sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உழைப்பாளர் சிலைக்கு மாடலான, ஓவியர்!

/

உழைப்பாளர் சிலைக்கு மாடலான, ஓவியர்!

உழைப்பாளர் சிலைக்கு மாடலான, ஓவியர்!

உழைப்பாளர் சிலைக்கு மாடலான, ஓவியர்!


PUBLISHED ON : நவ 03, 2024

Google News

PUBLISHED ON : நவ 03, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுகதைகள், தொடர் கதைகளுக்கான ஓவியங்கள், கவிதை, கட்டுரை, துணுக்குகள் மற்றும் ஜோக்குகளுக்கான ஓவியங்கள் என, ஒரு லட்சத்துக்கும் மேல் வரைந்து, தமிழ் வாசகர்களை, மூன்று தலைமுறையாக மகிழ வைப்பவர், ஓவியர் ராமு. இயற்பெயர், ராமதாஸ்.

பல சாதனைகளுக்கு சொந்தக்காரர், ராமு.

அவர் செய்திருக்கும் முக்கிய சாதனை, 40 ஆண்டுகளாக, 'துக்ளக்' இதழின் அட்டைப் பட அரசியல் கார்ட்டூன்களை வரைந்து வருகிறார். வேறு எந்த ஓவியரும் இவ்வளவு காலம் ஒரே பத்திரிகையில், அட்டைப்பட கார்ட்டூன் வரைந்ததில்லை.

சோ பங்கேற்று பேசிய மீட்டிங்கிற்கு ஒருமுறை சென்றுள்ளார், ராமு. மேடையில், சோ பேசுவதை, அப்படியே ஒரு தாளில் ஓவியமாக வரைந்து, அவரிடம் காண்பித்துள்ளார். அதை பார்த்து மகிழ்ந்த, சோ, 'துக்ளக் ஆபீசுக்கு வந்து என்னை பாருங்கள்...' என கூறியுள்ளார்.

அலுவலகத்திற்கு வந்தவரிடம், 'ராமு, இனி நீங்க தான், எங்கள் பத்திரிகைக்கு அட்டைப்பட கார்ட்டூன்கள் வரைந்து கொடுக்க வேண்டும்...' என்று அன்பு கட்டளையிட்டார், சோ. அன்று ஆரம்பித்தது, இன்றும் வாரந்தோறும், 'துக்ளக்' அலுவலகம் சென்று, அட்டைப்பட கார்ட்டூன் வரைந்து கொடுக்கிறார், ராமு.

'துக்ளக்' இதழ் ஆண்டு தோறும், பொங்கல் அன்று, துக்ளக் ஆண்டு விழா நடத்துவது வழக்கம். தமிழகத்தின் பல நகரங்களில், அந்த விழா நடைபெறும். 'துக்ளக்' இதழில் பணிபுரிபவர்களை அந்த விழாக்களில் அறிமுகப்படுத்துவார், சோ. இதனாலேயே, பல ஆண்டுகள் பொங்கல் பண்டிகைக்கு வீட்டில் இருந்ததில்லை, ராமு. 'துக்ளக்' ஆண்டு விழாவில் கலந்து கொள்ள சென்றிருப்பார்.

* 'கல்கண்டு' ஆசிரியர் தமிழ்வாணன், பின்னர் லேனா, 'கல்கி' ஆசிரியர் கி.ராஜேந்திரன், சீதா ரவி, பாக்கெட் நாவல் ஆசிரியர் அசோகன், 'இதயம் பேசுகிறது' ஆசிரியர் மணியன் போன்றவர்கள், ராமுவின் வீட்டிற்கு நேரிடையாக வந்து, தங்கள் படைப்புகளுக்கு ஏற்ற படம் வரைவது பற்றி விளக்கம் அளித்து செல்வது வழக்கம்.

* தான் எழுதும் துப்பறியும் கதைகளில், 'ஹீரோ'வை ஸ்டைலாக, புது மாதிரி வரையச் சொல்லுவாராம், தமிழ்வாணன்.

* ராமுவின் மகன் சூரியகுமார், 'தினகரன்' பத்திரிகையில், 'லே-அவுட்' ஆர்டிஸ்டாக பணிபுரிகிறார். மகள் கீதா, தஞ்சாவூர் ஓவியங்கள் வரைகிறார்; ஓவியங்கள் வரைய மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறார்.

* பத்திரிகை ஆசிரியர், பாவை சந்திரன் மூலம், மலேஷிய பிரமுகர் ஒருவருக்கு, 1330 திருக்குறள்களை விளக்க, 1330 வண்ணப் படங்களை, மூன்றே மாதங்களில் இரவு பகல் ஓய்வு எடுக்காமல் வரைந்து கொடுத்தார். சி.டி., வடிவத்தில் அதை கொண்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், அந்த சி.டி., இன்னும் ராமுவிற்கு வந்து சேரவில்லை. தன் ஓவியப் பணிகளிலே மிகவும் முக்கியமானதாக, இதை குறிப்பிடுகிறார், ராமு.

* 'முரசொலி' பத்திரிகையில், கருணாநிதியின் தொடர் கதைக்கு படங்கள் வரைந்தார், ராமு. அப்போது, அவரை நேரில் வந்து சந்திக்கக் கூறினார், கருணாநிதி. அந்த சந்திப்பில், 'படங்கள் நன்றாக வரைந்திருக்கிறீர்கள்...' என்று தட்டிக் கொடுத்து பாராட்டினாராம், கருணாநிதி.

சென்னை எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லுாரியில் ஓவியக் கலை பயின்ற போது ஏற்பட்ட அனுபவங்களை கூறுகிறார்:

ஓவிய கல்லுாரியின், அன்றைய பெயர், 'சித்திர வேலை வித்யா சாலை!' ஓவியக் கல்லுாரியில் படிக்கும் போது, எனக்கு நெருங்கிய தோழராக இருந்தவர், பிற்காலத்தில் கதாசிரியராக, நாவலாசிரியராக பேரும் புகழும் பெற்ற, ராஜேந்திரகுமார்.

எங்கள் கல்லுாரியில், கோவையை சேர்ந்த, பழனிச்சாமி என்பவரும் பயின்றார். அவர் தான் பின்னர், சிவக்குமார் என்ற பெயரில் பிரபல நடிகரானார்.

கடந்த, 1961ல், நான் வரைந்த முதல் படம், 'குமுதம்' இதழில் வெளியானது.

வெளியூர்களில் இருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் உதவித் தொகையை உயர்த்திக் கொடுத்தார், அப்போதைய முதல்வர் காமராஜர். இதற்காக, சசி பூஷண், கோபால், சேகர், ராஜேந்திரகுமார் மற்றும் நான் ஆகியோர், முதல்வரை சந்தித்து நன்றி சொல்ல விரும்பினோம்.

தி.நகர் திருமயப்பிள்ளை தெருவுக்கும், எழும்பூருக்கும் இடையே பெரிய துாரமில்லை என்று அறிந்து, ஐவரும் நடந்தே சென்றோம். அமைச்சர்களை பார்ப்பது இப்போது போல அவ்வளவு கஷ்டமில்லை. ஓவியக் கல்லுாரி மாணவர்கள், ஐந்து பேர் தன்னை பார்க்க வந்திருப்பதை அறிந்து, உடனே உள்ளே வரச் சொன்னார், காமராஜர்.

'ஓவியக் கலையில் நல்லா முன்னேறுங்க...' என வாழ்த்தினார், காமராஜர்.

ஒரு தாளில், காமராஜரை பார்த்து அப்படியே படமாக வரைந்து, அவரிடம் கொடுத்தேன். அதைப் பார்த்து ஆச்சரியமடைந்து, 'பார்த்த உடனேயே அப்படியே வரைஞ்சு போட்டீங்க...' என்று மனதாரப் பாராட்டினார்.

மேலும், 'முதல்வராக இருக்கும் என்னை பார்க்க வந்தீங்க. நன்றி சொன்னீங்க. அதெல்லாம் சரி. எதுக்கு மாலை போடணும்? படிக்கிற பசங்க பணத்தை இப்படி வீணாக்கலாமா?' என்று கேட்டு, பி.ஏ.,வை அழைத்தார்.

'பூமாலை வாங்க, 20 ரூபாய் ஆகியிருக்கும் அவங்களிடம் அந்த, 20 ரூபாயை கொடுத்து விடுங்கள்...' என்றார். இந்த செயலால், நான் உட்பட, ஐந்து பேரும் ஆச்சரியத்தில் உறைந்து போனோம்.

பொதுவாக பல ஓவியர்கள், சிற்பத் துறையில் வல்லுனர்களாக இருப்பதில்லை. அதே போல, புகழ்பெற்ற சிற்பிகள், சிறந்த ஓவியர்களாக இருப்பதில்லை. ஆனால், எங்கள் ஓவியக் கல்லுாரி முதல்வரான, ராய் சவுத்ரி, ஓவியம் மற்றும் சிற்பம் இரண்டிலும், 'எக்ஸ்பர்ட்' என்று கூறலாம்.

திரைப்பட நடிகர் எஸ்.வி.ரங்காராவ் போல், ஆஜானுபாகு உருவத்துடன் எப்போதும் பைஜாமா, ஜிப்பா அணிந்திருப்பார்.

ஒருநாள், மதிய இடைவேளையின் போது, என்னை தன் அறைக்கு கூப்பிட்டு, குனிந்து ஒரு பக்கமாக சாய்ந்து, கம்பை பிடித்து நெம்புவது போல, 'போஸ்' கொடுக்கச் சொன்னார். பல கோணங்களில், 30 நிமிடங்கள் என்னை சுற்றி சுற்றி பார்த்தார். பிறகு, ஒன்றும் சொல்லாமல், 'நாளைக்கு வா...' என்று, என்னை அனுப்பி விட்டார்.

தினமும் காலையும், மாலையும் இரண்டு மணி நேரம் அவர் முன், நான், 'மாடலிங்' செய்தேன். 6 அடி உயரத்தில் களிமண்ணில், என்னை ஒரு உழைப்பாளியாக உருவம் செய்தார். முகம், கழுத்து, நரம்புகள், தோள்பட்டை என, எல்லாம் என்னை போலவே தத்ரூபமாக அமைத்தார்.

களிமண்ணில் செய்யப்படும் உருவம் சிதைந்து, உடைந்து விடாமல் இருப்பதற்காக, ஆங்காங்கே இரும்பு கம்பி, சட்டங்களை பதித்து பாதுகாப்பாக படைத்தார்.

அப்போது தான், களிமண் சிலை உருவாக்குவதில் இவ்வளவு நுணுக்கங்கள் இருப்பதை நேரில் கண்டு வியந்து போனேன்.

'மாடலிங்' பணி முடிந்ததும் என்னிடம், 'உழைப்பின் பெருமையை போற்றுகிற வகையில் நான் உருவாக்கி வரும் சிலையில், மொத்தம் நான்கு பேர் இருப்பர். ஒவ்வொருவருமே வெவ்வேறு பாவனைகளில் இருப்பர்...' என்று சொல்லி, எனக்கு நன்றி தெரிவித்தார்.

'உங்களுடைய அரிய பணியில் என்னை உபயோகப்படுத்தியதற்கு நான் தான் பெருமைப்பட வேண்டும். உங்களுக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்...' என்றேன்.

நான் மாடலாக இருந்த உழைப்பளர் சிலை, ஜன., 25, 1959ல், மெரினா கடற்கரையில், காமராஜர் ஆட்சிக் காலத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இன்றும் மெரினா பீச் பகுதிக்கு சென்றால், அந்த சிலை அருகே சில நிமிடங்கள் இருந்து, அதை ரசிக்க தவற மாட்டேன் என்கிறார், ராமு.

மு பெற்றிருக்கும் விருதுகளில் சில:

* நடிகர் சிவகுமாரின், 'அகரம் பவுண்டேஷ'னின் சிறந்த ஓவியருக்கான பரிசு.

* தனியார் நிறுவனம் வழங்கிய, வாழ்நாள் சாதனையாளர் விருது.

* தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை வழங்கிய, கலைச் செம்மல் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு.

* கல்கி வார இதழ் அளித்த, சிறந்த ஓவியர் விருது.

சென்னை சாந்தோம் கடற்கரையில் இருக்கும் காந்திஜி சிலையையும், புதுடில்லி பார்லிமென்ட் வளாகத்தில் அமைந்துள்ள மிகப் பிரமாண்டமான காந்திஜி சிலையையும் செதுக்கியவர், கலைக்கல்லுாரி முதல்வராக இருந்த, தேவி பிரசாத் ராய் சவுத்ரி தான்.

எஸ். ரஜத்






      Dinamalar
      Follow us