PUBLISHED ON : ஜூலை 20, 2025

முன்கதைச் சுருக்கம்: சென்னையிலிருந்து, களைப்புடன் வீடு திரும்பியவனை, கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவதுாறாக பேசியதும், ஆத்திரமடைந்து, சுபாங்கியை ஓங்கி அறைந்தான், புகழேந்தி. அதன்பின், நிதானத்துக்கு வந்தவன், சுபாங்கியை கை நீட்டி அடித்ததற்காக, வருந்தி, அவளிடம் மன்னிப்பு கேட்டான்.
சுபாங்கி, சமாதானமாகாமல், தன் தந்தைக்கு போன் செய்து, வரவழைத்து விட்டாள்.
இதற்கிடையில், கயல்விழி, மருத்துவமனையில் இருந்து, 'டிஸ்சார்ஜ்' ஆகி, புகழேந்தி வீட்டில் வந்து தங்கினாள்.
கயல்விழி வரும்போது, சுபாங்கியும், அவள் அப்பாவும் வெளியே சென்றிருந்தனர்.
புகழேந்தி, அலுவலகத்துக்கு சென்றுவிட, மதியம், கயல்விழிக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கிறார், சமையற்கார பெரியவர்.
கயல்விழி சாப்பிட முற்படும் போது, சுபாங்கியும், அவள் அப்பாவும் திரும்பி வந்து விட்டனர். கயல்விழியை பார்த்ததும், ஆத்திரத்தில் அவள் தலைமுடியை பிடித்து, வெளியே இழுத்து சென்றார், சுபாங்கியின் அப்பா.
அச்சமயம், புகழேந்தி அங்கு வர, நடந்ததை அறிந்து கொண்டான். மாமனாரை, தன் வீட்டிலிருந்து வெளியேற கட்டளையிட்டான்.
புகழேந்தியை திட்டியதோடு, மகள் சுபாங்கியை தன்னுடன் அழைத்து சென்று விட்டார், அவன் மாமனார்.
மிகவும் கனத்து அமைதியாக கிடந்தது, இரவு.
மாடி பால்கனியில் நின்று கொண்டிருந்த, கயல்விழி, வானத்தை அண்ணாந்து பார்த்தாள். பஞ்சு மூட்டைகளாக நகர்ந்து கொண்டிருந்தன, மேகங்கள். அதில், அவள் கண்களுக்கு பிடிபடும் யானைகளும், அப்போதும் பிடிபட்டன. ஆனால், மனம் அதில் லயிக்கவில்லை.
உள்ளுக்குள் பொங்கிப் பொங்கி வந்தது. 'அப்பா, அப்பா... என்னை இப்படி தனியாக விட்டு விட்டுப் போய் விட்டீர்களே!
'இன்று நடந்தது, என் மனதை காயப்படுத்தி விட்டது. பாவம், கலெக்டர். எத்தனை நல்ல மனிதர். அரசு உயர் அதிகாரிகளில் அவரை போன்று பார்ப்பது அரிது. என்னால், அவர் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விட்டது.
'கலெக்டரின் மனைவி, அவரை விட்டுப் போய் விட்டாள். அதுவும் இன்னும் நாலைந்து மாதங்களில் பிள்ளை பெறப் போகும் நிலையில்... இது, எப்பேர்ப்பட்ட பாவம். இந்த பாவத்திற்கு காரணம், நான். இது என்னால் நேர்ந்தது. பணியாட்களுக்கு முன் கீழே வேலை செய்யும் அதிகாரிகளுக்கு எதிரில்... எப்பேர்பட்ட அவமானம்!
'இத்தனைக்கும் காரணம், நான். எப்படியப்பா இதை சரி செய்வது! இதற்கு எவ்வாறு பரிகாரம் தேடப் போகிறேன்!'
கயல்விழியின் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் வடிந்த போது, பின்னாலிருந்து, ''இன்னும் துாங்கவில்லையா?'' என்ற மென்மையான குரல் கேட்டது. சட்டென்று கண்களைத் துடைத்தபடி, திரும்பி பார்த்தாள். கைகளை கட்டியவாறு நின்று கொண்டிருந்தான், புகழேந்தி.
நிலவின் மெலிதான கீற்றொளியில் அவன் முகம் நன்றாக தெரிந்தது. கோபமோ, வருத்தமோ, சங்கடமோ இன்றி அமைதியாக இருந்தது. நடந்த நிகழ்ச்சியால் சிறிதளவும் பாதிக்கப்படாதவனாகத் தெரிந்தான். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது போல் இருந்தான்.
''என்ன பார்க்குற, கயல்?''
''இதை விட என்ன நடக்கணும்? எல்லாம் என்னால் தான். எதுக்காக இத்தனை கஷ்டத்தை இழுத்து விட்டுக்கறீங்க? நான் ஒரு சாதாரண, அற்ப மனுஷி. நான் போகிறேன். தயவு செய்து என்னை போக விடுங்கள்!''
''நீ, இன்று பார்த்தது முதல் தடவை இல்லை, கயல். கல்யாணமான மறுவாரத்திலிருந்து நித்தம் நடப்பது தான்.''
''என்ன சொல்கிறீர்கள்?''
''ஆண்டவன் எல்லாருக்கும் எல்லாமும் கொடுத்து விடுவதில்லை, கயல். அவனிடம் ஒரு தராசு தட்டு உள்ளது. அவரவருக்கு ஏற்ற எடையும், பொருளும் தான் வைக்கப்படுகின்றன. ஆக மொத்தத்தில், யாரும் நிம்மதியாக இல்லை. யாரிடமும் சந்தோஷமில்லை. இங்கு எல்லாரும் இருக்கிறோமே தவிர, வாழ்வதில்லை.
''வாழ்க்கைக்கான அடிப்படை தேவை மனசு, கயல். அதுவும் கல்யாணம் என, வரும் போது ஒத்த மனசு வேணும். ஆத்மார்த்தமான சினேகிதம் வேணும். அன்பு நிரம்பி வழிந்தால், எதையும் விட்டுக் கொடுக்க தோணும்; எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்க தோணும். இல்லாவிட்டால், வாழ்நாள் முழுதும், நீயா - நானா தான்; நரகம் தான்.''
அமைதியாக இருந்தாள், கயல்விழி. சில வினாடிகள் கனமான மவுனம் நிலவியது.
ஒரு ஆழமான பெருமூச்சோடு, ''வா, கயல். கீழே போகலாம். நீ பகல் சாப்பாடு கூட சரியாக சாப்பிடவில்லையே,'' என்றான், புகழேந்தி.
''ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து வந்திட்டேன்,'' என, விளக்கைப் போட்டார், சமையற்காரப் பெரியவர்.
இரு தட்டுகளில் சுடச்சுட தோசையும், சட்னியும் வந்தது. இருவருக்கும் பிரம்பு நாற்காலிகளைப் போட்டு, டீப்பாயை மேஜை ஆக்கினான், பணியாள்.
''சாப்பிடுங்கய்யா... சாப்பிடுங்கம்மா,'' என்றார், பெரியவர்.
பாதி சாப்பிட்டு கொண்டிருந்த போது, புகழேந்தியின் சட்டைப் பையிலிருந்த, மொபைல் போன் ஒலித்தது. எடுத்துப் பார்த்து முகம் மலர்ந்தான்.
''சொல்லு, பிரபா?''
''என்ன புகழ் இதெல்லாம்?''
''எதெல்லாம் பிரபா?''
''ஏதேதோ செய்தியெல்லாம் வருது. காலை செய்தித்தாளுக்கு நல்ல தீனி கொடுத்திருக்க. எல்லா, 'டிவி' சேனல்களிலும் வெளியாகும், புகழ்.''
''என்ன செய்ய முடியும்?''
''என்ன தான் ஆச்சு, புகழ்?''
விவரித்தான், புகழேந்தி.
''என்ன செய்வதாக இருக்கிறாய், புகழ்?''
''முடிவு செய்து விட்டேன், பிரபா.''
''சொல்லு!''
''முதலில் இந்த அரசு உத்தியோகத்திலிருந்து விடுபடப் போகிறேன்!''
''நன்றாக யோசித்து தான் சொல்கிறாயா?''
''தீர்க்கமாக யோசித்து தான் முடிவெடுத்து இருக்கிறேன்.''
''இதை நீ, பதவியாகவே நினைக்கவில்லையே, புகழ். எளிய மக்களின் நியாயமான தேவைகளை நிறைவேற்றித் தர தானே, இந்த பதவியில் அமர்ந்தாய்.''
''அதை, பதவியில் இல்லாமலும் செய்யலாம். வெளியில் இருந்தும் செய்யலாம் என்பது, பிடிபட்டு விட்டது. இன்னும் சுதந்திரமாக செயல்பட முடியும் என்பது, தெளிவாகி விட்டது. கூண்டுக்குள் இருக்கிறவரை தான், அமைச்சரை போன்றவர்கள் என்னை ஆட்டுவிக்க முடியும்.''
''சரி... நீ முடிவு செய்து விட்டால், யாரால் மாற்ற முடியும்?''
''நாளை கிளம்பி சென்னை வருகிறேன்!''
''வந்து?''
''முதலில் தலைமைச் செயலரை சந்திக்க வேண்டும். அவருக்கு தெரிவித்த பின், இயன்றால் முதல்வரை சந்திப்பேன்!''
''அப்படியானால், கயல்விழி?''
''அவளையும் அழைத்து தான் வரப் போகிறேன். எனக்கு சொந்தமான புத்தகங்களையும், துணிமணிகளையும் எடுத்து, ஒட்டு மொத்தமாக இந்த ஊரிலிருந்து விடைபெற்று வந்து விடுவேன்!''
''சரி, வீட்டுக்கு வருகிறாயா?''
''முதலில், அப்பாவை சந்தித்து அவருக்கு தெரியப்படுத்தி விட்டு, கயலை அவர் பாதுகாப்பில் விட்டு விட்டு வருகிறேன்.''
''அவ்வளவு சுலபமாக உன்னை விடுவித்து விடுவர் என, நினைக்கவில்லை. சரி, பார்க்கலாம் வா!''
அதுவரை, மொபைல் போனின், 'ஸ்பீக்கரை' அழுத்தி பெரியவர், கயல்விழி இருவரையும் உரையாடலை கேட்க செய்த, புகழேந்தி, மொபைல் போனை அணைத்தான். பிரமிப்போடு அவனையே பார்த்து கொண்டிருந்த இருவரையும் ஏறிட்டான்.
''தம்...பி...'' என, குரல் தழுதழுத்தார், பெரியவர்.
''சொல்லுங்க!''
''நானும், உங்க கூடவே வந்திடறேன், தம்பி. காலம் முழுசும் உங்களுக்கு சமைச்சு போடுறேன். உங்களை விட்டு என்னால் இருக்க முடியாது, தம்பி. எனக்கு உறவுன்னு சொல்லிக்க யாருமில்ல.''
''சரி பெரியவரே... சற்று ஓய்வெடுத்து விட்டு, காலையில் புறப்படலாம்,'' என்றான், புகழேந்தி.
கார் மட்டுமின்றி அரசுக்கு சொந்தமான அனைத்துப் பொருட்களையும் கலெக்டர் பங்களாவிலேயே விட்டுவிட்டு வந்திருந்தான், புகழேந்தி.
தன் கீழுள்ள அதிகாரிகளை அழைத்து, அனைத்து கோப்புகளையும் ஒப்படைத்தான். கையெழுத்திட வேண்டிய அனைத்திலும் கையெழுத்திட்டான். சாவிகளை ஒப்படைத்த போது, கண்கலங்கி தழுதழுத்தனர், அதிகாரிகள்.
''சா... ர்...''
''எதுக்கு கலங்கறீங்க? ஒருவர் பதவி விட்டுப் போறதும், இன்னொருவர் பதவி ஏற்பதும், நமக்கு புதுசா என்ன?''
''இல்லை தான், சார். ஆனால், உங்களை மாதிரி ஒருவர் எங்களுக்கு புதுசு தான், சார்!''
'எப்படி இருக்க வேண்டுமோ அப்படி மனிதர்கள் இல்லாது போனதால் தானே, இந்த மாதிரி தோன்றுகிறது...' என, நினைத்து கொண்டான்.
கடைசியாக எல்லாருக்கும் கைகூப்பி விடைபெற்ற போது, நிறைய பேர் அழுததை பார்த்தான். அவனுக்கும் கண் கலங்கியது. பங்களாவை விட்டு கார் வெளியில் வந்த போது, எதிரில் வந்த காரிலிருந்து இறங்கினார், எஸ்.பி., ஈஸ்வரி.
இவனது வண்டியை நிறுத்தினார், ஓட்டுனர். கீழே இறங்கிய புகழ், கலங்கிய கண்களை மறைத்தபடி, ஈஸ்வரியை பார்த்து சிரிக்க முயன்றான்.
''என்ன சார் இது?'' என, தழுதழுத்தாள், ஈஸ்வரி.
''காலத்தின் கட்டாயம்,'' என, மீண்டும் புன்னகைத்து, ''ஆல் தி பெஸ்ட், ஈஸ்வரி. கிளம்புகிறேன்,'' என்றான், புகழேந்தி.
''எஸ் சார்,'' என, சல்யூட் அடித்த, ஈஸ்வரி காரின் முன் இருக்கையில், ஓட்டுனர் அருகில் அமர்ந்திருந்த, சமையற்கார பெரியவரிடம், ''நீங்க கொடுத்து வச்சவங்க, பெரியவரே. சாரோட கூடவே கிளம்பிட்டீங்க பாருங்க,'' என்றார்.
''ஐயாவோட கருணை; பெரிய மனசு,'' என்றார், பெரியவர்.
சங்கடப்பட்டான், புகழேந்தி.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த, கயல்விழியின் அருகில் சென்று நட்பும், பாசமுமாக கைப்பற்றி, ''இனி வாழ்க்கையில் உனக்கு நல்லதே நடக்கும், கயல். சந்தோஷமாக போய் வா,'' என்றார், ஈஸ்வரி.
''ரொம்ப நன்றி மேடம்,'' என, காரை விட்டு இறங்க முயற்சித்த, கயல்விழியை தடுத்தாள்.
''நல்லபடியா போய் வா! சாரோட ஆதரவு இருக்கிற வரை, உனக்கு ஒரு குறையும் வராது!''
கைகூப்பினாள், கயல்விழி. வண்டி மீண்டும் புறப்பட்டது. வழி நெடுக ஒரு கனத்த மவுனம் நிலவியது. யாரும் பேசவில்லை. 'இப்படி ஒரு மனிதனா...' என, பெரியவரோடும், கயல்விழியோடும் சேர்ந்து, காரோட்டியும் உள்ளுக்குள் மாய்ந்து போனான்.
புகழேந்தியின் மொபைல் போன் ஒலித்தது.
அவன் அப்பா பேசினார்...
''நேரா வீட்டுக்குத்தானே வர்ற, புகழ்?''
''ஆமாம்ப்பா.''
''அந்த பொண்ணும் கூட வருதில்ல!''
''ஆமாம்பா!''
''உங்க எல்லாருக்கும் அம்மா சாப்பாடு, 'ரெடி' பண்ணுகிறாள்.''
''சரிப்பா!''
அடுத்து, பிரபாகர் கூப்பிட்டான்.
''எங்க வந்துட்டிருக்க, புகழ்?''
''கிளம்பி கொஞ்ச நேரம் தான் ஆகுது, பிரபா.''
''நேராகத் தலைமைச் செயலகமா, இல்ல...''
''அப்பா கூப்பிட்டார், பிரபா. அம்மா சாப்பாடு, 'ரெடி' பண்றாங்களாம். பெரியவரையும், கயல்விழியையும் அங்கு இறக்கி விட்டு, அதன் பின் தான், செகரட்டேரியட்!''
''சரி, அதையெல்லாம் முடிச்சிட்டு, பிறகு பேசு!''
''சரி, பிரபா!''
''பசிக்குதா, கயல்?''
இல்லை என்பது போல் தலையாட்டினாள்.
''உங்களுக்கு பெரியவரே?''
''ஒண்ணும் வேணாங்கய்யா!''
''நமக்கு வேண்டாமென்றாலும், டிரைவருக்கு பசிக்கும்,'' என்றவன், ''வழக்கமாக சாப்பிடும் ஹோட்டல்ல நிறுத்துப்பா,'' என்றான், புகழேந்தி.
''இல்ல சார், வேணாம் சார். சென்னை போய் பார்த்துக்கலாம்.''
தன் இருக்கையில் நன்றாக சரிந்து, கண்களை மூடிக் கொண்டான், புகழேந்தி.
மிகவும் அனுதாபத்தோடு அவனை ஏறிட்டார், தலைமைச் செயலர். தனிப்பட்ட விஷயங்கள் எதிலும் தலையிடவில்லை. எதை பற்றியும் கேட்கவில்லை.
''ராஜினாமா செய்திருக்க வேண்டாமென தோன்றுகிறது,'' என்றார்.
''இல்லை சார். இனி என்னால் அங்கு வேலை செய்ய முடியாது.''
''சரி, அங்கு வேண்டாம். வேறு எங்காவது மாற்றி கொண்டிருக்கலாம் அல்லவா!''
''இந்த அரசு உத்தியோகமே வேண்டாம் என்று தான், சார் ராஜினாமா செய்தேன்.''
''நீங்கள் செய்து விட்டால், நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?''
ஒரு வினாடி அதிர்ந்து போனான், புகழேந்தி.
'ராஜினாமாவை நிராகரித்து விடுவாரோ!' உள்ளுக்குள் ஒரு பயம் ஏற்பட்டது. பின் சற்று தயங்கி, மெல்ல பேச ஆரம்பித்தான், புகழேந்தி.
- தொடரும்.
@block_B@சிங்சவ்@@block_B@@
@block_B@அன்பு. — வால்டர் ஸ்காட் @@block_B@@
@block_B@ஜார்ஜ் எலியட் @@block_B@@
@block_B@காந்திஜி @@block_B@@

