
மேடையில் உட்கார்ந்திருந்தார், ஈ.வெ.ரா.,
மேடைக்கு கீழே, முதல் வரிசையில் அவருக்கு எதிராக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார், ஒருவர்.
இதைப் பார்த்துவிட்டு, 'பாருங்க அவனை, கொஞ்சம் கூட மரியாதை இல்லாம, கால் மேல், கால் போட்டு உட்கார்ந்திருக்கிறான்...' என்று, ஈ.வெ.ரா.,விடம் குற்றம் சுமத்தினார், தொண்டர்.
அதற்கு, 'அவன் காலை, அவன் காலு மேல போட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கான். இதுல, நமக்கு எங்கேய்யா மரியாதை குறைஞ்சுட்டுது...' என்றார், ஈ.வெ.ரா.,
*****
அமெரிக்க ராணுவத்திற்கு தளபதியாக இருந்து, ராணுவ பயிற்சியளித்து அமெரிக்கர்களை சிறந்த வீரர்களாக்கினார், ஜார்ஜ் வாஷிங்டன்.
ஒருசமயம், போரில் முன்னேற தடையாக இருந்த இரும்புத்துாண் ஒன்றை, சற்று தள்ளி சாய்த்து வைக்க முற்பட்டிருந்தனர், அமெரிக்க ராணுவ வீரர்கள். அவர்களை உற்சாகப்படுத்தி, 'துாக்குங்கள்...' என குரல் கொடுத்துக் கொண்டிருந்தான், அக்குழுத்தலைவன்.
அந்நேரத்தில், வீரர்கள் அத்துாணை துாக்க கஷ்டப்படுவதை பார்த்து குழுத்தலைவனிடம், 'நீயும் கூட கை கொடுத்து உதவினால் சுலபமாக இருக்குமே...' என்றான், குதிரையில் வந்த வீரன் ஒருவன்.
'என்னை வேலை வாங்கத்தான் நியமித்திருக்கின்றனர். வேலை செய்ய அல்ல...' என்றான், குழு தலைவன்.
குதிரையில் வந்த வீரன், கீழே இறங்கி, தொப்பியை கழற்றி ஓரமாக வைத்தான். ராணுவ வீரர்களுடன் தோள் கொடுத்து, துாணை தள்ளி சாய்க்க உதவினான்.
தோள் கொடுத்து உதவிய வீரனுக்கு நன்றி தெரிவித்தான், குழுத்தலைவன்.
'நன்றியை எதிர்பார்த்து இச்செயலை செய்யவில்லை. என் கடமையை செய்தேன்...' என்றான், அந்த வீரன்.
மேலும், 'நான் எந்த வேலை செய்வதையும் அவமானமாக கருதவில்லை. உடலை வருத்தி உழைத்தால் தான், உன்னத நிலையை அடைய முடியும். இனிமேல் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் நேரிட்டால், உங்கள் தளபதி ஜார்ஜ் வாஷிங்டனை கூப்பிட்டு அனுப்புங்கள். நான் வருவேன்...' என்றார்.
நம் குழுவுடன் தோள் கொடுத்தது நம் தளபதியா என, வெட்கி தலை குனிந்தான், அக்குழுவின் தலைவன்.
****
கிரேக்க மொழியில், பிளாட்டோ என்றால், பரந்த என்று பொருள். தம் பெயருக்கேற்ப பரந்த சிந்தனை கொண்டவராக இருந்தார், பிளாட்டோ. ராணுவத்தில் பணியாற்றி பல பரிசுகளையும் பெற்றார். சாக்ரடீஸ் உடன் தொடர்பு ஏற்பட்டு சிந்தனைவாதியாக திகழ்ந்தார்.
ஒருமுறை, கிரீசில் நடைபெற்ற ஒலிம்பியா விளையாட்டுகளை காண சென்றிருந்தார், பிளாட்டோ. அங்கு, பலதரப்பட்ட மக்களுடன் தங்கி, அவர்களுடன் உண்டு மகிழ்ந்து, விளையாட்டு போட்டிகளை கண்டுகளித்தார். அத்தருணத்திலும், தாம் உலகப் புகழ் பெற்ற தத்துவஞானி பிளாட்டோ என்பதை வெளிக்காட்டாமல் இருந்தார்.
அவருடன் தங்கி இருந்த பல நாட்டு அறிஞர்கள், பிளாட்டோவைக் காண வேண்டுமென்ற ஆவலுடன் வந்தனர்.
'பிளாட்டோவை எங்களுக்கு காட்டுங்கள். துாரத்தில் நின்று பார்த்துவிட்டு போகிறோம்...' என்று, அவரிடமே கூறினர்.
பிளாட்டோ முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்து, 'நான் தான் பிளாட்டோ...' என்றார்.
அவரின் எளிமையான தோற்றத்தைக் கண்டு, வியந்து பாராட்டினர்.
நடுத்தெரு நாராயணன்