sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தாய்மனம்!

/

தாய்மனம்!

தாய்மனம்!

தாய்மனம்!


PUBLISHED ON : நவ 03, 2024

Google News

PUBLISHED ON : நவ 03, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''என்ன விஷயம். உங்க தம்பி போனில் என்ன சொன்னாரு. யோசனையா இருக்கீங்க?'' என்றாள், சுபா.

''அவன் குடும்ப பிரச்னையை சொன்னான். புவனாவுக்கு அடிக்கடி வயிற்று வலி வருதாம். டாக்டர், வீடுன்னு அலையறாள். அவள் மகளுக்கு வர்ற வரன் எல்லாம் அமையாமல் போகுதாம்.

''அதுமட்டுமில்லாமல், காலேஜ் படிக்கிற அவனது மகன், எதுக்கெடுத்தாலும், 'டென்ஷன்'ஆகி கத்தறானாம். ஒருநாள் போறதே பெரிய பாடாக இருக்கு. இதில், அவனுக்கு சுகர் வந்தது தான் மிச்சம். அதுக்கும், 'ட்ரீட்மென்ட்' எடுத்துக்கிறானாம்.''

''பாவம்ங்க. என்ன செய்யறது. அவர் சொல்றதை கேட்டாலும் கஷ்டமாகத்தான் இருக்கு. அத்தை அவங்களோடு இருப்பதால், மாசாமாசம் பணம் அனுப்பறோம். பெங்களூரு குளிர், அவங்களுக்கு ஒத்துக்க மாட்டேங்குது. என்ன செய்யறது?''

''இல்லை, சுபா. இப்ப அம்மாவைப் பத்தி தான் பேசினான். கொஞ்ச நாள், நீங்க அம்மாவை அங்கே அழைச்சுட்டு போய் வச்சுக்கங்க. அவங்களுக்கு இங்கே நிம்மதியே இல்லை. சரியான நேரத்தில் சாப்பாடு கூட தர முடியலை.

''நேத்து புவனாவையும், என் மகளையும் கூட்டிட்டு ஹாஸ்பிடல் போயிட்டேன். பழைய சாதத்தை சாப்பிட்டுட்டு இருந்தாங்க. அவங்களைப் பார்த்தாலும் சங்கடமாக இருக்கு. என் பிரச்னையெல்லாம், 'செட்டில்' ஆகற வரைக்கும் அம்மா அங்கே உங்களோடு இருந்தால் நல்லாயிருக்கும்ன்னு தோணுவதாக சொன்னான்.''

சிறிது யோசித்தவள், ''அவர் சொல்றதும் சரிதான். அத்தையை இங்கே அழைச்சுட்டு வருவோம். நம்ப மகளையும் கல்யாணம் பண்ணி, அமெரிக்கா அனுப்பிட்டோம். ரவியும், வேலை கிடைச்சு, ஹைதராபாத்தில் இருக்கான்.

''நாம் மட்டும் தானே இருக்கோம். அத்தையை கவனிக்க தனியா ஒரு ஆள் போடுவோம். அவங்களுக்கு தேவையான வசதிகள் செய்திடுவோம். நீங்க போய் அத்தையை இங்கே அழைச்சுட்டு வந்துடுங்க.''

''அதுதான் சரின்னு என் மனசுக்கு படுது, சுபா. அம்மாவின் ஆரோக்கியம் முக்கியம். அவங்களையே கவனிக்க முடியாமல் குடும்பம் சிரமப்படும் போது, அம்மாவின் தேவைகளை அவங்க எப்படி செய்வாங்க. நான் நாளைக்கே ஊருக்கு கிளம்பறேன். அம்மாவை கையோடு அழைச்சுட்டு வரேன்.''

மூத்த மகனை பார்த்ததும், சந்தோஷத்துடன் கட்டித் தழுவி வரவேற்றாள், அம்மா.

''எப்படிப்பா இருக்கே. சுபா நல்லா இருக்காளா? பார்த்து நாளாச்சு. பேரன், பேத்தி எப்படி இருக்காங்க?''

நலன் விசாரிக்க, அங்கு வந்த புவனா வரவேற்று, ''வெயில் நேரமாக இருக்கு. மோர் கலந்து எடுத்துட்டு வரேன்,'' என்றாள்.

''வேண்டாம்மா. வழியில் தான் கூல்டிரிங்க்ஸ் குடிச்சேன். உனக்கு உடம்பு எப்படி இருக்கு பரவாயில்லையா?''

''அதை ஏன் கேட்கிற. நித்திய கண்டம், பூரண ஆயுசுன்னு, தினம், தினம் வயிற்று வலியோடு சிரமப்படறா. வைத்தியம் பார்த்துட்டு தான் இருக்கு,'' என்றாள், அம்மா.

''தம்பி எங்கேம்மா, வெளியில் போயிருக்கானா?''

''ஆமாம்பா, நீ வரேன்னு கேள்விப்பட்டதும், மகளை அழைச்சுக்கிட்டு கடைக்கு போனான்.''

சிறிது நேரத்தில் தம்பி வர, அண்ணனும், தம்பியும் வெளியே போய் பேச ஆரம்பித்தனர்; மகளுடன், சமையலை கவனிக்க ஆரம்பித்தாள், புவனா.

குடும்ப சூழ்நிலையை சொல்லி வருத்தப்பட்டான், தம்பி.

''கவலைப்படாதே தம்பி. எல்லாம் சரியாயிடும். நான் நாளைக்கு போகும் போது, அம்மாவை அழைச்சுட்டு போய், கொஞ்ச நாள் என்னோடு வச்சிக்கிறேன்.''

''ஆமாண்ணா, அது தான் நல்லது. மகளுக்கு கல்யாணம் முடிவாகட்டும். அம்மாவை நானே வந்து அழைச்சுக்கிறேன். அதுவரைக்கும் அங்கேயே இருக்கட்டும்.''

''அண்ணனோடு பெங்களூரு போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வாங்கம்மா. உங்களை அழைச்சுட்டு போக தான், அண்ணன் வந்திருக்காரு,'' என்று அம்மாவிடம் சொன்னவன், ''மது, பாட்டியின் துணிமணிகளை பெட்டியில் எடுத்து வை. நாளைக்கு பெரியப்பாவோடு ஊருக்கு போறாங்க,'' என, மகளிடம் கூறினான்.

இரவு எல்லாரும் படுத்த பிறகு, பெரிய மகன் படுத்திருக்கும் அறைக்கு வந்தாள், அம்மா.

அம்மாவை பார்த்ததும் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தவன், ''என்னம்மா, துாங்கலையா. எதுக்கு எழுந்து வந்தீங்க. கூப்பிட்டா நான் அங்கு வந்திருப்பேன்.''

''இருக்கட்டும்பா,'' என்று கூறி, கட்டிலில் உட்கார்ந்தாள்.

''நாளைக்கு காலையில் கிளம்பணும். எல்லாம் எடுத்து வச்சாச்சு இல்லையா?''

''ஆமாம்பா...''

''அம்மாவுக்கு பசி தாங்காது. எட்டு மணிக்கு டிபன் செய்திடறேன். சாப்பிட்டு போகலாம்ன்னு, புவனா சொன்னா. சாப்பிட்டு கிளம்புவோம். காரில் போறதால ஒண்ணும் பிரச்னையில்லை,'' என்று சொன்னவன் அம்மாவைப் பார்க்க, அவள் கண்கள் கலங்கியிருந்தது.

''என்னம்மா ஆச்சு. என்ன விஷயம். எதுவாக இருந்தாலும் சொல்லுங்க.''

''நான் இப்படி சொல்றேன்னு, தப்பா எடுத்துக்காதேப்பா. நான் உன்னோடு வரலை. இங்கேயே இருக்கேன்.''

''என்னம்மா சொல்றீங்க! இங்கே வீடு இருக்கிற சூழ்நிலையில் நீங்களும் இருந்து, அவங்களுக்கு சிரமம் தரவேண்டாம்னு தான், என்னோடு அழைச்சுட்டு போறேன். அங்கு உங்களுக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்து கொடுத்து, நல்லபடியாக பார்த்துக்கிறேன்மா.

''சுபாவும், உங்களை நல்லா கவனிச்சுப்பா. நீங்க மனசில் எதுவும் நினைக்காமல் கிளம்புங்கம்மா. தம்பி தான், உங்களை கூட்டிட்டுப் போகச் சொன்னான்.''

''என்னை நல்லபடியாக கவனிக்க முடியலைன்னு நினைச்சு, உன்னைக் கூட்டிட்டுப் போகச் சொல்லி இருப்பான். ஆனால், இப்ப என்னால் அவங்களை விட்டுட்டு வரமுடியாதுப்பா. தினம் ஒரு பிரச்னை, சங்கடம்ன்னு பொழுது போகுது. நான் அவங்களோடு இருப்பதால், என்னால் முடிஞ்ச அளவு ஆறுதல் சொல்றேன்.

''அவன் கவலைப்படும் போது, எல்லாம் கடந்து போகும்ன்னு, என் அனுபவங்களை எடுத்துச் சொல்லி ஆறுதல் படுத்துவேன்.

''வயிற்று வலின்னு, புவனா சுருண்டு படுக்கும் போது, பெண்டாட்டி பக்கத்தில் கவலையோடு இருக்கும் உன் தம்பிகிட்டே, 'எதுக்கு இப்படி எல்லாரும் அவளை சுத்தி நிக்கிறீங்க. அதான் வயிறு புண் சரியாக நாளாகும்னு டாக்டர் சொல்லியிருக்காரு இல்லையா. மருந்து சாப்பிட்டு இருக்கா. கொஞ்ச நேரத்தில் சரியாயிடும். போய் உன் வேலைய பாருப்பா. மது, நீ போய் சாதம் வச்சு, ரசம் வை. தம்பி பசியோடு வருவா'ன்னு, அவளையும் அடுப்படிக்கு அனுப்பி வைப்பேன்.

''அதுமட்டுமில்லை. 'புவனா... இப்ப எப்படி இருக்கு. தைரியமா இரு சரியாயிடும். நாளைக்கு மகள் கல்யாணத்தில் ஓடியாடி வேலை செய்ய வேண்டாமா. பயந்திட்டு இருந்தால் வியாதி போகாது. சரியாகிடும்ன்னு நினை. உனக்கு ஒண்ணுமில்லை. மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தால் நாளடைவில் குணமாகிடும்'ன்னு, அவளுக்கு தைரியம் சொல்வேன்.

''நல்லது நடக்கும். கஷ்டங்கள் சீக்கிரமே விலகும்ன்னு, நான் சொல்ற வார்த்தைகள், அந்த நேரத்தில் அவங்க கவலைகளுக்கு மருந்தாக இருக்கும்,'' என்று சொன்னவள், மகனைப் பார்த்தாள்.

''உன்னோடு வந்து இருக்க எனக்கும் ஆசை தான். இருந்தாலும், கஷ்டப்படற பிள்ளையோடு இருந்து, அவனுக்கு ஆறுதலாக இருக்கணும்ன்னு, மனசு நினைக்குதுப்பா.

''சந்தோஷங்களை பகிர்ந்துட்டு வாழறதை விட, கஷ்டங்களை பகிர்ந்துகிட்டு, அவங்களோடு இருக்கவே பெத்த மனசு விரும்புதுப்பா.

''அம்மா இப்படி சொல்றேன்னு வருத்தப்படாதே. கூடிய சீக்கிரம் இவங்க பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். அப்புறம், அம்மா உன்னோடு, சந்தோஷங்களைப் பகிர்ந்து வாழ வருவேன்பா,'' என, குரல் நெகிழ பேசும் அம்மாவை, பாசத்தோடு கட்டி அணைத்தான், மூத்த மகன்.

- ஆர். ராஜ்பாலா






      Dinamalar
      Follow us