
குடந்தை எஸ்.மாணிக்கவேலு எழுதிய, 'கண்டதை படித்தால் பண்டிதன் ஆகலாம்!' என்ற நுாலிலிருந்து:
ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த வழக்கறிஞர், சர் சி.பி.ராமசாமி ஐயர். ஒரு முறை முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன், இரு ஆங்கிலேயர்களும் பயணம் செய்தனர்.
ராமசாமி ஐயர், பஞ்ச கச்சம் கட்டி, தலைக்கு தலைப்பாகை வைத்துக் கொண்டிருந்தது, அந்த ஆங்கிலேயர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், அவரின் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல், ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி பயணித்தனர்.
சிறிது நேரம் ஆனதும், கழிப்பறை செல்வதற்காக தலைப்பாகையை கழற்றி, தான் அமர்ந்த சீட்டில் வைத்து சென்றார், ராமசாமி ஐயர். கழிப்பறை சென்று திரும்பியதும், தலைப்பாகையைக் காணவில்லை.
அந்த ஆங்கிலேயர்களைத் தவிர, அந்தப் பெட்டியில் வேறு எவருமில்லை. வண்டியும் வேறு எங்கும் நிற்கவில்லை.
அந்த ஆங்கிலேயர்களைப் பார்த்து, 'எங்கே, என் தலைப்பாகை?' என்றார், சி.பி.ஆர்.,
'எங்களுக்கு எதுவும் தெரியாது...' என்று கூறி, கைவிரித்து விட்டனர், ஆங்கிலேயர்கள் இருவரும். இதைக் கேட்டு, அமைதியாக இருந்து விட்டார், சி.பி.ஆர்.,
சிறிது நேரத்திற்கு பின், சிகரெட்டைப் பற்ற வைத்து, கழிப்பறை பக்கம் சென்றனர், அந்த ஆங்கிலேயர்கள்.
வண்டி வேகமாக சென்று கொண்டிருந்தது. ஆங்கிலேயர்கள் தங்கள் சீட்டில் விட்டுப் போயிருந்த தொப்பிகளை எடுத்து, ஜன்னல் வழியே வெளியே வீசிவிட்டு, தன் இருக்கையில் அமைதியாக உட்கார்ந்து விட்டார், சி.பி.ஆர்.,
திரும்பி வந்து, தங்கள் தொப்பியை காணாமல் திகைத்து, சி.பி.ஆரைப் பார்த்து, 'எங்கே எங்கள் தொப்பி?' என, அதட்டலாக வினவினர், ஆங்கிலேயர் இருவரும்.
'அவை, என் தலைப்பாகையைத் தேடி போயிருக்கின்றன...' என, சிறிதும் அஞ்சாமல் கூறினார், சி.பி.ராமசாமி ஐயர்.
அந்த ஆங்கிலேயர்களின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!
*****
ஒருமுறை, சென்னை திருவல்லிக்கேணி வந்திருந்தார், காந்திஜி. கூட்டத்தில் பேசிய அவரது பேச்சு முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருந்தது.
அதைக் கேள்விப்பட்டு, காந்திஜிக்கு உடனே ஒரு கடிதம் எழுதினார், பாரதியார்.
அதில், 'உங்களுடைய மேடைப்பேச்சு, உங்கள் தாய் மொழியான குஜராத்தியில் அமைந்திருக்கலாம். இல்லையென்றால், இந்தியாவின் ஏதாவது ஒரு மொழியில் அமைந்திருக்கலாம். ஆனால், அதையெல்லாம் விட்டு விட்டு, நாம் யாரை இந்த நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ அவர்களுடைய மொழியிலேயே பேசினீர்கள்...' என எழுதி வருத்தப்பட்டார்.
இதை படித்து பின், 'என் தவறை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், உங்களுடைய கடிதமும் ஆங்கிலத்தில் தானே இருக்கிறது?' என்று கூறினார், காந்திஜி.
'தமிழ்மொழி மிகவும் இனிமையானது. அந்த மொழியை என் தேசத் தந்தையைத் திட்டுவதற்கு ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்...' என்று கூறினார், பாரதியார்.
*****
தளபதி மார்ஷல் மான்சியுடன், நுால் நிலையம் ஒன்றை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார், மாவீரன் நெப்போலியன். அப்போது, அந்த புத்தக அடுக்கிலிருந்து ஒரு புத்தகத்தை எடுக்க முயன்றார். அவர் குள்ளமாக இருந்ததால், அந்தப் புத்தகம் அவரது கைக்கு எட்டவில்லை.
இதைக் கவனித்து, 'நான் உங்களை விட உயரமானவன். நான் எடுத்து தரவா?' என்றார், தளபதி.
'என்னை விட, நீ, நீளமானவன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள். உயரமானவன் என்று சொல்லாதே. புத்தகத்தை எடு...' என்றார், நெப்போலியன்.
இதுதான் பெரிய மனிதத்தனம்.
- நடுத்தெரு நாராயணன்

