PUBLISHED ON : ஏப் 13, 2025

முன்கதைச் சுருக்கம்: புகழேந்திக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில், கலெக்டர் போஸ்ட் கிடைக்க, அங்கு குடியேறினான்.
திருவண்ணாமலையில் பதவி ஏற்ற பின், தன் அப்பா கூறியபடி, ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை பெற்று தர வேண்டும் என்ற முடிவில் இருந்தான்.
இச்சமயத்தில் தான், கயல்விழியை, ஜாதி வெறி பிடித்த கும்பல், சின்னாபின்னமாக்கி புதரில் எறிந்து சென்றிருந்தது. பஸ்சின் கண்டக்டர் மூலமாக விஷயம் அறிந்த, புகழேந்தி, மலைப்பாதையில் குற்றுயிராக இருந்த, கயல்விழியை தேடிக் கண்டுபிடித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்.
புதரில் கிடந்த பெண்ணின் உடலை, ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி, பின் தொடர்ந்து சென்றான், புகழேந்தி.
''வழியில் எந்த ரெடிமேட் கடை இருந்தாலும் நிறுத்து, பழனி. முதலில் ஒரு, 'ஷர்ட்' வாங்கணும்.''
வாங்கி அணிந்து கொண்ட பின், அரசு மருத்துவமனைக்கு செல்லச் சொன்னான், புகழேந்தி. வண்டி செல்லச் செல்ல அவன் மனம் அதிவேகமாக முன்னே சென்றது.
'இது, ஒருவன் செய்த குற்றமில்லை. கூட்டு பாலியல் பலாத்காரம். நான்கு பேரா, எட்டு பேரா, பத்து பேரா தெரியவில்லை. அயோக்கியர்கள், அரக்கர்கள். நிற்க வைத்து சுட வேண்டும் இவர்களை. அரபு நாடுகள் போல், கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.
'இன்னும் எத்தனை பெண்கள், எத்தனை சிறுமிகள். எத்தனை கொடுமை. இவற்றுக்கெல்லாம் என்ன தீர்வு?
'யார் இந்தப் பெண்? கல்லுாரியில் படிக்கும் பெண் போல காணப்படுகிறாள். இந்த மாவட்டத்துப் பெண்ணா? ஏன் இப்படி செய்தனர். முன் விரோதம் காரணமாக இருக்குமோ? எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் விடக்கூடாது.
'இந்தப் பெண் யார் என, எப்படி தெரிந்து கொள்வது? 'பெண்ணுக்கு ஆபத்து' என்று மொபைல் போனில் கூப்பிட்டு சொன்ன ஆணுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். அவன் ஏன் காப்பாற்றவில்லை. முதலில் அவனை கண்டுபிடிக்க வேண்டும்...'
மொபைல் போனில், எஸ்.பி., ஈஸ்வரியை அழைத்தான்.
''உடனடியாக அரசாங்க மருத்துவமனைக்கு வாங்க!''
''எஸ், சார்!''
மருத்துவமனையை அடைந்ததும், உயர் தலைமை மருத்துவர் வந்து வரவேற்றார். அந்தப் பெண்ணை காப்பாற்றி விட வேண்டும் என்ற தவிப்புடன், புகழேந்தி பேசுவதை புரிந்து கொண்டு, பணிவுடன் பதிலளித்தார், மருத்துவர்.
''ரொம்ப மோசமான நிலையில் தான், அந்தப் பெண் இருக்காங்க. மிக நல்ல டாக்டர்ஸ் டீம் போராடிக்கிட்டு இருக்கு. எங்களால் முடிந்த அளவுக்கு சிகிச்சை அளிக்கிறோம்.''
''ப்ளீஸ்.''
''உங்க தவிப்பு எனக்கு புரியுது. நிச்சயம் காப்பாற்ற முயல்கிறோம்,'' என்றார், மருத்துவர்.
''சார்.''
சட்டென்று திரும்பி, ''எஸ்...'' என்றான்.
''இன்னும் ரெண்டு யூனிட் ரத்தம் தேவைப்படுது, சார்.''
''எந்த க்ரூப்?''
சொல்லப்பட்டதும், மறு விநாடி ஏற்பாடு பண்ணினான், புகழேந்தி. அதற்குள், மாவட்ட எஸ்.பி., ஈஸ்வரி வந்து சேர்ந்தார்.
''வணக்கம், சார்.''
''வணக்கம். உட்காருங்க,'' என்றவன், விபரம் முழுவதையும் கூறி முடித்து, ''யார்ன்னு கண்டுபிடிக்கணும்,'' என்றான்.
''கண்டுபிடிச்சுடலாம், சார்.''
ஈஸ்வரி அகன்றதும், மருத்துவமனையின் உயர் தலைமை மருத்துவர் வந்து, ''நீங்க ஏன் சார் இங்க காத்துக்கிட்டு இருக்கணும்? வீட்டுக்குப் போங்க சார். நாங்க தெரியப்படுத்தறோம்,'' என, பணிவாக கேட்டுக் கொண்டார்.
''நோ... நோ... நான் இங்க இருந்து தெரிஞ்சுக்கிட்டே போறேன். இப்ப எப்படி இருக்கு, அந்தப் பொண்ணு நிலைமை?''
''சொல்ல முடியாது, சார். டாக்டர்ஸ் ரொம்ப போராடுறாங்க. மதில் மேல் பூனை. 50 - 50 வாய்ப்பு தான்.''
''சின்ன வயசு, டாக்டர். அதிகபட்சம் கல்லுாரி படிப்பை முடிச்சிருக்கலாம். இப்படியெல்லாம் நடந்தால், வாழ்க்கை மீது பயம் தான் வருமே தவிர, நம்பிக்கையா ஏற்படும்?''
''ஆமாம், சார்.''
''இன்னும் ஆபரேஷன் தியேட்டர்ல இருக்கிறாங்களா, டாக்டர்?''
''நியூரோ, ஆர்த்தோ, பிரெய்ன் என, எல்லா டாக்டர்களும் சேர்ந்து போராடுகின்றனர். நல்ல காலமாக, தலையில் காயம் இல்லை. ரொம்ப நுணுக்கமான, 'சர்ஜரி' சார். இன்னும் அரை மணி நேரத்தில் முடிஞ்சுடும். 'போஸ்ட் ஆபரேடிவ் கேர்'ல ஒரு மணி நேரம் வச்சிருந்து, பின் ஐ.சி.யு.,க்கு மாத்திடுவோம். நீங்க வேணா வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வாங்களேன், சார்.''
''இல்லை... வேணாம்!''
''இங்கேயே ஏதாவது வரவழைக்கட்டுமா?''
''வேணாம், டாக்டர்.''
''சூடா டீ, காபி ஏதாச்சும்...''
''சரி, டீ மட்டும்.''
மறு விநாடி, மணக்க மணக்க இஞ்சி - ஏலக்காய் டீ வந்தது. அப்போது அது தேவையாக இருக்கவே குடித்து முடித்தான்.
''தேங்க்ஸ் டாக்டர்.''
''நான் போய் பார்த்துட்டு வரேன், சார்.''
உயர் தலைமை மருத்துவர் நகர்ந்ததும், இவன் இருக்கையில் சரிந்து, கண்களை மூடி கொண்டான்.
'அந்தப் பெண் பிழைக்க வேண்டும். அந்தப் பெண் சரியாக வேண்டும்...' என்றே, அவன் மனதில் ஓடியது.
அடுத்த அரைமணி நேரத்தில், ''ஆபரேஷன் நல்லபடி முடிஞ்சிடுச்சு, சார். அந்தப் பொண்ணு, 'போஸ்ட் ஆபரேடிவ் கேரு'க்கு வந்தாச்சு. ஐ.சி.யு.,க்கு, 'ஷிப்ட்' பண்ணினதும் சொல்றோம். நீங்க வந்து பார்க்கலாம். வீட்டுக்கு கிளம்புங்க, சார்,'' என்றார், உயர் தலைமை மருத்துவர்.
''எப்படி இருக்காங்க?''
''இன்னும், 48 மணி நேரம் போனால் தான், எதுவும் சொல்ல முடியும்.''
''சரி நான் கிளம்பறேன். போன் பண்ணுங்க!''
''ஷ்யூர், சார்.''
காரில் ஏறியதும் மிகுந்த களைப்பாக உணர்ந்தான்.
''வீட்டுக்குப் போ, பழனி.''
''சரிங்கய்யா,'' என்றவன், மவுனமாக வண்டி ஓட்டி வந்தான்.
கார் சத்தம் கேட்டதும், வாசலுக்கு வந்தார், சமையற்கார பெரியவர்.
''ஐயா, தட்டு போடட்டுங்களா?''
''இதோ குளிச்சு, டிரஸ் மாத்திட்டு வந்திடறேன், பெரியவரே.''
படியேறி படுக்கை அறையினுள் நுழைந்த போது, மிகவும் கோபத்துடன் நின்று கொண்டிருந்தாள், சுபாங்கி.
அழகானவள், சுபாங்கி. மேலும் தன்னை அழகுபடுத்தி கொள்வதில் விருப்பமுடையவள். அவளுடைய அதீத ஒப்பனைகள், புகழேந்தியை மருட்டும். ஆனாலும், அவன் அதை வெளிப்படுத்தியதில்லை. ஒருமுறை சொல்லி வாங்கி கட்டிக் கொண்டான்.
'எதுக்கு இந்த அளவு, 'மேக்-அப்' சுபா. இயற்கை அழகே பேரழகு...'
'அது சரி. இதுலயும் கஞ்சத்தனமா? இதையுமா உங்கப்பா கத்துக் கொடுத்துட்டாரு?'
அதிலிருந்து வாயை மூடிக் கொண்டான். எது சொல்வதையும் விட்டு விட்டான்.
அதுபோல் இப்போதும், கோபத்தோடு நின்ற அவளைக் கண்டு, ஒதுங்கிப் போக நினைத்தான்; ஆனால், விடவில்லை, சுபாங்கி.
''மலையை விட்டு அப்பவே கிளம்புனதா சொன்னாங்களே. வீட்டுக்கு வர ஏன் இத்தனை நேரம்?''
''வேலை இருந்தது.''
''அஞ்சு மணிக்குக் கிளம்பி, ஒரு மணி நேரத்துல வீடு வர வேண்டிய நீங்க. ஆறேழு மணி நேரத்துக்கப்புறம் வர்றீங்கன்னா என்ன அர்த்தம்?''
''நேரமாயிடுச்சுன்னு அர்த்தம்.''
''அதான், ஏன்னு கேட்கறேன்?''
''வழியில் கிடந்த ஒரு பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க நேர்ந்தது.''
''ஓ... பொண்ணு விஷயமா? அதானே பார்த்தேன். என்ன ஆச்சு அவளுக்கு?''
''கூட்டு பாலியல் பலாத்காரம். பாவம் குற்றுயிரும், கொலை உயிருமாக புதர்ல கிடந்தா.''
''யார் அவள்?''
''தெரியாது.''
''முன்ன பின்ன தெரியாதவளை நீங்க ஏன் மருத்துவமனையில் சேர்க்கணும்?''
''எனக்கு போன் வந்தது,'' என்றான், புகழேந்தி.
''உங்களுக்கு ஏன் வரணும். போலீசுக்கு தானே போகணும்?''
''போன் பண்ணினவங்களுக்கு என் மேலே அத்தனை நம்பிக்கை. மாவட்ட கலெக்டரை கடவுளாக கருதறாங்க.''
''ஏன், கருத மாட்டாங்க! பொன் வைக்க வேண்டிய இடத்துல, பூ கூட வைக்காமல், வேலையை முடிச்சுக்கிட்டு போறாங்க. கையை விட்டு பைசா செலவு பண்ணாம, வேண்டிய வேலை எல்லாம் நடக்குது. அதனால், தேவன், தெய்வம், கடவுள்ன்னு, காதுல பூ சுத்துவாங்க,'' என்றாள், சுபாங்கி.
''இதப் பாரு, சுபா. ஏற்கனவே நேரமாயிடுச்சு. நான் குளிச்சு உடை மாத்திக்கிட்டு வரேன். ரொம்ப பசிக்குது. சாப்பாடு போடு.''
குளியல் அறைக்கு போன போது, அவள் முணுமுணுத்தது காதில் விழுந்தது.
'நேரம் கெட்ட நேரத்துல வர வேண்டியது. போன் வந்துச்சு. வழியில் பொண்ணு மயங்கி கிடந்துச்சு, கூட்டு பலாத்காரம், மருத்துவமனையில் சேர்த்தேன்னு, பொய் சொல்ல வேண்டியது. காதுல ஒரு பூ வச்சா பரவாயில்லை, ஒரு முழம் பூ வச்சா? ஒரு கலெக்டர் பண்ண வேண்டிய வேலையா இது?'
அவன் காதில் விழ வேண்டும் என்பதற்காகவே சொல்லப்பட்டவை என, புரிந்து கொண்டான்.
'நாய் வால்! நிமிர்த்தவா முடியும்?' என, நினைத்துக் கொண்டான்.
சில்லென்ற நீர், தலையையும், முகத்தையும் நனைத்து ஓடியது, மனதுக்கும், உடலுக்கும் அமைதி ஏற்பட்டதாக கூட தோன்றியது. தலையை துவட்டி, உடை மாற்றி கீழே வந்து அமர்ந்தவனுக்கு, பசியறிந்து பரிமாற ஓடிவரவில்லை, மனைவி; பவ்யமாக வந்து நின்றார், சமையற்காரப் பெரியவர்.
''அம்மா வரல?'' எனக் கேட்டான், புகழேந்தி.
மவுனமாக இருந்தார், பெரியவர்.
''சாப்பாடு வேண்டாம். ஒரு டம்ளர் பால் மட்டும் கொடுங்க,'' என்றான்.
''களைச்சுப் போய் வந்தீங்களே... கொஞ்சம் சாப்பிடுங்கய்யா,'' என்றார், பெரியவர்.
அவரது அன்பிற்கும், பரிவிற்கும் கட்டுப்பட்டு சாப்பிட்டான்.
''நீங்க சாப்பிட்டீங்களா, பெரியவரே?''
''இல்லைங்கய்யா,'' என்றார்.
''ஏன்?''
''நீங்க சாப்பிடாம எப்படீங்கய்யா?''
''இப்படி செய்யாதீங்க. எனக்கெல்லாம் காத்திருக்காதீங்க. காலமும், நேரமும் என் கையில இல்லை.''
''சரிங்கய்யா.''
''போய் சாப்பிட்டு படுங்க.''
''சரிங்க!''
மீண்டும் மாடியிலிருந்த படுக்கையறைக்கு வந்தபோது, துாங்கிக் கொண்டிருந்தாள், சுபாங்கி. சத்தப் படுத்தாமல், மொபைலை எடுத்து வெளியில் வந்தான். படியின் கைப்பிடியில் சாய்ந்து நின்று, மருத்துவமனைக்கு போன் செய்தான், புகழேந்தி.
''நான் கலெக்டர் பேசறேன்.''
''வணக்கங்கய்யா.''
''நீங்க யாரும்மா பேசறது?''
''நைட் டியூட்டி நர்சுங்கய்யா.''
''டாக்டர் இல்லையாம்மா?''
''இப்ப தான் சாப்பிட போனாருங்க.''
''சரி, சாயந்திரம் ஆபரேஷன் ஆன, பெண் எப்படி இருக்காங்க?''
''ஸ்டேபிளா இருக்காங்கய்யா.''
''ஐ.சி.யு.,க்கு மாத்திட்டீங்களா?''
''ஐ.சி.யு.,ல தான் இருக்காங்க.''
''நல்லா கவனிச்சுக்குங்க. எதுவானாலும் என்னைக் கூப்பிடுங்க. தயங்க வேண்டாம்.''
''சரிங்க, சார்.''
''நான் காலையில் வந்து பார்க்கிறேன்,'' என, மொபைல் போனை நிறுத்தி விட்டு, திரும்பியவனின் பின்னால், இடுப்பில் கை வைத்தவாறு நின்று கொண்டிருந்தாள், சுபாங்கி.
''துாங்கிட்டிருந்தியே, சுபா?''
''ஏன், எழுந்திருச்சு வந்தது கஷ்டமாக இருக்கா?''
''ஏன், சுபா இப்படியெல்லாம் பேசற.''
''வேற எப்படி கேட்க முடியும். யார் அவ?''
''எவ, சுபா?''
''வழியில் கிடந்தா. அது, இதுன்னு நாடகமாடுறீங்களே, அவ தான்.''
''சுபா...''
''அவளுக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம்?''
''ஐயோ, அவ யாருன்னு கூடத் தெரியாதுன்னு சொன்னனே?''
''நீங்க சொன்னதையெல்லாம் நம்புறதுக்கு நான் என்ன படிக்காதவளா. சின்ன பாப்பாவா?''
அவன் வெறுமனே அவளைப் பார்த்தான்.
''இந்த அப்பாவி முகத்தை வச்சுக்கிட்டுத்தானே என்னை ஏமாத்துனீங்க?''
''நான் ஏமாத்தினேனா?''
''நான் ஏமாந்து போனேன். யாருன்னு கூடத் தெரியாதவளைப் பற்றி, ஏன் இத்தனை அக்கறையா விசாரிக்கிறீங்க? யார் கிட்ட பொய் சொல்றீங்க?''
''சுபா...'' என, அருகில் போனவனைப் பார்த்துக் கத்தினாள்.
— தொடரும்.இந்துமதி