sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உறவுகள்!

/

உறவுகள்!

உறவுகள்!

உறவுகள்!


PUBLISHED ON : அக் 13, 2024

Google News

PUBLISHED ON : அக் 13, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''இங்கே வாடா கண்ணா...'' என்று, பேரனை அழைக்க, ஓடி வந்து, அவள் மடியில் உட்கார்ந்தான், 6 வயது பேரன், சிபி.

''எவ்வளவு பெரியவனா வளர்ந்துட்டான். பார்த்து, மூணு வருஷமாச்சு...'' என்று கூறி, பேரனின் உச்சந்தலையில் முத்தமிட்டாள், சிபியின் பாட்டி.

அமெரிக்காவிலிருந்து வந்திருந்த, மகன் சங்கரும், அவன் மனைவியும் எதிரில் உட்கார்ந்திருந்தனர்.

''பாட்டி, தாத்தாவை பார்க்கணும்ன்னு, உங்க பேரனை அழைச்சுட்டு வந்தோம்,'' என்று, புன்னகையோடு சொன்னவன், ''ஊரில் என்னோட தாத்தா, பாட்டி எப்படி இருக்காங்கம்மா?'' என, கேட்டான், சங்கர்.

''என்ன சொல்றது, வயசாயிடுச்சு, நல்லா இருக்காங்க. உன் அப்பா வழி தாத்தா, பாட்டி போய் சேர்ந்தாச்சு. இப்ப இவங்க தான் நம் குடும்பத்தில் பெரியவங்களாக இருக்காங்க.''

''சித்தப்பா, சித்தி, சித்தப்பா மகன் மனோகர் குடும்பம் எல்லாம் திருச்சியில் தானே இருக்காங்க. நல்லா இருக்காங்களா?''

''ம்... நல்லா தான் இருப்பாங்க. இப்ப நமக்கும், அவங்களுக்கும் பேச்சுவார்த்தையும், எந்த தொடர்பும் இல்லாமல் போச்சுப்பா.''

''என்னம்மா சொல்றீங்க?''

''ஆமாம்பா. உனக்கு தான் தெரியுமே. உன் தாத்தா இறந்ததும் சொத்து பிரச்னை வந்து, அப்பாவும், சித்தப்பாவும் ஒத்துவராமல், ஊர் பெரியவங்க பேசி தீர்த்து வச்சாங்க. அப்பாவுக்கு தோட்டமும், சித்தப்பாவுக்கு வீடும் கிடைச்சது.''

''அதுதான் எப்பவோ முடிஞ்சு போச்சே! இரண்டு பேருக்கும் சொத்து கிடைச்சாச்சு. அப்புறம் என்னம்மா பிரச்னை.''

''என்னப்பா இப்படி கேட்கிற, ஊர் பெரியவங்க முன், சித்தப்பா மரியாதை இல்லாமல் பேசிட்டாருன்னு அப்பாவுக்கு கோபம். விஷயம் ஊர் பெரியவங்க வரை போயிடுச்சுன்னு, அப்பா மேலே, சித்தப்பாவுக்கு கோபம்.

''அதன்பின், இரண்டு பேரும் பேசறதைக் கூட நிறுத்திட்டாங்க. இரண்டு குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் போயிடுச்சு,'' என, அம்மா கூறியதை கேட்டு, அமைதியாக இருந்தான், சங்கர்.

ஊரில் உள்ள பெரியவர்களைப் பார்த்து வர, மகன் சிபியை அழைத்துக் கொண்டு, காரில் ஏற, வழியனுப்ப வந்த, சங்கரின் அப்பா, ''சங்கர், தாத்தா - பாட்டியை பார்த்துட்டு ராத்திரிக்குள் திரும்பிடு. திருச்சி வழியாக தான் போறோம்ன்னு, உன் சித்தப்பா வீட்டு பக்கம் போயிடாதே. அவன் உன்னை மதிக்க கூட மாட்டான். திமிர் பிடிச்சவன். நமக்கு கவுரவம் தான் பெரிசு,'' என்றார்.

கார் கிளம்பியது.

காலிங்பெல் அழைக்க, வாசல் கதவை திறந்த, சங்கரது சித்தப்பாவின் முகம் ஒரு கணம் மாறியது.

''என்ன சித்தப்பா, திகைச்சு போய் நின்னுட்டீங்க. உள்ளே வான்னு கூப்பிட மாட்டீங்களா?''

சகஜமாக பேசியபடி மனைவி, மகனுடன் உள்ளே சென்றான், சங்கர்.

பேச்சு சப்தம் கேட்டு வெளியே வந்த, சித்தப்பா மகன் மனோகர், ''அண்ணா, வாங்க, வாங்க எப்ப அமெரிக்காவில் இருந்து வந்தீங்க?'' என்றபடி, ''ஏய் குட்டி பையா,'' என்று அழைத்து, சிபியை துாக்கி கொஞ்சினான்.

''உட்காருங்க அண்ணி. அம்மா, லதா யார் வந்திருக்காங்கன்னு பாருங்க.''

வெளியே வந்த, சித்தி அமைதியாக நிற்க, மனோகரின் மனைவி லதா இருவரையும் வரவேற்றாள்.

''அப்பா எனக்கு தம்பி இருக்கான்னு சொன்னீங்களே... என் தம்பி எங்கே?'' என்றான், சிபி.

''உன் தம்பியை பார்க்க வந்தியா. தோட்டத்தில் விளையாடறான். நீயும் அவனோடு போய் விளையாடுறியா?'' என, மனோகர், அவனை துாக்கி கொண்டு உள்ளே போக, அமைதியாக நிற்கும் சித்தப்பாவை பார்த்தான், சங்கர்.

''உறவே வேண்டாங்கிற அளவுக்கு அப்படி என்ன சித்தப்பா கோபம். சொத்து பிரச்னைக்காக, கூடப் பிறந்த உறவே வேண்டாம்ன்னு ஒதுக்கிட்டீங்க. ஒரே வயித்தில் அண்ணன், தம்பியாக பிறந்து வளர்ந்ததற்கு அர்த்தமில்லாமல் பண்ணிட்டீங்களே.

''சரி, உங்களுக்கு புத்திமதி சொல்லவோ, உங்க மனசை மாத்தவோ, நான் இங்கு வரலை. என் தம்பி மனோகரை பார்க்க வந்தேன். அதுமட்டுமில்லாமல், எங்க பிள்ளைகள் உறவுகளை புரிஞ்சுக்கிட்டு வாழணும்ன்னு ஆசைப்படறேன்.

''இந்தியாவில் எனக்கு உறவுகள் இருக்காங்க. என் தம்பி அங்கே இருக்கான்னு, என் மகன் நினைக்கணும். உங்க தலைமுறையில், நீங்க உறவுகள் வேண்டாம்ன்னு வாழலாம். ஆனால், எங்க தலைமுறையில், பிள்ளைகள் உறவுகளை புரிஞ்சுக்கணும். அன்பை பகிர்ந்து வாழணும்ன்னு நினைக்கிறேன்.

''வீட்டுக்கு ஒரு பிள்ளையை வச்சுருக்கோம். அண்ணன், தம்பி உறவுன்னா என்னன்னு தெரியாமல் போயிடக் கூடாது,'' என்றான், சங்கர்.

பிறகு, மனோகரிடம், ''உன் மகனை, மனைவியையும் கூப்பிட்டுகிட்டு கிளம்பு, நாம் வெளியே போயிட்டு வருவோம்,'' என்றான்.

சித்தப்பா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, எல்லாரும் ஒன்றாக வெளியே கிளம்பினர்.

''தாத்தா, நாங்க ஊருக்கு போனோமே. என் குட்டி தம்பி, அப்புறம் சித்தப்பா, சித்தி எல்லாரையும் பார்த்தேன். நாங்கெல்லாம் வெளியே போய், ஹோட்டல்ல சாப்பிட்டு வந்தோம். ஜாலியா இருந்துச்சு,'' என்று சிபி சொல்ல, கோபமாக மகனை பார்த்தார், சங்கரின் அப்பா.

''சங்கர், நீ தாத்தா - பாட்டியை பார்க்க போகலையா. சித்தப்பா வீட்டுக்கா போனே. உன்னை போக வேண்டாம்ன்னு சொன்னேனே...''

''போதும்பா. உங்களுக்கு உறவுகள் வேண்டாம்ன்னு இருக்கலாம். கூடப் பிறந்து, வளர்ந்த பிறப்பை மறந்துட்டு, பணம் தான் பெரிசுன்னு வாழறீங்க. ஆனால், நான் அப்படி நினைக்கலை. என் பிள்ளை, உறவுகளை தெரிஞ்சுக்கிட்டு வளரணும்ன்னு நினைக்கிறேன்.

''கடல் கடந்து இருந்தாலும், தன் உறவுகள் இந்தியாவில் இருக்காங்கன்னு அவன் உணரணும். உங்களுக்கு உங்க தம்பியின் உறவு தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், எனக்கு, என் தம்பி, மனோகரின் உறவு என்னைக்கும் தொடரணும்.

''எங்க தலைமுறையில் நாங்க பணத்தை ஒதுக்கி வைத்து, பாசத்தை பகிர்ந்து வாழணும்ன்னு நினைக்கிறோம். தயவுசெய்து கட்டுப்படுத்தணும்ன்னு நினைக்காதீங்கப்பா,'' என்று கூறி முடித்தான், சங்கர்.

''ஹலோ, நான் அண்ணன் பேசறேன்.''

மறுபக்கம் எந்த பதிலும் இல்லாமல் சற்று நேரம் அமைதியாக இருக்க, குரல் கம்ம, ''சொல்லுங்க அண்ணா.''

''நல்லா இருக்கியாப்பா. அமெரிக்காவிலிருந்து, என் பையன் குடும்பத்தோடு வந்திருக்கான். நீயும், மனோகர் எல்லாரையும் அழைச்சுட்டு, இரண்டு நாள் எங்களோடு இருந்துட்டு போறியாப்பா.''

''நீங்க கூப்பிட்ட பிறகு வராமல் இருப்பேனா. கட்டாயம் பொழுது விடியவும் கிளம்பிடறோம்,'' என்று கூறியவர், ''அண்ணா, என்னை மன்னிச்சிடுங்க. உங்களை தப்பா பேசிட்டேன்.''

''வேண்டாம்பா. அதை பெரிசுபடுத்த வேண்டாம். மறந்துடுவோம். உன்னை எதிர்பார்த்து காத்துட்டு இருப்பேன்,'' என்று பேசி போனை வைத்து, அருகில் நின்ற மகனை கண்கலங்க பார்த்தார், சங்கரின் அப்பா.

மனதில் நிம்மதி படர, அப்பாவை தன்னோடு சேர்த்துத் தழுவிக் கொண்டான், சங்கர்.

பரிமளா ராஜேந்திரன்






      Dinamalar
      Follow us