமல் வரிசை கட்டி நின்றன. மின்சார ஒயர்கள் இழுக்கப்பட்டு, இடுகாடு வரை மிகப் பிரகாசமான விளக்குகள் எரிய விடப்பட்டன. ஏராளமான போலீஸ்காரர்கள், காவலுக்கு நின்றதில், தலித் மக்கள் பயம் நீங்கி உற்சாகம் பெற்றனர்.
அந்த வயதான மூதாட்டியின் இறுதி யாத்திரை, முற்பட்டோர் வசிக்கும் சாலை வழியாகவே சென்றது. கூடை கூடையாக பூக்கள் துாவப்பட்டன. தாரை தப்பட்டைகளோடு இளைஞர்கள் ஆடியபடி முன்னால் சென்றனர்.
அதையெல்லாம், ஜன்னல் வழியாக கண்டும் காணாமலும் பார்த்த முற்பட்டோர் சமூகத்தினர் கொதித்து போயினர்.
'சாதாரணமாக சங்கு மட்டும் ஊதி கொண்டு போக வேண்டிய கிழப் பிணத்திற்கு ராஜமரியாதை. இத்தனை அதிகாரிகள் துணை நிற்கிற தைரியம். நாளை நம்மை மதிப்பரா? இப்படியே விட்டு விடுவதா? இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டாமா? பழிக்குப்பழி வாங்க வேண்டாமா?' என, உள்ளுக்குள் குமுறினர்.
அவர்களின் குமுறலை அங்கிருந்த அரசு உயரதிகாரிகள் உணர்ந்ததை விட, சென்னையிலிருந்த மாவட்ட அமைச்சர் நன்றாக உணர்ந்து கொண்டார். அதனால், ஏற்படக் கூடிய விளைவுகளையும் புரிந்து கொண்டார். எனவே, அரசுக்கு ஏற்படக்கூடிய அவப் பெயரையும், நெருக்கடியையும் தெரிந்து கொண்டவர், அப்படி எதுவும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக, உடனடியாக காரில் புறப்பட்டார்.
எத்தனை ஆண்டுகள் மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த மாவட்ட அமைச்சராக நம்பிக்கை பெற்றிருக்கிறார். அவருக்கு தெரியாதா மாவட்ட மக்களின் நெளிவு சுளிவுகள்.
அதே சமயம் -
''காரை கொஞ்சம் அழுத்தி மிதி, பழனி. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம், நீர்வளூர் போய் சேரணும்,'' என்றான், புகழேந்தி.
முன்விளக்குகளின் வெளிச்சத்தில் இருளை கிழித்து அசாதாரண வேகத்தில் பறந்தது, அந்த கார்.
நீர்வளூரை விட்டு, புகழேந்தி நகரவே இல்லை. தான் கலெக்டராகப் பொறுப்பேற்றதில் இருந்து சந்திக்கப் போகிற, இரண்டாவது சிக்கல் இது என, உள் மனம் சொல்லியது.
பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிகிறது. ஆனால், புதை மணல் போன்றது, இந்த ஊர். அதுவும் இன்றைய நிலைமை அப்படிப்பட்டது தான். தன்னை முழுதுமாக உள்ளே இழுத்து கொள்ளுமா அல்லது மீண்டு வெளியில் வருவோமா என்பது, அவனுக்கே தெரியவில்லை.
கதவுகளை அடைத்துவிட்டு, முற்பட்ட வகுப்பினர் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும், அவர்கள் உள்ளத்தில் புயல் வீசிக்கொண்டிருக்கும் என்பதை அறிந்தான். நெருப்புக் கொழுந்துகளாக எரிந்து கொண்டிருக்கும் எனவும் நினைத்தான்.
எரி நெருப்பும், புயலும் எப்பேர்ப்பட்ட சேதத்தையும் விளைவிக்கும் என்பது, அவனுக்கு தெரியும். அதிகாரத்தின் துணையால், அந்த வயதான தலித் மூதாட்டியின் சடலத்தை, அவர்களின் தெரு வழியாக எடுத்து போக, வழி ஏற்படுத்தி கொடுத்தானே தவிர, அது நிரந்தர வழி அல்ல; நிரந்தரத் தீர்வுமல்ல. இந்த நாட்டில் தான், ஜாதி வெறி இப்படி தலை விரித்து ஆடுகிறது.
'நான் கலெக்டராகப் பதவியேற்று, இத்தனை நாட்களாகி விட்டனவே. இந்த பிரச்னை பற்றி ஏன் யாரும் என்னிடம் சொல்லவில்லை. சொல்லி இருந்தால், தலித் மக்களுக்கான பாதையை செப்பனிட்டு கொடுத்திருப்பேனே?
'இது போன்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாமே. பூதாகரமாக வெடிக்க விட்டிருக்க வேண்டாமே... ஏன் இப்படி அலட்சியமாக விட்டு விட்டனர்?
'பாவம்... அதிகாரிகளை குறை கூறியும் பயனில்லை. பொழுது விடிந்து பொழுது மறைவதற்குள், ஓராயிரம் பிரச்னைகள் எதைத் தீர்ப்பது, எதை விடுவது?'
''சார்,'' என, அவனது கவனத்தை கலைத்து, பவ்யமாக டீ கப்பை நீட்டினார், ஒருவர். அதை வாங்குவதற்குள், எஸ்.பி., ஈஸ்வரி அருகில் வந்து, ''மினிஸ்டர் கிளம்பி வராரு, சார். இன்னும் சிறிது நேரத்தில், இங்க இருப்பாரு,'' என்றார்.
அமைச்சர் இந்த இரவில் நேரில் வருகிறார் என்றால், நிலைமையின் தீவிரம் புரிந்தது, புகழேந்திக்கு. இதை எப்படி சமாளிப்பது?
யோசித்துக் கொண்டிருந்த போதே, அமைச்சரின் கார் வந்து நின்றது.
காரை விட்டு இறங்கினார், அமைச்சர். கம்பீரமான உருவம். மூன்று தேர்தல்களை சந்தித்து, மூன்று முறையும் ஒரே தொகுதியில் ஜெயித்து, மூன்றாவது முறையும் அமைச்சராக இருப்பவர்.
மக்களின் தோள் மீது கை போட்டு பழகக் கூடியவர். எளிய மக்களிடம் மிகுந்த பாசம் காட்டுபவர். திறமையும், அனுபவமும், சாதுரியமும் மிக்கவர். மாவட்டம் அவர் பேச்சுக்கு கட்டுப்படும். ஆனாலும், இந்த ஜாதி வெறி, காட்டாறு போன்றது. யானையைக் கூட அடித்துக் கொண்டு போய்விடும்.
இப்பிரச்னையை, அமைச்சர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதை காண, ஆர்வமாக இருந்தான், புகழேந்தி.
அமைச்சர் நேராக, புகழேந்தியிடம் வந்தார். அவன் தன்னை நெருங்கி வரக்கூட அவர் காத்திருக்கவில்லை. அவனது வணக்கம், கை கூப்பல் எதையும் கண்டுகொள்ளவில்லை. மிகவும் தீவிரமான குரலில் பேச ஆரம்பித்தார்.
- தொடரும்இந்துமதி