PUBLISHED ON : ஆக 17, 2025

முன்கதைச்சுருக்கம்: க யல்விழியும், சமையற்கார பெரியவரும், புகழேந்தி வீட்டு தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்தான், புகழேந்தி.
புகழேந்தி வந்ததும், தான் துாங்க செல்வதாக கூறி, வீட்டினுள் சென்று விட்டார், பெரியவர்.
கயல்விழியிடம், தன் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளை ஒளிவு மறைவு இன்றி பேசினான், புகழேந்தி.
இதை கேட்டதும், புகழேந்தி மீது அனுதாபப்பட்டாள், கயல்விழி.
ஒருநாள் கயல்விழியை, 'பீச்'சுக்கு அழைத்து சென்றான், புகழேந்தி. நண்பன் பிரபாகரையும் அழைக்க, அவனும், 'பீச்'சுக்கு வந்து சேர்ந்தான்.
''அ ப்பா, மகள் இருவருமே டன் கணக்கில் உன் மீது குற்றம் சுமத்தினர். விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனராம். கையெழுத்து போட்டு திருப்பி அனுப்ப கூறினர். 'மியூச்சுவல் கன்சென்ட்' கேட்கின்றனர்,'' என்றான், பிரபாகர்.
''கொடுத்து விட்டால் போயிற்று,'' என்றான், புகழேந்தி.
''நான் கிளம்பியதும் என் முதுகிற்கு பின்னால் ஒன்று சொன்னார், அவர்,'' என்றவுடன், வெறுமனே பிரபாகர் முகத்தை ஏறிட்டான், புகழேந்தி.
''வச்சுக்கிட்டிருக்கானே ஒரு பொண்ணு. அவளையே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுன்னு சொன்னார்,'' என்றான், பிரபாகர்.
பதிலேதும் பேசாமல் இருந்தான், புகழேந்தி.
''கட்டிக்கிட்டால் போச்சுன்னு சொல்லேன், புகழ்...'' என்றான், பிரபா.
''என்ன பேசுகிறாய், பிரபா. இது, நான் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லையே!''
''சரி நேராக கயலையே கேட்டு விடுகிறேன். புகழேந்தியை கல்யாணம் செய்து கொள்ள சம்மதமா, கயல்?''
''என்ன பேசுகிறீர்கள், பிரபா. அவர் எனக்கு தெய்வம் மாதிரி.''
''தெய்வத்தையே கல்யாணம் செய்து கொண்ட பெண்கள் இருக்கின்றனர், கயல்.''
''ஒரு நிமிடம் பிரபாகர் சார். நான் எந்த விதத்திலும் அவர்களுக்கெல்லாம் ஈடாக மாட்டேன். நீங்கள் சொல்கிற மாதிரி கல்யாணம் செய்து கொள்வதாக வைத்துக் கொண்டாலும் அமைச்சர் பேசியது, இவரது மனைவி சந்தேகப்படுவது, நெருப்பில்லாமல் புகையாது என, மற்றவர்கள் சொல்வது எல்லாம் சரி என்றாகி விடாதா?
''அத்தனை பேர் எண்ணங்களும் உண்மை என, ஒப்புக் கொண்டதாகி விடாதா? செய்யாத குற்றத்தை செய்ததாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?''
அமைதியாக பேசினாலும், கயல்விழியின் குரலில் ஒரு அழுத்தம் தொனித்தது. கேட்ட கேள்விகளில் உண்மை இருந்தது. மறுக்கவே முடியாத உண்மையாக இருந்ததால் உடனடியாக, பிரபாகரால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு விநாடி தயங்கி, பின் மெல்ல கேட்டான்...
''அவர்கள் சொன்ன எதிலும் கடுகளவு உண்மை கூட இல்லை என, உங்களால் அடித்துச் சொல்ல முடியுமா, கயல்?''
அந்த கேள்வி அவளை அடித்து நிறுத்தியது. அம்பு மாதிரி இதயத்தை துளைத்தது. சாதாரண கேள்வியா அது? உள்ளத்தில் இருப்பதை கொக்கி போட்டு வெளியில் இழுக்கிற கேள்வி அல்லவா?
ஒரு விநாடி, பிரபாகரையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர், புகழேந்தியை ஏறிட்டாள். அதன் பிறகு மெல்ல பேசத் துவங்கினாள்...
''நேர்மையான பதில் என்றால்,'எஸ் ஐ லவ் ஹிம்!' மருத்துவமனையில் நான் கண்விழித்துப் பார்த்தவுடன், என் பார்வையில் பட்ட இவரது முகம், மனதில் வந்து ஒட்டிக்கொண்டது. இவர் யார், எப்படிப்பட்டவர், கல்யாணம் ஆனவரா, ஆகாதவரா என, எதுவும் எனக்கு தெரியாது.
''அந்த முதல் பார்வையிலேயே இவரை நான், மனதார நேசிக்கத் துவங்கி விட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றி தெரிய வர, என் காதல் பக்தியாக மாறிவிட்டது. இவரை மனசுக்குள் வைத்து, தினமும் ஆராதனை செய்து வருகிறேன். அதுவும் நேற்றிரவு இவர் பேசிய பேச்செல்லாம் கேட்ட பின், என் பக்தி அதிகமாகி விட்டது.
''மருத்துவ மனையில் இருந்து என்னை இவர் வீட்டிற்கு அழைத்துப் போன போது, வரவேற்பறையில் மாட்டியிருந்த இவரது திருமணப் புகைப்படம் தான், இவர் மணமானவர் என்பதை எனக்கு சொல்லிற்று.
''இவரது மனைவி, அவரது குணம், இவரை நடத்திய விதம் எல்லாம் அறிந்த பின், நான் கொண்ட அன்பையும் மீறி, மிகுந்த அனுதாபத்தை வரவழைத்து விட்டது. எப்பேர்ப்பட்ட மனிதர் இவர். இவருக்கு போய் இப்படி ஒரு வாழ்க்கையா என, மனசு மிகவும் வேதனைப்படுகிறது. இவருக்கு என்னால் ஆன அனைத்தையும் செய்ய நான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், கல்யாணத்தை தவிர.''
''என்ன இப்படி சொல்கிறீர்கள், கயல்? புகழை நேசிப்பதாக சொன்னீர்கள். மனதில் வைத்து ஆராதிப்பதாக சொன்னீர்களே!''
''இப்போதும் சொல்கிறேன். இவரை நேசிப்பதும், ஆராதிப்பதும் நிஜம் தான். அது, கல்யாணத்தில் தான் முடிய வேண்டும் என்பதில்லையே, பிரபா. எத்தனையோ காதல்கள் கல்யாணத்தோடு முடிந்து விடுகின்றன என்பதை, நீங்கள் அறிவீர்கள் தானே!''
''உங்கள் அன்பும், நேசமும் அப்படிப்பட்டதல்ல என்பதையும் நான் அறிவேன்.''
''அப்படிப்பட்டதல்ல தான். ஆனாலும், என்னால் இவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது.''
கயல்விழி சொன்னது, பிரபாகரை மட்டுமின்றி, புகழேந்தியையும் கஷ்டப்படுத்தியது. ஆனாலும், அமைதியாகவே இருந்தான், புகழேந்தி. பிரபாகரால் அப்படி இருக்க முடியவில்லை.
''ஏன் அப்படி சொல்கிறீர்கள், கயல்? அந்த கயவர்கள் உங்களை இழுத்துப் போய் கூட்டு பலாத்காரம் செய்த காரணத்தினாலா?''
''பி... ர... பா...!'' என்றாள், அவள் அதிர்ச்சியான குரலில்.
''என்ன பேசுகிறீர்கள் நீங்கள்? இந்த உடலா நான்!''
அந்த ஒரே கேள்வி, பிரபாகரை அடித்து மிதித்து துவைத்துப் போட்டு விட்டது.
பிரபாகரின் காதருகில் மீண்டும் மீண்டும் அந்த கேள்வி வந்து, நெஞ்சத்தை துளைத்தது. அப்படி ஒரு கேள்வியை கேட்டதற்காக வெட்கப்பட்டான், வேதனைப்பட்டான்.
'கயல்விழி சொன்னது, புகழேந்தியை மிகவும் காயப்படுத்தி இருக்கும் என்பதாலேயே, அப்படி கேட்டு விட்டேன். புகழேந்தியின் மனம் உடைந்து போய் விடக்கூடாது என்ற காரணத்துக்காக, அனிச்சையாக அக்கேள்வி வந்து விட்டது. எதுவாக இருந்தாலும், அப்படி கேட்டிருக்கக் கூடாது. மிகவும் தவறான கேள்வி தான்...' என, நினைத்துக் கொண்டான்.
முகம் கவிழ்த்து மெல்லிய குரலில், ''தயவு செய்து மன்னித்து விடுங்கள், கயல்.'' என்றான், பிரபா.
''அது எனக்கு புரிகிறது, பிரபா. பரிபூரணமாகப் புரிந்து கொள்கிறேன். அதுபோல் நீங்களும், என்னை பரிபூரணமாக புரிந்து கொள்ள வேண்டும் என, நினைக்கிறேன். அதற்காக நான் சொல்லப் போவதை சற்று அமைதியாக கேளுங்கள். உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டுமென்றால்...''
''இல்லை, கயல். எனக்கு எந்த பதிலும் வேண்டாம். விட்டு விடுங்களேன் ப்ளீஸ்,'' என, இடையில் குறுக்கிட்டான், பிரபாகர்.
''இல்லை பிரபா... அப்படி விட்டுவிட முடியாது. விட்டு விடவும் கூடாது. ஏனென்றால், உங்கள் கேள்வி தான் குழம்பிப் போயிருந்த என் மனதை தெளிவடைய வைத்தது. தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வைத்துள்ளது.''
''என்ன சொல்கிறீர்கள், கயல்?''
''ஆமாம். உண்மையைத்தான் சொல்கிறேன். தடுமாறிக் கொண்டிருந்த என் எண்ணங்களை தடுத்து நங்கூரம் போட்டது, உங்கள் கேள்வி தான். நிலையான ஒரு முடிவை எடுக்க துாண்டியது, நீங்கள் தான்.''
''புரியவில்லை, கயல்.''
''இந்த உடலுக்குள் நான் இருப்பது உண்மையை தான். ஆனால், நான் இந்த உடல் இல்லை. அப்பாவைக் கொலை செய்து, அம்மாவைக் கொன்று கிணற்றில் வீசி, ஓடும் பேருந்தை நிறுத்தி, என்னைக் கீழே இறக்கி இழுத்துப் போய் சேதாரப்படுத்தினர்.
''கயல்விழி என்ற இந்த பெண்ணின் இருத்தலுக்கு தேவைப்பட்ட கூட்டை சிதைத்து விட்டு, என்னை சிதைத்து விட்டதாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், அவர்கள்.
''என் உடலை சேதப்படுத்தியவர்களால், ஒரு போதும் என் உள்ளத்தை சேதப்படுத்த முடியாது. உள்ளுக்குள் இருக்கிற, கயல்விழியை யாராலும் சிதைக்கவோ, சின்னாபின்னப்படுத்தவோ முடியாது. அவள் அதிலிருந்து மீண்டு இன்னும் திடமாக, தீர்க்கமாக எழுந்து நின்று விட்டாள்.
''இன்னும் ஆயிரம் போர்க்களங்கள் கண்டாலும், அத்தனையும் கடந்து ஆயிரம் ஆண்டுகள் வாழவே, இந்த கயல்விழி பிரியப்படுகிறாள்; விண்ணைத் தொட ஆசைப்படுகிறாள். மருத்துவமனையில் அழுததெல்லாம் அம்மாவிற்காகத் தானே தவிர, எனக்காக இல்லை.''
''உண்மை தான், கயல். இதை புகழ், எனக்கு சுட்டிக் காட்டினான். நீங்கள் சாதாரணமான பெண்ணில்லை எனச் சொன்னான்.''
''அவர் என்னை புரிந்து கொண்டு விட்டார். பரிபூரணமாகத் தெரிந்து கொண்டு விட்டார். இந்த புரிதல் தான் வாழ்க்கை. இது தான் காதலின் தேவை. கல்யாணத்திற்கான அடிப்படை என்றாலும், எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. அந்த தயக்கம் தான், நீங்கள் கேட்ட போது என்னை மறுக்க வைத்தது.
''உடல் என்பது, வெறும் கூடு தான் என்றாலும், சிதைந்து போன கூடு. சேதாரமாகி விட்ட சிலை. சேதாரமானது தெய்வத்தின் சிலையானாலும், கோவிலின் மூலஸ்தாளங்களில் வைப்பதில்லை. பின்னப்பட்டதை ஆராதிப்பதில்லை என்ற போது, தெய்வமாக நான் கருதுகிறவர்களுக்கு எவ்வாறு இந்த சேதாரமான உடலை சமர்ப்பிப்பது என்ற தயக்கமும், கலக்கமும் எனக்குள் இருந்தது.
''அதன் காரணமாகத்தான் நீங்கள் கேட்ட போது மறுத்தேன். ஆனால், அந்த தயக்கமும், கலக்கமும் இப்போது என்னிடமில்லை. அதிலிருந்து நான் வெளியில் வந்து விட்டேன்.''
பிரபாவின் முகத்திலும், புகழேந்தியின் முகத்திலும் புன்னகையும், பிரகாசமும் பளிச்சிட்டது. அதை கவனித்த கயல்விழியின் நெஞ்சு உருகியது.
''பாகிஸ்தான் பிரிவினையின் போது, என்னை போல் உடலால் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கணக்கான பெண்களுக்காக மகாத்மா காந்தி வேண்டிக் கொண்டதை நீங்கள், இப்போது என் விஷயத்தில் கடைப்பிடிக்கிறீர்கள்.
''இந்த பின்னப்பட்ட உடலோடு, சிறிது கூட சேதாரப்படாமல், மாசு மருவற்று முழுமையாக இருக்கும் என் மனதையும் சேர்த்து, உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். உங்கள் பாதங்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன். ஏற்றுக் கொள்வீர்களா, புகழேந்தி.''
தலையை சாய்த்து அவள் கேட்ட விதத்தில் உருகிப் போனான், புகழேந்தி. அது கடற்கரை என்பதை மறந்து, அவளை தன் அருகில் இழுத்து அணைத்துக் கொண்டான்.
'இவரை பார்க்க அப்பா இல்லாமல் போய் விட்டாரே? பார்த்திருந்தால் தன்னை விட அவர் தான் சந்தோஷப்பட்டிருப்பார். தன்னைவிட உற்சாகமும், குதுாகலமும் அடைந்திருப்பார்...' என, தன் அப்பாவை நினைத்ததும், அவளது கண்கள் கரகரவென கண்ணீர் சிந்தின. அவளது முகத்தை தன் கைகளால் ஏந்தி கண்ணீரை துடைத்தான், புகழேந்தி.
''நீ அழக் கூடாது, கயல். அழுவதற்காக பிறந்தவளல்ல நீ. சாதிக்கப் பிறந்தவள். எந்த அப்பாவை நினைத்து அழுகிறாயோ, அந்த அப்பாவின் கனவை, ஆசையை நிறைவேற்றப் பிறந்தவள். விண்ணையும் தொடக் கூடியவள்; தொட வேண்டியவள்.
''நம் வீட்டில், கயல்விழி ஐ.ஏ.எஸ்., என்ற பெயர் பலகை மாட்டும் நாள், வெகுதுாரத்தில் இல்லை. நான் திறக்கப் போகும் அகாடமியில் சேரப் போகும் முதல் மாணவி நீ.''
கண்களை மட்டும் உயர்த்தி, புகழேந்தியை பார்த்து வெகு அழகாகப் பளீரென்று புன்னகைத்தாள், கயல்விழி.
உண்மையான அன்பால் இணைந்த இரு உள்ளங்களைக் கண்டு நெகிழ்ச்சியடைந்த, பிரபாகர் கலங்கின கண்களை மறைக்க, வானத்தை அண்ணாந்து பார்த்தான். மூன்று நட்சத்திரங்கள் மின்னுவதைக் கண்டான்.
''புகழ் மூன்றெழுத்து, கயல் மூன்றெழுத்து...'' என, தன்னையும் மீறி வாய் விட்டு பிரபாகர் சொன்னதைக் கேட்ட, புகழேந்தி, ''பிரபாவும் மூன்றெழுத்து தான்,'' என்றான்.
நிமிர்ந்து பிரபாகரைப் பார்த்து புன்சிரிப்பாகச் சிரித்தாள், கயல்விழி.
'போவோமா...' என, ஒரு சேரச் சொல்லி, மூவரும் எழுந்து மணலில் நடந்த போது, வானத்திலிருந்த அந்த மூன்று நட்சத்திரங்களும் அவர்களை பின் தொடர்ந்தன.
- நிறைவு பெற்றதுஇந்துமதி

