
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 26 வயது பெண். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார், அப்பா. அம்மா, இல்லத்தரசி. எனக்கு ஒரு அக்கா; திருமணமாகி விட்டது. நான், ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன்.
முகநுால் பக்கத்தில், 'ரீல்ஸ்' மற்றும் வீடியோக்கள் பதிவிடுவது வழக்கம். நிறைய பேர், 'கமென்ட்' செய்வர். அவர்களில் ஒருவன், தான் அமெரிக்காவில் பணிபுரிவதாகவும், என்னுடைய முகநுால் பக்கத்தை தொடர்ந்து பார்த்து வருவதாகவும் கூறி, அறிமுகமானான்.
பல மாதங்களாக, முகநுாலில் நிறைய பேசி, பழகி வந்தேன். தனக்கு உறவுகள் இல்லை என்றும், தாத்தா மட்டும், பெங்களூரில் வசிப்பதாகவும் கூறினான்.
அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர், அவனது தாத்தா. அவரது பராமரிப்பில் தான் படித்து, அமெரிக்காவில் வேலை கிடைத்து போனதாக கூறினான். அவனது பேச்சும், பழகும் முறையும் மிகவும், 'டீசன்ட்'டாக இருக்கும். ஒருமுறை, தன் தாத்தாவை என் பெற்றோருடன் பேசவும் ஏற்பாடு செய்தான்.
தன் தாத்தாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவரை பார்க்க பெங்களூரு வர போவதாகவும் கூறினான். தாத்தா உடல்நிலை சரியானதும் அமெரிக்கா திரும்ப போகும் போது, என்னை வந்து சந்திப்பதாகவும் போன் செய்திருந்தான். நானும், ஆவலுடன் அவன் வரவுக்கு காத்திருந்தேன்.
ஒரு நாள், 'பெங்களூரு வந்துவிட்டேன். தாத்தாவுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. ஆபரேஷனுக்கு உடனடியாக பணம் தேவைப்படுகிறது. என் கணக்கில் அவ்ளோ பணம் இல்லை. நிறைய கடன் இருப்பதால், இ.எம்.ஐ., கட்டிவிட்டேன்.
'எனவே, 5 லட்ச ரூபாய், என் வங்கி கணக்குக்கு அனுப்பு. அமெரிக்கா திரும்பியதும் ஓரிரு மாதங்களில் திருப்பி அனுப்பி விடுகிறேன்...' என்றும் கெஞ்சினான்.
அவன் மீது இருந்த நம்பிக்கையில், உடனடியாக, பணத்தை அவன் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தேன்.
சில நாட்களுக்கு பின், அறுவை சிகிச்சை முடிந்து, தாத்தா இப்போது நலமாக இருக்கிறார். நிறைய நாள் விடுமுறை எடுத்துவிட்டதால், உடனடியாக, அமெரிக்கா திரும்ப வேண்டும். அடுத்த முறை வரும்போது, நிச்சயமாக வந்து சந்திப்பதாக கூறினான்.
அதன்பின், வழக்கம் போல், வாரத்துக்கு ஒரு முறை பேசிக் கொண்டிருந்தேன். பிறகு, சில மாதங்களாக அவனிடமிருந்து எந்த போன் அழைப்பும் வரவில்லை. பலமுறை, அவனது மொபைல் எண்ணுக்கு முயற்சி செய்தும் எடுக்கவில்லை.
ஒருநாள், 'நான், 'ப்ராஜெக்ட்' விஷயமாக, வேறொரு மாநிலத்துக்கு வந்துள்ளேன். வேலை முடிந்ததும், நானே கூப்பிடுகிறேன்...' என்று, 'வாட்ஸ் - அப் மெசேஜ்' அனுப்பி இருந்தான்.
ஆறு மாதம் கடந்தும் அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அவனது மொபைல் எண்ணுக்கு போன் செய்தால், 'உபயோகத்தில் இல்லை' என்ற தகவல் வந்தது. அவனது, தாத்தாவுக்கு போன் செய்தால், அதுவும், 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
முகநுால் பக்கத்தில் சென்று பார்த்தால், அதுவும், 'ப்ளாக்' செய்யப்பட்டிருந்தது.
ஏமாற்றப்பட்டு விட்டது இப்போது புரிந்தது. பெற்றோரிடம் ஏகப்பட்ட திட்டுக்கள் வேறு. 5 லட்ச ரூபாய் போனது, மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
பெங்களூருவில், அவனது தாத்தா வீட்டு விலாசம் ஒன்றை முன்பு கொடுத்திருந்தான். நேரில் அங்கு சென்று விசாரிக்கலாமா? அவனது, தாத்தாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை பெயரும், கட்டணம் செலுத்திய பில்லின் காப்பியையும் எனக்கு அனுப்பியிருந்தான். அதை வைத்து, ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா? நான் என்ன செய்ய வேண்டும், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
நீ, திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருப்பது தெரிகிறது.
அவன் தொடர்பாக உன்னிடம் உள்ள ஆதாரங்கள்-.
அவன் உன்னுடன் நட்பு பாராட்டிய முகநுால் ஐடி கணக்கு; அவனின் தாத்தா, உன் பெற்றோருடன் பேசிய மொபைல் எண்; அவன் உன்னுடன் பேசிய மொபைல் எண்; நீ, 5 லட்ச ரூபாய் அனுப்பிய வங்கிகணக்கு விபரங்கள்; அவனது தாத்தாவின் மருத்துவ சிகிச்சைக்கான பொய் பில்; தாத்தாவின் பெங்களூரு முகவரி.
'சோஷியல் மீடியா' மூலம் பணமோசடி செய்திருக்கிறான். '1930' தொலைபேசி எண்ணில், அவனின் மீதான புகாரை பதிவு செய்.
பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா சட்டம் பிரிவு 503ன் படி, நேரடி விசாரிப்பு அதிகாரம் கொண்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்.
பிராடுகாரனின் குரலையும், அவனின் தாத்தா குரலையும் பதிவு செய்து வைத்திருக்கிறாயா? அவனை அழகனாய் காட்ட, பொய் ஒளிப்படம் அனுப்பியிருப்பானே... அதையும் புகாருக்கான ஆதாரங்களில் ஒன்றாக இணை.
முகநுாலுக்கு support @fb.com அல்லது abuse@fb.com மின்னஞ்சல் முகவரிகளுக்கு புகார் மின்னஞ்சல் அனுப்பு.
குறிப்பாக, 62 சதவீத முகநுால் மக்கள், எதாவது ஒரு முகநுால் மோசடியை சந்திக்கின்றனர். நீ ஏமாற்றப்பட்டது, 'ரொமான்ஸ் ஸ்கேம்' வகை. 307 கோடி, முகநுால் கணக்குகளில், 82.7 கோடி, பொய் அடையாள கணக்குகள். உன்னை ஏமாற்றியவன் இந்தியாவில் குறிப்பாக, வடமாநிலத்தில் எங்காவது இருப்பான்.
உன்னை ஏமாற்றியவனிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்வது கடினமான, நீண்டகால தொடர் முயற்சி.
பணம் கிடைத்தால் மகிழ்ச்சி; கிடைக்கவில்லை என்றால், ஐந்து லட்சம் செலவு பண்ணி ஒரு பாடம் கற்றுக் கொண்டதாக கைகழுவு.
இனி, முகநுாலில் யாராவது திருவோடு ஏந்தி பிச்சையோ, உதவியோ கேட்டால் போடாதே. 'ப்ளாக்' செய். முகநுாலில் பெண்கள், காதலன் தேடுவதும், ஆண்கள், காதலி தேடுவதும் முட்டாள்தனமானது. முகநுாலில் வம்புதும்பு இல்லாமல் வேடிக்கை பார்.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.