
பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த சமயம். குஜராத், பர்டோலி தாலுகா விவசாயிகள் மீது, திடீரென நிலவரியை உயர்த்தியது, ஆங்கிலேய அரசு.
ஏழை விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டனர். வரி செலுத்தாத விவசாயிகளின் நிலங்களை, 'ஜப்தி' செய்தது, ஆங்கிலேய அரசு. அரசை எதிர்த்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. வீடு, ஆடு, மாடுகளை விற்று, வரி கட்ட வேண்டிய நிலைமைக்கு ஆளாயினர், சிலர்.
நிலவரியை உடனே ரத்து செய்ய வேண்டும் என, பம்பாய் கவர்னருக்கு கடிதம் எழுதினார், வழக்கறிஞர் வல்லபாய் படேல். அதற்கு எந்த பலனும் இல்லை. உடனே, அனைத்து விவசாயிகளையும் அணி திரட்டி, அதற்கு தானே தலைமை தாங்கி, சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்.
அந்த பகுதியில், எந்த வேலையும் நடக்கவில்லை. வேறு வழியில்லாமல், உடனே வரியை ரத்து செய்தனர், ஆட்சியாளர்கள். கைது செய்து சிறையில் இருந்தவர்களையும் விடுதலை செய்தனர்.
ஆக., 6, 1928ல், அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டால் நிலைமை சரியானது.
வல்லபாய் படேலின், பொது சேவையை பாராட்டிய பொது மக்கள், அவருக்கு, 'சர்தார்' எனும் பட்டத்தை கொடுத்தனர். சர்தார் என்றால், தலைவர் அல்லது தளபதி என்று அர்த்தம்.
இவருக்கு நகைச்சுவை உணர்வும் நிறைய உண்டு.
ஒரு தடவை, சர்தார் படேலிடம், 'உங்களுக்கு பிடித்த கல்ச்சர் எது?' என்றார், பத்திரிகை நிருபர்.
'எனக்கு பிடித்த கல்ச்சர் - அக்ரிகல்ச்சர்!' என்றார், வல்லபாய் படேல்.
****
என்.எஸ்.கிருஷ்ணனின், சகோதரர் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில், தியாகராஜ பாகவதர் கச்சேரி இடம் பெற்றது. கச்சேரி முடிந்தவுடன், அதில் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு எல்லாம், பரிசுகளை வழங்கினார், கலைவாணர்.
அந்த கச்சேரியிலே கடம் வாசித்தவருக்கு மட்டும், மற்ற எல்லாருக்கும் கொடுத்ததைவிட, பெரிய வெள்ளிக் கோப்பையை பரிசாக கொடுத்தார், கலைவாணர்.
'மத்தவங்களுக்கெல்லாம் சின்னதா கொடுத்துட்டு, கட வித்வானுக்கு மட்டும் பெரிசா பரிசு கொடுக்கறீங்களே, ஏன்?' என கேட்டனர்.
'இப்பெல்லாம் ரயிலில் கூட்ட நெரிசல் அதிகம் என்பது உங்களுக்கு தெரியும். இந்த வித்வான், இவ்வளவு பெரிய மண் பானையை, பத்திரமாக, உடையாமல், ரொம்ப துாரத்திலிருந்து ரயிலில் கொண்டு வந்திருக்காரே... அது என்ன சாமான்ய காரியமா? அவரோட அந்த சாமர்த்தியத்தை பாராட்டவே, அவருக்கு இவ்வளவு பெரிய பரிசு...' என, விளக்கம் கொடுத்தார், என்.எஸ்.கிருஷ்ணன்.
****
புரட்சியாளர் லெனின் உருவப் படத்தை வரைந்து, அவரிடம் காட்டி, அதில் கையெழுத்து - 'ஆட்டோகிராப்' போட்டு தருமாறு கேட்டார், ஐஸக் பிராட்ஸ்கி என்ற ரஷ்ய ஓவியர்.
அந்த படத்தை பார்த்தவர், 'இது, என்னை போலவே இல்லை. நான் கையெழுத்து போட மாட்டேன்...' என்றார், லெனின்.
அருகிலிருந்த லெனின் நண்பர்கள், 'படம் உங்களை போல தான் இருக்கிறது. பக்கவாட்டில் வரைந்திருப்பதால், உங்கள் முகம் உங்களுக்கே தெரியவில்லை. நீங்கள் கண்ணாடி முன், பக்கவாட்டில் நின்று பாருங்கள்; சரியாக இருக்கும்...' என்றனர்.
அவர்களின் சிபாரிசுக்காக, 'ஹும், நான் ஒப்புக்கொள்ளாத ஒரு விஷயத்தில் கையெழுத்து போடுவது இதுதான் முதல் தடவை...' என்று சொல்லி, படத்தில் கையெழுத்திட்டார், லெனின்.
****
- நடுத்தெரு நாராயணன்