sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விண்ணையும் தொடுவேன்! (1)

/

விண்ணையும் தொடுவேன்! (1)

விண்ணையும் தொடுவேன்! (1)

விண்ணையும் தொடுவேன்! (1)


PUBLISHED ON : மார் 09, 2025

Google News

PUBLISHED ON : மார் 09, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கயல்விழி மனதில் பதிந்து போன வரிகள் இவை. தஸ்தயேவ்ஸ்கியின் ஒவ்வொரு வரிகளும் இப்படித்தான் என்றாலும், இவ்வரிகள் மட்டும் அவளுக்குள் நங்கூரமிட்டு நின்றுவிட்டன.

ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் யாரிடமிருந்தாவது புதிதான நாட்குறிப்பு நோட்டுப் புத்தகம் ஒன்று, கயல்விழிக்கு வந்துவிடும். ஜனவரி முதல் தேதியன்று அதன் முதல் பக்கம், இவ்வரிகளாலேயே அலங்கரிக்கப்படும். அதன் கீழ், வலது பக்க ஓரத்தில், 'சந்தோஷமாக இரு, மற்றவர்களையும் சந்தோஷமாக்கு!' என்று எழுதியிருப்பாள்.

தினமும் நாளின் ஆரம்பத்தில் நாட்குறிப்பை எடுத்து, இதைப் படித்த பின்னரே, மற்ற வேலைகளைச் செய்ய ஆரம்பிப்பாள், கயல்விழி.

அன்றும் அப்படித்தான், நாட்குறிப்பு நோட்டில் இருந்த வரிகளை படித்து முடித்த போது, அவளது மொபைல் போன் ஒலித்தது.

எடுத்துப் பார்த்தாள். அம்மா! சந்தோஷமாக பேச ஆரம்பித்தாள்.

''அம்மா!''

எதிர்முனையிலிருந்து வந்த விசும்பல் சத்தம், அவளை திடுக்கிடச் செய்தது.

''என்னம்மா ஆச்சு?''

விசும்பல் சத்தம் அழுகையாக மாறிற்று. தாங்க முடியவில்லை, இவளால்.

''நான் என்ன நேர்லயாம்மா இருக்கேன்? 150 கி.மீ., தள்ளியிருக்கேன். விபரமே சொல்லாம என்னென்னு நினைக்கிறது?''

''உன் தம்பி, கணேசன் வீட்டை விட்டு ஓடிப் போயிட்டான்.''

அந்தச் செய்தி அவளுக்கு அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. மாறாக, கணேசன் நல்லபடி இருப்பதாக, அம்மா சொல்லியிருந்தால் ஆச்சரியப்பட்டிருப்பாள். கணேசன் தன் பொறுப்புக்களை உணர்ந்து நடப்பதாக சொல்லியிருந்தால் அதிசயப்பட்டிருப்பாள். ஆகவே, அவன் ஓடிப்போனது பெரிய விஷயமாகவே தோன்றவில்லை.

'இவ்வளவு தானா...' என்ற நிம்மதி தான் உண்டாயிற்று.

''சரிம்மா... அதுக்கு ஏன் இப்படி அழுவுற? அவன் வீட்டை விட்டு ஓடிப்போறதும், பின் தானாகத் திரும்பி வர்றதும் இன்னைக்கு நேத்திக்கா நடக்குது?'' என்றாள், கயல்விழி.

''ஆனா, இந்தத் தரம் அவன் மட்டும் தனியாப் போகல. கூடவே, ஊர் தலைவரோட பொண்ணையும் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிருக்கான்,'' என்றாள், அம்மா.

அதிர்ந்து போனாள், கயல். குபீரென்று ஒரு பயம். நெஞ்சைக் கவ்வியது. அடி வயிறு சுருண்டுக் கொண்டது.

'கணேசன் ஏன் இப்படி செய்தான். ஒரு நரிக்குறவப் பையன், மேல் ஜாதி பெண்ணோடு ஓடிப் போனால் என்னவாகும்? பெண்ணைச் சேர்ந்தவர்கள் இவனை அடித்து மிதித்து துவைத்தெடுத்து விட மாட்டார்களா!

'கணேசனுக்கு என்ன வயதிருக்கும் இப்போது? தனக்கே, 23 என்ற போது, அவனுக்கு, 21 வயது தானே ஆகிறது. திருமண வயதா அது? படிப்பு ஏறவில்லை. வேலைவெட்டியில்லை என்றால், மனசு இதுபோன்ற எதிர்மறை விஷயங்களில் இறங்கி விடுமோ! அதற்கான தைரியம் அவனுக்கு எப்படி வந்தது?

'அவன், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பது, அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்குமா? படிக்காதவன், சோம்பேறி, ஊர் சுற்றித்திரிபவன் என்பதையெல்லாம் அவள் அறிந்திருப்பாளா?

'கணேசன் அணிகிற உடைகளும், முன் நெற்றியில் விழும் சுருள் முடியும், வெற்றுத் தோரணையும் காட்டுகிற ஸ்டைலிலும் மயங்கியிருப்பாளோ! என்ன ஒரு மடமை! எப்படிப்பட்ட முதிர்ச்சியற்ற தன்மை! காகிதப்பூக்களும், காய்ந்த சருகுகளுமா வாழ்க்கை!' என, நினைத்துக் கொண்டாள்.

''என்ன கயல் பேசாமல் இருக்க?''

''இல்லம்மா, என்ன செய்யலாம்ன்னு யோசிக்கிறேன்.''

''ஏதாச்சும் உடனே செய், கயலு. எனக்கு பயமா இருக்குது. காலையில நம்ம குடிசை வாசல்ல ஜனம் கூடிப் போச்சு. எல்லாம் அவுங்க ஆளுங்க. கேள்வி மேல் கேள்வி கேட்டு, என் உசுர எடுக்கறாங்க. கையில கட்டையும், அரிவாளும் வச்சுக்கிட்டு சுத்தறாங்க.

''நம்மாளுங்க ஒருத்தரும் எட்டிப்பாக்கல. எல்லாம் பயப்படுறாங்க. எனக்கும் ரொம்ப பயமா...'' என்று சொல்லி முடிப்பதற்குள், அம்மாவின் அலறல் சத்தம் கேட்டது. கூடவே கட்டையான ஆண் குரலில் அதட்டல்.

''யாருகிட்டடீ பேசுற?''

''என் மவ கிட்ட!''

''மவகிட்டயா, இல்ல, உன் மவன் கிட்டயா?''

''தலை முடிய உடுங்கையா. வலி தாங்க முடியல. இந்தாங்க போனு. நீங்களே கேட்டுக்குங்க,'' என்றாள், அம்மா.

''ஹலோ?'' என்றது அந்தக் கட்டை ஆண் குரல்.

''சொல்லுங்க,'' என்றாள், கயல்.

''யாருடீ, நீ?''

''கயல்விழி.''

''உன் பேரை கேட்கல. இந்த அறிவு கெட்ட மூதேவிக்கு நீ என்ன வேணும்?''

ஜிவ்வென்று உடல் ரத்தம் முழுவதும் தலையில் ஏறிற்று.

''சார், கொஞ்சம் நாவடக்கிப் பேசுங்க,'' என்றாள்.

''அடி செருப்பால. யாரைடீ நாவடக்கி பேசச் சொல்ற? உனக்கு இத்தினித் திமிரா?''

''இதுக்கு பேரு திமிர் இல்லீங்க. எந்த மனுஷனும், சக மனுஷனுக்குத் தர வேண்டிய மரியாதை.''

''உங்களுக்கெல்லாம் எதுக்குடி மரியாதை? எங்கடீ இருக்குற நீ?''

''சென்னையில!''

''ஏன் இங்க உன் பருப்பு வேகலையா? அங்க போய், உடம்ப வித்தாவது பொழச்சுக்கலாம்ன்னு போயிட்டியா?''

நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டிய வார்த்தைகள். அதன் அனல் தாங்க முடியாமல் கொதித்தாள். பதிலுக்கு சுறுசுறுவென்று ஏதாவது சொல்ல வேண்டுமென்று நாக்கும், மனசும் துடித்தது. ஆனால், கண்களை மூடி, கீழ் உதட்டை கடித்து, தன்னை அடக்கிக் கொண்டாள்.

''காலேஜ் படிப்ப முடிச்சிட்டு, குடியுரிமை பரீட்சைக்கு தயார் பண்ணிக்கிட்டிருக்கேன்,'' என, அமைதியாகவே சொன்னாள்.

''அடி சக்க. நீ கெட்ட கேட்டுக்கு, ஐ.ஏ.எஸ்., ஒண்ணுதான் பாக்கி. எங்க ஒளிச்சு வச்சிருக்க, உன் தம்பிய?''

''நான் தங்கியிருக்கிறது அரசாங்க விடுதி. ஐ.ஏ.எஸ்., பரீட்சைக்கு பயிற்சி பெற வர்றவங்க தங்குற இடம். இங்கெல்லாம் யாரையும் ஒளிச்சு வைக்க முடியாது.''

''அங்க இல்லைன்னா, வேற எங்கயாச்சும் ஒளிச்சு வச்சிருப்ப.''

''தம்பி ஓடிப் போன விஷயமே இப்ப எங்கம்மா சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கே தெரியும்.''

''உங்களுக்கெல்லாம் மொபைல் போன் ஒண்ணு தான் குறைச்சல். ஆரம்பத்துலேயே உங்கப்பன், பாடிகோடனை நாங்க தட்டி வச்சிருக்கணும். கட்சி, மீட்டிங்குன்னு அலைய ஆரம்பிச்சானே... அப்பவே கிள்ளி எறிஞ்சிருக்கணும். அதைச் செய்யாத குத்தத்துக்கு இப்ப அனுபவிக்கிறோம்.

''நீ, ஐ.ஏ.எஸ்., படிக்கப் போறது, உன் தம்பி, எங்க வீட்டுப் பொண்ணைக் கூட்டிக்கிட்டு ஓடுறதெல்லாம் நடந்திருக்காது.''

''அப்பாவைத்தான் தட்டித் துாக்கிட்டீங்களே. இன்னும் என்ன செய்யணும்ன்னு நினைக்கறீங்க?''

''இன்னைக்கு ராவுக்குள்ள எங்க வீட்டுப் பொண்ணு எங்ககிட்ட வரல, உங்கம்மாவையும் அதே மாதிரி கூறு போட்டுருவோம், ஜாக்கிரதை.''

கனன்று கொண்டிருந்த தணலின் மீது வாளி நீரை வீசிய மாதிரி கோபம் மொத்தமும் சட்டென்று அடங்கியது. பதை பதைக்கத் துவங்கினாள்.

'எதையும் செய்யக் கூடியவர்கள் அவர்கள்; செய்தவர்கள்தானே!'

அதற்குள் அவன் மொபைலின், ஒலிபெருக்கியை அழுத்தியிருக்க வேண்டும்.

'ஐயோ... ஐயோ...' என்ற அம்மாவின் அலறல் சத்தம் கேட்டதும் துடிதுடித்தாள்.

''எங்கம்மாவை ஒண்ணும் பண்ணிடாதீங்க. இதோ நான் கிளம்பி வரேன். என் தம்பி எங்க போயிருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சுடலாம்.''

இவளது வேண்டுகோள் மறுக்கப்பட்டது. மொபைல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இரண்டு மூன்று முறை அம்மாவின் போன் எண்ணை அழுத்தினாள்.

'நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் தற்போது, 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது!' என்றது.

அதற்கு மேல் முயற்சிப்பதை கைவிட்டு, ஊருக்கு செல்வதற்கான அனுமதி பெறுவதற்கு ஓடினாள், கயல்விழி.

வேகமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது பேருந்து. ஆனால், ஆமை ஊர்வதைப் போலிருந்தது, கயல்விழிக்கு. பேருந்தின் வேகத்தை விட, பன்மடங்கு வேகமாக செயல்பட்டது அவள் மனது. ஓடிப்போய் அம்மாவின் முன் நின்றுவிட மாட்டோமா என துடித்தது.

'அம்மாவை ஏதும் செய்திருப்பரோ...' என்ற எண்ணம் ஆட்டிப் படைத்தது.

செய்யக்கூடியவர்கள் தான். அப்பாவை ஓட ஓட விரட்டிக் கொன்றவர்கள் தானே!

எப்படிப்பட்ட மனிதன், என் அப்பா. நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது. உள்ளம் நெகிழ்ந்தது. கைகள் தாமாகக் குவிந்தன. அப்பா என்ற மூன்றெழுத்து, அவளுக்குள் மந்திரமாக வேலை செய்தது. அப்பா இல்லை என்றால், இவள் இல்லை. பள்ளி கல்லுாரி, ஐ.ஏ.எஸ்., கனவு எதுவுமே இல்லை.

அவை அனைத்திலிருந்தும் விடுவித்து அவளை, இந்த நிலைக்கு கூட்டி வந்திருப்பவர், அப்பா!

'படிக்கணும்மா... படிப்பு ஒண்ணு தான் மனுஷனை முன்னேத்தும். அதுவும் நம்ம குருவிக்கார சமூகம் முன்னேறணும்ன்னா, படிப்பை விட்டா வேற வழி கிடையாது...' என, சொல்லிச் சொல்லி அவளுக்குள் உருவேற்றினார்.

அவளிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார், அப்பா. ஆத்ம சினேகிதியைப் போல் அனைத்தையும் சொல்லியிருக்கிறார். அவருக்கு திருமணமான போது, 17 வயது தானாம். அவரின் இனத்திலேயே அப்பா, பேரழகன் என்று கருதப்பட்டார்.

கருகருத்த சுருள் முடி. நீண்டகன்ற கண்கள். கூர்மையான நாசி. அவருக்கு எங்கிருந்து தான், அந்த ரோஸ் நிற உதடுகள் வந்தனவோ? உயரமும், அதற்கேற்ற வாளிப்பான உடல் வாகும்...

'ஏ, பாடிகோடா... நீ சினிமாவுல நடிக்கப் போகலாம்டா. எதுக்காக இந்த வயசுல இப்படி படிப்பு படிப்புன்னு அலையுற?' என, எத்தனையோ பேர் கூறினர்.

அதைக் கேட்டு அம்மா சிரிப்பாள்.

'படிக்கப் போகாதே என்றால், கேட்கிற ஆசாமியா அவர்...' என்பாள். அம்மாவை, அப்பா காதலித்து தான் கல்யாணம் பண்ணிக் கொண்டாராம்.

'பாரதிக்கு செல்லம்மா மாதிரி, எனக்கு உங்கம்மா!'

சடாரென்று தலை நிமிர்ந்து கண்ணகல அவரைப் பார்த்தாள், கயல்.

'உனக்கு பாரதி தெரியுமாப்பா?'

தேடிச் சோறு நிதம்தின்று - பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்

கூற்றுக் கிரையானபின் மாயும் - பல

வேடிக்கை மனிதரை போல - நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ?

மேல் துண்டை எடுத்து, தலைக்கு முண்டாசு கட்டி, கம்பீரமான குரலில் அப்பா உரத்துச் சொன்ன போது, அவளால் தாங்க முடியவில்லை. அமர்ந்திருந்தவள் எழுந்து ஓடிப்போய் அவரை சேர்த்து கட்டிக் கொண்டாள்.

பள்ளி விழாவில், பாரதியார் வேடமிட்டு மேடையில் தான் முழங்கிய அதே பாடல். பல கைத்தட்டல் பெற்ற பாடல். அனைவரது பாராட்டுக்களையும் வாங்கித் தந்த பாடல். அதை அப்பா தன்னைப் போலவே முண்டாசு கட்டி, சிம்மக்குரலில் கர்ஜித்ததைக் கேட்டதும், தான் அப்பாவாகி, அப்பாவே தானாகி விட்ட மாதிரி இருந்தது.

- தொடரும்இந்துமதி






      Dinamalar
      Follow us