/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து - அகத்திக் கீரை!
/
நம்மிடமே இருக்கு மருந்து - அகத்திக் கீரை!
PUBLISHED ON : நவ 03, 2024

தமிழகத்தில் மட்டுமின்றி, மலேசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், கயானா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் அதிகம் விளைகிறது, அகத்தி. மலேசியா நாட்டில் இதை, துாரி எனவும், கயானாவில், ஆகஸ்ட் மலர் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் பயிரிடப்படும் ஒரு கீரை வகை, இது.
அகம் + தீ + கீரை என்பதே அகத்திக்கீரையாகும். அதாவது, உடம்பிலுள்ள உஷ்ணத்தை தணிக்கும் தன்மை, இந்த கீரைக்கு இருப்பதால் தான், அகத்திக்கீரை என்று பெயர்.
நம்மூரில், வெற்றிலை கொடிக்கால் படரவும், மிளகு தோட்டங்களில் மிளகு கொடி படரவும் அகத்தி மரங்கள் வளர்க்கப்படுகின்றன. வட மாநிலங்களில் மிளகாய், வெங்காய பயிர்களுக்கு நிழல் தரும் மரமாக அகத்தி வளர்க்கப்படுகிறது.
அகத்தி விதைகளை, இரவில் பசும்பாலில் ஊற வைத்து விதைத்தால், அதன் கசப்பு தன்மை குறையும் என்கின்றனர்.
மாடுகளுக்கு மிகச்சிறந்த தீவனம். இதில், 50-க்கும் மேற்பட்ட உயிர்ச்சத்துகள் உள்ளன. 10 டம்ளர் பாலிலும், ஐந்து முட்டையிலும் உள்ள சுண்ணாம்புச்சத்து, ஒரு கட்டு அகத்திக்கீரையில் உள்ளது. இதில், அதிகளவில் புரோட்டீனும் உள்ளது.
வீக்கம், வாயு பிடிப்பு போன்றவைகளுக்கு அகத்திக் கீரையின் சாறு மருந்தாகிறது. அகத்திப் பட்டை, பேதி மற்றும் மலேரியா காய்ச்சலை கட்டுபடுத்துகிறது. கீரையை, தேங்காய் எண்ணெயில் வதக்கி, தேமல் உள்ள இடங்களில் பூசினால், தேமல் மறையும். சேற்று புண்களில் இந்த சாறு தடவினால், நிவாரணம் கிடைக்கும்.
இந்த கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்கள், கண்ணாடியே அணிய தேவையில்லை. கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை இந்த கீரை தீர்க்கிறது. மேலும், வாய்ப்புண், வயிற்று புண்களை ஆற்றுகிறது.
சரும ஆரோக்கியத்தை காக்கிறது. தோலில் அரிப்பு, தோல் நோய்கள், சிரங்குகளை விரட்டுகிறது. இதை வேக வைத்து, பேஸ்ட் போல அரைத்து, உடலில் ஏற்படும் காயங்களின் மீது கட்டினால், விரைவில் ஆறிவிடும்.
முருங்கைக்கீரை போலவே, இதுவும் இரும்புசத்து நிறைந்தது. எலும்புகளுக்கும், பற்களுக்கும் பலத்தை தரக்கூடியது. அதனால் தான், குழந்தை பெற்ற பெண்களுக்கு கூட, அகத்திக்கீரையை தருவர்.
ரத்த கொதிப்பு அதிகமாக இருப்பவர்கள், இந்த கீரையை வாரம் ஒருமுறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். மூளை வளர்ச்சியை தரக்கூடியது என்பதால், குழந்தைகளுக்கு இந்த கீரையை சமைத்து தரலாம்.
இந்த கீரை லேசாக கசப்பு, துவர்ப்புடன் இருப்பதால், பலரும் விரும்புவதில்லை. முற்றிய கீரையை சமைக்காமல், இளம் கீரையை தேர்ந்தெடுத்து, தேங்காய்ப்பால் ஊற்றி சமைத்தால், கசப்பு தெரியாது.
கீரையில் வாயுத்தன்மை உள்ளதால், பெருங்காயத்தையும் கட்டாயம் சேர்க்க வேண்டும். மதிய நேரத்தில் மட்டுமே இந்த கீரையை சாப்பிட வேண்டும்.
அகத்திக் கீரை, மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்டது என்பதால், சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதை சாப்பிடக் கூடாது. சிக்கனுடனும் சேர்த்து சாப்பிடக் கூடாது. மது அருந்திவிட்டு கீரையை சாப்பிட்டால், மாரடைப்பு ஏற்படும்.
தொகுப்பு : ராஜேந்திரன்